குருஜியின் வார ராசிபலன்கள் (24-10-2022 முதல் 30-10-2022 வரை)

#adityagurujivararasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

மேஷம்:

ராசிநாதன் செவ்வாய் மூன்றில் மறைவு ராசியை நீச்சச் சூரியன் பார்க்கிறார் என்ற சாதகமற்ற அமைப்புடன் இந்த வாரம் ஆரம்பிக்கிறது. 12 இல் குரு பாபத்துவம் பெறுவது கடன், நோய், எதிரி, தொந்தரவுகளை கொடுக்கும் என்றாலும் அவர் இன்னொரு வகையில் யோகத்தை கொடுக்கும் பாக்கியதிபதி என்பதால் மேஷத்திற்கு கெடுதல்கள் எதுவும் வராமல் நன்மைகள் மட்டுமே நடக்கும். சிலருக்கு கடன் விவகாரங்களில் மன அழுத்தம் இருக்கும் என்பதால் பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. சிலருக்கு நீண்ட தூரப் பிரயாணங்கள் உண்டு.


கைகளில் ஆயுதங்களை வைத்துக் கொண்டு தொழில் செய்பவர்கள், டெய்லர்கள், இறைச்சிக் கடையில் பணிபுரிபவர்கள், காவல்துறை, செக்யூரிட்டி உள்ளிட்டவர்கள் இந்த வாரம் நல்ல திருப்பு முனையான பலன்களைப் பெறுவீர்கள். 25,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 27-ம் தேதி காலை 6.30 முதல் 29-ம்தேதி காலை 9.05  வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட தினங்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்களில் மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும் என்பதால்  முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் நீச்சனுடன் இணைந்து ஆறாமிடத்தில் இருந்தாலும், அங்கே அவர் பலம் பொருந்திய ஆட்சி அமைப்பு பெறுவதால் யோகத்தை கொடுக்கக் கூடியவர் ஆகிறார். அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெறுவதால் யோக நிலை பெறுகிறார். எனவே இது. ரிஷபத்திற்கு  நல்லபலன்கள் நடக்கும் வாரம்தான். ஆறில் கேதுவும் இருப்பதால் உங்கள் மனநிலை சரியாக இருக்காது. எல்லோருடனும் சண்டை பிடிப்பீர்கள். எதிலும் ஒரு மந்த நிலைக்குப் பிறகு நன்மைகளை நீங்கள் அனுபவிக்கும் வாரம் இது.

பணிபுரியும் இடங்களில் உண்டான சிக்கல்கள் தீர்ந்து மீண்டும் அலுவலகங்களில் சாதகமான நிலைமை உண்டாகும். உங்களை பிடிக்காதவர்களின் கை தாழ்ந்து இனி நீங்கள் மேலே வருவீர்கள். நீண்ட நாட்களாக முயற்சி செய்து கொண்டிருந்த விஷயங்கள் இப்பொழுது வெற்றியடையும். வராது என்று கைவிட்ட பணம் வரும். பெண்கள் சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் சிறப்படைவார்கள். 29-ம் தேதி காலை 9.05 முதல் 31-ம்தேதி காலை 11.23 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட தினங்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்காமல் இருப்பது நல்லது.

மிதுனம்:

மிதுனத்திற்கு ஒரு குறிப்பிட்ட பலனாக அயல்நாட்டு யோகம் கிடைக்கும் வாரம் இது. பிறந்த இடத்தை விட்டு தூரத்தில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவீர்கள். ராசியில் செவ்வாய் இருப்பதால் கூடுதலாக கோபப்படுவீர்கள். ‘’தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு’’ என்ற தெய்வப் புலவரின் திருவாக்கு இந்த வாரம் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். பேச்சில் கவனமாக இருங்கள். ராசியில் இருக்கும் செவ்வாய் எட்டில் உள்ள சனியால் இந்தவாரம் ஏதாவது ஒன்றிற்காக பெரிய பொய் சொல்ல வேண்டி இருக்கும்.

தொல்லை தந்து கொண்டிருந்த கடன் நோய் எதிரி அனைத்தும் இனி விலகும். வழக்குகள் சாதகமாகும். இதுவரை நம்பிக்கை தராமல் இருந்த கோர்ட் கேஸ் இனிமேல் உங்கள் பக்கம்தான் ஜெயிக்கும் என்பதை உணர முடியும். உங்களில் சிலர் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் எனும்படி வழக்கு தொடுத்தவரை  நேரில் சந்தித்து சமரசமாவீர்கள்.  மிதுன ராசிக்கு இனி எல்லாவற்றிலும் வெற்றிதான். நான் சொல்வதை நீங்கள் உணரும் வாரம் இது. உலகத்திலேயே அதிர்ஷ்டசாலிகள் இனி நீங்கள்தான்.

கடகம்:

கோட்சார அமைப்புகள் சாதகமான அமைப்பில் இருப்பதால் பெரும்பான்மையான கடகத்தினருக்கு  பிரச்னைகள் எதுவும் தற்போது இல்லை. இளைய பருவத்தினர் உல்லாசங்களை அனுபவிக்கும் வாரம் இது.  புதிய ஆண், பெண் நண்பர்கள் இந்த வாரம் கிடைப்பார்கள். எந்த ஒரு சுகத்தையும் வரம்புக்குள் வைத்துக் கொள்ளுங்கள். எதிலும் கட்டுப்பாட்டை இழக்காதீர்கள். இப்போது கிடைக்கின்ற சுகங்களில்தான் பின்னால் மன அழுத்தம் வரும் என்பதை மறந்து விடாதீர்கள். முக்கியமாக உங்களில் சிலருக்கு குடிப்பழக்கம் வரும் வாரம் இது.

சந்திரன் நல்ல அமைப்புகளில் இருப்பதால் திடீர் தனலாபம்  உண்டு.  பங்குசந்தை கை கொடுக்கும். அதேநேரத்தில் பேராசைப்பட்டு பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். கடமைக்காக பொய் சொல்ல வேண்டிய வக்கீல், மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் இருப்பவர்கள் மேன்மை அடைவீர்கள். 30 வயதுகளில் இருப்பவர்களுக்கு எதிர்கால முன்னேற்றத்திற்கான அமைப்புகள் இப்போது உருவாகும்.  சனி, குரு இருவரும் ராசியைப் பார்ப்பதால் குரு, சனி, கேது புக்தி நடப்பவர்களுக்கு தியானம், யோகா போன்ற ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு வரும்.

சிம்மம்:

ராசிநாதன் சூரியன் நீச்ச நிலையில இருப்பதால் எதையும் ஒரு தயக்கத்துடன் நீங்கள் அணுகும் வாரம் இது. எல்லா விஷயங்களும் இழுத்துக் கொண்டு போய்தான் நல்லதாக முடியும். சிலருக்கு இதைச் செய்யலாமா வேண்டாமா என்கிற யோசனை இருக்கும். சிறு விஷயத்திற்கும் கோபப்படுவீர்கள். வாழ்க்கைத் துணைவரும், பிள்ளைகளும் உங்களின் கோபத்தை பார்த்து அருகில் வருவதற்கு தயங்கவே செய்வார்கள். சிலருக்கு பிள்ளைகளால்  தேவையற்ற பிரச்னைகளும், மனக் கசப்புகளும், விரயங்களும் இருக்கும். வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது.

தொழில் அமைப்புகளிலும், வீட்டிலும் சங்கடங்களை சந்தித்து கொண்டிருப்பவர்களுக்கு ஆறுதல் தரும் நல்ல செய்திகள் உண்டு. என்னதான் நன்மைகள் நடந்தாலும் ராசிநாதன் நீச்சமாக இருப்பதால் இது நன்றாக நடக்குமா என்ற சந்தேகத்தில்தான் நீச்ச சூரியன் உங்களை வைத்திருப்பார். உங்களுடைய எண்ணங்களிலும், செயல்களிலும் தன்னம்பிக்கை சற்றுக் குறைவாகத்தான் இருக்கும். பனிரெண்டு ராசிகளில் சிம்மம் அதிகாரம் செய்யும் ராசி என்பதால் சிம்மத்தில்   பிறந்தவர்கள் ஒருபோதும் சோடை போக மாட்டீர்கள்..

கன்னி:

குரு ஏழாமிடத்தில் வலுவாக இருப்பது கன்னி ராசிக்கு நன்மைகளை தரும் அமைப்பு என்பதால் இது உங்களுக்கு நன்மையான வாரம்தான். உங்களைப் பிடிக்காமல் மறைமுகமாக உங்கள் முதுகிற்குப் பின்னால் தவறாக பேசியவர்கள் இந்த வாரம் அதற்கு வருந்துவார்கள். எதிர்ப்புகளையும், எதிரிகளையும் நீங்கள் ஜெயிக்கும் வாரம் இது. சூரியன் இரண்டில் நீச்ச நிலை அடைந்திருப்பதால் தந்தை மற்றும் சகோதர விஷயத்தில் வீண்செலவுகளும் மன வருத்தங்களும் இருக்கும். செவ்வாய் வலுவால் எதையும் சமாளிப்பீர்கள்.

