adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
தொழிலுக்கான சுபத்துவ விதிகள் – (E-004)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888

வேத ஜோதிடத்தில் கிரகங்களின் சுய இயல்பு நிலை என்பது மிகவும் முக்கியமானது.  இதை ஒருவகையில் குறைவான சுபத்துவம் என்றே சொல்லலாம். அதாவது ஒன்பது கிரகங்களும் தனித்தனியாக, ஒன்றுடன்  ஒன்று இணையவோ, பார்க்கவோ இல்லாத நிலையில் தங்களுடைய சுயமான தன்மையை அந்த ஜாதகருக்குத் தரும் தன்மையைப் பெறுகின்றன.  


இப்படிப்பட்ட ஜாதகத்தைக் கொண்டு பிறந்த ஜாதகர் ஒரு வகையில் உயர்வான நிலையிலேயே இருப்பார்.  ஒருநிலையில் நமது மூல நூல்கள் சொல்லும் கிரக மாலிகா யோக அமைப்பு போன்றதுதான் இது. 

இதனையடுத்த யோக நிலையாக ஒரு ஜாதகத்தில் நண்பர்கள் தங்களுக்குள் கேந்திர கோணங்களிலும், அந்த ஜாதகத்தின் எதிரிகளாகிய அவயோகர்கள் தங்களுக்குள் கேந்திர, கோணங்களில் இருக்கும் நிலையைச் சொல்லலாம்.    

ஒன்பது கிரகங்களும் குரு அணி, சுக்கிரன் அணி என இரண்டு பிரிவாக செயல்படுகின்றனர் என்பது நாம் அறிந்ததுதான். இதில் குருவின் அணியினர்களான குரு, சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோர் தங்களுக்குள் கேந்திர, கோணங்களிலும், சுக்கிரனின் அணியினர்களான சனி, புதன், சுக்கிரன் ஆகியோர் தங்களுக்குள் கேந்திர, கோணங்களிலும் அமர்ந்து ஒருவரோடொருவர் இணையாமல் சுயத்தன்மையோடு இருக்கையில் அது ஒரு யோக ஜாதகமாகிறது.  

இப்போது நான் சொல்லும் கருத்து கிரகங்களின் பகை, உறவு நிலை அடிப்படையிலானது. ஒத்த கருத்துடையவர்கள் ஒரு குழுவாக நல்ல நிலையில் இயங்கும் போது அங்கே நல்லவைகள் நடக்கும் என்பதையே நான் வேறுவிதமாக நண்பர்கள் தங்களுக்குள் கேந்திர, கோணங்களிலும், அவர்களுக்கு எதிரணியினர் தங்களுக்குள் கேந்திர கோணங்களிலும் இருப்பது யோகம் என்று சொல்கிறேன். ஒருவகையில் இதுவும் குறைந்த அளவு கிரகங்களின் சுபத்துவத்தை குறிப்பதுதான்.  

ஒரே தன்மை கொண்ட கிரகங்களான சுக்கிரன், புதன், சனி ஆகியோர் ஒருவரோடு ஒருவர் இணையாமல், தனித்தன்மையோடு இருந்து, அதே நேரத்தில் சுக்கிரனோ, புதனோ சனியைப் பார்த்து தங்களுக்குள் கேந்திர, கோணங்களில் இருக்கும் பொழுதும், இதேபோன்ற ஒரே தன்மை கொண்ட சூரியன், சந்திரன், செவ்வாய், குரு ஆகியோர் ஒருவரோடு ஒருவர் இணையாமல், நண்பர்களாகிய மற்றவர்களைப் பார்த்துக் கொண்டு தங்களுக்குள் கேந்திர, கோணங்களில் இருக்கும்போது ஒருவிதமான குறைந்த அளவு சுபத்துவம் ஏற்படுகிறது. 

