adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
கொலைத் தொழிலுக்கு என்ன கிரக அமைப்பு?

க. மாணிக்க மாதவன், மதுரை.

கேள்வி.

தனக்கு ஆண்டவன் அளித்ததை குறைவின்றி எங்களுக்கு அருளும் தெய்வத்தை விட மேலான ஆசானுக்கு வணக்கம். செவ்வாய்க்கிழமை மாலைமலர் கேள்வி பகுதியில் திரும்பத் திரும்ப திருமணம், அரசு வேலை, குழந்தை பாக்கியம், சிறுவயது முதல் கஷ்டம் போன்ற கேள்விகளுக்குத்தான் பதில் தருகிறீர்கள். இது போன்ற கேள்விகள் மட்டும்தான் வருகின்றனவா அல்லது மாலைமலர் இத்தகைய கேள்விகளை மட்டும்தான் தேர்ந்தெடுக்கிறதா என்பது தெரியவில்லை.


ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் இந்த சாஸ்திரத்தில் புதிய விதிகளை உருவாக்கும் தகுதி உள்ளவர் என்று நிரூபித்துள்ள உங்களிடம் ஜோதிட சமுதாயம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறது. வழக்கமான கேள்விகளைத் தவிர்த்து வித்தியாசமான விதிகளை சொல்லும் கேள்விகளுக்கு தாங்கள் முன்னுரிமை அளிக்கலாமே?

என் மனதில் நீண்ட நாட்களாக இருக்கும் ஒரு கேள்விக்கு நீங்கள் பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன். என் நண்பர் தன்னுடைய குலத்தொழிலாக கறிக்கடை நடத்தி வருகிறார். தினமும் நூற்றுக்கணக்கான உயிர்களைக் கொல்கிறார். இதன்மூலம் மிகுந்த வசதியுடன் இருக்கிறார். கொலைத் தொழிலை அவர் தெய்வீகத் தொழிலாக எண்ணி மிகுந்த பக்தி சிரத்தையுடன் செய்து வருகிறார். இதற்கு அவரது ஜாதகத்தில் என்ன அமைப்பு இருக்க வேண்டும்? கேள்வியில் ஏதேனும் தவறு இருப்பின் என் அய்யன் அருள்கூர்ந்து மன்னிக்க வேண்டும்.

பதில்.

முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். மாலைமலர் கேள்வி-பதில் பகுதி இத்தனை பிரபலமாக பேசப்படுவதற்கும், கடந்த நான்காண்டு காலமாக நீடித்து வெளி வருவதற்கும் இந்தப் பகுதியில் என்னை சுதந்திரமாக இயங்க அனுமதித்த, மாலைமலரின் தலைமைச் செயல் அதிகாரி, மேதகு ஆசிரியர், இணை ஆசிரியர் ஆகிய மூவர்குழு மட்டுமே காரணம். இந்தப் பகுதியின் வெற்றிக்குச் சொந்தக்காரர்கள் இவர்கள் மட்டும்தான்.

ஒரு சாதாரண ஜோதிடனான என்னை முழுமையாக நம்பி அவர்கள் சுதந்திரமாக எழுத அனுமதித்த காரணத்தினால்தான், என்னுடைய கருத்துக்களை முழுமையாக, விரிவாக, தெளிவாக இங்கே எழுத முடிகிறது. மேலும் எனக்கான கேள்விகளைத் தேர்ந்தெடுப்பதும் மாலைமலர் அல்ல. அதனையும் நானே செய்கிறேன்.

தினமும் வரும் ஏராளமான கடிதங்களில் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவைகள்,  மேலே நீங்கள் சொன்ன திருமணம், குழந்தை பாக்கியம், அரசு வேலை சம்பந்தப்பட்டவைகள்தான். மேலும் சொந்தத் தொழில், சிறுவயது முதல் கஷ்டம் போன்ற மன அழுத்தத்தை வெளிப்படுத்தும் கடிதங்கள் மட்டுமே அதிகமாக வரும்பொழுது அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட வேண்டி இருக்கிறது. 

அதேநேரத்தில் அத்தி பூத்தார் போல எப்போதோ சிலர் கேட்கும் வித்தியாசமான நல்ல கேள்விகளுக்கும் பதில் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆகவே பெரும்பான்மையினரின் கருத்திற்கு மதிப்பு கொடுக்கும் வகையில்தான் மாலைமலர் கேள்வி-பதில் அமைகிறது.

ஒருவர் கொலையை ஆத்மார்த்த உணர்வுடன் செய்வதற்கான கிரக அமைப்பு எது என்று நீங்கள் கேட்டிருக்கும் கேள்வி வித்தியாசமானதுதான்.

