adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன ? C-051 – Kaala Sarppa Dhosam Yendral Yenna ?

ஜோதிடத்தில் உள்ள ஏராளமான முரண்பாடுகளில் ஒன்று இந்த கால சர்ப்ப தோஷம் எனப்படும் ஒருவித அமைப்பாகும்.

ஒரு ஜாதகத்தில் ராகு-கேதுவிற்குள் மற்ற ஏழு கிரகங்களும் அடங்குவது கால சர்ப்ப தோஷம் என்று ஜோதிடர்களால் சொல்லப்படுகிறது.

இதுபோன்ற அமைப்பில் உள்ள ஜாதகத்தினைக் கொண்டு பிறந்தவர்கள் 35 வயது வரை கஷ்டப்படுவார்கள் என்றும் அதன் பிறகு ஓஹோவென முன்னுக்கு வருவார்கள் என்றும் பலவிதமான கருத்துக்கள் பல்வேறு ஜோதிடர்களால் எழுதப்பட்டிருக்கின்றன.

ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஜோதிட ஆய்வில் ஈடுபட்டு, பலவிதமான அமைப்புள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஜாதகங்களை ஆழமாகவும், மிக நுணுக்கமாகவும் ஆராய்ந்துள்ள எனக்கு இந்த கால சர்ப்ப தோஷத்தைப் பற்றிய ஆய்வின் முடிவில் கிடைத்த உண்மை என்னவெனில் இப்படி ஒரு தோஷமே இல்லை என்பதுதான்.

உண்மையில் கால சர்ப்ப தோஷம் என்பது மிகைப்படுத்தி கூறப்படும் ஒரு அமைப்புத்தான்.

ஒருவரின் ஆரம்பகால வாழ்க்கை நன்றாக இல்லையா? அதன் காரணத்தை ஜாதகத்தில் உணர முடியவில்லையா? ராகு,கேதுக்களுக்குள் நிறைய கிரகங்கள் அடங்கியுள்ளனவா?  போடு... அதன் தலையில் தூக்கிப் பழியை... என்பதுதான் இந்த விஷயத்தில் நடக்கிறது.

இந்தக் கால சர்ப்ப தோஷத்திலும் ராகுவை முன்னால் கொண்டு அதன்பின் ஏழு கிரகங்களும் அடங்கி இறுதியில் கேது இருப்பது ஒரு அமைப்பு என்றும், கேதுவை முன் நிறுத்தி அதன் பின் அனைத்துக் கிரகங்களும் அடங்கி இறுதியாக ராகு அமர்ந்து ஏற்படும் அமைப்பு என்றும் இரு பிரிவுகளாக இந்த தோஷம் சொல்லப் படுகிறது.

ஜோதிடம் என்பது ஒரு அனுமான சாஸ்திரம் என்பதையும் தாண்டி ஒரு பரிபூரண விஞ்ஞானம்தான் என்பதை உலகிற்கு நிரூபிக்க வேண்டும் என்ற கருத்து முனைப்புக் கொண்டுள்ள நான் எந்த ஒரு யோகத்தையும், தோஷத்தையும் அதனுள் அடங்கியுள்ள சூட்சுமத்தை ஆராய்ந்த பிறகே நம்புபவன் என்பதால் இந்தக் கால சர்ப்ப தோஷம் என்பது இடையில் வந்தவர்களால் சொல்லப்பட்ட இடைச் செருகல் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் கால சர்ப்ப தோஷம் என்ற ஒன்று இல்லவே இல்லை. இதை என்னால் ஏராளமான ஜாதகங்களில் நிரூபிக்க முடியும்.

பிறகு எப்படி இல்லாத ஒன்று ஜோதிடர்களால் சொல்லப்படுகிறது எனில், நமது ஞானிகளால் கிரக மாலிகா யோகம் என்று ஒரு அமைப்பாக விளக்கப்பட்ட ஒரு யோகமே சற்றுத் திரிந்து ராகு-கேதுக்களுக்குள் இந்த யோகம் அமைந்தால் கெடுதல்களைத் தரும் என்று மனம் போனபோக்கில் ஆய்வு நோக்கின்றி விவரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

நான் ஏன் இத்தனை உறுதியாக கால சர்ப்ப யோகத்தை  மறுக்கிறேன் என்றால் இந்த தோஷம் உள்ளவர்கள் 35 வயதுவரை கடுமையான தரித்திர அமைப்பில் இருப்பார்கள் என்றும் அதன் பிறகு நிலைமை தலைகீழாக மாறி ஜாதகர் உச்சத்திற்கு செல்வார் என்றும் சில ஜோதிடர்கள் எழுதி இருக்கிறார்கள்.

