கிரக பார்வைகளின் சூட்சுமங்கள்..!…(D.014)

#adityagurujitamilarticle

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768998888

“சந்திர அதியோகம்” பற்றிய கட்டுரையைப் படித்தவர்களுக்கு சில ஐயங்கள் இருக்கின்றன என்பது தெரிய வருகிறது. சிலர் இதன் பலவித நிலைகளைப் பற்றிய சந்தேகங்களை எழுப்பியிருக்கிறீர்கள்.


மதுரையைச் சேர்ந்த அனுபவமுள்ள ஜோதிடரான திரு. சிவராமன், “சந்திரனுக்கு எதிரே ஆறில் ஒரு கிரகம், ஏழில் ஒன்று, எட்டில் ஒன்று என வரிசையாக குரு,சுக்கிரன், புதன் இருந்தால் மட்டும்தானே அது அதியோகம்?” என்று கேட்டிருக்கிறார். இதுபோன்ற கேள்விகள் எல்லாம் ஒரு விதியின் உட்கருத்தினை அறியாமல், மூலத்தினை அப்படியே மனப்பாடம் செய்வதால் வருபவை.

ஜோதிடத்தை அருளியவர்கள் இங்கே மூலவிதிகளை மட்டுமே நமக்கு போதித்திருக்கிறார்கள். அஸ்திவாரம் எனப்படும் அடிப்படை அம்சங்கள் மட்டுமே இங்கே விளக்கப்படும். அதன்மேல் எழுப்பப்படும் கட்டிடத்தை நீங்கள்தான் உங்களுடைய அனுபவத்தையும், பரம்பொருளால் தனிப்பட்டுத் தரப்பட்ட ஞானத்தையும் கொண்டு அமைத்துக் கொள்ள வேண்டும். உங்களின் ஞானத்தைப் பொருத்து கட்டிடம் பலமாகவும், நீடித்தும் இருக்கும்.

“சந்திரனுக்கு ஆறு, ஏழு, எட்டில் சுபர்களான குரு, சுக்கிரன், புதன் இருப்பது அதியோகம்” என்று மட்டும்தான் மூலத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. எதிரே இருக்கும் கிரகங்கள் வரிசையாக இருக்க வேண்டுமா? சேர்ந்தா? ஒரே வீட்டில் மூவரும் இருந்தால் கூட யோகம்தானா? பாபர்கள் இவர்களுடன் இருந்தால் யோகத்தின் நிலை என்ன? சந்திரன் பவுர்ணமி நிலையில் இருந்தால் கண்டிப்பாக எதிரே சூரியன் இருப்பாரே, அவருடன் இருப்பவர்கள் அஸ்தமனம் அடைந்திருந்தால் என்ன பலன் என்பதெல்லாம் அடுத்து வரும் கேள்விகள்.

இதற்கான விடைகளை நாம் தனித்தனியாகத்தான் காண வேண்டும். அதேநேரத்தில் அதியோகத்தைப் பற்றிய முதன்மைக் கருத்து உங்களுக்குப் புரிந்திருக்குமாயின், இது போன்ற கேள்விகள் வராது.

எந்த யோகமாக இருந்தாலும் அதில் பலவித நிலைகள் உள்ளன. நமது புரிந்து கொள்ளும் திறமையைக் கொண்டுதான் அதன் முழுப் பரிமாணத்தையும் நம்மால் உணர முடியும். யோகம் என்பது கிரகங்களின் இணைவு என்ற அர்த்தத்தில் இந்த வரியை உணர முயற்சியுங்கள்.

சந்திர அதியோகத்திற்கும், பிற முக்கிய யோகங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், பஞ்சமகா புருஷயோகம், தர்மகர்மாதிபதி யோகம் போன்ற முதல் நிலை யோகங்கள், கிரகங்களின் ஸ்தான பலமான ஆட்சி, உச்சம் மற்றும் அவை இருக்கும் இடத்தின் நிலையை வைத்துச் சொல்லப்படுபவை.

ஆனால் அதியோகம், சந்திரனின் ஸ்தான பலத்தைச் சொல்லாமல், அதாவது சந்திரனின் ஆட்சி, உச்சம் போன்ற நிலைகளைப் பற்றிப் பேசாமல், நிலவின் பார்வை பலத்தைப் பற்றிச் சொல்கிறது.

ஜோதிடத்தில் பார்வை பலத்தால் உண்டாகும் யோகங்கள் குறைவு. குருவும்,சூரியனும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வதால் உண்டாகும் சிவராஜ யோகம் போன்ற சிலவற்றை மட்டுமே பார்வை பலம் பற்றிய யோகமாகச் சொல்ல முடியும். அவற்றில் அதியோகம் சந்திரனின் பார்வை பற்றி மட்டுமே சொல்லும் மிக முக்கிய யோகம்.

