குருஜியின் வார ராசிபலன்கள் (26-09-2022 முதல் 02-10-2022 வரை)

#adityagurujivararasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

மேஷம்:

ராசிநாதன் செவ்வாய் இரண்டாம் இடத்தில் அமர்ந்து சுப வலுப் பெறுவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு தடைகள் விலகும் வாரம் இது. குறிப்பிட்ட பலனாக பணிபுரியும் இடங்களில் உங்களுக்கு கெட்டபெயர் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பார்கள். புதன் ஆறாம் இடத்திலேயே வலுப்பெறுவதால் எதிரிகள் கை ஓங்கும். ஆயினும் எல்லாம் நன்மையாகவே முடியும். பணவரவு சுமாராகத்தான் இருக்கும். செலவுகளை யோசித்து கலக்கம் அடைவீர்கள். செலவிற்கு ஈடான வருமானம் அடுத்த வாரம் முதல் வரத் துவங்கும் என்பதால் இந்த மனக்கலக்கம் தற்காலிகமானதுதான். கவலை வேண்டாம்.


மேலதிகாரிகளால் சங்கடங்கள் உண்டு. அதிகாரி சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. வியாபாரிகளுக்கு போட்டிகள் இருக்கும். வியாபாரம் குறையும் என்றாலும் லாபம் குறையாது. வருமானத்தை விட அதிக செலவு இருக்கும். எதிலும் சிக்கனமாக இருங்கள். அனைத்திலும் பெரியவர்களின்  ஆலோசனை கேட்பது நல்லது. 1,2 ஆகிய நாட்களில் பணம் வரும். 29 -ம்தேதி இரவு 11.24 முதல் 2-ம் தேதி அதிகாலை 3.11 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கொண்ட தினங்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் நீச்ச நிலையில் இருந்தாலும் கூட அவர் அங்கே முறையான பங்கத்தை உச்ச புதனால் பெற்று, லாபத்தில் இருக்கும் குருவின் பார்வையில், நல்ல நிலையில் இருப்பதாலும், ஐந்தாமிடம் அதிக வலுவாக இருப்பதாலும் அதிர்ஷ்டங்கள் செயல்படும் வாரம் இது. ரிஷபத்தினர் இப்போது  அனைத்திலும் முன்னேற்றம் வரக் காண்பீர்கள். 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. குறிப்பாக சிறு தொழில் நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு மேன்மைகள் இருக்கும். உற்சாகமாக இருப்பீர்கள். நண்பர்கள் உதவி கிடைக்கும்.

தாயார் வழியில் நன்மைகளும், அம்மாவின் ஆசிர்வாதங்களும் கிடைக்கும். சிலருக்கு தாய்வழி சீதனம் போன்று ஏதேனும் சொத்துக்கள் கிடைக்கும்.  சிலர்  புதிய வாகனம் வாங்குவீர்கள். தந்தைவழி உறவினர்களால் சங்கடங்கள் உண்டு 28,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 2-ம் தேதி அதிகாலை 3.11 மணி முதல் 4-ம் தேதி காலை 6-02 வரை சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகள் எதையும் ஆரம்பிக்க வேண்டாம். இந்த தினங்களில் அறிமுகமாகும் ஒருவரின் மூலம் பின் நாட்களில் சிக்கல்கள் வரும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.  

மிதுனம்:

ராசிநாதன் புதன் உச்ச நிலையில் தனக்கு மிகவும் பிடித்த நண்பரான சுக்கிரனுடன் சுபத்துவமாக இணைந்து, இன்னொரு சுபரான குருவின் பார்வையில் இருக்கக்கூடிய யோக வாரம் இது. மிதுன ராசிக்காரர்களின் கவலைகளும் மன கஷ்டங்களும் மெதுமெதுவாக விலகி வருகின்றன. மிதுனத்தினர் அனைவரும் இனிமேல் நன்றாக இருக்கப் போகிறீர்கள். அஷ்டமச் சனியின் ஆதிக்கம் கிட்டத்தட்ட 90% விலகிவிட்டதால் இனிமேல் நீங்கள் நன்றாக இருக்க போவதற்கான அடிப்படை நிலைமைகள் உருவாகக்கூடிய யோக வாரம் இது.

