அக்கா மகளுக்கு திருமணம் நடக்குமா?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

மா. குமரகுருபரன், திருச்சி.

கேள்வி

மாலை மலரில் தங்களைத் தொடர்ந்து படித்து வரும் எண்ணற்றவர்களில் நானும் ஒருவன். தங்களின் வாசகன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். 31 வயதாகும் எனது சகோதரி மகளுக்கு மூன்று வயதில் இருந்தே வலிப்பு நோய் உள்ளது. வாரம் ஒருமுறையாவது வந்து விடுகிறது. இந்த நோய் இருப்பதால்  திருமணம் செய்து கொடுக்க பயமாக உள்ளது. பெண் கேட்டு வருபவர்களிடம் பெண்ணுக்கு நோய் உள்ளது என்றால் எப்படி சம்மதிப்பார்கள்? சொல்லாமல் திருமணம் செய்தால் அது பிரச்சினையாகி விடும். அது நல்ல செயலும் அல்ல என்பதால் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம். எனக்கும் ஓரளவிற்கு ஜோதிட அறிவு உண்டு. இந்தப் பெண்ணுக்கு நோய் எப்போது தீரும்? திருமணம் நடக்க வாய்ப்பு உண்டா? குருநாதனே உனது அருள் மொழியை எதிர்பார்த்து சிரம் தாழ்த்தி காத்திருக்கிறேன்.

பதில்.

(மேஷ லக்னம், மீன ராசி, 2ல் குரு, 5ல் கேது, 8ல் சுக், 9ல் சூரி, புத, சனி, 011ல் ராகு, 12ல் சந், செவ், 16-12-1988, மதியம் 2-45 ராமநாதபுரம்)

ஜாதகத்தில் சுக்கிரனும், குருவும் நேருக்குநேர் நின்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலே, சுக்கிரன் தரும் தாம்பத்ய சுகத்தை குரு தர விடமாட்டார், குருவின் புத்திர பாக்கியத்தை சுக்கிரன் தரமாட்டார் என்று எழுதி இருக்கிறேன். இதை நிரூபிக்க கூடிய ஏராளமான ஜாதகங்கள் என்னிடம் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் உங்கள் அக்கா மகளின் ஜாதகம்.

அக்கா மகளின் ஜாதகத்தில் சுக்கிரனும், குருவும் சரியாக 180 டிகிரியில் எதிரெதிரே நின்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். அதிலும் முக்கியமாக ஏறக்குறைய ஒரே கலையில் மிகத்துல்லியமாக ஒருவருக்கு ஒருவர் நேர் எதிரே நிற்கிறார்கள். இது போன்ற அமைப்பில் ஒருவருக்கு தாம்பத்திய சுகம், புத்திர சுகம் கிடைக்க வாய்ப்பில்லை.

இது ஒரு மிக மிக நுணுக்கமான, மற்ற அமைப்புகளையும் ஆராய்ந்து சொல்ல வேண்டிய ஒரு பலன். இந்த அமைப்பில் குருவும், சுக்கிரனும் தங்களுக்கு மிகவும் ஆகாத பகை வீட்டில் இருக்கிறார்கள். ஆகவே இருவருமே நூறு சதவிகித பலவீனத்தில்  இருக்கிறார்கள். போதாததற்கு இங்கே சுக்கிரன் எட்டில் மறைந்திருக்கிறார். 6-12-ஆம் இடங்களை மறைவு ஸ்தானமாக கொள்ளாத சுக்கிரனுக்கு, 3-8 ம் வீடுகள் கடுமையான மறைவிடங்கள் என்பதால் எட்டில் இருக்கும் சுக்கிரன் முழுக்க பலம் இழப்பார்.

அக்கா மகளின் ஜாதகப்படி புத்திர ஸ்தானமான ஐந்தாமிடத்தில் ராகு-கேதுக்கள் அமர, புத்திர ஸ்தானாதிபதியான சூரியனோ, சனியை அஸ்தமனம் செய்து கடுமையான பாபத்துவ அமைப்பில் இருக்கிறார். லக்னத்திற்கு ஏழாம் இடத்தை செவ்வாய் பார்க்க, ராசிக்கு ஏழாமிடத்தை செவ்வாய், சனி இருவரும் பார்க்கிறார்கள்.

எல்லாவற்றையும்விட மேலாக மேஷ லக்னத்திற்கு வரக்கூடாது என்று நான் சொல்லும் புதன் தசை தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஆறு வருடங்களுக்கு ஏறத்தாழ 37 வயதுவரை புதன் தசை நீடிக்கும். தசாநாதன் புதனும், சனியுடன் ஒரே டிகிரியில் இணைந்து பாபத்துவமாக உள்ளதால், புதன் தசையில் திருமணம் நடக்க வாய்ப்பு இல்லை.

சில ஜாதகங்களுக்கு என்ன பலன் சொல்வது என்று மனம் சங்கடத்திற்கு உள்ளாகும். அது போன்ற அமைப்புள்ள ஜாதகம் இது. பரம்பொருளை வேண்டுங்கள். நோய் தீரும். நல்லது நடக்கும். வாழ்த்துக்கள்.

Be the first to comment

Leave a Reply