Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 180 (27.3.18)

நா.மாணிக்கராஜன், பவானி-1.

கேள்வி :

தந்தையின் தொழிலான செய்தித்தாள் விற்பனையை செய்து வருகிறேன். இந்தத் தொழிலால் கடனாளியாகி விட்டேன். வீட்டை விற்றுக் கடனை அடைத்தும் இன்னும் கடன் இருக்கத்தான் செய்கிறது. தொடர்ந்து இந்தத் தொழிலையே செய்யலாமா? மீண்டும் சொத்துச் சேர்க்க முடியுமா? கடன் நிவர்த்தி ஆகுமா?

பதில் :
 குரு ராகு
22-9-1963, மதியம் 12.38 பவானி
சனி
ல,கே சந்,செ சூ,பு
சுக்

ஜாதகத்தில் பத்தாமிடத்தில் சூரியன் இருந்தால் தந்தையின் தொழிலைச் செய்யலாம். ஜாதகப்படி பேப்பர் மற்றும் புத்தகத்திற்கு காரணமான  பத்துக்குடைய புதன் உச்ச வக்ரமாக இருந்தாலும், குருவின் பார்வையில் இருப்பதால் நீங்கள் செய்யும் தொழிலில் உங்களுக்கு லாபம் கிடைக்கத்தான் செய்யும். இங்கே பிரச்சினை தொழிலில் இல்லை. உங்களிடம்தான் இருக்கிறது.

தனுசு லக்னமாகி குரு ஆட்சி பெற்றதால் மற்றவர்களை நம்பி நம்பி மோசம் போகும் இயல்புடையவராக நீங்கள் இருப்பீர்கள். எவ்வளவு அடித்தாலும் தாங்குவீர்கள். கடந்த 2010 முதல் ஆரம்பித்த நீச சுக்கிரனின் சாரத்தில் அமர்ந்த கேது தசையும், கூடவே நடந்த ஏழரைச்சனியும் உங்களை கடன் பிரச்சினையில் தள்ளி இருக்கும். தற்போது நடக்கும் சுக்கிர தசை சுயபுக்தியான 2020 வரை கடன் தொல்லைகள் நீடிக்கத்தான் செய்யும்.

அடுத்தவர்களை நம்பாமல் இதே தொழிலை நீட்டித்து செய்யுங்கள். இன்னும் இரண்டு வருடங்களில் நிலைமை மாறும். சூரியபுக்தி முதல் கடன்கள் அடைவதற்கு வழி பிறக்கும். இழந்த சொத்தை விட நல்ல சொத்து வாங்க முடியும். பத்தாம் வீட்டில் நீச பங்கமாக சுக்கிரன் இருப்பதால் கெடுதல்களை செய்யாமல் நன்மைகளையே செய்வார்.

எம்.சுகன்யா, சென்னை.

கேள்வி :

கணவர் நன்கு படித்தவராக இருந்தும் இரண்டு மாதங்களாக வேலை இல்லாமல் இருக்கிறார். நிரந்தரமான வேலை எப்போது அமையும்? இவருடையது யோக ஜாதகமா? குழந்தை பாக்கியம் எப்போது?

பதில் :
ரா குரு சூ,சு,
சந் 15-7-1987, அதிகாலை 4.35, சென்னை செவ்
சனி கே
சந் கே
 சனி 6-9-1993, அதிகாலை 2.40, காஞ்சீபுரம் சு,ல
சூ,பு
ராகு செ,கு

 

கணவருக்கு ஆறில் இருக்கும் சனி தசை இன்னும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கும் என்பதால் அவரது 33 வயது வரை வேலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். அதன் பிறகு ஆரம்பிக்க இருக்கும் லக்னாதிபதி புதன் தசை, புதன் லக்னத்தில் ஆட்சியும், திக்பலமும் பெற்று சுக்கிரனுடன் இணைந்து பத்தாமிடத்தில் இருக்கும் ராகுவின் நட்சத்திரத்தில் இருப்பதால் சிறப்பான நல்ல பலன்களை செய்யும். 2019 பிற்பகுதியில் நீங்கள் பெற்றோர் ஆவீர்கள். தகப்பனான பிறகு வாழ்க்கையில் நிலை கொள்ளும் யோகஜாதகம் உன் கணவனுடையது. குழந்தை பிறந்த பின்பு படிப்படியாக வாழ்க்கை நல்ல முன்னேற்றத்துடன் அமையும்.

ஏ.கார்த்திக் குமார், அல்லிநகரம்.

