சுக்கிரன் தரும் சுப யோகம்..! (B-008)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

பஞ்சமகா புருஷ யோகங்களில், சுக்கிரனால் உண்டாகும் மாளவ்ய யோகத்தைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

நான் ஏற்கனவே இந்த தொடர் கட்டுரைகளின் ஆரம்பத்தில்,  “எந்த ஒரு யோகமாக இருந்தாலும் அனைத்து லக்னங்களுக்கும் கிடைக்காது”  என்பதை தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.


ஆனால் ஜோதிடத்தில் விதி என்ற ஒன்று இருந்தால் அதற்கு விலக்கு என்ற ஒன்று இருந்தே தீரும். அதன்படி சுக்கிரனால் பெறப்படும் ‘மாளவ்ய யோகம்’ மட்டும் பனிரெண்டு லக்னங்களுக்கும் கிடைக்கப் பெறும்.

இதன் உண்மையான அர்த்தம் என்னவெனில்……

பஞ்ச பூதக் கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சனி ஆகியோரில் சுக்கிரன் ஒருவர் மட்டுமே எல்லா லக்னங்களுக்கும் கேந்திரங்களில் ஆட்சியோ, உச்சமோ பெறுவார்.

குரு உட்பட மற்ற நான்கு கிரகங்களும்… ஏன்? சூரிய, சந்திரர்கள் உள்ளிட்ட ஆறு கிரகங்களும் சில லக்னங்களுக்கு மட்டுமே கேந்திரங்களில் வலுப் பெறுவார்கள். எல்லா லக்னங்களுக்கும் இவர்கள் கேந்திரங்களில் வலிமையடைவது இல்லை.  ராகு,கேதுக்களின் ஆட்சி, உச்ச வீடுகளில் கருத்து வேற்றுமைகள் உள்ளன. ஆயினும், அவர்களுக்கும் இது பொருந்தும்.

சுக்கிரன் மட்டும் அனைத்து லக்னங்களுக்கும் கேந்திரங்களில் வலுப் பெறுவது எதற்காக? அவருக்கு மட்டும் அந்த அமைப்பு உண்டானது ஏன்?

இதற்கான சிறப்புக் காரணம் என்ன?

இதுவும் ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு சூட்சுமமே…

ஏற்கனவே நான் “பாதகாதிபதி பற்றிய ரகசியங்கள்” கட்டுரையில் இயற்கைச் சுப கிரகங்கள் கேந்திரங்களுக்கு அதிபதியாக வரக் கூடாது என்ற விதியின் மறைவில் இயற்கைப் பாபர்கள் திரிகோணங்களுக்கு அதிபதியாக வரக் கூடாது என்ற எதிர் பொருள் இருக்கிறது. 

அதுவே பாதகாதிபதி கிரகம் பற்றிய தத்துவம் என்பதையும், இயற்கைச் சுபர்கள் வலுப் பெற வேண்டும் என்பதன் எதிர் பொருளாக இயற்கைப் பாப கிரகங்களான சனி, செவ்வாய், ராகு, கேது ஆகியோர் நேரிடையாக வலுப் பெறக் கூடாது, சூட்சும வலுப்பெற வேண்டும் என்பதை “பாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்?” என்ற கட்டுரையிலும் விரிவாகச் சொல்லியிருக்கிறேன்.

அதைப் போலவே சுக்கிரனைப் பற்றிய இந்த சூட்சுமத்தைத் தெரிந்து கொள்ளு முன்…….

பரம்பொருளினால் படைக்கப்பட்ட இந்த எல்லையற்ற, முடிவற்ற, இன்று வரையிலும் வினாடிக்கு ஐந்து லட்சம் கிலோ மீட்டர்கள் வேகத்தில் விரிவடைந்து கொண்டிருப்பதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள இந்த பிரபஞ்சத்தில் நம் பூமி ஒரு அணுவை விடச் சிறியது.

இந்த அணுவிலும் சிறிய பூமியில் அதனினும் சிறிய மனிதர்களாகிய நாம் என்ன காரணத்திற்காகப் படைக்கப் பட்டிருக்கிறோம்?.