இதில் கவனிக்கக் கூடிய முக்கியமான அம்சம் என்னவெனில், ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை ஒரு மனிதன் கஷ்டப்படுவதும், பின்னொரு வயதிற்கு பிறகு அவன் யோகமாக வாழ்வதும் தசா, புக்தி அமைப்பு சம்பந்தப்பட்டதுதானே தவிர ஜாதகத்தில் கிரகங்கள் அமையும் நிலை சம்பந்தப்பட்டது அல்ல.

உதாரணமாக ஒரு மீன லக்னம், மீன ராசி கொண்ட ஜாதகருக்கு கால சர்ப்ப தோஷ அமைப்பு இருந்து, சரியாக 35 வயதில் அவருக்கு அந்த தோஷம் விலகும் போது, எட்டில் ஆட்சி பெற்ற அஷ்டமாதிபதி சுக்கிரனின் தசையும், அதன் பிறகு ஆறில் ஆட்சி பெற்ற ஆறுக்குடைய சூரியனின் தசையும் 59 வயது வரை நடக்குமானால், அவர் 35 வயதிற்கு பிறகு உச்சத்திற்குச் செல்வாரா என்ன?

என்றோ ஒரு ஜாதகத்தில், ஒருவருக்கு இது போன்ற கால சர்ப்ப தோஷ அமைப்பு இருந்து அவர் அந்த ஜாதகத்தில் இருந்த வேறுவித கெட்ட அமைப்புகளாலோ அல்லது தசா புக்தி அமைப்புகளாலோ 35 வயதுவரை கஷ்டப்பட்டு, பின்னர் நன்றாக இருந்ததை பார்த்த யாரோ ஒருவர் எழுதிய இந்த கால சர்ப்ப தோஷத்தை ஆய்வு மனப்பான்மை இன்றி அனைத்து ஜோதிடர்களும் அப்படியே ஏற்றுக் கொண்டு கடுகைப் பூசணிக்காயாக்கிய விஷயமே இந்த காலசர்ப்ப தோஷம்.

அதிலும் லக்னமோ, ராசியோ ராகு-கேதுக்களுக்கு வெளியில் இருந்தாலும் அல்லது ஏதேனும் ஒரு கிரகம் வெளியில் இருந்தாலும் இது தோஷம்தான் என்று அடித்துக் கூறும் மனப்பாங்கில் சில ஜோதிடர்கள் இதற்கு விளக்க உரைகள் எழுதி இருக்கிறார்கள்.

நமது ரிஷிகள் அருளிய மூலநூல்களில் பெரிதாக சொல்லப்படாத இந்த அமைப்பைப் பற்றி ஒவ்வொரு ஜோதிடரும் இது இப்படிச் செய்யும், அது அப்படிச் செய்யும் என்று எழுதியுள்ளது அவர் சொல்லி விட்டார் அப்படித்தான் இருக்கும் என்ற சாய்ந்தால் சாய்கிற பக்கம் சாயும் செம்மறியாட்டுக் கதைதானே தவிர உண்மையை ஆராய்ந்து சொல்லும் நிலை அல்ல.

இன்னும் ஒருபடி மேலாகச் சொல்லப் போனால் இந்த தோஷத்திற்கு எடுத்துக்காட்டாக 35 வயதுவரை கஷ்டப்பட்டார் என்று மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஜாதகமே அதிகம் காட்டப்படுகிறது. இதைப் போன்ற அபத்தம் வேறு எதுவும் இருக்க முடியாது.

அன்றைய காலத்தில் இருந்த இந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர் நேரு. குழந்தையில் இருந்தே ஒரு இளவரசனைப் போல வளர்க்கப்பட்டவர் அவர்.

