குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (03-05-2021 முதல் 09-05-2021 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888

மேஷம்:

யோகாதிபதி சூரியன் உச்சம் பெற்று இருப்பதால் மேஷ ராசிக்காரர்களுக்கு இது நல்ல வாரம்தான். ராசிநாதன் செவ்வாயும் குருவின் பார்வையால் வலிமை அடைகிறார். இதுவரை நீங்கள் செய்யாமல், சொல்லாமல் யோசித்துக் கொண்டிருந்த சில விஷயங்களில் தயக்கங்கள் விலகி பளிச்சென்று தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். எத்தகைய நிர்ப்பந்தங்கள் வந்தாலும் எடுத்த முடிவில் பின்வாங்காமல் உறுதியாகவும் இருப்பீர்கள். மேஷராசிக்கு உழைப்பும் முயற்சியும் இப்போது வெற்றியைத் தரும்


முட்டுக்கட்டையாக இருந்து வந்த தடைகள் நீங்குவதால் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரிகளுக்கு இது லாபங்கள் வரக்கூடிய காலகட்டம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்ற வேலை அமையும். அரசுவேலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்லசெய்தி உண்டு. மத்திய மாநில அரசுகளின் முதன்மைத் தேர்வுகளான ஐ.ஏ.எஸ் குரூப்ஒன் மற்றும் நீட் தேர்வுகளை நல்லமுறையில் எழுத முடியும். திருமணம் ஆகாதவர்களுக்கு நவம்பருக்குள் திருமணம் நடப்பதற்கான ஆரம்பங்கள் உண்டு.

ரிஷபம்:

நான்காம் பாவகாதிபதி சூரியன் உச்சநிலையில் இருப்பதால் ரிஷபத்தினருக்கு வீடு, வாகனம் போன்ற விஷயங்களில் இப்போது நன்மைகள் உண்டு. ராசிநாதன் சுக்கிரனும் வலுவாக உள்ளதால் இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு அது வாங்குவதற்கான ஆரம்ப நிகழ்வுகளும், மனதில் அது சம்பந்தப்பட்ட எண்ணங்களும் இருக்கும். ராகுதசையோ, புக்தியோ நடப்பவர்களுக்கு இப்போது சொந்த வீடு அமையும். அந்தஸ்து, கவுரவம் உயரும். நீண்டகாலமாக தடங்கலாகி வந்த ஒரு விஷயம் இப்போது எண்ணம் போலவே நடைபெறும்.

பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், பொருள் விற்பவர்கள் உயர்வு பெறுவீர்கள். பிறருக்கு கொடுக்கும் வாக்குறுதி பலிக்கும். அதிக சிரமமின்றி பணம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டு. திருமணமாகாதவர்களுக்கு வரும் நவம்பர் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு திருமணம் நடைபெறும். ரிஷபத்தினர் சிலருக்கு இப்போது குலதெய்வ வழிபாடோ புனித யாத்திரைகளோ இருக்கும். தெய்வ தரிசனம் கிடைக்கும் ஆன்மிக வாரம் இது. குறைகள் அனைத்தும் இறைவன் அருளால் தீரப் போகிறது என்பதை உணருவீர்கள்.

மிதுனம்:

மூன்றுக்குடைய சூரியன் லாப ஸ்தானத்தில் உச்சமடைவதால் அஷ்டமச் சனியினால் துன்பங்களை அனுபவித்து வரும் மிதுன ராசியினர் நன்மைகளை அனுபவிக்கும் வாரம் இது. என்னதான்  பிரச்னை இருந்தாலும் இந்த வாரம் சூரியனின்  வலுவால் உங்களின் அந்தஸ்து கௌரவம் பாதிக்காமல் பணவரவும் இருக்கும். இனிமேல் உங்களுக்கு கஷ்டங்கள் எதுவும் இல்லை. கடந்த காலங்களில் எல்லாம் தாமதமாகி வந்தவர்களுக்கு இனி வழி பிறக்கும். இந்தாண்டு இறுதிக்குள் அனைத்து கெட்டவைகளும் முடிந்து நல்லவைகளை காண ஆரம்பிப்பீர்கள்.

