குருஜியின் வார ராசிபலன்கள் (14-11-2022 முதல் 20-11-2022 வரை)

#adityagurujivararasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

மேஷம்:

மேஷ ராசியினர் எதையும் சுலபமாக சமாளிக்கும் வாரம் இது. ராசிநாதன் சுக்கிரனோடு பரிவர்த்தனை அமைப்பில் இருப்பதால் இளைஞர்களுக்கு இதுவரை காதல் விஷயத்தில் நடந்து வந்த எதிர்மறையான பலன்கள் நீங்கி, நல்ல பலன்கள் நடக்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். சிறிய விஷயங்களால் பிரிந்திருந்தவர்கள் ஒன்று கூடுவீர்கள். முதல் திருமணம் கோணலாகி காவல் நிலையம், வழக்கு, நீதிமன்றம் என்று அலைந்து திரிந்தவர்களுக்கு அனைத்தும் இப்போது நல்லபடியாக ஒரு முடிவிற்கு வந்து தெளிவு பிறக்கும். இரண்டாவது வாழ்க்கைக்கான அமைப்புகள்  உருவாகும்.


ராசியில் ராகு இருப்பதால் சிலருக்கு அரபுநாடுகளில் வேலை, தொழில் போன்ற தொடர்புகள் ஏற்படும். இஸ்லாமிய நண்பர்கள் உதவுவார்கள். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு சாதகமான நிலை வரும். உங்களில் கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் சாதிப்பீர்கள். சிலருக்கு வெளியூர் மாறுதல், செக்சன் மாறுதல் இருக்கும். பிள்ளைகளால் பெருமைப்படத்தக்க சம்பவங்கள் உண்டு. அவர்களால் செலவுகளும் உண்டு. வேலை செய்யுமிடங்களில் வீண் வாக்குவாதம் வேண்டாம்.

ரிஷபம்:

ராசிநாதன் ஏழாமிடத்தில் பரிவர்த்தனை அமைப்பில் இருப்பதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளின் மூலம் நல்ல பலன்களும், பொருளாதார லாபங்களும் கிடைக்கும் வாரம் இது. சுக்கிரன் வீட்டில் செவ்வாய் இருப்பது பெண்களினால் வீண் செலவுகளை தரும் என்பதால் பாக்கெட்டில் இருந்து பணம் எடுக்கும் யோசிப்பது நல்லது. உங்களில் சிலருக்கு எதிர்கால முன்னேற்றத்திற்கான மாற்றங்கள் நடைபெறும். குறிப்பிட்ட சிலருக்கு தொழில் இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவைகள் நடக்கும்.

வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும். சொந்தத்தொழில் செய்பவர்கள் வேலைக்காரர்களை நம்ப வேண்டாம். வேலைக்காரர்கள் திருடுவது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. விவசாயிகளுக்கும், கிராமப்புறத்தில் உள்ள சிறுதொழில் புரிபவருக்கும் சுமாரான பலன்கள்தான் நடக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சிலர் வெளிநாடு போவீர்கள். பேச்சின் மூலம் வாழ்க்கை நடத்தும் ரிஷப ராசிக்காரர்கள் நன்மைகளை அடைவார்கள்.

மிதுனம்:

மிதுனத்திற்கு ஒரு சிறப்பு பலனாக சுக்கிரன் ஆறாம் அதிபதியோடு பரிவர்த்தனையாகி ராசிநாதன் புதன் ஆறாமிடத்தில் சூரியனுடன் இணைவதால் பெண்கள் மூலமான மன வருத்தங்களும் செலவுகளும் உள்ள வாரம் இது. அது சுபச் செலவா? அல்லது வீண்செலவா? என்பது உங்களுடைய பிறந்த ஜாதக அமைப்பை பொருத்தது. பொதுவாக இது நல்ல பலன்கள் நடக்கும் வாரம்தான். சிலருக்கு தொழில், வேலை அமைப்புகளில் இருந்து வந்த தடைகள் விலகி நன்மைகள் நடக்கும். கடை வைத்திருப்பவர்களுக்கு வியாபாரம் குறையும் என்றாலும் லாபம் இருக்கும். வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது.