யோகாதிபதிகள் சுக்கிரனும், புதனும் நல்ல அமைப்பில் இருப்பதால் சோதனைகள் வந்தாலும் அதை உங்களுடைய சாதுர்யமான பேச்சாலும், அடுத்தவரை நோகடிக்காத பண்பாலும் விரட்டி விடுவீர்கள் என்பதால் மிதுனத்திற்கு இது நல்ல வாரம்தான். விரைய வீட்டில் செவ்வாய்  சுப வலுப் பெறுவதால் வீண் செலவுகள் தற்போது இருக்கும். ஒரு குறிப்பிட்ட பலனாக எவரையும் நம்பி ஜாமீன் போடுவதோ, யாருக்கும் வாக்கு கொடுப்பதோ கூடாது. போட்டி பந்தயங்கள், லாட்டரி சீட்டு, ரேஸ் போன்றவை கை கொடுக்காது.

கடகம்:

வார ஆரம்பத்தில் ராசிநாதன் அமாவாசை நிலையில் இருள் தன்மையோடு இருந்தாலும் கூட குரு, சுக்கிர தொடர்பில் இருப்பதால் உங்களுக்கு இது நல்ல வாரம்தான். ஆயினும் அதிகாரம் செய்யக்கூடிய பதவியில் இருக்கும் கடகத்தினருக்கு இந்த வாரம் இரண்டுங்கெட்டான் நிலை இருக்கும். உங்களைப் புரிந்து கொள்ளாமல் சிலர் விலகுவார்கள். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு திருப்புமுனை சம்பவங்கள் நடக்கும். சிலர் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திப்பீர்கள். இளைய பருவத்தினருக்கு இண்டர்வியூ கடிதங்கள் வரும். ஆனால் வேலைதான் இழுத்தடிக்கும்.

முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு தொழில் விஷயத்தில் நல்ல தகவல்கள் உண்டு. தன்னுடைய திறமையை மட்டும் முதலீடாக வைத்து சம்பாதிப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல பணவரவு இருக்கும். விவகாரத்து ஆனவர்களுக்கு இந்தவாரம் இரண்டாவது வாழ்க்கையின் தொடக்கத்திற்கான சம்பவங்கள் இருக்கும். வெளிநாடு செல்ல விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல தகவல்கள் வரும்.  தாயார்வழி செலவுகள் உண்டு. சிலருக்கு வாகன மாற்றம் இருக்கும். முப்பது வயதிற்குட்பட்டவர்கள் நீண்ட பிரயாணம் செல்வீர்கள்.

சிம்மம்:

ராசிநாதன் சூரியனுக்கு குரு பார்வையும் சுக்கிர சேர்க்கையும் அமைந்து எட்டாமிடம் சுபத்துவம் அடைகின்ற, எதிர்பாராத அதிர்ஷ்டம் வரக்கூடிய நல்ல வாரம் இது. சிம்மத்தினர் வாரம் முழுவதும் கூடுதல் உற்சாகத்துடன் இருப்பீர்கள். எதையும் சாதிக்கக்கூடிய திறமைகள் நமக்கு உண்டு என்பதை நீங்களே உணரக் கூடிய வாரம் இது. எட்டு, பன்னிரண்டாம் இடங்கள் சுபத்துவம் அடைந்திருப்பதால் வெளிநாடு, வெளிமாநிலம், ஏற்றுமதி, இறக்குமதி, பிரயாணங்கள் தொடர்பான செயல்கள் அனைத்தும் இந்த வாரம் மிகுந்த நன்மையைத் தரும்.