வயதான தகப்பனாரை கொண்டவர்களுக்கு தந்தையால் செலவுகளும், மன வருத்தங்களும் தரக்கூடிய நிகழ்வுகள் நடக்கும். அப்பாவின் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது. அதனால் வீண் வாக்குவாதங்களையும், குழப்பங்களையும் தவிர்க்க முடியும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். காவல்துறை மற்றும் சட்டத்துறையை  சேர்ந்தவர்களுக்கு  மேன்மையான பலன்கள் நடக்கும். குறிப்பாக வக்கீல்கள் வளம் பெறுவீர்கள், அரசியல்வாதிகளுக்கு குறிப்பிடத்தக்க நல்ல மாற்றம் உண்டு. அந்தஸ்து கௌரவம் கூடும்.

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன், நீச்ச சூரியனுடன் இருந்தாலும் ராசியில் வலுவாக ஆட்சி நிலை பெற்றிருப்பதால் வேலை, தொழில் அமைப்புகளில் நீங்கள் நல்ல பெயரை சம்பாதிக்கும் வாரம் இது உங்களில் சாப்ட்வேர் துறையை சேர்ந்தவர்கள் மேலதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். ஏழில் இருக்கும் ராகுவிற்கு இன்னும் சில வாரங்களுக்கு சுக்கிர பார்வை கிடைக்கும் என்பதால் உங்களில் சிலருக்கு அன்னிய மத நண்பர்களின் ஆதரவு இருக்கும். ராகு இப்போது யோகம் தருவார்.

சூரியன் லாப ஸ்தானாதிபதியாகி நீச்சம் அடைவதால் வேலை, தொழில் மூலம் சிலருக்கு விரையங்கள் இருக்கும். சிலர் வங்கி சேமிப்பை கரைய வைப்பீர்கள். அரசுத் துறையினருக்கு அதிகாரிகளின் ஆதரவு இந்த வாரம் இல்லையென்றாலும் அவர்களின் தொந்தரவு கண்டிப்பாக இருக்காது. உங்களில் வெளிநாட்டு கம்பெனிகளில் பணிபுரிபவர்களுக்கு இடமாறுதல் இருக்கும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களும் உண்டு. சிலர் மலையும் மலை சார்ந்த இடங்களுக்கும் பயணம் செய்வீர்கள். அது ஆன்மிகப் பயணமாக இருக்கலாம்.

விருச்சிகம்:

ராசிநாதன் செவ்வாய் எட்டில் மறைந்தாலும் ராசிக்கு குரு பார்வை கிடைக்கிறது. விருச்சிக ராசிக்காரர்களுக்கு இதுவரை சமாளிக்க முடியாமல் இருந்த சிக்கல்களும், பிரச்சினைகளும் தீர ஆரம்பிக்கும் வாரம் இது. சூரியன் நீச்சபங்க  வலுவாக இருப்பதால் பெண்களால் லாபம் இருக்கும். அம்மாவின் ஆசி கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்ஷம் நிலவும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். புதனும் உச்சமாக இருப்பதால் அனைத்திலும் யோகபலன்கள் நடக்கும். கோட்சார ரீதியாக இன்னும் சிலகாலத்திற்கு விருச்சிகத்திற்கு நல்லபலன்கள் மட்டும்தான். 

உங்களில் சிலருக்கு ஒரு குறிப்பிட்ட பலனாக அப்பா விஷயத்தில் நன்மைகளோ, தந்தையிடமிருந்து பணம் கிடைப்பது அல்லது நீண்டநாட்களாக சம்மதிக்காத ஒரு விஷயத்திற்கு அப்பா சம்மதிப்பது போன்ற பலன்கள் இந்த வாரம் உண்டு. இப்போது இருக்கும் பிரச்னைகள் அனைத்தும் இனி நல்லவிதமாக முடியும். சகோதரிகள் மூலம் சாதகமான பலன்கள் நடக்கும். சாப்ட்வேர் துறையைச் சேர்ந்தவர்களுக்கு பிரச்னைகள் தீரும். சிலருக்கு வெளிமாநில அல்லது வெளிநாடு போன்ற தூரப் பிரயாணங்கள் அமையும்.

தனுசு:

எவ்வளவு வருமானம் வந்தாலும் சம்பாதித்த பணம் எங்கே போனது என்று தேடும் நிலையில்தான் தனுசுக்கு இந்த வாரம் முழுவதும் இருக்கின்றது. உங்களில் சிலருக்கு ஆலயப்பணி செய்வதற்கு வாய்ப்புகள் வரும். ஆற்றோரத்தில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் இறைவாக்கும் தரிசனமும் கிடைக்கும். சிலர் குலதெய்வ தரிசனம் பெறுவீர்கள். அலுவலகத்தில் சில பெண்கள் தலைமைப் பொறுப்பிற்கு வருவீர்கள். தனுசுவினருக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகமாகும் வாரம் இது.