கேள்வி :

குருநாதரின் மாலைமலர் கட்டுரைகள், யூடியூப், வீடியோக்கள் அனைத்தையும் பின்பற்றும் ரசிகன் நான். நீங்கள் அடிக்கடி சொல்வதை போல ராகுதசை ஆரம்பித்ததும் எனக்கு ஜோதிடத்தில் நாட்டம் வந்து விட்டது. ராகுதசை சுயபுக்தியில் வேலை போய்விட்டது. குருபுக்தியில் அவர் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்து கடன், நோய், எதிரி மூன்றையும் கொடுத்துவிட்டார். நடக்கும் புக்தியும் சொல்லும்படி இல்லை. அரசுவேலைக்கு முயற்சித்து வருகிறேன். கிடைக்குமா? கடன் சுமை எப்போது தீரும்? திருமணம் எப்போது?

பதில் :
சந் குரு
சு,ரா 11-12-1989, அதிகாலை 3.23, தேனி கே
பு,சனி சூ,செ

உங்கள் ஜாதகத்தில் ராகு நான்காமிடத்தில் இருந்தாலும் லக்னாதிபதி சுக்கிரனுடன் பதினொட்டு டிகிரிக்கு மேல் விலகி இருப்பதால் நடைபெறும் அஷ்டமச்சனி முடிந்ததற்கு பிறகு யோகம் செய்வார். தசாநாதனும், புக்திநாதனும் சஷ்டாஷ்டகமாக இருந்தால் அந்த புக்தி பலன் தராது எனும் விதிப்படி உங்களுடைய குருபுக்தி ராகுவிற்கு ஆறு, எட்டாக அமைந்ததால் நல்ல பலன்களை தரவில்லை.

பவுர்ணமி யோகத்தில் பிறந்து பத்துக்குடையவன் உச்சமாகி ராசிக்கு பத்தாம் வீட்டை குரு பார்ப்பதால் 2019 பிற்பகுதியில் உங்களுக்கு அரசு வேலை கிடைக்கும். 2020 முதல் கடன் சுமை தீர துவங்கும். லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய், ராசிக்கு எட்டில் சனி, ஏழில் செவ்வாய் என்ற அமைப்பு உள்ளதால் திருமணம் 30 வயதிற்கு பிறகுதான் நடக்கும்.

கே.ரமேஷ், கோவை.

கேள்வி :

ஜோதிடத்தின் சுயம்பான குருவின் பாதங்களுக்கு பல கோடி வணக்கங்கள். இந்த கடிதத்தைக் கூட பிழை இல்லாமல் எழுதத் தெரியாத படிப்பறிவு இல்லாதவன் நான். 16 வயதில் ஊரைவிட்டு வந்து கோவையில் சிறிய சலூன் கடை வைத்திருக்கிறேன். 2013 முதல் தொழிலில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டு இன்னும் மீள முடியவில்லை. மாதம் 500 ரூபாய் கூட சேமிக்க முடியவில்லை. எப்போதும் மனக்குழப்பத்துடன் இருக்கிறேன். நிம்மதி இல்லை. இரண்டு முறை தற்கொலைக்கு முயன்று இருக்கிறேன். திருமணம் நடக்குமா? குழந்தை பாக்கியம் உண்டா? நோய் எப்போது தீரும்? என்ன முறையான பரிகாரம் செய்தால் என் நிலைமை மாறும்?

பதில் :
ராகு
சந் 24-10-1985,
காலை 7.15, உடுமலை
பேட்டை
 குரு
சனி ல,சூ,
பு,கே
சு,செ

தற்கொலை செய்து கொள்வதால் இருக்கும் பிரச்னைகள் தீர்ந்து விடுமா என்ன? செத்தபிறகு போகும் இடத்தில் இதைவிட பிரச்னைகள் இருந்தால் என்ன செய்வது? லக்னாதிபதி சுக்கிரன் நீசமாகி செவ்வாயுடன் சேர்ந்திருப்பதால் எதிலும் தன்னம்பிக்கையின்றி இருக்கிறீர்கள்.

சுக்கிரன் நீசம் என்றாலும் அவருக்கு வலு சேர்க்கும் பனிரெண்டில் அமர்ந்து, பரிவர்த்தனையாகி, நீச குருவின் பார்வையைப் பெற்று, நீசனை நீசன் பார்த்த அமைப்பில் இருப்பதால் வாழ்வின் பிற்பகுதியான நாற்பது வயதிற்கு மேல் எந்தக் குறையும் இல்லாமல் செட்டிலாகி இருப்பீர்கள். அதுவரை போராட்டங்கள் இருக்கத்தான் செய்யும். அடுத்த வருடம் சூரிய புக்தி முடிந்ததும் கடனை அடைக்கும் அளவிற்கு வருமானம் வரும். சேமிக்கவும் முடியும். நோயும் அப்போது தீரும்.

லக்னத்திற்கு இரண்டில் சனி, ஏழில் ராகு, ராசிக்கு எட்டில் செவ்வாய், சுக்கிரன் இணைவு, புத்திரகாரகன் குரு நீசம் என்பது தாமத திருமண அமைப்பு. லக்னாதிபதி சுக்கிரனுக்கான முறையான பரிகாரங்களை மாலைமலரில் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அவற்றை செய்து கொள்ளுங்கள். ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல் நாள் மாலையே ஸ்ரீகாளஹஸ்திக்கு சென்று தங்கி அதிகாலை ருத்ராபிஷேகத்தில் கலந்து கொள்ளுங்கள்.  உடனே திருமணமும் புத்திர பாக்கியமும் கிடைக்கும். வாழ்வின் பிற்பகுதியில் நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.