அதே நேரத்தில் கிரகங்களின் இணைவினால் ஏற்படும் சுபத்துவ யோகமே முதன்மையானது. பார்வையின் மூலம் ஏற்படும் சுபத்துவத்தை இரண்டாம் நிலையாகச் சொல்லலாம். சொல்லப் போனால் இணைவு மற்றும் பார்வையினால் ஏற்படும் கூடுதல் சுபத்துவமே மிகவும் வலிமையானது. அதுவே அதி உச்ச சுபத்துவ நிலை. 

அதிலும் ஒரு கிரகம் பவுர்ணமி சந்திரன், குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், தனித்த புதன் ஆகிய முழுமையான சுபர்களுடன் இணைந்து மற்றும் பார்த்து ஏற்படும் சுபத்துவ பலன்களே ஒரு மனிதனுக்கு மிகவும் நல்ல யோகத்தை தரும் நிலையில் அமைகின்றன.  

ஜோதிடத்தில் என்னுடைய ஏறத்தாழ 40 ஆண்டு கால ஆய்வின் விளைவாக எனக்குத் தெரிய அனுமதிக்கப்பட்ட கருத்தாக “ஒரு ஜாதகத்தில் அதிக சுபத்துவம் பெற்ற கிரகம் எதுவோ, அந்தக் கிரகத்தின் தொழில் ஒரு மனிதனுக்கு அமையும்” என்று நான் தற்போது அடிக்கடி குறிப்பிடுகிறேன். என்னுடைய மாலைமலர் கட்டுரைகளிலும், யூடியுப் வீடியோக்களிலும் இதனையே வலியுறுத்துகிறேன்.  

பாரம்பரிய ஜோதிடத்தில் ஒரு மனிதனின் தொழிலை அறிய ஏராளமான விதிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தைப் பொறுத்து ஒருவரின் தொழில் அமையும் அல்லது பத்தாம் அதிபதி நவாம்சத்தில் இருக்கும் வீட்டின் அதிபதியின் தொழில் அமையும், பத்தாம் இடத்தில் இருக்கும் கிரகத்தின் தொழில் அமையும், பத்தாம் இடத்தைப் பார்க்கும் கிரகத்தின் தொழில் அமையும், பத்தாம் அதிபதியின் தொழிலே ஒருவருக்கு அமையும் என மனம் போன போக்கில் குழப்பமான வகையில் இந்த தொழில் விதிகள் நம்முடைய ஜோதிட நூல்களில் கூறப்பட்டிருக்கின்றன.  இவை முழுமையானவை அல்ல. 

இந்த தொழில் விதிகள் அனைத்தையும் ஏற்கனவே வெளிநாட்டு வாழ்க்கைக்கு 8, 12ஆம் இடங்களின் சுபத்துவத்தை வைத்து நான் சொல்லிய சுருக்க விதியைப் போல, ஒரு ஜாதகத்தில் எந்தக் கிரகம் அதிகமான சுபத்துவத்தில் இருக்கிறதோ, அந்தக் கிரகத்தின் தொழில் அமையும் என்று ஒரே வரியில் அடக்கி விடலாம். இந்த “அதிக சுபத்துவம்” என்பதை துல்லியமாக கணிப்பதற்கு கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருக்கும், அவ்வளவுதான்.   அந்த அளவிற்கு எனது சுபத்துவ-சூட்சுமவலு கோட்பாடு தெளிவானதாக இருக்கும்.  

உண்மையில் உங்கள் ஜாதகத்தில் எந்தக் கிரகம் அதிக சுபத்துவத்தோடு இருக்கிறதோ அதனுடைய காரகத்துவங்களின் படியே உங்களின் எண்ணங்கள் செல்லும். உங்களின் விருப்பமும், ஆர்வமும் அந்தக் கிரக செயல்பாட்டின் படியே இருக்கும். அந்தக் கிரகத்தின் துறையில்தான் நீங்கள் வெற்றிகளைப் பெறுவீர்கள். ஆனால் நீங்கள் பெறும் வெற்றியின் அளவு உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதியின் நிலையையும், நடைபெறும் தசா, புக்திகளின் அமைப்புகளையும் பொருத்தது.  