கடந்த சில வாரங்களாக நடந்த சம்பவங்களின் அர்த்தம் தற்போது புரியும். நெருங்கிய சிலரைப் பற்றி இப்போது நன்றாகத் தெரிந்து கொள்வீர்கள். இதுவரை விடை தெரியாத பல கேள்விகளுக்கு இப்போது பதில் தெரியும். இனிமேல் எந்த வழியில் பயணம் செய்யப் போகிறீர்கள் என்பதும் அந்த பாதையும் இப்போது கண்ணுக்குத் தெரியும். 2 ம் தேதி மதியம் 2.46 மணி முதல் 4 ம் தேதி இரவு 8.43  மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம்.

கடகம்:

உங்களில் பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு இப்போது வீட்டுமனையோ, கட்டிய வீடோ, வாங்குவதற்கு யோகம் இருக்கிறது. நீண்டகாலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு கூடுதல் சம்பளத்துடன் கிடைக்கும். இளம்பெண்களுக்கு தாலி பாக்கியமும் திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் நடக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அருமையான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள். ஆன்மபலம் கூடும். மிகவும் நம்பிக்கையாக இருக்க முடியும்.  கடகம் வெற்றியை நோக்கி நடைபோடும் வாரம் இது.

இனி வர இருக்கும் கோட்சார நிலைகள் உங்களை நல்ல எதிர்காலத்திற்குக் கூட்டிச் செல்லும் என்பதால் நல்லவைகளுக்கான ஆரம்பங்கள் இப்போது நடக்கும். இளைய பருவத்தினருக்கு இனிமேல் வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் அமைந்து ஒரு நிரந்தர வருமானம் வரத் தொடங்கும். 4 ம் தேதி இரவு 8.43 மணி முதல் 7 ம் தேதி காலை 5.54 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

சிம்மம்:

ராசிநாதன் சூரியன் உச்சமாக இருப்பதால் வாரம் முழுவதும் சிம்மத்தினருக்கு சந்தோஷமான நிகழ்ச்சிகளும், புத்துணர்வு தரும் சம்பவங்களும் நடந்து மகிழ்வைத் தரும். மனதில் நினைத்திருந்த திட்டங்களை நல்லவிதமாக செயல்படுத்த முடியும். பெண்களுக்கு வேலை செய்யும் இடங்களில் இருந்துவந்த மனக்கசப்புகள் நல்லபடியாகத் தீரும். வருடக் கடைசியில் நடக்கும் குருப் பெயர்ச்சிக்குப் பின் உங்களில் சிலருக்கு திருமணம் கூடி வரும். ஆன்மீக ஈடுபாடு அதிகமாக இருக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு குறையில்லாத வாரம் இது.

உங்களுடைய ஆலோசனைகளை ஏற்காமல் தவிர்த்து அதனால் பிரச்னைகளில் சிக்கித் தவித்தவர்கள் இனிமேல் உங்களின் சொல்லைக் கேட்பார்கள். கணவன் மனைவி உறவு நல்லமுறையில் இருக்கும். உடல்நலம் சரியில்லாதவர்கள் விரைவில் குணமடைவார்கள். 9,10 ஆகிய நாட்களில் பணம் வரும். 7 ம் தேதி காலை 5.54 மணி முதல் 9 ம் தேதி மாலை 5.28 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

கன்னி:

எட்டில் இருக்கும் உச்ச சூரியனால் உங்களில் சிலருக்கு உறவினர்களால் தகராறுகளோ வழக்கு, விவகாரங்களோ ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வீட்டுப் பிரச்னைகளாலும் கோர்ட், போலீஸ் என அலைய நேரிடலாம். குறிப்பாக தந்தை வழி உறவினர்கள் வருத்தம் தருவார்கள். சிறிய விஷயத்திற்கு கூட கடுகடுவென இருப்பீர்கள். அடுத்தவர்கள் உங்களை கோபமூட்டி பார்த்தாலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய வாரம் இது. குறிப்பாக கணவர்-மனைவி இடையே கருத்து வேற்றுமைகள் வரும் என்பதால் கோபத்தை ஒத்தி வையுங்கள்.

இளைய பருவத்தினருக்கு திருமண காலம் வருகிறது. தடைகள் நீங்கி வரன்கள் கூடி வரும். அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உதவுவார்கள். சுக்கிரன் வலுவாக இருப்பதால்  உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவார்கள். மருத்துவத்திற்கு கட்டுப்படாமல் போக்குக் காட்டிக் கொண்டிருந்த வியாதிகள் விலகும்.

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் ராசியைப் பார்க்கும் நிலையில் லாபாதிபதி சூரியன் அவருடன் உச்சம் என ராசிக்கு யோக அமைப்புகள் உள்ளதால் துலாத்திற்கு நன்மைகள் நடக்கும் வாரம் இது. உங்களில் சிலர் மேலதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் இருக்கும். தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. குறிப்பாக உங்களில் சுவாதி நட்சத்திரக்கார்களுக்கு இது நல்ல வாரம். குறிப்பிட்ட ஒரு பலனாக நெருங்கிய ஒரு நண்பரிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.

தொழில் முயற்சிகள் பலன் தரும். சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும். செவ்வாய் ஒன்பதில் உள்ளதால் இளைஞர்களுக்கு கையில் காசு நடமாட்டம் அதிகம் இருக்கும். சிலர் தேவையில்லாத பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. உங்களின் தனாதிதிபதி செவ்வாய் எப்போதுமே கொடுத்துக் கெடுப்பார் என்பதால் செவ்வாய் கொடுப்பதை வாங்கிக் கொள்ளுங்கள். கெட்டுப் போகாதீர்கள். மகன் மகளுக்கு திருமணம் உறுதியாகும். பேரன் பேத்திகள் மூலம் சுப நிகழ்ச்சிகள் இருக்கும்.

விருச்சிகம்:

ஜீவனானாதிபதி சூரியன் ஆறில் உச்சம், ராசிநாதனுக்கு குரு பார்வை என பழம் நழுவி பாலில் விழுந்தது போன்ற கிரக அமைப்புகள் விருச்சிகத்திற்கு இருப்பதால் உங்களின் அதிர்ஷ்ட வாரம் இது. யோகக் கிரகங்கள் வலுவடைந்து இருப்பதால் எதிலும் வெற்றி நிச்சயம். எனவே பழையவை எதையும் நினைத்து கலக்கம் அடையாமல் இனிமேல் நடக்கப் போகும் நல்லவைகளை  நினைத்தால் கவலைகள் ஏதும் இல்லை. சிலர் தேவையற்ற பொருள் வாங்கி பணத்தை விரையம் செய்வீர்கள். வருமானமும் அதற்கேற்ற வகையில் வரும்.

இதுவரை எதிர்ப்புகளினால் தங்களின் உண்மையான திறமையை வெளிக்கொண்டு வர முடியாதவர்களும் திறமை இருந்தும் ஜெயிக்க முடியாதவர்களும் இந்த வாரம் வெற்றிகளை பெறுவீர்கள். இளைய பருவத்தினருக்கு காதல் வரக்கூடிய அமைப்பு இருக்கிறது. இதுவரை டென்ஷனும், படபடப்புமாக இருந்தவர்கள் இனிமேல் நிதானமாக இருப்பீர்கள். மனதில் புத்துணர்ச்சி இருக்கும். வீட்டிலும் அலுவலகத்திலும் எந்த பிரச்னைகளும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. மகளிருக்கு பதவி உயர்வு, கூடுதல் சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும்.

தனுசு:

ராசியை குருபார்வை பெற்ற செவ்வாய் பார்க்கும் நல்ல வாரம் இது. சுக்கிரனும், சூரியனும்  நன்மை தரும் அமைப்பில் உள்ளதால் இந்த வாரம் தனுசுக்கு  கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. வாரத்தின் நடுப்பகுதியில் சந்திரனின் தயவால் பணவரவு ஒன்று உண்டு. அடுத்தவர்களால் கௌரமாக நடத்தப்படுவீர்கள். கடன்தொல்லைகளில் நிம்மதி இழந்திருந்தவர்களுக்கு கடனை முழுமையாக அடைக்கவோ அல்லது குறைக்கவோ வழி பிறக்கும். இளைஞர்களுக்கு மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும்

உங்களின் கவுரவம் காக்கப்படும் நேரம் இது. பெண்களுக்கு நற்பெயர் கிடைக்கும். உங்களின் ஆலோசனை ஆண்களால் ஏற்கப்படும். என்னதான் பிரச்னைகள் என்றாலும் எதுவும் எல்லை மீறிப் போகாது. சிலருக்கு எதிர்காலம் பற்றிய கொஞ்சம் குழப்பங்கள் இருக்கும் அவ்வளவுதான். வலிமை உள்ளதுதான் வாழும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். தன்னம்பிக்கை நிரம்பிய உங்களுக்கு யாரும் சொல்லித் தர வேண்டியிருக்காது. எதையும் சமாளிக்கும் தைரியமும், தெய்வத்தின் ஆசிர்வாதமும் உங்களுக்கு எப்போதும் உண்டு. 