மூலநூல்களில் சந்திரனுக்கு ஆறு, ஏழு, எட்டில் குரு, சுக்கிரன், புதன் ஆகியோர் தனித்தனியே இருந்தால்தான் சந்திராதி யோகம் என்று சொல்லப்படவில்லை. அதற்கு அவசியமும் இல்லை.

மூல ஒளிக் கிரகங்களில் சூரியனை அடுத்த இரண்டாவதான சந்திரன், நிறைவான ஒளியோடு இருக்கும் நிலையில், நிலவுக்கு எதிரே மற்ற மூன்று சுப ஒளிக் கிரகங்களான குரு, சுக்கிரன், புதன் ஆகியவை ஏதேனும் ஒரு விதத்தில் தங்களின் திறனை இழந்திருந்தால், சந்திரனின் சுப ஒளியால் இழந்த வலுவைத் திரும்பப் பெறும் என்பதாகச் சொல்லப்பட்டதுதான் இந்த அதி யோகம்.

சந்திரன் பூரணமாகவோ, பவுர்ணமியை நெருங்கியோ உள்ள நிலையில், மற்ற மூவரும் வலுவிழக்காமல், ஸ்தான பலம் எனப்படும், ஈர்ப்பு மற்றும் ஒளி நிலைகளான ஆட்சி, உச்சம் போன்றவைகளைக் கொண்டு, சந்திரனுக்கு எதிரே ஆறு, ஏழு, எட்டில் இருந்தால், இங்கே சுப ஒளிக்கலப்பு உண்டாகி, அப்போது பிறக்கும் ஜீவன் உயர்ந்த நிலையை அடையும் என்பது இதனுள்ளே அடங்கியுள்ள தத்துவம். இதுவே நான்கு சுபர்களும் வலுப்பெற்ற உன்னத அதியோகம்.

இதனுள்ளும் ஆழமாகச் செல்வோமேயானால், சந்திரனுக்கு, ஆறு, ஏழு, எட்டில் சுபர்கள் பரவலாக இருப்பதாக கொண்டால், சந்திரனுக்கு ஏழில் எந்த கிரகம் இருந்தால் நல்லது என்கின்ற கேள்வி வரும். ஏனெனில் சந்திரனுக்கு. சுக்கிரன் பகை. இன்னொரு சுபரான புதனுக்கு, சந்திரன் பகை. மீதமிருப்பவரான குரு மட்டுமே சந்திரனோடு நட்பு பாராட்டுபவர்.

சந்திரனின் பகைவர்களான சுக்கிரன், புதன் ஆகியோர் சந்திரனை நேரெதிராகப் பார்த்தால் சந்திர ஒளி “கலப்பு நிலை” அடையும். அதற்குப் பதிலாக நிலவுக்கு நேரெதிரில் குரு அமர்ந்து, மற்ற இரண்டு கிரகங்களும் நிலவுக்கு ஆறு, எட்டில் அமர்ந்து, மதியைப் பகைவர்கள் பார்க்காத நிலையில் இந்த யோகம் அமைந்தால் அது முதல்தர யோகமாக அமையும்.

சுக்கிரன் ஏழில் அமர்ந்து, ஆறு, எட்டில் புதன், குரு இருக்குமாயின், நிலவுக்கு சஷ்டாஷ்டகமாக குரு இருப்பதால் சகடதோஷம் உண்டாகும். சந்திரனுக்கு ஏழில் குரு அமர்ந்து மற்ற இரண்டு கிரகங்கள் ஆறு, எட்டில் அமருமாயின், ஏற்கனவே இருக்கும் ஒளியைவிட கூடுதலான ஒளியை சந்திரன் பெற்று, தனக்கு ஆறு எட்டில் இருக்கும் சுக்கிர, புதனை அதிக வலுப்படுத்துவார் என்பது இதனுள் அடங்கியிருக்கும் சூட்சுமம்.

பார்வை என்பது ஒரு கிரகத்தின் ஒளி வீச்சுத்தான் என்பதை நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். கிரக பார்வைகளைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வது மட்டுமே சந்திராதி யோகம் போன்ற நுணுக்கமான அமைப்புகளை நன்கு புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

ஒரு கிரகம், மற்றொன்றை பதினைந்து டிகிரிக்குள் பார்வையிட்டால் மட்டுமே அது முழுப்பார்வையாக இருக்கும். இரண்டுக்குமான கோணம் பதினைந்து டிகிரியை விட்டு விலகி இருந்தால் அங்கே பார்வை முழுமையாக இருக்காது. அதாவது “முழுமையாக” இருக்காது. பார்வை இருப்பதுபோல தோன்றினாலும், அங்கே பார்வையின் முழுபலன் இருக்காது. ஆனால் பார்வையின் தாக்கம் இருக்கும். பார்வை இல்லை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.