உங்களில் சிலருக்கு அன்னிய இன, மத, மொழி பேசுகின்ற ஒருவரின் மூலமாக எதிர்பாராத உதவிகள் இந்த வாரம் இருக்கும். 6,8,12 வலுப்பட்டு இருப்பதால் சிலர்க்கு நேர்மையற்ற எண்ணங்கள் மூலமான தொழில் வாய்ப்புகள் கிடைத்து சங்கடங்கள் வரும்.  இந்த வாரம் புதிதாக அறிமுகம் ஆகும் நபர்கள், செயல்களை சற்று உன்னிப்பாக கவனியுங்கள். இதன் மூலமாக எதிர்காலத்தில் சிக்கல்கள் வரும். ராசிநாதன் யோகநிலை பெற்றிருப்பதால் கெடுதல்கள் சொல்வதற்கு எதுவும் இல்லை.

கன்னி:

ராசிநாதன் புதன் உச்ச நிலையில் குருவின் பார்வை பெற்று சுப வலுப் பெறுவதாலும், சூரியன், சுக்கிரன் ராசியில் சுபத்துவமாக இருப்பதாலும் கன்னிக்கு நல்லவைகள் நடக்கும் வாரம் இது. நடுத்தர வயதினர் பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். அவர்களின் கல்வியில் முன்னேற்றங்கள் இருக்கும். திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு நல்லவை கூடி வரும். இளம் பருவத்தினர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணைவரை தேர்ந்தெடுக்கக் கூடிய சம்பவங்கள் ஏற்படும். சிலருக்கு தொழில்மாற்றம், ஊர்மாற்றம், வீடுமாற்றம் போன்ற அமைப்புகள் ஏற்படும்.

தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு துறைரீதியான நெருக்கடிகள் இருக்கும். சிலருக்கு தந்தைவழி உறவினர்களால் லாபம் கிடைக்கும். அப்பாவின் ஆசிர்வாதத்தால் நன்மைகளை பெறுவீர்கள். சொத்தில் வில்லங்கம் இருந்தவர்களுக்கு இந்த வாரம் தீர்வு கிடைக்கும். வழக்குகள் சாதகமாக திரும்பும். சிலருக்கு பெண்களால் பிரச்சினைகள் இருக்கும். வீட்டுக்கனவு நனவாகும். சிலருக்கு வெளிமாநிலம் அல்லது வெளிதேச பிரயாணம் இருக்கும். சிலர் பொருளாதார பின்னடைவுகளை சந்திப்பீர்கள். அண்ணன்கள் உதவுவார்கள்.

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் நீச்ச நிலையை இந்த வாரம் முழுவதும் அடைந்தாலும் கூட, உச்ச புதனுடன் சேர்ந்து நீச்சபங்க ராஜயோகத்தில் இருப்பதும், அவரை குரு பார்ப்பதும் மிகவும் நல்ல நிலைமைகள் என்பதால் துலாம் ராசிக்காரர்களுக்கு எல்லாம் சரியாக நடக்கும் வாரம்தான் இது. கவலைகள் எதுவும் இருக்காது என்றாலும் கூட கடன்கள் பற்றிய கலக்கங்கள் சிலருக்கும், அதிக செலவு பற்றிய வருத்தங்கள் பலருக்கும் இருக்கக்கூடிய வாரம் இது. ராசிக்கு சர்ப்ப கிரகங்களின் தொடர்பு கிடைப்பதால் உங்களில் சிலருக்கு வேற்றுமொழி கற்றுக் கொள்ளும் வாய்ப்பு உண்டு.

ஏழாம் இட ராகுவால் சிலருக்கு நண்பர்கள் மூலமாக சூதாட்டம், பங்குச் சந்தை, லாட்டரி போன்றவைகளில் திடீர் ஆர்வம் வரும். அதனால் நஷ்டங்கள் இருக்கும் என்பதால் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தற்போது ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபட வேண்டாம். பணத்தையும் முதலீடு செய்ய வேண்டாம். பணம் கொடுத்தால் வேலை வாங்கித் தருகிறேன், ஒரு ரூபாய் போட்டால் பத்து ரூபாய் எடுத்து விடலாம் போன்ற மோசடிப் பேர்வழிகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள். உங்களுக்கு ஒருவர் உதவி செய்ய நினைத்தாலும் அவர் சிக்கலுக்கு உள்ளாகும் காலம் இது.

