adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
ஏழரைச் சனி எப்போது நன்மை செய்யும்..?D-009(A)- Yezharai Sani Yeppothu Nanmai Seiyum..?

சென்ற வாரம் ஏழரைச்சனி பற்றி எழுதிய கட்டுரைக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளும், மேல் விளக்கங்களும் தேவைப்படுகிறது என்பது உங்களுடைய கேள்விகளில் இருந்து தெரிகிறது.

குறிப்பாக ஏழரை வருடங்கள் தொடரும் இந்த அமைப்பில் விரயச் சனி, ஜென்மச் சனி, பாதச் சனி என்பதைப் பற்றியும், ஒரு மனிதனின் வாழ்நாளில் முப்பது வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் இந்நிகழ்வில் முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று எனப்படும் மங்குசனி, பொங்குசனி, மரணச்சனி என்ற மூன்று சுற்றுக்களையும் பற்றிய விளக்கங்களை அநேகர் கேட்டிருக்கிறீர்கள்.

சென்ற வாரம் விளக்கியதைப் போல ஏழரைச்சனி என்பது மூன்று இரண்டரை வருடங்களை கொண்ட ஒரு அமைப்பு. ஒருவரின் ராசிக்கு பின் ராசியான பனிரெண்டாமிடத்தில் சனி நுழைவது விரையச் சனி எனப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் ஒரு மனிதருக்கு வருமானங்களை சனி தந்தாலும் அவற்றை சேமிக்க முடியாமல் விரயம் செய்வார் என்று இதைப் பற்றிய அனுபவ ஜோதிட நூல்கள் சொல்கின்றன. இது ஒரு பொதுப் பலன்தான்.

மிக முக்கியமாக இந்த முதல் இரண்டரை ஆண்டு காலத்தில் ஒரு மனிதர் ஏழரைச் சனியின் கெடுபலன் தாக்கத்தை உணர்வது இல்லை. இன்னும் சொல்லப் போனால் சிலருக்கு அதீதமான பொருள் வரவும் விரயச்சனி காலத்தில் கிடைக்கவே செய்கிறது. இந்த காலகட்டத்தில் ஒரு மனிதனிடம் தாராளமாகவே பணம் இருக்கும்.

ஏழரைச்சனியின் நடுப்பகுதியும், கடுமையான கெடுபலன்களைச் செய்வதுமான, ஒரு மனிதனின் சொந்த ராசியில் இரண்டரை வருடங்களுக்கு சனி இருக்கும் நிலையே, ஜென்மச்சனி எனப்படுகிறது. இந்த இரண்டரை ஆண்டு காலத்தில், ஒருவரின்  சொந்த நட்சத்திரத்தில் சனி செல்லும் ஏறத்தாழ ஒரு ஆண்டு காலத்தில் மிகக் கடுமையான கெடுபலன்களை தருவார். அதிலும் 40 வயதுக்குள் வரும் சனி இந்த நிலைமையை கண்டிப்பாக செய்யும்.

சுய நட்சத்திரத்தில் சனி செல்லும்போது ஒரு மனிதனுக்கு வாய்விட்டு அழும்படியான கடுமையான மன அழுத்தம் உள்ள நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த காலகட்டத்தில் ஒரு மனிதனுக்கு எது பிடிக்காதோ அது நடக்கும். அவனை எது பாதிக்குமோ அந்த விஷயத்தில் சனி கடுமையான கெடுபலன்களைச் செய்வார், இது வயதிற்கு ஏற்றார் போல நடக்கும்.

சென்ற வாரத்தில் நான் எழுதியதைப் போல, இந்த நேரத்தில்தான் ஒரு இருபது வயது வாலிபனை, வயதிற்கேற்றார் போல காதல் தோல்வியிலும், முப்பது வயதுகளில் இருப்பவனை தொழில் அமைப்புகளிலும், நாற்பதில் இருப்பவனை தொழில், குடும்ப அமைப்புகளிலும் கடுமையான சிக்கல்களை சனி தருவார். சிலருக்கு நெருங்கிய உறவினர் மரணத்தின் மூலமாக மனப் பதட்டத்தைத் தருவார்.

கோட்சாரத்தில் ஒருவரின் ஜென்ம ராசியில் இருளாகிய சனி அமரும்போது, அவனது மனதை ஆளுமை செய்து தவறான வழியில் செல்லவோ, முடிவெடுக்கவோ வைக்கிறார். ராசியில் சனி இருக்கும் போது தனது கெடுபலன் தரும் கொடிய பார்வை மூலம் அந்த மனிதனின் தைரியம், நற்பெயர் ஆகியவற்றிற்கு காரணமான மூன்றாமிடத்தைப் பார்த்து, அவனது பெயரைக் கெடுத்து, தைரியத்தைக் குலைத்து எதிர்காலம் பற்றிய மனபயத்தை உண்டு பண்ணுவார். ஜென்ம ராசியில் சனி இருக்கும்போது அவரது பத்தாம் பார்வையால் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால்தான் ஜென்மச் சனி நடக்கும்போது வேலையிழப்பு, சஸ்பென்ட். தொழில் சரிவு போன்றவைகள் நடக்கின்றன. 

பாதச் சனி எனப்படும் ராசிக்கு இரண்டாமிடத்திற்கு சனி மாறியவுடன் இதுநாள் வரை நடந்த கெடுபலன்கள் குறைய ஆரம்பிக்கும். ஆனாலும் இந்த நிலையில் முழுமையான நன்மைகள் நடந்து விடுவது இல்லை. சனி முழுவதுமாக முடிந்ததும் அந்த மனிதர் செட்டிலாகும் வாழ்க்கை வாழ்வதற்கான ஆரம்பங்கள் இந்த பாதச் சனி அமைப்பில் நடக்கும்.