மகரம்:

எட்டாம் அதிபதி சூரியன் உச்சமாகி, ஐந்தில் புதன் ராகுவுடன் இணைந்திருப்பதால் சொந்த தொழில், வியாபாரம் செய்யும் மகரத்தினர் அகலக்கால் வைக்காமல் அடுத்தவரை நம்பாமல் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டிய வாரம் இது. இப்போது செய்து கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு மாற முயற்சி செய்பவர்கள் அதை ஒத்தி வைப்பது நல்லது. ஆனாலும் மாற்றங்கள் வந்தே தீரும் என்பதால் வேலையை விட்டு வெளியேறுவதற்கான நெருக்கடிகள் அதிகரிக்கக் கூடும். மகரத்திற்கு மாற்றங்கள் உள்ள வாரம் இது.

ஆன்மீக விஷயத்தில் சிலர் அதிக நாட்டம் கொள்வீர்கள். பக்தி இயக்கங்களில் ஈடுபாடு வரும் சிலர் புதிதாக சில குறிப்பிட்ட கோவில்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து போவீர்கள். பக்தி கூடுதலாக வரும். மகன், மகள் விஷயத்தில் மனக் கவலைகள் இருக்கும். 11,13 ஆகிய நாட்களில் பணம் வரும். பெண்களுக்கு இது  சுமாரான வாரமாகத்தான் இருக்கும். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல வீட்டிலும் வேலை செய்து, அலுவலகத்திலும் எல்லா வேலையையும் உங்கள் தலை மேல்தான் சுமத்துவார்கள்.

கும்பம்:

கடந்த சில வாரங்களாக நல்லது எதுவும் நடக்காத கும்ப ராசிக்காரர்கள் அனைவருக்கும் சூரியன் உச்ச நிலையில் இருப்பதால் நன்மைகள் ஆரம்பிக்கும் வாரம் இது. உங்களில் சதயம் நட்சத்திரக்காரருக்கு கூடுதல் நன்மைகள் இருக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். பணத்தை சேமித்து எதிலாவது முதலீடு செய்வீர்கள். இனி எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகிறது. தேவையற்ற பய உணர்வுகளும் கலக்கமான மனநிலையும் விலகி மனத்தில் ஒரு புத்துணர்ச்சி பிறக்கும்.  புது மனிதராக மாறப் போகிறீர்கள்.

வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பணியிடங்களில் மகிழ்ச்சியும், மரியாதையும் உண்டு. உடன் வேலை செய்பவர்களிடையே மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் உங்களுடைய யோசனை கேட்கப்படும். கணவரால் பாராட்டப் படுவீர்கள். குழந்தைகளும் பெரிய அளவிற்கு உங்களை இம்சைப் படுத்த மாட்டார்கள். இதுவரை குலதெய்வ வழிபாட்டை தள்ளிப் போட்டு வந்தவர்கள் உடனடியாக அதைச் செய்வது நல்லது. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தும் குலதெய்வமே நம்மைக் காப்பாற்றும்.

மீனம்:

இரண்டில் உச்சம் பெறும் சூரியனால் வீண்பழியோ, சிரமங்களோ, செலவுகளோ வரும் என்பதால் இது வீண் வாக்குவாதங்களை விட்டு சற்றுத் தள்ளியே இருக்க வேண்டிய வாரம். அதேநேரத்தில் ராசியை லாபச் சனி பார்ப்பதால் எது நடந்தாலும் அது உங்கள் நன்மைக்காகவே இருக்கும். ஆறு, எட்டாமிடங்கள் வலுப் பெறுவதால் பண விஷயத்தில் கவனமுடன் இருங்கள். வரவுகள் தடைபடாது என்றாலும் தேவையற்ற விஷயங்களில் விரையங்கள் இருக்கும் என்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது. மீனத்திற்கு நிதானம் தேவைப்படும் வாரம் இது.

பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். வேலை செய்யும் இடத்தில் முதலாளியாலோ அதிகாரியாலோ மனக்கசப்புக்கள் வரும். உடன் இருப்பவர்களால் சங்கடங்கள் தோன்றும் என்பதால் எதிலும் எச்சரிக்கையும் கவனமுமாக இருந்து பொறுத்துப் போவது நல்லது. வியாபாரிகள் மற்றும் சொந்தத் தொழில் செய்பவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டியது அவசியம். வேலை செய்பவர்களின் ஆதிக்கம் மேலோங்கும். அனைத்திற்கும் அடுத்தவர்களை நம்ப வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 ,+91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.