புதிதாக எந்த சிக்கல்களும் வராது. சிலர் ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு அது கைகூடும். சொந்தத் தொழில் செய்பவர்கள் மிகுந்த நல்ல மாற்றங்களை உணர்வார்கள். புதனை குரு பார்ப்பதால் தடைகள் அனைத்தையும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். கலைஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மிகவும் நல்ல சந்தர்ப்பங்களை அடைவீர்கள். பொதுவில் மிக நல்ல வாரம் இது.

கடகம்:

கடகத்திற்கு சிக்கல்கள் எதுவும் இல்லாத வாரம் இது. ராசியும் ராசிநாதனும் குருவின் பார்வையில் இருப்பதால் இது விசேஷமான வாரம்தான். சிறப்பு பலனாக ஏற்கனவே உங்கள் மூலமாக உதவிகள் பெற்ற ஒருவர் அந்த நன்றிக்கடனை திருப்பிச் செலுத்தும் வாரமாகவும் இது இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுகளும், வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றில் நல்ல வருமானங்களும் இருக்கும். இதுவரை நிறைவேறாமல் இருக்கும் நியாயமான, நேர்மையான விஷயங்கள் நிறைவேறும். இளைய பருவத்தினர் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வீர்கள்.

வீண் விரையங்கள் இனிமேல் இருக்காது என்பதால் பாக்கெட்டில் பணம் தங்கும். குடும்ப விஷயங்களிலும், தொழில் விஷயங்களிலும் நன்மைகளைத் தரக்கூடிய அமைப்பு இருப்பதால் எதுவும் எல்லை மீறிப் போகாது.  கணவன், மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும்.  குரு வலுப் பெற்று இருப்பதால் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் இருக்கும். நீண்ட நாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும்.

சிம்மம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் சூரியன் சுக்கிரனோடு இணைந்து குருவின் பார்வையில் சுபத்துவமாக  இருப்பதால் சிம்ம ராசிக்காரர்களின் பணக் கஷ்டங்கள் தீரும் வாரம் இது. சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு அமைவதற்கான ஆரம்பக் கட்ட நிகழ்வுகள் இருக்கும். சிலருக்கு சிந்தனை முழுவதும் சொந்த வீட்டைப் பற்றியே சுற்றிச் சுற்றி வரும். அம்மாவை விட்டுப் பிரிந்து இருப்பவர்கள் அவரை நேரில் சென்று பார்த்து, ஆசிர்வாதங்களைப் பெற்று வருவது இன்னும் சிறப்புகளைச் சேர்க்கும். பெண்கள் விஷயத்தில் நன்மை நடக்கும். பெண்கள் உதவுவார்கள்.

வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். அந்தஸ்து உயரும். பத்திரிக்கை துறையினருக்கு இது நல்ல வாரம்.  சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் சுபகாரியங்களுக்கான முன்னோட்டம் இருக்கும்.  நண்பர்கள் உதவுவார்கள். குலதெய்வ தரிசனம் கிடைக்கும். மனைவி வழியில் அனுகூலம் இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பாகப் பிரிவினைகள் முடிந்து உங்கள் பங்காக ஒரு நல்லதொகையோ, சொத்துக்களோ கிடைக்கும்.

கன்னி:

ராசியை ஏழாம் இடத்திலிருந்து குரு பார்க்க, ராசிநாதன் சுக்கிரனுடன் இணைந்து குருவின் பார்வையில் சுபத்துவமாக மூன்றாம் இடத்தில் இருப்பதால் முயற்சிகள் அனைத்தும் பலிக்கக்கூடிய யோகமான வாரம் இது. இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும் கால கட்டம் இது. காதல் விவகாரங்களில் சிக்குவீர்கள். அதனால் சந்தோஷ உலகில் சஞ்சரிப்பீர்கள். மாற்றங்கள் இருக்கும் வாரம் இது. குறிப்பாகச் சொல்லப்போனால் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வாரம் இது. 