மங்கு, பொங்கு, மரணச்சனி விஷயத்தை எடுத்துக் கொண்டால், பிறந்த உடன் முதலில் வருகின்ற சனி மங்கு சனி எனவும், இந்த சனி கெடுபலன்களைத் தரும் எனவும், இரண்டாவது முப்பது வருடங்களில் வருகின்ற சனி பொங்கு சனி எனவும், அது நல்ல பலன்களைத் தரும் எனவும், மூன்றாவதாக முப்பது வருடங்களில் வரும் சனி மரணச்சனி எனவும், அது முதல் சுற்று சனியைப் போலவே கெடுபலன்களைக் கொடுத்து ஒரு மனிதனின் ஆயுள், ஆரோக்கியத்தை குலைக்கும் எனவும் ஜோதிடர்களால் விளக்கப்படுகிறது.

இதில் சிலர் புரிந்து கொள்ளாத ஒரு முரண்பாடு என்னவெனில் குழந்தையாய்  இருக்கும் போது வருகின்ற ஏழரைச்சனியை மங்கு சனி எனவும், அடுத்த முப்பது  வயதுகளில் வரும் சனியை இரண்டாவது சுற்று பொங்கு சனி எனச்சொல்லி முப்பது வயதுகளில் வரும் சனி நல்லது செய்யும் என தவறாக நினைத்துக் கொள்கிறார்கள்

உண்மையில் ஏழரைச் சனி என்பது ஒரு மனிதன் எதிர்காலத்தில் நல்லவிதமாக வாழ்வதற்கான அனுபவங்களையும், பணம் என்றால் என்ன என்பதைப் பற்றிய நேரடி அனுபவத்தையும் தருகின்ற ஒரு அமைப்பு என்பதால் சனிக்கு எவரும் விதிவிலக்காக இருக்க முடியாது. எத்தனை பெரிய யோக ஜாதகமாக இருந்தாலும் அந்த ஜாதகத்திற்கு ஏற்ப சனியின் கெடுபலன்கள் இருக்கவே செய்யும். பூமியில் பிறக்கும் எவரும் ஏழரைச்சனிக்கு விதிவிலக்காக இருக்க முடியாது

விபரம் தெரியாத குழந்தைப் பருவமான ஏறத்தாழ 15 வயது வரை வருகின்ற ஏழரைச்சனியை ஒருபோதும் கணக்கில் எடுத்துக் கொள்ளவே கூடாது. ஒருவரின் கர்மா விழிக்காத பருவத்தில் வரும் சனி அவருக்கு நல்ல, கெட்ட பலன்களைச் செய்யாது. அந்தப் பருவத்தில் வரும் சனி அவரது பெற்றோருக்கும், குடும்பத்திற்கும் மட்டுமே தீமைகளைச் செய்யும். அதன் மூலம் அந்தக் குழந்தையும் பாதிக்கப்படும்.

ஒருவருக்கு பத்து வயதில் ஏழரைச்சனி முடிந்திருக்குமாயின், முப்பத்து மூன்று  வயதில் இன்னொரு சுற்று சனி ஆரம்பமாகும். அதனை பொங்கு சனி என்று சொல்லி அந்த இரண்டாம் சுற்று நன்மைகளைச் செய்யும் என்று கணக்கிட கூடாது. உண்மையில் அவருக்கு விபரம் தெரிந்த வயதான இந்த 33 வயதில் வருகின்ற சனியே அவருக்கு முதல் சுற்று சனி போன்ற அனுபவங்களை கொடுத்து கெடுபலன்களை செய்யும்.

குறிப்பாக இந்த வயதில் வரும் சனி, வேலை தொழில் விஷயங்களில் அவருக்கு சில நிர்ப்பந்தங்களைக் கொடுத்து, தேவையற்றவைகளில் அவரைத் தள்ளி, வயதிற்கேற்ற தொழில், சொந்த வாழ்க்கைகளில் சாதகமற்ற பலன்களை தந்து வாழ்க்கை அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கும். முப்பது வயதுகளில் இருக்கும் மனிதருக்கு பொங்கு சனி எனப்படும் இரண்டாம் சுற்று சனி பலன் தராது.

உண்மையில் சற்று விபரம் தெரிந்த இளம்பருவமான இருபது வயதுகளில் இருக்கும்போது நடக்கும் முதல் சுற்று ஏழரைச் சனியை, மங்கு சனி என்று சொல்லி, அடுத்த 50 வயதுகளில் நடக்கும் இரண்டாம் சுற்று சனியை பொங்கு சனி என்று சொல்லலாம். ஐம்பது வயதுகளில் வரும் சனி பெரிய கெடுதல்களை தருவதில்லை. மாறாக நன்மைகளைச் செய்யும்.

சுருக்கமாக கவனிக்க வேண்டியது என்னவெனில், முதல் சுற்று ஏழரைச் சனி நடக்கும்போது சம்பந்தப்பட்ட மனிதருக்கு, வயதிற்கேற்ற மன அழுத்தங்களை, தோல்விகளை, வாழ்க்கையைப் பற்றிய புரிதல்களை சனி கொடுத்திருந்தால் மட்டுமே அது மங்கு சனியாக இருக்கும். விபரம் தெரியாத குழந்தைப் பருவத்தில் வரும் ஏழரைச் சனியை கணக்கில் எடுத்துக் கொள்ளவே கூடாது.

அடுத்த வெள்ளிக்கிழமை தொடரலாம்...

(01-06-2018 மாலைமலரில் வெளிவந்தது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *