கிரகங்கள் மறைந்தால் கெடுதல் செய்யுமா?

கே. பூபதி, திருச்செங்கோடு.

கேள்வி:

என் ஜாதகத்தில் முக்கியமான கிரகங்கள் அனைத்தும் மறைவு ஸ்தானமான 12-ல் உள்ளன. எம்எஸ்சி படித்துள்ள எனக்கு வேலைவாய்ப்பு மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்குமா? இது யோக ஜாதகம்தானா?

பதில்:

(மகர லக்னம், தனுசு ராசி, 1ல் சனி, ராகு, 5ல் செவ், 7ல் குரு, கேது, 12ல் சூரி, சந், புத, சுக், 19-12-1990 காலை 8-40 சேலம்)

வேதஜோதிடத்தில் முழுமையான ஞானமும், அனுபவமும் இல்லாதவர்கள்தான் ஆறு, எட்டு, பனிரெண்டில் கிரகங்கள் மறைவதைப் பற்றி மிகைப்படுத்தி கெடுபலன்களைச் சொல்லுகிறார்கள்.

துர் ஸ்தானங்கள் மற்றும் மறைவிடங்கள் என்று சொல்லப்படும் 3, 6, 8,12ம் பாவகங்கள் அனைத்தும் கெடுதல்களை மட்டுமே செய்வன அல்ல. இந்த நான்கு பாவகங்களுக்குள்ளும் வேறுபாடு இருக்கிறது. குறிப்பாக மூன்றாம் பாவகம் 25 சதவிகித மறைவிடம், பனிரெண்டாமிடம் 50 சதவிகித மறைவிடம், மீதியுள்ள 6,8 இரண்டுமே நூறு சதவிகித மறைவிடங்கள் என்று நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள். இதிலும் சுக்கிரனுக்கு விதிவிலக்கு இருக்கிறது. அதாவது 6, 12 மிடங்கள் சுக்கிரனுக்கு மறைவில்லை. ஆனால் மூன்று. எட்டில் அவர் முழுமையாக மறைவார்.

விதிகளை விட விதிவிலக்குகளை அதிகம் புரிந்து வைத்திருக்க வேண்டிய மாபெரும் கலை இது. பன்னிரண்டாம் பாவகம் கடுமையான கெடுபலன்களைத் தரும் வீடு அல்ல. கெடுபலன்களைத் தரக்கூடிய பாவகங்களில் ஆறாம் வீடே முதன்மை வகிக்கிறது. எட்டாம் வீடு கூட நம்முடைய மூலநூல்களில் கெட்ட இடமாக சொல்லப்படவில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அனைத்து பாவகங்களும் முக்கியமானவைதான்.

ஒரு பாவகத்தில் இருக்கும் கிரகம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை நன்கு  கணிப்பதில்தான் ஜோதிடரின் ஆழமான அறிவு வெளிப்படுகிறது. உங்களது ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் பன்னிரண்டாம் இடத்தில் நான்கு கிரகங்கள் இருப்பது உண்மைதான். அதில் மூன்று கிரகங்கள் மறைகின்றன. சுக்கிரனுக்கு 12மிடம் மறைவு ஸ்தானம் இல்லை என்பதைவிட பன்னிரண்டாம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் மிக நல்ல பலன்களை தருவதாக நம்முடைய மூல நூல்களில் குறிப்பிடப்படுகிறார்.

எல்லாவற்றையும்விட இவர்கள் நால்வருக்கும் வீடு கொடுத்த குரு உச்சமாகி, கேள யோகத்தில் அமர்ந்து 12ல் இருக்கும் சந்திரனுடன் பரிவர்த்தனையாகி இருக்கிறார். அந்த சந்திரன் அமாவாசை நிலை நீங்கி இருளில் இருந்து வெளிவந்து கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் வளர்பிறைச் சந்திரனாக இருக்கிறார்.

மேலோட்டமாகப் பார்த்தால் உங்கள் ஜாதகத்தில் பன்னிரண்டாம் இடத்தில் நான்கு கிரகங்கள் மறைந்திருப்பதைப் போலத் தோன்றினாலும், உள்ளே நுணுக்கமாக சென்று ஆராய்கையில் சந்திரன் பரிவர்த்தனை, சூரியன் நட்பு வீடு, சுக்கிரனுக்கு மறைவு ஸ்தானம் இல்லாத நல்ல வீடு, புதன், சுக்கிரன் ஒரே டிகிரியில் நல்லவிதமாக இணைந்திருப்பது, இவர்கள் அனைவருக்கும் வீடு கொடுத்த குரு உச்சமாக இருப்பது என 12ல் இருக்கும் கிரகங்களும், பன்னிரெண்டாம் அதிபதியும் வலுவாக இருக்கிறார்கள்.

உண்மையில் உங்கள் ஜாதகத்திலுள்ள பலவீனம் என்னவென்று பார்த்தால், லக்னாதிபதி சனி பாபத்துவமாக ஆறு டிகிரிக்குள் ராகுவுடன் இணைந்திருப்பதுதான். ஆனால் அதற்கும் உச்ச குருவின் பார்வை எனும் நிவர்த்தி இருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் செவ்வாய் தவிர அனைத்துக் கிரகங்களும் ஏதோ ஒரு வகையில் உச்ச குருவின் தொடர்பில் இருப்பதாலும், அடுத்தடுத்து யோக தசைகள் நடைபெற உள்ளதாலும் எதிர்காலம் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும்.

தற்போது உங்களுடைய பூராட நட்சத்திரத்தில் சனி சென்று, ஜென்மச்சனி நடந்து கொண்டிருப்பதால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்க்கையைப் பற்றிய குழப்பமான நிலைமை உங்களுக்கு இருக்கும். அடுத்த வருடம் முதல் அனைத்தும் சரியாகும். எதிர்காலத்தில் மிகவும் நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள். (05.11.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.