கணவன், மனைவி உறவு சுமாராகத்தான் இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியான பெண்களின் கீழ் வேலை பார்ப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு நன்மைகள் உண்டு. தொழில் சீர்படும். லாபம் தரும். வரும் லாபத்தை சேமிக்க முடியும். செலவுகள் குறையும். விரையங்கள் இருக்காது. கலைஞர்களுக்கு முயற்சிகளுக்கு பின்புதான் நல்லவை நடக்கும். சுயதொழில் செய்பவர்கள் வளம் பெறுவார்கள். அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு அலுவலகங்களில் நெருக்கடிகள் இருக்கும்.

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் இரண்டாம் இடத்தில் அமர்ந்து பரிவர்த்தனையாகி குருவின் பார்வையில் இருப்பதால் பண வரவின் மூலமாக குடும்பச் சிக்கல்களை நீங்கள் சமாளிக்கின்ற வாரம் இது சமூக ஊடகங்களில் இப்பொழுது துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மைகளும் வரவுகளும் நற்பெயர்களும் இருக்கும். பேஸ்புக் யூடியூப் கைகொடுக்கும். ஆண்களுக்கு பெண்கள் விஷயத்தில் செலவுகளும், மனவருத்தங்களும் இருக்கும். பெண்களுக்கு அபாரமான நன்மைகள் உண்டு, இதுவரை உங்களை புரிந்து கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார்.

கணவன்-மனைவிக்குள் ஏதாவது ஒரு விஷயத்தில் சந்தேக விதையை ஏழாமிடத்தில் உள்ள ராகு விதைப்பார் என்பதால் மூன்றாம் நபர் சொல்வதை நம்பாமல் இருப்பது நல்லது. எனக்குத் தெரியாமல் அக்கா, தங்கைகளுக்கு செய்கிறாரோ என்ற சந்தேகம் மனைவிக்கும், எனக்கு தெரியாமல் தன் குடும்பத்திற்கு செய்கிறாளோ என்று கணவருக்கும் நினைக்கத் தோன்றும் சந்தேக வேலைகளை ராகு செய்வார் என்பதால் எண்ணங்களிலும் பேச்சிலும் நிதானம் இந்த வாரம் தேவைப்படும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்:

கிரகநிலைகள் விருச்சிகராசிக்கு சாதகமாக இருப்பதால் எல்லா வழிகளிலும் நன்மைகள் மட்டுமே இருக்கும் வாரம் இது. எதிர்ப்புகள் பலவீனமாகி தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். யோகக் கிரகங்கள் வலுவாக இருப்பதால் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களும் இப்போது நல்லபடியாக நடக்கும். இளைஞர்கள் சிலருக்கு அவர்களின் வாழ்க்கை லட்சியத்தை அடைவதற்கான ஆரம்பக்கட்ட முயற்சிகள் இருக்கும். அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு கெடுதல்கள் எதுவும் இருக்காது. பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும்.

சுக்கிரன் ராசியில் அமர்ந்து பரிவர்த்தனையாகி ஏழைப் பார்ப்பதால் வாழ்க்கை துணையிடம் வாயைக் கொடுக்க வேண்டாம். பதிலடி பெரும் அளவில் வரும் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது.  சிலருக்கு வீடு, வாகனம், தாயார் போன்ற அமைப்புகளில் நல்ல பலன்கள் நடக்கும். இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும். கணிதம், அக்கௌன்ட், மென்பொருள் துறையினர்கள் மேன்மை அடைவார்கள். சிறிய விஷயங்களால் பிரிந்திருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டு கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து பணம் வரும்.

தனுசு:

ராசிநாதனான குரு நான்காமிடத்தில் ஆட்சி அமைப்புடன் எந்தவித பாபத் தன்மையும் இன்றி வலுவாக இருக்கிறார். கஷ்டங்கள் இல்லாத வாரம் இது. ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், பேச்சாளர்கள், மார்க்கெட்டிங் துறையினர், கவுன்சிலிங் செய்பவர்கள் போன்றவர்களுக்கு இது நல்ல நேரம். புதிய வீடு கட்டுவதற்கோ பெருநகரங்களில் இருப்பவர்கள் சொந்தமாக பிளாட் வாங்கவோ உண்டான ஆரம்பங்கள் இப்போது உண்டு. பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு பதவிகள் தேடி வரும். கலைஞர்களுக்கு நல்ல வருமானம் உண்டு.