விருச்சிகம்:

ராசிக்கு செவ்வாய் மற்றும்  குருவின் பார்வை நிறைவாக நல்ல அமைப்பில் உள்ளதால் இது விருச்சிக ராசிக்காரர்களின் மனம் போல் அனைத்தும் நடக்கும் வாரமாக இருக்கும். முடிக்க முடியாமல் இருந்த விஷயங்களை வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள். சிலருக்கு எதிர்கால முன்னேற்றங்களுக்கான ஆரம்பங்களும், அறிமுகங்களும் இருக்கும். நட்புக்கிரகங்கள் யோக அமைப்பில் இருப்பதால் சாதகமான வாரம் இது. கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். தொழில்ரீதியான பயணங்கள் இருக்கும்.

சுக்கிரன் நன்மை தரும் அமைப்பில் இருப்பதால் நன்கு சம்பாதித்து உங்களை கிண்டல் செய்தவர்களை வாயடைக்கச் செய்வீர்கள். வார இறுதியில் சந்திரன் நீச்சமாக ராசியில் இருப்பதால் உங்கள் செயல்களில் பதற்றம் இருக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனமாக  இருக்க வேண்டும். சில நேரங்களில் சுற்றி உள்ளவர்களும் உங்களை அதிகமாக வெறுப்பேற்றுவார்கள். ஒரு குறிப்பிட்ட பலனாக முதல் திருமணம் தோல்வியில் முடிந்தவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லமுறையில் அமைவதற்கான ஆரம்பங்கள் இப்போது இருக்கும். 

தனுசு:

ராசிநாதன் குரு நான்காம் இடத்தில் ஆட்சி நிலையில் இருக்க, உங்களுடைய எதிர்த்தன்மை கிரகமான சுக்கிரன் நீச்சமாகி ராசிநாதனின் பார்வைக்குள் இருக்கக்கூடிய யோக வாரம் இது. எதிர்ப்புகள் அனைத்தும் உங்களுடைய கைக்கு அடங்கி இருக்க கூடிய நல்ல வாரம். நீங்கள் ஆசைப்பட்டது எல்லாம் கிடைக்கப் போகிறது. இளையவர்களுக்கு வயதுக்கேற்ற ஜாலியான விஷயங்கள் நடக்கும். உற்சாகமாக இருப்பீர்கள். தனுசுக்கு சொர்க்க வாரம் இது. இதுவரை சொந்தவீடு அமையாதவர்கள் முயற்சிகள் பலன் அளிக்கும். பெண்களால் சுகம் உண்டு.

நீண்டநாட்கள் சந்திக்காமல் இருந்த நண்பரையோ, உறவினரையோ சந்திப்பீர்கள்.  சிலருக்கு வடமாநில அல்லது வெளிநாட்டுப் பயணம் உண்டு.  தெய்வ தரிசனம் கிடைக்கும். வெகு நாட்களாக திட்டம் போட்டுக் கொண்டிருந்த வட மாநில புனிதயாத்திரை போகமுடியும். ஞானிகள் அருள்புரியும் ஜீவ சமாதிகளுக்கு சென்று அவர்களின் ஆசி பெறுவீர்கள். யோகாதிபதியான சூரியனும் வலுவாக இருப்பதால் எவ்வித கெடுபலன்களும் வருவதற்கு வாய்ப்பில்லை. செவ்வாய் விரயத்தை பார்ப்பதால் சகோதரர்களால் செலவுகள் வரும்.

மகரம்:

எட்டுக்குடைய சூர்யன்  ஒன்பதில் புதனுடன் அமர்வதால் இந்த வாரம் தந்தை வழி அமைப்பில் மகரத்திற்கு சாதகமற்ற பலன்கள் நடக்கும். சந்திரன் நல்ல நிலையில் இருப்பதால் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். தாயார் விஷயத்தில் நன்மைகள் உண்டு. ஆறுக்குடையவன் வலுப்பெறுவதால் பிடிக்காத ஒருவரிடம் சந்தர்ப்பவசத்தால் பேசியாக வேண்டி இருக்கும். எதிர்ப்புகள் வலுப்பெறும் என்பதால் கவனம் தேவை. நிதானம் தேவைப்படும் வாரம் இது. எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