இதுபற்றி நமது மேலான இந்து மதம் என்ன சொல்கிறது?

மனித குலம் ஏதோ ஒரு உண்மையைக் கண்டு பிடிப்பதற்காகப் படைக்கப் பட்டிருக்கிறது. அந்த உண்மையை நோக்கிப் போய்க் கொண்டும் இருக்கிறது. இதுவே நம்முடைய மேலான இந்துமதம் உலகிற்கு சொல்லும் நீதி.

இந்த உண்மைக்கான தேடலில் ஒட்டு மொத்த மனித சமுதாயமும் சென்று கொண்டிருக்கும் போது, பரம்பொருள் ஒரு தனிமனிதனுக்குக் கொடுத்த ஆயுள் போதாது. எனவே ஒரு மனிதன் தனக்குப் பதிலாக தன்னுடைய நகலை பிரதிநிதியாக மகன், மகள் என்ற பெயரில் இங்கே விட்டு விட்டுச் செல்கிறான்.

அந்த மகனோ, மகளோ அவர்களின் சந்ததியை இங்கே விட்டுச் செல்வார்கள். இவ்வாறாக ஒரு தனி மனிதன், ஒரு மாபெரும் சங்கிலியின் ஒவ்வொரு கண்ணியாக இணைந்து, உண்மையை நோக்கித் தொடர்ந்து முன்னேறிச் செல்வான்.

ஆகவே மனிதன் பிறந்ததன் அடிப்படையான நோக்கம் என்ன?

இன விருத்தி…!

ஒரு ஆணும், பெண்ணும் இணைந்து தங்களுக்குப் பதிலாக ஒரு ஜீவனை உருவாக்கி, அதை நல்வழியில் வளர்த்து இப் பூமியில் விட்டு விட்டு மறைந்து போவதுதானே வாழ்க்கையின் தாத்பர்யம்? அதுதானே உண்மை?

அந்த இனவிருத்திக்கு அடிப்படை காமம். அது இல்லையேல் இதை எழுதிய நானும் இல்லை… படித்துக் கொண்டிருக்கும் நீங்களும் இல்லை.

எது இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதாவது பணம், பொருள், பதவி, உணவு, உறைவிடம் உள்ளிட்ட எவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் படைப்புக் கடமைக்காக ஒரு மனிதனுக்கு காமம் கண்டிப்பாக தேவைப்படுவதால்தான் அந்தக் காமத்திற்குக் காரகனான சுக்கிரன் மட்டும் அனைத்து லக்னங்களுக்கும் கேந்திரங்களில் பலம் பெறுகிறார்.

அதனால்தான் காமத்தை ஒரு ஒழுங்குக்குள் வைத்து அதை ஒரு மனிதன் தன் மனைவி என்ற துணையின் மூலமாக மட்டுமே அடைய வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் சுக்கிரனை களத்திர காரகன் என அழைக்கிறது.

கால புருஷனின் களத்திர ஸ்தானமான துலாம் ராசிக்கு சுக்கிரன் அதிபதியாவதன் தத்துவமும் இதுதான்.

சுக்கிரன் வலுப் பெற்று மாளவ்ய யோகம் தரும் நிலையில் இருந்தாலும் கூட சுக்கிரனின் தசை இளம் வயதில் வரக்கூடாது. வந்தால் பலன் இருக்காது. ஏனெனில் பெண்கள், காமம், ஆடம்பரம் ஆகியவற்றிற்கு சுக்கிரன் முக்கிய காரகன் ஆவதால் அதற்கு உடலும், மனமும் தயாராகாத நிலையில் வரும் சுக்கிர தசை விழலுக்கு இறைத்த நீராகும்.

புரியாத பருவத்தில் சுக்கிர தசை வருமானால் அந்த வயதில் வரும் பாலியல் பற்றிய அலைக்கழிப்பான எண்ணங்கள் ஜாதகரை முதிர்ச்சியற்ற நிலைக்குக் கொண்டு செல்லும். எப்போதும் இதுபற்றிய சிந்தனைகளால் சிறு வயதில் அவர் செய்யும் சில காரியங்கள் குடும்பத்திற்கோ, பெற்றவர்களுக்கோ தலைகுனிவை ஏற்படுத்தித் தரக்கூடும்.