அதிர்ஷ்டமான காலகட்டம் என்பதால் மனதில் நினைத்திருந்த முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்தலாம். வயதானவர்கள் உடல்நலத்தில் அக்கறை வைக்க வேண்டும். 17,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 14-ம் தேதி காலை 6.30   முதல் 16-ம் தேதி மாலை 6.58 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்க வேண்டாம். மேற்கண்ட தினங்களில் அறிமுகமாகும் நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளை கொடுப்பவர்களாக மாறுவார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.

மகரம்:

‘வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்’ என்ற பழமொழியை இந்த வாரம் மகர ராசிக்காரர்கள் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். குரு மூன்றில் அமர்ந்து ஒன்பதைப் பார்க்கும் நிலையில் இருப்பதால் நல்லவை நடக்கும். சுக்கிர வலுவால் பெண்களால் லாபம் இருக்கும். அம்மாவின் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்ஷம் நிலவும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். கணவன், மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் உண்டு. நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள்.

புனிதத் தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஷீரடி, மந்திராலயம் போன்ற இன்றும் மகான்கள் வாழ்ந்து நம்மை ஆசிர்வதிக்கும் இடங்களுக்கு சென்று வருவீர்கள். இளைஞர்கள் பெங்களூர், ஐதராபாத், பயணிப்பீர்கள். 20,21 ஆகிய நாட்களில் பணம் வரும். 16-ம் தேதி மாலை 6.58 முதல் 19-ம் தேதி காலை 5.28 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் மேற்கண்ட நாட்களில் செய்ய வேண்டாம்.

கும்பம்:

கும்பத்திற்கு குழப்பங்களுடன் ஆரம்பிக்கும் வாரம் இது. அதேநேரத்தில் தொழிலைக் குறிக்கும் பத்தாமிடத்தில் சுக்கிரன் இருப்பதால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்லவைகள் நடக்கும். மூன்றில் ராகு வலுவாக இருப்பதால் சிலருக்கு எப்படி வருமானம் வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத மறைமுகவகை லாபங்கள் உண்டு. இன்னும் சிலருக்கு இஸ்லாமிய, கிறித்துவ நண்பர்கள் மூலமாக வருமானங்கள் வரும். சிலருக்கு ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும்.

வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். சுயதொழில் செய்பவர்கள் வளம் பெறுவார்கள். அலுவலகங்களில் நற்பெயர் இருக்கும். 16,17 ஆகிய நாட்களில் பணம் வரும். 19-ம் தேதி காலை 5.28 முதல் 21-ம் தேதி பகல் 12.30 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட தினங்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்களில் மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

மீனம்:

ஆறுக்குடைய சூரியன் ஒன்பதாமிடத்தில் அமர்ந்து சுக்கிரனுடன் இணைந்து சுபத்துவமாகி குருவின் பார்வையிலும் இருப்பதால் எதிர்ப்புகள் உருவாகும் வாரம் இது. இதுவரை உங்களிடம் பணிந்தவர்கள் இப்போது எதிர்க்கத் துணிவார்கள். முதுகுக்குப் பின்னால் பேசுபவர்களையும், செயல்படுபவர்களையும் என்ன செய்வது என்று தெரியாமல் முழிப்பீர்கள். பெண்கள் விஷயத்தில் சுகமும், செலவுகளும் உண்டு. தேவைக்கு அதிகமாக கடன் வாங்க வேண்டாம். கிரெடிட் கார்டு இருக்கிறது என்று தேவை இல்லாததை வாங்கிவிட்டு சிக்கலில் மாட்டாதீர்கள்.

பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும். சிலருக்கு வேலைமாற்றம், தொழில்மாற்றம், வீடுமாற்றம் போன்றவைகள் நடக்கும். ராசிநாதன் குரு திடீர் அதிர்ஷ்டத்தை குறிக்கும் எட்டாமதிபதி சுக்கிரனை பார்ப்பதால் இதுவரை இருந்து வந்த கடன், நோய், எதிரி தொந்தரவுகள் அனைத்தும் சாதகமாக மாறி தீர்வுக்கு வரும். அரசுவகை உதவிகள் எதிர்பார்ப்போருக்கு நல்லவை நடக்கும்.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்