ஜென்மச்சனி முடிய இருப்பதால் மகர ராசிக்காரர்களுக்கு இப்போது எதிர்காலத்திற்கான நல்ல மாற்றங்கள் நடைபெறும். முப்பது வயதுகளில் இருப்பவர்கள் வேலை, தொழில் விஷயங்களில் சில முக்கியமான மாற்றங்களை சந்திப்பீர்கள். சாப்ட்வேர், கணக்கு, ஊடகம், கலைத்துறை சம்மந்தப்பட்டவருக்கு இனிமேல் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். அலுவலகங்களில் சகஜ நிலை திரும்பும். அனைவராலும் இனி விரும்பப் படுவீர்கள். பேசாதவர்கள் இனி தேடி வந்து பேசுவார்கள். யோக வாழ்க்கையில் நுழையப் போகிறீர்கள்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்கால நல்லவைகள் அடையாளம் காட்டப்படக்கூடிய அதிர்ஷ்ட வாரம் இது உழைப்பின் அருமையை நீங்கள் அடுத்தவர்களுக்கு இப்போது எடுத்துக் காட்டுவீர்கள். அதேநேரத்தில் அடுத்த வருடத்திலிருந்து பணம் பற்றிய சில புரிதல்கள் உங்களுக்கு வர வேண்டுமென்பதால் வேலை, தொழில் அமைப்புகளில் ரிஸ்க் எடுக்கக்கூடிய எதையும் இப்போது செய்ய வேண்டாம்.  புதிய தொழில் அமைப்புகள், முதலீடுகளை சற்று கவனமாகச் செய்யுங்கள்.  யாரையும் நம்ப வேண்டாம். உறவுகள் நட்புகளிடம் விழிப்பாக இருங்கள்.

குரு இரண்டில் அமர்ந்து, எட்டில் வலுப்பெற்றுள்ள புதனைப் பார்ப்பதால் இனிமேல் வராது என்று கைவிட்ட ஒரு தொகையோ அல்லது இனி நடக்காது என்று மறந்து  விட்ட ஒரு விஷயமோ இந்தவாரம் சாதகமாக நடந்து, கிடைத்து உங்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கும். வாழ்க்கை துணையால் செலவுகள் வரக்கூடிய வாரம் இது. அவருக்கு தேவையான ஏதேனும் ஒன்றை இப்பொழுது செய்து தருவீர்கள். கணவர் அல்லது மனைவி பேரில் இருந்து வந்த மன வருத்தங்கள் தீரும். ஒருவருக்கு ஒருவர் புரிதலோடு செயல்படுவீர்கள்.

மீனம்:

வாரத்தின் இரண்டு நாட்கள் சந்திராஷ்டம நாட்களாக இருப்பதால் எதிலும் விட்டேத்தியான மனப்பான்மையுடனும், சோம்பல், விரக்தியுடனும் இருப்பீர்கள். மீனம் சுறுசுறுப்பை வளர்த்து கொள்ள வேண்டிய வாரம் இது. எதிலும் முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள், இதைச் செய்யலாமா? அதைச் செய்யலாமா? என்று நீங்கள் அலைபாயும் வாரம் இது. மூன்றில் நல்ல நிலையில் செவ்வாய் இருப்பதால் கடந்த காலங்களில் உங்களை நம்பாமல் உங்களுக்கு உதவி செய்ய மறுத்தவர்கள் இனி தேடி வந்து உதவி செய்வார்கள்.

சனி 11 ல் அமர்ந்து சோதனைகளை சமாளிக்கும் ஆற்றலை கொடுப்பதால் மீன ராசிக்காரர்கள் கலங்கத் தேவையில்லை. பிறந்த ஜாதகத்தின் அடிப்படையில் இப்போது சோதனைகள் நடந்து கொண்டிருக்கும் சிலருக்கும் நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை அடையாளம் காட்டத்தான் அது நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். 27-ம் தேதி மாலை 6.18 முதல் 29-ம் தேதி இரவு 11.24 வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட நாட்களில் முக்கியமான முடிவு எதுவும் எடுக்காமல் இருப்பது நல்லது.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்