உங்களில் 30- வயதிற்குட்பட்டவர்களுக்கு எதிர்கால முன்னேற்றத்திற்கு துணை நிற்கும் நபர் ஒருவர் அறிமுகமாவார். அவர் மூலமாக உங்களின் எதிர்கால வாழ்க்கை தீர்மானிக்கப்படும்.. சூரியன் நீச்சம் பெறுவதால் சிலர் வெளியே சொல்லிக் கொள்ள முடியாத நீச்ச வழிகளில் பணத்தை செலவு செய்வீர்கள். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை செலவு செய்வதற்கு முன் ஒன்றுக்கு நான்கு முறை யோசிப்பது நல்லது. அரசு, தனியார் துறை ஊழியர்களுக்கு நன்மைகள் உண்டு. சகோதர உதவி உண்டு.

மகரம்:

சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் மகர ராசியினருக்கு குறைகள் தீர ஆரம்பிக்கும் வாரம் இது. இதுவரை கிணற்றில் போட்ட கல்லாக இருந்தவை அனைத்தும் இனி சாதகமாக மாறி நன்மை அளிக்கும். அதேநேரத்தில் வாழ்க்கை என்பது தமிழ் சினிமா அல்ல. சினிமாவில்தான் கதாநாயகன் ஒரே பாட்டில் கோடீஸ்வரன் ஆகி விடுவார். நிஜ வாழ்க்கையில் அதே ஹீரோவும் சாதாரண மனிதன்தான். இனிமேல் மகரத்திற்கு நல்ல பலன்கள் மட்டுமே நடக்கும். குறிப்பாக திருவோணம் நட்சத்திரத்தினர் அவசரப் படாதீர்கள். 

ஆறில் உள்ள செவ்வாய் மூலம் பூமிலாபம் ஏற்படுவதால் உங்களில் சிலருக்கு வீடு கட்டுவதற்கு அல்லது கட்டிய வீடு வாங்குவதற்கு தடையாக இருந்த அமைப்புகள் விலகுகிறது. பெண்களுக்கு மன அழுத்தத்தைத் தந்து கொண்டிருந்த அலுவலக விஷயங்கள் இனி நல்லபடியாக தீர ஆரம்பிக்கும். குறிப்பாக டார்க்கெட் வைத்து வேலை செய்யச் சொல்லும் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் நிம்மதியைப் பெறுவீர்கள். ஜென்மச்சனி விலக இருப்பதால் காலபைரவருக்கு சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.

கும்பம்:

வாரம் முழுவதும் வேலை, தொழில், வியாபாரம் போன்ற அனைத்திலும் கும்பத்தினருக்கு நல்ல பலன்கள் மட்டுமே நடக்கும் வாரம் இது. உங்களில் வில்லங்கமான  விவகாரங்களில் மாட்டிக் கொண்டு சிக்கலில் இருந்தவர்கள் பிரச்சினைகளில் இருந்து வெளியே வருவீர்கள். பாக்கியாதிபதி சுக்கிரனும் நல்ல நிலையில் இருப்பதால் சொல்லிக் கொள்ளும்படியான பணவரவு இருக்கும். கடன் தொல்லைகளால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அதனை தீர்ப்பதற்கான வழிகள் தோன்ற ஆரம்பிக்கும்.

இளைய பருவத்தினர் இனிமேல் கெடுபலன்கள் அனைத்தும் மாறி தங்களுக்குரிய வேலை வாய்ப்பு, திருமணம் போன்றவைகள் நிறைவேறப் பெறுவார்கள். 28,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 22-ம் இரவு 8.05 முதல் 25-ம் தேதி அதிகாலை 2.33  வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்க வேண்டாம். மேற்கண்ட தினங்களில் அறிமுகமாகும் நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளை கொடுப்பவர்களாக மாறுவார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.

மீனம்:

கடந்த காலங்களில் பொருளாதார சிக்கல்களை சந்தித்து கொண்டிருந்த மீனத்தினர் இந்த வாரம் முதல் அவை நீங்கி நல்ல வருமானம் தரும் வேலை, தொழில் அமைப்புகளை பெறுவீர்கள். குறிப்பாக மனைவியின் மூலமாக பொருளாதார உயர்வு இருக்கும். பெண்களுக்கு சிறப்பான வாரமிது. ஆரோக்கியம் மேம்படும். நீண்டநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சாதகமாக முடிவதும், திரும்ப வராது என்று கைவிட்ட பணம் கிடைத்து சந்தோஷப்படுதலும் நடக்கும். சிலருக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து வெளிநாடு வெளிமாநிலம் செல்லும் அமைப்பு இருக்கிறது.

உங்களில் சிலருக்கு அரசனை நம்பி புருசனைக் கைவிடும் நிகழ்வுகள் இருக்கும் என்பதால் முடிவெடுக்கும் முன் எச்சரிக்கையும் நிதானமும் தேவைப்படும் வாரம் இது. 24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 25 -ம் தேதி அதிகாலை 2.33 முதல் 27-ம்தேதி காலை 6.30 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட தினங்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்களில் மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்