ஒட்டுமொத்த இந்தியாவிலும் நூற்றுக்கணக்கான கார்களே இருந்த அந்த காலகட்டத்தில், கல்லூரியின் எந்த வாசல் வழியாக வெளியே வருவார் என்பது தெரியாது என்பதால் நான்கு புறமும், நான்கு கார்கள் நேருவுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என்பது வரலாறு.

இந்த அளவுக்கு ராஜ போகத்தில் வளர்ந்தவரை 35 வயது வரை கால சர்ப்ப தோஷத்தினால் கஷ்டப்பட்டார் என்று உதாரணம் காட்டுவது கொடுமை. இது போன்ற ஆய்வுத்தன்மை இல்லாத, மிகைப்படுத்தப் பட்ட சில விஷயங்களால்தான் ஜோதிடத்தின் நம்பகத்தன்மையும் சிலரால் கேள்விக்குறியாக்கப் படுகிறது.

ஜோதிடத்தில் ஒரு பொதுவிதி என்பது ஏறத்தாழ அந்த விதி அமைப்புள்ள பெரும்பான்மையான எண்பது சதவீதம் பேர் அந்த விதி சொல்லும் அமைப்பினை அனுபவிப்பவர்களாக இருந்தால்தான் அது எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விதியாக, யோகமாக, தோஷமாக ஏற்றுக் கொள்ளப்படும்.

உதாரணமாக, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி காலங்களில் மனிதர்கள் கஷ்டப்படுவார்கள், அவர்களுக்கு எதிர்மறையான பலன்கள் நடக்கும் என்பது ஜோதிடத்தின் பொது விதி. இந்த விதி ஞானிகள் அருளியது. என்றும் மாறாதது. அஷ்டமச்சனி என்றாலே அலறுபவர்களை இன்றைக்கும் பார்க்கலாம். இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு ஏழரைச்சனி நடக்கும் போது எத்தகைய அனுபவங்கள் இருந்தன என்பதை நீங்களே அறிவீர்கள்.

ஆனால் கால சர்ப்ப தோஷம் என்பது இப்படி ஒரு நிரந்தர விதிக்குள் அடங்காது. இதுபோன்ற தோஷ அமைப்புள்ள எத்தனையோ ஜாதகர்கள் 35 வயதிற்கு முன் சந்தோஷமாகவும், அதற்குப் பின் தசா புக்தி அமைப்பினால் கஷ்டப்பட்டும் அல்லது வாழ்நாள் முழுக்க நன்றாகவோ, வாழ்நாள் முழுக்க கஷ்டப்பட்டோ இருக்கும் ஏராளமான ஜாதகங்களை என்னால் காட்ட முடியும்.

அதே நேரத்தில் இதுபோன்ற கால சர்ப்ப தோஷ அமைப்பு இல்லாவிட்டாலும் வேறு சில நிலைகளில் ராகுவிடம் அனைத்துக் கிரகங்களும் சம்பந்தப்படும் நிலையில் ராகுவே அந்த ஜாதகத்தின் அனைத்து நன்மை, தீமைகளுக்கும் பொறுப்பேற்பார். ஆனால் அதை கால சர்ப்ப தோஷம் என்று சொல்லக்கூடாது.

உதாரணமாக, ஒரு ஜாதகத்தில் அனைத்துக் கிரகங்களுமோ அல்லது அந்த ஜாதகருக்கு நன்மை தர வேண்டிய கிரகங்களோ, ராகு-கேதுக்களின் நட்சத்திரங்களில் அமர்ந்து, சாரம் கொடுத்த ராகு-கேதுக்கள் சுபத்துவமோ, சூட்சும வலுவோ அடையாமல் பாபத்துவம் மட்டுமே பெற்றிருக்கும் நிலையில் வாழ்நாள் முழுவதுமே அந்த ஜாதகர் சுகப்பட மாட்டார். அதோடு வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து பாக்கியங்களும் அவருக்குத் தாமதமாகவே கிடைக்கும்.

இதுபோன்ற அபூர்வமான சூழ்நிலைகளில், லக்னமும் பெரும்பாலான கிரகங்களும் ராகுவின் திருவாதிரை, சுவாதி, சதயம் மற்றும் கேதுவின் அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் அமர்ந்து தடைகளை ஏற்படுத்தியுள்ளதை நூற்றுக்கணக்கான ஜாதகங்களை ஆய்வு செய்து உறுதிப் படுத்திக் கொண்டிருக்கிறேன்.