உதாரணமாக மேஷம் மற்றும் துலாத்தில் இரண்டு கிரகங்கள் எதிரெதிரே இருக்கும் நிலையில், மேஷத்தின் இறுதி ஐந்து டிகிரியில், ஒரு கிரகமும், எதிரே இருக்கும் துலாமின் ஆரம்ப ஐந்து டிகிரிக்குள் இன்னொரு கிரகமும் இருக்குமாயின் இரண்டிற்குமான பார்வைக் கோணம் 15 டிகிரிக்கு மேல் விலகியிருக்கும். இதுபோன்ற நிலையில் இங்கே ஒன்றின் மீது ஒன்று செலுத்தும் நல்ல, கெட்ட பார்வைக்கு முழுபலம் இருக்காது. ஆனால் பார்வை உண்டு.

15 டிகிரிக்கு மேல் பார்வைக் கோணம் விலகி இருந்தால் அந்தப் பார்வைக்கு முழு பலன் இல்லை. அதாவது பார்வையின் சுபத்துவ, பாபத்துவ, நல்ல, கெட்ட பலன்கள் முழுமையாக இல்லை. பார்வையின் படிநிலைகளாக இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு ராசி என்பது 30 டிகிரி உள்ளடங்கியது. ராசியின் மையப்புள்ளியில் இருந்து இருபக்கமும் 15 டிகிரிக்கு ஒரு ராசி வியாபித்திருக்கும். ஒரு “ஒளி பொருந்திய” கிரகம், இந்த முப்பது டிகிரிக்குள் எங்கிருந்தாலும், எதிரே ஏழாவது ராசியில் தனக்கு நேர் எதிராக 180 டிகிரியில் இருக்கும் கிரகத்தைப் பார்க்கும் பார்வை முழு வலிமை பொருந்தியது.

பார்வைக் கோணம் இருபது டிகிரிக்கு மேல் விலகுமாயின், இரண்டும் நேர் எதிர் ராசியில் இருந்தாலும் அவற்றுக்குள் “குறைந்த அளவு தொடர்பே இருக்கிறது”என்று அர்த்தம். அதேபோல பார்க்கும் கிரகம் எத்தகைய ஒளி நிலையில் இருக்கிறது என்பதை முழுமையாக உணர வேண்டும். உச்சமா, நீச்சமா, பகைத் தன்மையா, நட்பா, ராகுவோடு இணைந்து கிரகணமா? இருள் சந்திரன் அல்லது சனி இணைந்திருக்கிறாரா என்பதை முழுமையாக உள் வாங்க வேண்டும்.இதனை ஏழாம் பார்வைக்கு மட்டுமல்லாமல் 3,4,5,8,9 பார்வைகளுக்கும் பொருத்திப் பார்க்க வேண்டும்.

அதிக ஒளி பொருந்திய, அதி உயர் சுப நிலையில் உள்ள ஒரு சுப கிரகம், தனக்கு நேரெதிரே இருக்கும் ஒரு கிரகத்தையோ, ராசியையோ மட்டும் பார்த்து சுபத்துவப் படுத்துவதோடு நின்று விடாது. அதனுடைய ஒளிவீச்சு அதனையும் தாண்டி இருக்கும் என்பதே அதியோக தத்துவம்.

உச்ச நிலையில் உள்ள குருவின் பார்வைக்கும், பகை நிலையில் இருக்கும் குருவின் பார்வைக்கும் வித்தியாசம் உண்டு. கிரகங்களின் உச்சம், நீச்சம் போன்றவை பூமிக்கும், சூரியனுக்கும், அந்தக் கிரகத்திற்கும் உள்ள ஒருவிதமான நிலைக் கோணத்தைக் குறிப்பவை. உச்சம் பெற்ற கிரகத்தின் பார்வைக்கும், நீச்சம் பெற்ற கிரகத்தின் பார்வைக்கும் கண்டிப்பாக வித்தியாசம் உண்டு.

கடகத்தில் உள்ள உச்சகுரு அதி உயர் சுபநிலையில் இருப்பார். எவ்வித பங்கமும் இன்றி, சனி, செவ்வாய், ராகு போன்ற பாபர்களுடன் தொடர்பு கொள்ளாத, சூரியனுடன் சேர்ந்து அஸ்தமனமாகாத குரு, உச்சநிலையில், தனது முழு ஒளித்திறனுடன் நேர் எதிரே இருக்கும் மகரத்தைப் பார்க்கும் போது, அவரது வீரியமிக்க பார்வை நிச்சயமாக மகரத்தில் முப்பது டிகிரிக்குள் கோடு கிழித்ததுபோல முடிந்து விடப் போவதில்லை.

 உண்மையில் வானத்தில் தனுசுக்கும், மகரத்திற்கும் நடுவிலோ, கும்பத்திற்கும் மகரத்திற்கும் நடுவிலோ குருவின் பார்வையை தடுத்து நிறுத்தும் சுவர் எதுவும் இல்லை. அதிக ஒளித்திறனுடன் இருக்கும் குருவின் பார்வை மகரம் முழுமைக்கும் விழும்போது, இருபக்கத்திலும் உள்ள ராசிகளான தனுசின் இறுதியிலும், கும்பத்தின் ஆரம்பத்திலும் விழவே செய்யும். அவை ஓரளவு குருவின் பகை நிலை பார்வைக்குச் சமமாக இருக்கும்.

இந்த அமைப்பில் குருவின் பார்வை, தனுசின் இறுதி ஓரத்தில் சில டிகிரியிலும், கும்பத்தின் ஆரம்ப சில டிகிரியிலும் விழும். ஆனால் இத்தகைய நிலைக்கு குரு எவ்வித பங்கமும் இன்றி முழுமையாக இருக்க வேண்டும். கிரகங்கள் அனைத்தும் ஒரு ராசியில் நிலையாக இருப்பதில்லை. அவை நகரும் ஒளிப் புள்ளிகள்தான். எனவே ஒரு ராசியில், ஒரு டிகிரியில் இருக்கும் கிரகம், தான் பார்க்கும் ராசியை எத்தனை டிகிரியில் பார்க்கும், அதன் ஒளி மையப்புள்ளி பார்க்கப்படும் ராசியில் எங்கே இருக்கும், பார்க்கப்படும் கிரகம் இந்த ஒளி மையப் புள்ளிக்கு அருகில் இருக்கிறதா, விலகி இருக்கிறதா என்பதை முழுமையாகக் கணித்த பின்னரே பார்வை பலத்தை அறிய முடியும். இவற்றைக் கணிக்காமல் பொத்தாம்பொதுவாக குருவின் பார்வை இருந்தும் இது நடக்கவில்லை என்று சொல்லக் கூடாது.

இதுபோன்ற சரியான அமைப்பில் குரு இருந்து, கும்பத்தின் ஆரம்ப டிகிரிகளில் குருவிற்கு எட்டாமிடத்தில் சனி மூலத்திரிகோண அமைப்பில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இங்கே சனி, குருவின் பார்வையைப் பெற்று சுபத்துவம் அடைந்திருப்பார். இந்த அமைப்பில் உள்ள சனி அஷ்டமாதிபதியாக இருந்தாலும் கெடுபலன்களைத் தரும் சக்தியற்று இருப்பார். உண்மையில் நல்லவைகளைத் தரும் வலுவுடன் இருப்பார். ஆனால் மேம்போக்காக பார்க்கும்போது சனிக்கு, குருவின் பார்வை இருக்காது. கணிப்புகளை தவற வைக்கும் இடம் இதுதான். 

மீண்டும் சொல்கிறேன்..

வானில் மகரத்தையும், கும்பத்தையும் பிரிக்கின்ற கோடு நம்மால் நினைத்துக் கொள்ளப்படுகின்ற ஒரு கற்பனைக் கோடு தானே தவிர, நிச்சயமாக இரண்டுக்கும் நடுவில் சுவர் எதுவும் இல்லை. 

இதுபோன்ற சூட்சுமங்களை புரிந்து கொள்வதன் மூலமே கிரகங்களின் பார்வையில் உள்ள சுப, அசுபத்தன்மையை அளவிட்டு பலனைத் தெரிந்து கொள்ள முடியும். அப்போதுதான் பார்க்கப்படுகின்ற கிரகம் எப்படிப்பட்ட நல்ல, கெட்ட தன்மையை அடைந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். இந்த பார்வை அளவீடுகளுக்கு உள்ளேயும் ஒருவர் மருத்துவரா, நர்சா, லட்சாதிபதியா, கோடீஸ்வரா என்பது ஒளிந்திருக்கிறது. சந்திர அதியோகமும் இதுபோன்ற பார்வைத்திறன் குறித்த ஒரு சுபயோகம்தான். உதாரண ஜாதக விளக்கத்தை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

அடுத்த வெள்ளிக்கிழமை பார்க்கலாம்…

தொடர்பு எண்கள் – செல்:8681998888, 8870998888, 8428998888, 7092778888,  9768998888 , 044-24358888, 044-48678888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.