எந்தத் தொழிலாக இருந்தாலும் அதை ஒரு அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பரம்பொருளின் அருளுடன் பலவிதமான அமைப்புடைய ஜாதகங்களை தொழில்ரீதியாக பார்க்கும் இடத்தில் இருக்கும் எனக்கு சென்னையிலேயே மிகப்பெரிய கறிக்கடைக்காரரும்  ஒரு வாடிக்கையாளர்தான் (அவரது பிறந்தநாள் 27-6-1966 அதிகாலை 4-5 சிவகங்கை) உங்களது நண்பரைப் போலவே தினமும் நூற்றுக்கணக்கான கொலைகளைச் செய்யும் இந்த கறிக்கடைக்காரர் இத்தொழிலின் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார். சமீபத்தில் தன்னுடைய மகனுக்கு 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆடி கார் வாங்கி கொடுத்திருக்கிறார் என்றால் அவரது செல்வ நிலையை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

பொதுவாகவே ஒருவர் கொலைத் தொழிலை செய்ய வேண்டும் எனில் அல்லது கூலிக்கு கொலை செய்யும் கொலைகாரனாக இருக்க வேண்டுமெனில், அவரது ஜாதகத்தில் செவ்வாய் சுபத்துவ அல்லது பாபத்துவ வலுவோடு  இருக்க வேண்டும். பாபத்துவ அமைப்பில் செவ்வாய், சனி-ராகு போன்ற கிரகங்களோடு இணைந்திருக்கும் நிலையில் ஒருவர் ரவுடியாக கூலிக்கு கொலை செய்யும் அல்லது வெட்டும் ப்ரொபஷனல் கில்லராக இருப்பார்.

அதே செவ்வாய் தொழில் வீட்டோடு தொடர்பு கொண்டு அல்லது தொழில் ஸ்தானம் வலுவாகி, செவ்வாய் சுபத்துவமாக இருக்கும் நிலையில் ஒருவர் மருத்துவராகவோ, ரத்தம் சம்பந்தப்பட்டவராகவோ, கட்டிடம், காவல்துறை, சிகப்பு நிறம் சம்பந்தப்பட்டவராகவோ, இறைச்சி விற்பவராகவோ இருப்பார்.

மேலே நான் பிறந்தநாள் விபரம் கொடுத்திருக்கும் இந்த கறிக்கடைக்காரருக்கு ரிஷப லக்னமாகி, லக்னத்திலேயே, லக்னாதிபதி சுக்கிரனோடு செவ்வாய் இணைந்த நிலையில், இரண்டாம் வீட்டில் இருக்கும் குரு தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தைப் பார்க்கிறார். பொதுவாக பத்தாமிடத்தோடு அல்லது பத்தாமிடத்தில் சனி சம்பந்தப்படுமாயின வெளியே சொல்ல கூச்சப்படும் தொழில்கள் அமையும்.

அதன்படி ரிஷப லக்னத்திற்கு பத்தாம் இடம் சனியின் வீடாகி, அவர் பதினொன்றாம் இடமான குருவின் வீட்டில் சுபத்துவமாக இருப்பதால், இவருக்கு கறிக்கடை தொழில் அமைந்தது. மிகச் சிறுவயதிலேயே கறித்தொழிலுக்கு வந்த இவர், தற்போது நகரின் முக்கிய பகுதியில் பிரபலமான வியாபாரியாக இருக்கிறார்.

இதைவிட ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், தற்போது சனி தசை நடந்து கொண்டிருக்கும் இவருக்கு, இன்னும் மூன்று வருடங்களில் புதன் தசை ஆரம்பிக்க இருக்கிறது. ஜல ராசியான கடகத்தில் புதன் இருப்பதால் அடுத்த சில வருடங்களில் நீங்கள் மீன் வியாபாரத்தில் இதைவிட அதிக பணம் சம்பாதிப்பீர்கள் மற்றும் பிரபலமாக இருப்பீர்கள் என்று நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன். அதன்படி தற்போது இவருக்கு கறித்தொழிலை விட மீன் தொழிலில் ஆர்வம் ஏற்பட்டு நகரின் மிக முக்கிய பகுதியில் பிரமாண்டமான இடம் தேடிக் கொண்டிருக்கிறார். விரைவில் புதன் தசை ஆரம்பிக்க இருக்கும் நிலையில், இவர் மீன் துறையிலும் பெரும்பொருள் சம்பாதிப்பார்.

கிரகங்களின் காரகத்துவங்கள், ராசிகளின் தன்மைகள், இவை இரண்டின் சுபத்துவ, சூட்சுமவலு அமைப்புகளை சரியாகப் புரிந்து கொண்டால், ஒருவர் என்ன துறையில் சம்பாதிப்பார் அல்லது  எப்படிப்பட்ட துறையில் இருப்பார் என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியும். விரைவில் மாலைமலரில் ஆரம்பிக்க இருக்கும் சுபத்துவ, சூட்சுமவலு விளக்க கட்டுரைகளில் இவற்றை இன்னும் விரிவாகச் சொல்லுகிறேன்.

(13.08.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.