இதுபோன்ற நிலையில் சாதகமற்ற பலன்கள் நடப்பதற்கு ராகுவும், கேதுவும் கெடுதல்கள் தரும் அமைப்பில் அந்த ஜாதகத்தில் அமர வேண்டும் என்பதும் முக்கியம்.

சில குறிப்பிட்ட நிலைகளில் ஒரு ஜாதகத்தில் மற்ற ஏழு கிரகங்களும் ராகுவை தொடர்பு கொள்ளும் நிலை ஏற்படலாம். இதுபோன்ற நிலை அமைந்து, லக்னமும் ராகுவால் ஆக்கிரமிக்கப்படும் பொழுது, அந்த ஜாதகருக்கு வாழ்வில் சரியான காலகட்டத்தில் கிடைக்க கூடிய சாதாரண அமைப்புகளான கல்வி, வேலை, திருமணம், புத்திர பாக்கியம் ஆகியவை சரியான சமயத்தில் அமைவதில்லை. அல்லது நிரந்தரமாகவே கிடைப்பதில்லை.

உதாரணத்திற்கு கீழே காட்டப்பட்டுள்ள ஜாதகத்தைக் கவனியுங்கள்.

இந்த ஜாதகத்தில் உள்ள கிரகநிலை 2012-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி ஏற்பட்டது.

 சூ, பு, சந், கே, சுக், குரு,
22.5.2012
செ
ராகு சனி

மேற்கண்ட அமைப்பில் கிரகங்கள் அமர்ந்த அன்று ரோகிணியும், மிருகசீரிடம் நட்சத்திரமும் உள்ளதால் மேற்கண்ட அமைப்பில் பிறக்கும் ஜாதகருக்கு சரியான பருவத்தில் ராகுதசை நடப்பில் வரும்.இதில் சூரிய, சந்திர, புதன், சுக்கிரன், குரு ஆகிய ஐந்து கிரகங்களும் கேதுவுடன் இணைந்து ராகுவைப் பார்க்கும் நிலையில், செவ்வாய் தன் நான்காம் பார்வையாகவும், சனி தனது மூன்றாம் பார்வையாகவும் ராகுவைப் பார்க்கிறார்கள். ஆகவே இந்தக் கிரகநிலையின்படி ஏழு கிரகங்களும் ராகுவோடு சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

இந்த ஜாதகத்தில் ராகு விருச்சிகத்தில் அமர்ந்திருக்கிறார். விருச்சிக ராகு நல்லவர் அல்ல. மேலும் செவ்வாயின் வீட்டில் அமர்ந்து சனியின் பார்வை பெறும் ராகு நன்மைகளைத் தருவதும் இல்லை.

எனவே இதுபோன்ற ஜாதக அமைப்பில் லக்னத்திற்கு நல்ல பாவங்களில் அமராமல், அனைத்துக் கிரகங்களின் பார்வையைப் பெற்று அவர்களை ஆக்கிரமிக்கும் ராகு தனது தசையில் கடுமையான எதிர்மறை பலன்களைச் செய்வார்.

இதுபோன்ற அமைப்புகளில்தான் ராகு, கெடுபலன்களை தனது தசைகளில் தருவாரே தவிர, தனக்கு முன்பின்னாகவோ, கேதுவிற்கு முன்பின்னாகவோ மற்ற கிரகங்கள் அமையும் ஜாதகங்களில் அவர் சரியாக 35 வயது வரை கெடுபலன்களைச் செய்வார் என்பது உண்மையற்றது. நான் மேலே சொன்னபடி ஏதோ ஒரு காலத்தில் பிறந்த ஒருவர், ஜாதகத்தில் இருந்த வேறு சில அமைப்புகளினால் கஷ்டப்பட்டிருக்கலாம். அது எல்லோருக்கும் பொருந்தாது.

ஏப்ரல் 15 - 2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

One thought on “கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன ? C-051 – Kaala Sarppa Dhosam Yendral Yenna ?

  1. வணக்கம் அய்யா
    D.o.b 3-21992 நேரம் விடியற் காலை 4.56am பிறந்தேன்
    திருமணம் தள்ளி போய் கொண்டே இருக்கு.. கால சர்ப்ப தோசம் இருக்குனு சொல்றாங்க அய்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *