குருஜியின் வார ராசிபலன்கள் (21-11-2022 முதல் 27-11-2022 வரை)

#adityagurujivararasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

மேஷம்:

ராசிநாதன் செவ்வாய் இரண்டாம் வீட்டில் சுபத்துவமாக இருப்பதும், சூரியன் எட்டில் மறைந்தாலும் குருவின் பார்வையில் இருப்பதும் நல்ல அமைப்புகள் என்பதால் எதிலும் முடிவெடுக்க முடியாத குழப்பத்தில் இருந்த மேஷ ராசிக்காரர்கள் இப்போது தைரியமாக முடிவெடுக்கும் வாரம் இது. வாழ்க்கைத்துணை விஷயத்தில் இதுவரை ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்கின்ற மனநிலைமையில் இருந்தவர்கள் இப்போது தெளிவான ஒரு முடிவினை எடுப்பீர்கள். அது நல்ல முடிவாகவும் இருக்கும். மேஷத்திற்கு நல்லவைக்கான தெளிவு கிடைக்கும் வாரம் இது.


தங்கநகை, நவதானியம், ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள், கோவில்கள், வழிபாட்டுத் தலங்களை சுற்றி கடை வைத்திருப்பவர்களின் வியாபாரம் உயரும். 22,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 23-ம் தேதி மாலை 4:03 முதல் 25-ம் தேதி மாலை 5:21 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாமல் சற்று எரிச்சலான ஒரு நிலையில் இருப்பீர்கள் என்பதால் எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்:

ரிஷப ராசிக்கு ஒரு சிறப்பு பலனாக எதிர்ப்புகள் விலகும் வாரம் இது. நீண்ட நாட்களாக உங்களுக்கு மன வருத்தத்தை கொடுத்துக் கொண்டு இருந்த உயரதிகாரி மாறுதலாகி, அந்த இடத்திற்கு அனுசரணையானவர் வருவார். அல்லது அவர் உங்களுக்கு சாதகமாக மாறுவார். பிள்ளைகள் விஷயத்தில் சந்தோஷப்படும்படியான விஷயங்கள் இருக்கும். இளைய வயது ரிஷபத்தினர் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இன்சூரன்ஸ், மார்க்கெட்டிங், ரெக்கவரி வெரிபிகேஷன் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு இது நல்ல வாரம். 

உங்களில் சிலருக்கு பெண் உறவினர் வகையில் விரையமும், செலவுகளும் உண்டு. மேற்படிப்பு படிப்பதற்கு முயற்சிகள் எடுத்திருந்த சிலருக்கு அவை வெற்றி பெறும்.  21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 25-ம் தேதி மாலை 5.21 முதல் 27-ம் தேதி மாலை 6:04 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். இந்த நாட்களில் அறிமுகம் ஆகும் நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளை கொடுப்பார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டும்.

மிதுனம்:

ராசிநாதன் புதன் பகை வீட்டில் செவ்வாயின் பார்வையில் இருப்பதால் மிதுன ராசிக்கு ஒரு முக்கிய பலனாக தொழில், வேலை விஷயத்தில் ஏதாவது தவறான முடிவு எடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. எதையும் முன்னதாக பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டுச் செய்ய வேண்டிய வாரம் இது. சிலருக்கு பயணம் சம்பந்தமான வேலைகள் அமைந்து அலைச்சல்களும் பிரயாணங்களும் இருக்கும். பயணங்களால் லாபமும் இருக்கும். வீண் விரயங்கள் இப்போது இருக்கும் என்பதால் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யுங்கள்.

மிதுனத்திற்கு இப்போது தந்தையின் ஆதரவும் ஆசிகளும் உண்டு. தந்தையைப் பிரிந்து இருப்பவர்கள் அவரைத் தேடிச் சென்று நேரிடையாக அவரது ஆசிகளைப் பெற்று வாருங்கள். அனைத்தும் சிறக்கும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு இப்பொழுது  நல்ல வரன்கள் அமையும். ஏற்கனவே முதல் திருமணம் கசப்பாக அமைந்து விவாகரத்து பெற்றவர்களுக்கு  இரண்டாவது வாழ்க்கை நல்ல முறையில் அமைவதற்கான ஏற்பாடுகள் இப்பொழுது நடக்கும். வியாபாரிகளுக்கு எதிர்ப்புகள் விலகும்.

கடகம்:

கடகத்திற்கு யோக வாரம் இது. பிக்கல் பிடுங்கல் எதுவும் இல்லாமல் நிம்மதியாக இருப்பீர்கள். இதுவரை இருந்து வந்த மனக்குறைகள் தீருவதற்கான வழி பிறக்கும் வாரம் இது. குரு ஒன்பதாம் வீட்டில் நல்ல அமைப்பில் இருப்பதால் சிலருக்கு உடன்பிறந்த சகோதரர்களிடம் இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பங்காளிகளால் உண்டான சொத்துத் தகராறுகள், நிலப் பிரச்சினைகள், விவசாயம் மற்றும் செம்மண் பூமி சம்பந்தப்பட்ட விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகத் திரும்பும். இனி எல்லாம் நன்மைதான்.

வாரம் முழுவதும் சந்திரன் நல்ல இடங்களில் இருப்பதால் மனமகிழ்ச்சியும், சந்தோஷமும் இருக்கும். சுக்கிரனின் ஐந்தாமிட நிலையால் தொழில், வேலை விஷயங்களில் சிக்கல்கள் எதுவும் இன்றி சிறப்புக்கள் இருக்கும். காதலித்துக் கொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து வாழ்க்கைத் துணையை அடையாளம் காண்பார்கள். இதுவரை இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது. சிறிய தொகையாக இருந்தாலும் சேமிக்க முடியும்.

சிம்மம்:

இதுவரை உங்களை ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என இரட்டை மன நிலையில் இருக்க வைத்திருந்த ராசிநாதனின் நீச்ச நிலை முடிந்து விட்டதால் சிம்மத்திற்கு இது நல்ல வாரமே. சிலருக்கு வேலைக்கு செல்லும் மனைவியால் உதவிகளும் தேவைகள் நிறைவேறுதலும் இருக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். அரசு, தனியார் ஊழியருக்கு  எதிர்பாராத லாபம் உண்டு. சிலருக்கு ஆன்மீக ஈடுபாடும், சிவத்தொண்டு செய்யும் வாய்ப்பும் கிடைக்கும். இந்த வாரம்  கெடுதல்கள் சொல்ல ஏதும் இல்லை.

தொழில், வியாபாரம், வேலை முதலிய ஜீவன அமைப்புகளில் நல்ல பலன்கள் நடக்கும். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு ஏற்றம் தரும் நிகழ்வுகள் உண்டு. பத்தாம் வீட்டோன் இந்த வாரம் வலுப் பெறுவதால் போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். அலுவலகங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயங்கள் இருக்கும். சிலருக்கு விரும்பிய வேலை கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடப்பதற்கான ஆரம்பங்களும்  உண்டு.

கன்னி:

வாரம் முழுவதும் யோகாதிபதி சுக்கிரன் மற்றும் ராசிநாதன் புதன் இருவரும் குருவின் பார்வையில் இருக்க, ராசிக்கும் குரு பார்வை இருப்பது யோக அமைப்பு இருப்பதால் கன்னிக்கு மேன்மைகளை தரும் வாரம் இது. மூன்றாமிடத்தில் சூரியன், புதன் இணைந்திருப்பதால் உங்களில் சிலருக்கு வார இறுதியில் நல்ல பணவரவு உண்டு. குறிப்பிட்ட பலனாக இந்த வாரம் பங்குச் சந்தை, யூகவணிகம், போட்டி பந்தயங்களில் ஓரளவு லாபம் கிடைக்கும். வீண் செலவுகள் இல்லாத வாரம் இது. லாப வீட்டை பார்க்கும் அமைப்பில் குரு இருப்பதால் பொருளாதார பிரச்சினைகள் தீரும்.

இது நல்ல வாரம் என்று சொல்லும் அதேநேரத்தில் வீடு வாங்குவது, தொழிலை விரிவுபடுத்துவது போன்றவைகளில் யோசித்து செயல்படுங்கள். தற்போது வீடு கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு தடைப்பட்டு முடிக்கும் அமைப்பு இருப்பதால் நல்ல காண்ட்ராக்டரிடம் பொறுப்பை ஒப்படைப்பது நல்லது. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் கெடுபலன்கள் எதுவும் இருக்காது. உங்களைப் பிடிக்காதவர்களிடமிருந்து தனலாபம் கிடைக்க வேண்டும் என்பது இந்த வார பலன். எனவே மறைமுகமான பணவரவு கிடைக்கின்ற வாரம் இது.

துலாம்:

துலாத்திற்கு நிதானமான பலன்கள் நடக்கும் வாரம் இது. ராசிநாதன் சுக்கிரன் இரண்டில் அமர்ந்து தன்னுடைய வீடான எட்டைப் பார்ப்பதால் சிலருக்கு குழப்பங்களும், ஏதேனும் தவறாக நடந்து விடுமோ என்ற மனக் கலக்கமும் இருக்கும் என்றாலும், ஐந்தாம் அதிபதி சனியும், ஒன்பதாம் வீட்டோன் புதனும் நல்ல நிலையில் இருப்பதால் உங்களுக்கு வேண்டாதது எதுவும் நடந்து விடாது. கெடுபலன்கள் வருவது போலத் தோன்றினாலும் கடைசி நேரத்தில் எல்லாம் விலகி நல்லவை நடக்கும் வாரம் இது. துன்பம் அனைத்தும் விலகும் வாரம் இது.

இளைய பருவத்தினருக்கு வேலை மாற்றம், வெளியூர் மாற்றம், மாற்றத்துடன் கூடிய பதவி உயர்வு போன்றவைகள் உண்டாகும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு கூடிய நல்ல விதமான திருப்பங்கள் இருக்கும். வைத்திருக்கும் இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். சிலர் வாகன மாற்றம் செய்வீர்கள். வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல் அல்லது புது வீடு வாங்குதல் போன்றவைகளும் நடக்கும். நீண்டகால கடன் பெற்று வீடு வாங்க முடியும்.

விருச்சிகம்:

ராசிநாதன் செவ்வாய் வாரம் முழுவதும் ராசியைப் பார்க்கும் நிலையில் இருப்பதால் விருச்சிகத்திற்கு  சிக்கல்களோ தொல்லைகளோ இல்லாத வாரம் இது. கடந்த சில வருடங்களாக தொழில் விஷயங்களில் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனி தொழில் முன்னேற்றம் பெறுவதை காண்பீர்கள். எதிர்ப்புகளையும், பின்னடைவுகளையும் சந்தித்தவர்கள் இனிமேல் அனைத்தும் மாறி உங்களுக்கு சாதகமான சூழல் அமைவதையும் பார்க்க முடியும். பிறந்த ஜாதகத்தில் யோகமான தசாபுக்திகள் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு இரட்டிப்பு நற்பலன்கள் நடக்கும்.

குறிப்பிட்ட சிலர் இந்தவாரம் ஏதேனும் ஒரு விஷயத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு பதவிகள் வரும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், மற்றும் புதையல், லாட்டரி போல முற்றிலும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் கிடைப்பது இந்தவாரம் உண்டு. இளைஞர்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். தந்தையிடமிருந்து ஆதரவு இல்லாமல் இருந்து வந்த நிலைமை இனி சீர்படும். பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் உண்டு.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களின் எண்ணங்கள் யாவும் பலிக்கும் வாரம் இது. யோகாதிபதி  செவ்வாய் சுப நிலையில், ஆறாம் வீட்டில் இருப்பதாலும், குரு நான்காம் இடத்தில் அமர்ந்து தொழில் வீட்டை பார்த்து பலப்படுத்துவதாலும் தொழில் விவகாரங்களில் இந்த வாரம்  சாதிப்பீர்கள். தர்ம கர்மாதிபதி யோகமாக சூரியன், புதனுடன் இணைவதும் நல்ல பலன்களை கொடுக்கும் என்பதால் இந்த வாரம் உற்சாகமும், புத்துணர்ச்சியும் தரும். வெகு நாட்களாக தீராமல் தொல்லை கொடுத்து வந்த பிரச்னைகளை இந்த வாரம் உங்களால் தீர்க்க முடியும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் இல்லாமல் நம்பிக்கையூட்டும் வாரம் இது. 

தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நல்லபடியாக நடக்க ஆரம்பிக்கும். சுயதொழில் செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு மேன்மையான பலன்கள் உண்டு. அரசியல்வாதிகளுக்கு மறைமுக எதிரிகள் பின்னால் குழி பறிப்பார்கள் என்பதால் பேசும் போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். சிலருக்கு ஆன்மீகச் சுற்றுலா உண்டு. கடன் தொல்லைகள் எல்லை மீறாது. அதே நேரத்தில் உங்களுக்கு வர வேண்டிய பணம் இழுத்தடித்துத்தான் வரும்.  

மகரம்:

மகரத்திற்கு தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டிருந்த கிரக நிலைகள் இனி இல்லை. இன்னும் சில வாரங்களில் உங்களை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் ஜென்மச் சனி விலகப்போகிறது என்பதால் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் திக்குத் தெரியாமல் இருந்தவர்களுக்கு வழி காட்டும் வாரமாக இது இருக்கும். இளைய பருவ மகர ராசியினரின்  வேதனைகள் அனைத்தும் தீரும் காலம் வந்து விட்டது. இனிமேல் தொல்லைகள் எதுவும் உங்களுக்கு இருக்கப் போவது இல்லை. போட்டியாளர்கள் ஒழிவார்கள்.

உங்களின் கௌரவத்திற்கும், நன்மதிப்பிற்கும் பங்கம் எதுவும் இல்லாத வாரம் இது. வாழ்க்கைத் துணை விஷயத்தில் கெடுபலன்கள் எதுவும் இல்லாத வாரமாக இருக்கும். சுக்கிரன் குருவின் பார்வையில் அமர்ந்து செவ்வாயுடன் பரிவர்த்தனை பெறுவதால் வாழ்க்கைத் துணையால் கோர்ட்டுக்குச் சென்றவர்கள் சாதகமான தீர்ப்பை பெறுவதற்கான வழிகளும் இந்த வாரம் உண்டு. தொழில்நஷ்டம் வேலையிழப்பு போன்றவைகளை சந்தித்தவர்கள் இனிமேல் நல்ல மாற்றங்கள் நடந்து ஏற்கனவே இருந்ததை விட நல்ல  வாய்ப்புகளை அடைவீர்கள்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்கள் சிலருக்கு புதியதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளும், ஆட்களும் தற்போது அறிமுகமாவார்கள். அடுத்த வருடம் ஜென்மச்சனி ஆரம்பிக்க இருப்பதால் இப்போது எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். புதிய முயற்சிகளை செய்வதற்கு முன்பு ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செய்ய வேண்டிய வாரம் இது. ஐந்துக்குடைய புதனும், ஒன்பதுக்குடைய சுக்கிரனும் வலுவாக இருப்பதால்  குறைகள் சொல்ல எதுவும் இல்லை. அதேநேரம் கிடைக்கும் வாய்ப்புக்கள் எதையும் சரியாகச் செயல்படுத்த முடியாத நிலையும் இருக்கும்.

கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு அலைச்சல்கள் ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு புறம் வருமானமும் கண்டிப்பாக இருக்கும். அலுவலகப் பணியாக நீண்ட தூர பிரயாணங்கள் உண்டு. கணவன், மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும். வாரம் முழுவதும் சந்திரன் சுபவலுப் பெற்று இருப்பதால் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். பொதுவில் இது சிறப்பான வாரம்தான்.

மீனம்:

மீனத்திற்கு இனிமேல் தடைபட்ட வருமானங்கள் வர ஆரம்பிக்கும். இந்த வாரம் உடன் பிறந்தவர்களுடன் ஏதேனும் சச்சரவு வரலாம் என்பதால் பேச்சு வார்த்தைகளில் கவனமாக இருங்கள். எதிலும் நிதானம் தேவை. தந்தைவழியில் இருந்து வந்த சாதகமற்ற நிலை இப்போது மாறும். போட்டிகளையும், சிக்கல்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நிலைமை மாறி தொழில் சூடு பிடிக்கும். புதிய கடை திறக்க முடியும். இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். கிளைகள் ஆரம்பிப்பீர்கள்.

விரும்பிய இடங்களுக்கு போய் வருவீர்கள். இதுவரை எந்த விஷயங்களில் தாங்க முடியாத அவஸ்தைகளும், சிக்கல்களும் இருந்து வந்ததோ அவைகள் இனிமேல் தீரத் தொடங்கி நல்லபடியாக மீண்டு வருவீர்கள். 24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 21-ம் தேதி அதிகாலை 12:30 முதல் 23-ம் தேதி மாலை 4:03 வரையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்க்கவும். வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம்.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்