எனவேதான் “குட்டிச் சுக்கிரன் குடியைக் கெடுக்கும்” என்பது போன்ற பழமொழிகள் ஏற்பட்டன. எனவே மனமும், உடலும் பக்குவமடைந்த முப்பது வயதுகளில் சுக்கிரனின் தசை ஆரம்பித்தால் மிகவும் நல்ல பலன்களைத் தரும்.

இன்னுமொரு நிலையாக கன்னியில் நீசம் பெற்றிருந்தாலும், சுக்கிரன் முறையான நீச பங்கம் பெற்றிருந்தால் தன் சுப காரகத்துவங்களை அபரிமிதமாக அள்ளித் தருவார். ஒரு கிரகத்தின் நீச பங்கம் என்பது ஒரு வகையில் எதிர்மறை விளைவாக உச்சத்தை விட மேலான நிலையே..

இது பற்றிய சூட்சும விளக்கங்களை நீச பங்க ராஜயோகம் பற்றிய கட்டுரையில் விரிவாகச் சொல்கிறேன். தற்போது மாளவ்ய யோகத்தைப் பற்றி மட்டும் காணலாம்.

அதேபோல வாழ்க்கைக்குத் தேவையான சுப காரகத்துவங்களைக் கொண்ட சுக்கிரன் வக்ரம் பெறுவதும் நல்ல நிலை அல்ல. என்னுடைய அனுபவத்தில் சுக்கிரன் வக்ரம் பெற்றவர்களுக்கு திருப்தியான மணவாழ்க்கை அமைவது இல்லை. சூரியனை விட்டு அவரால் வெகுதூரம் விலக முடியாது என்பதால் அஸ்தங்கம் பெற்றாலும் கூட அவருடைய காரகத்துவங்கள் முழுமையாகப் பாதிக்காது.

ஜாதகத்தில் நான்காமிடத்தில் திக்பலம் பெற்று நல்லவிதமாக அமைந்திருந்தால் அங்கிருந்து ஜீவன ஸ்தானத்தைப் பார்ப்பார் என்பதால் தன் காரகத்துவங்களில் தொழில் அமைப்புகளைத் தருவார்.

நவ கிரகங்களில் குருவுக்கு அடுத்த இடத்தில் உள்ள இயற்கைச் சுபரான சுக்கிரன் சுப பலம் பெற்றிருந்தால், கலைத்துறை, இசை, நடனம், அழகிய பெண்கள், அழகுணர்ச்சி, தொலைக்காட்சி, ஹோட்டல் தொழில், அழகிய வீடு, கன்னிப்பெண், செல்வம், ஓவியம், சிற்பம், முடி திருத்துவோர், பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள், அவசியமற்ற பொருட்கள், ஆடம்பரம், டெக்ஸ்டைல்ஸ், சூதாட்டம், திருமணம், கேளிக்கை விளையாட்டுக்கள், சந்தோசம், இளமைத் துடிப்பு, காதல், உயர்தர வாகனம், பெண்தரும் இன்பம், விந்து, காமம், உல்லாசம், நகை, கப்பல், 

கவிதை, இலக்கியம், சினிமா, உடல்உறவு விஷயங்கள், அந்தரங்க உறுப்புகள், பெண் தெய்வ வழிபாடு, புதிய ஆடை, வெள்ளை நிறம் கொண்ட பொருட்கள், மனைவி, பூக்கள், இளமை, வசீகரம், அழகுப் பொருட்கள், அலங்காரமான விஷயங்கள், நீர் சம்பந்தப்பட்டவை, வெள்ளி, வாகனங்கள், பெண்களால் லாபம், கண், அழகு, தென்கிழக்குத் திசை, உணர்ச்சி வசப்படுதல், நீச்சல், இளம்பருவம், இசைக் கருவிகள், வண்ணம், நறுமணப் பொருட்கள், வைரம், புளிப்புச் சுவை, அதிகமான பணம், பிராமணர் போன்றவைகளில் லாபங்களை தருவார்.  

சுக்கிரன் பலவீனமாகியிருந்தாலோ, பாபத்துவம் அடைந்திருந்தாலோ மேற்கண்ட விஷயங்களில் கெடுபலன்கள் இருக்கும்.

அனைத்து லக்னங்களுக்கும் எந்த நிலையில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் மாளவ்யயோகம் அளிப்பார் என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

சனி, ராகுவுடன் சுக்கிரன் இணையலாமா..?

மாளவ்ய யோகம் தரும் நிலையில் சுக்கிரன் இருக்கும்போது கண்டிப்பாக செவ்வாய், சனியின் பார்வையையோ, இணைவையோ பெறக்கூடாது. இது யோகத்தைப்  பங்கமாக்கும். சனி, சுக்கிரனுக்கு நண்பர்தான் என்றாலும் சில நிலைகளில் சனி, சுக்கிரன் இணைவு ஜாதகரை காமத்திற்கு அடிமையாக்கும்.

இந்த அமைப்பால் காமத்திற்காக தனது அந்தஸ்து, கவுரவம், நற்பெயர் போன்ற எதையும் இழக்க ஜாதகர் துணிவார். சில நிலைகளில் சனியுடன் சுக்கிரன் இணையும் போது கிடைக்கும் காமம் முறையானதாக இருக்காது. இதுபோன்ற நிலை சனி, சுக்கிரன் சம்பந்தப்பட்ட தசா, புக்திகளிலோ அல்லது சுக்கிர, சனி வீடுகளில் கிரகங்கள் இருக்கும் போதோ நடக்கும். 

எந்த ஒரு சுப யோகமுமே செவ்வாய், சனி, ராகு-கேது போன்ற பாபக் கிரகங்களின் தொடர்பைப் பெறக் கூடாது. பாபக் கிரகங்கள் யோகம் தரும் அமைப்பில் இருக்கும் போது அவற்றுடன் சுப கிரகங்கள் இணைவது அந்த யோகத்தை வலிமைப் படுத்தி கூடுதல் நன்மைகளைத் தர வைக்கும்.

ஆனால் சுப கிரகங்கள் யோகம் தரும் நிலையில் இருக்கும்போது அவற்றுடன் பாபக் கிரகங்கள் இணைவது நன்மைகளைத் தராது. மாறாக யோகம் வலுவிழக்கும். எனவே எந்த ஒரு சுப யோகமும் பாப சம்பந்தம் பெறாமலிருப்பது நல்லது.

செவ்வாய் சனி தவிர்த்த இன்னொரு பாபக் கிரகமான ராகுவுடன் சுக்கிரன் இணைவது இரண்டு விதமான நேரெதிர் நிலைகளை உண்டாக்கும். இணையும் ராசியையும், நிற்கும் நட்சத்திரத்தையும், நெருங்கும் தூரத்தைப் பொருத்தும், ஜாதகர் பெண்களே கதி எனும் ஸ்திரீலோலனாகவோ அல்லது பெண்களைக் கண்ணெடுத்தும் பாராத நபராக, பெண் சுகம் கிடைக்காத நபராகவோ இருப்பார்.

பெண்களின் ஜாதகத்தில் இந்த இணைப்பு இருப்பின் மண வாழ்வில் குறை இருக்கும். ஏதேனும் ஒன்று முறை தவறி இருக்கும். இணையும் கிரகத்தின் பலனை எடுத்துச் செய்யும் கிரகம் ராகு என்பதால், சுக்கிரனுடன் இணையும் போது  சுக்கிரன் தனது காரகத்துவங்களைத் தருவதை ராகு தடுப்பார். ஆனால் தனது தசையில் சுக்கிரனின் பலன்களைத் தருவார். 

ராகுவின் மறுமுனைக் கிரகமான கேதுவுடன் சுக்கிரன் இணையும் நிலை அனுபவத்தில் பெரிய தீமைகளைச் செய்வதில்லை. ராகு தலை, கேது வால் என்பதால் ராகுதான் விஷம் போன்ற பாதிப்புகளைத் தருவார். கேது என்பது குறைந்தபட்சத் தீமைதான்.

(நவ 06-11, 2011 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளி வந்தது.)

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.