உதாரணமாக உங்கள் ஜாதகத்தில் புதன் அதிக சுபத்துவ நிலையில் இருந்தால், அதாவது புதன், முதன்மைச் சுபர்களான பவுர்ணமிச் சந்திரன், குரு, சுக்கிரன் ஆகியோரின் தொடர்பில் இருந்தால் நீங்கள் எந்த லக்னத்தில் பிறந்திருந்தாலும், உங்களின் பத்தாம் அதிபதி யாராக இருந்தாலும், உங்களின் பத்தாம் வீடு புதனின் வீடாக இல்லாமல் இருந்தாலும், ஜாதகப்படி புதன் யோகக் கிரகமாக இல்லாமால் இருந்தாலும் நீங்கள் புதனின் காரகத்துவங்களான கம்ப்யூட்டர், கணக்கு, அக்கவுண்ட், ஜோதிடம், தரகு, வியாபாரம், மீடியா, எழுத்து, கல்வி நிலையம் போன்ற துறைகளில் புதனின் சுபத்துவ படிநிலைகளுக்கு ஏற்ப வேலை, தொழிலில் இருப்பீர்கள். இப்படிப்பட்ட புதன் பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டிருந்தால் தொழிலில் மிக உயர்நிலையில் இருப்பீர்கள்.  

இதேபோல செவ்வாய் அதிக சுபத்துவத்துடன் சந்திர, குரு, சுக்கிர தொடர்புடன் இருந்தால் நீங்கள் மருத்துவம், விளையாட்டு, அதிகாரம், கட்டிடம், மலை, வெடிமருந்து, காவல் பணி, நெருப்பு, இன்ஜினியரிங், ரியல் எஸ்டேட் என்று சொல்லப்படுகின்ற செவ்வாயின் முழுமையான காரகத்துவ அமைப்புகளில் உங்களுடைய வேலை, தொழில்களை அமைத்துக் கொண்டிருப்பீர்கள்.  

சந்திரன் அதிகமான சுபத்துவ அமைப்பில் இருக்கும் நிலையில் உங்களுக்கு திரவம், காய்கறி, பழம், விவசாயம், அழகுநிலையம், பெண்கள், பால், வெள்ளை நிறம் போன்றவைகளும், குரு அதிக சுபத்துவ நிலையில் இருக்கும் பொழுது வங்கித்துறை, சொல்லிக் கொடுக்கும் தொழில், தங்கம், வட்டிக்கு விடுதல், ஆன்மிகம், மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்டவைகளிலும் வேலை, தொழில் அமையும்.  

ஜாதகத்தில் சனி அதிகமான சுபத்துவ நிலையை குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், புதன் இவர்களுடன் இணைந்து அடைந்திருந்தால் அவருக்கு மெக்கானிசம், ஆட்டோமொபைல், மெதுவாக செய்யும் தொழில், கல்குவாரி, விவசாயம், இரும்பு, ஆன்மிகம், மது, சொல்லக் கூச்சப்படும் தொழில்கள், கால்நடை வளர்ப்பு, போன்றவைகளும் சூரியன் அதிக சுபத்துவமான அமைப்பில் இருக்கும் போது அரசுப் பணி, தந்தையின் தொழில், எலக்ட்ரிக்கல் கடை, அரசியல், போன்ற நிலைகளும் அமைகின்றன.  

சுக்கிரன் அதிக சுபத்துவமாக இருக்கும் பொழுது துணிக்கடை, ரெஸ்டாரன்ட், தங்கும் விடுதிகள், சொகுசுப் பொருட்கள், பெண்கள் சம்பந்தப்பட்டவைகள், கலைத்துறை, கப்பல், ஆடம்பரப் பொருட்கள், பெண்களால் லாபம், வெள்ளி ஆபரணம், கவர்ச்சியான விஷயங்கள் போன்ற தொழில் அமையும்.  

சுபத்துவ – சூட்சும வலு அமைப்பின் மிக முக்கிய நிலையாக தொழிலுக்கான அமைப்புகளைப் பார்க்கும் பொழுது ஒளிக் கிரகங்களான சூரியன், சந்திரன் மற்றும் பஞ்சபூதக் கிரகங்களான குரு, செவ்வாய், சுக்கிரன், புதன், சனி ஆகிய எழுவரின் நிலையை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்.  இங்கே சாயா கிரகங்களான ராகு-கேதுக்களுக்கு இடமில்லை.  

ஏனெனில் ராகு-கேதுக்கள் முழுமையான கிரகங்கள் அல்ல. அவைகளுக்கென தனியாக காரகத்துவங்கள் இருப்பினும் அவை சப்த கிரகங்களுக்குள் அடங்கியவையாகவே இருக்கும். சுபத்துவ சூட்சும வலு கோட்பாட்டு அமைப்பில் ராகு கேதுக்களுக்கு என தனியாக முக்கியத்துவம் இல்லை. இந்த நிலையை நான் பல காலமாக, பல்லாயிரம் ஜாதகங்களில்  ஆய்வு செய்திருக்கிறேன்.  அதாவது ராகு-கேதுவின் சுபத்துவத்தால்தான் இந்த தொழில் அமைந்திருக்கிறது என்று சொல்ல முடியாது. ராகு கேதுக்களுக்கு என்று தனியாக எதுவும் இல்லை.  

சுபத்துவம், சூட்சும வலு என்பது பருப்பொருள் உள்ள முழுமையான கிரகங்களான ஏழு கிரகங்களுக்கு மட்டுமே உள்ளது. ராகு கேதுக்களின் சுபத்துவம் என்பது இரண்டாம் நிலை சுபத்துவமாகத்தான் கருதப்பட வேண்டும். வேத ஜோதிடத்தில் ராகு-கேதுக்களுக்கு என ஒரு தனி இடம் இருந்தாலும், மற்ற கிரகங்களுடன் ஒப்பிடும் பொழுது அவை  முழுமையான கிரகங்கள் அல்ல. இவைகளின் சில நிலைகளை மிக நுண்ணிய அமைப்பில் பார்த்தால்தான் அறிய முடியும்.  

தொழில் அமைப்புகளை சுபத்துவ-சூட்சும வலு கோட்பாட்டின்படி அறியும்போது ராகு-கேதுக்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டியது இல்லை. ஆனால் மற்ற கிரகங்கள் ராகுவால் அடையும் பாபத்துவத்தையும், கேதுவால் பெறும் சூட்சும வலுவையும் கணக்கிட்டே ஆக வேண்டும். 

சப்த கிரகங்களின் காரகத்துவங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு அந்த ஏழு கிரகங்களில் எந்தக் கிரகம் பவுர்ணமிச் சந்திரன், குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், புதன் ஆகியோரின் இணைவு, பார்வை போன்ற தொடர்பை அதிகமாக அடைந்திருக்கிறது என்பதை தெளிவாகக் கணிக்க ஒருவரால் இயலும் போது, மேலே நான் சொன்ன “ஒரு ஜாதகத்தில் அதிகமான சுபத்துவத்தை அடையும் கிரகத்தின் தொழில் அமையும்” எனும் விதியை உங்களால் முழுமையாக உணர முடியும்.  

இன்னும் சொல்லப்போனால் ஒருவர் ஜாதகத்தில் எந்தக் கிரகம் அதிகமான சுபத்துவத்தை அடைந்திருக்கிறதோ, அந்த கிரகத்தின் படிப்பையே அவர் படித்திருப்பார். இதில் அதிக சுபத்துவம், குறைந்த சுபத்துவம் என்பதில்தான் குழப்பங்கள் வருமே தவிர, என்னுடைய தொழில் சம்பந்தப்பட்ட மேற்சொன்ன விதி அனைத்து நிலைகளிலும் மிகத் துல்லியமாக இருக்கும். 

அடுத்த வெள்ளி தொடருவோம். 

மாலைமலரில் 11.09.2020 இன்று வெளிவந்தது .

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.