நான்  அழகில்லாதவளாக இருக்கிறேன்….

எச்.வி.ஷோபா, திருச்சி.

கேள்வி :

தங்களுடைய தீவிரமான ரசிகை என்று சொல்லிக் கொள்வதில் மிகுந்த ஆனந்தமும், பெருமையும் அடைகிறேன். பிறந்ததில் இருந்தே வறுமை, கஷ்டம், தீவிர தாழ்வுமனப்பான்மை, ஆரோக்கியக் குறைவால்  அவதிப் படுகிறேன். சிறுவயதில் முகம் முழுக்க பரு வந்து விகாரமானதால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையினால் கல்லூரிக்கு போகவில்லை. ஒல்லியான உடல் களையில்லாத முகம், பலவீனமான தேகம் என்றே வளர்ந்தேன். தொலைதூர கல்வி சேர்ந்து அதையும் முடிக்கவில்லை. கணக்கும், அக்கவுன்ட்சும் எனக்கு பாகற்காய். தங்களுடைய கணிப்புகளை படிப்பதால் எனக்கு ஜாதகத்தில் புதன் மிகவும் வலுவிழந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். சாதாரண மனக்கணக்கு கூட என்னால் போட முடியாது. எப்படியோ அரசு தேர்வு எழுதி வெற்றி பெற்று அரசுப்பணியில் இருக்கிறேன். திருமணமான நாள் முதல் எனக்கும் கணவருக்கும் ஒத்துவரவில்லை. சதா வாக்குவாதம், சண்டை, பிரச்சினை என்றுதான் போய் கொண்டிருக்கிறது. அவருடைய சுடுசொற்களை கேட்டு, கேட்டு மனம் புண்ணாகிறது. ஒருநாள் கூட அன்பாய், ஆதரவாய் பேசுவதே இல்லை. சதா கேலி, மட்டம் தட்டுதல் தொட்டதற்கெல்லாம் குறை சொல்லுதல், நியாயமானதுக்கு கூட செலவு செய்ய மறுத்தல் என்று அவருடைய சுபாவம் இருக்கிறது. எனக்கும் கோபம் அதிகமாக வருகிறது. எவ்வளவு முயன்றாலும் கோபத்தை தடுக்க முடியவில்லை. இவருடைய குணத்தினாலும், என்னுடைய உடல் பலவீனத்தினாலும் இரண்டாவது குழந்தை வேண்டாம் என்று இருந்தேன். ஆனால் உண்டானது தெரியாமல் கருவுற்ற போது மனஉளைச்சலுக்கு ஆளாகி அவருடைய எதிர்ப்பையும் மீறி கலைத்து விட்டு ஆபரேஷனும் செய்து கொண்டேன். அதற்கு பிறகு அவருடைய டார்ச்சர் அதிகமாகி மறுபடியும் குழந்தை பிறப்பதற்கான ரீ-ஆபரேஷன் செய்து கொண்டேன். ஆனால் இறைவன் குழந்தையை கொடுக்கவில்லை. சரி இருக்கிற குழந்தையாவது நன்றாக வளர்ப்போம் என்றால் அவளுடைய குணமும் கவலையை தருகிறது. சுமாராக படிக்கிறாள். வயதிற்கு மீறிய கோபம் வருகிறது. எரிச்சல்படுகிறாள். சிரிப்பதே இல்லை. எதற்கெடுத்தாலும் எதிர்த்து பேசுகிறாள். இனியாவது அவள் குணம் மாறுமா? அலுவலகத்தில் நேர்மையாக உழைத்தும் நல்ல பெயர் இல்லை. நியாயமாக கிடைக்க வேண்டிய சம்பளமும் கிடைக்கவில்லை. ஆறு மாதங்களாக விரும்பத்தகாத இட மாறுதல்களால் கஷ்டப்படுகிறேன். நினைக்கும் இடத்திற்கு மாறுதல் கிடைக்குமா? மனவேதனை, மனஅழுத்தம் ஆகிவற்றில் இருந்து விடுதலை கிடைக்குமா? அல்லது மீதமுள்ள வாழ்க்கையும் இப்படியேதான் கழியுமா? பதில் தெரியாமல் அவதியுறும் இந்தப் பேதைக்கு வழி காட்டுங்கள்.

பதில் :
பு ல,சந் சனி கே
சு,சூ 9-3-1973, காலை 8.30, கோலார்
 குரு
செ,ரா

உன்னுடைய கடிதத்தைப் படித்ததும் “காலுக்கு செருப்பு இல்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்தேன் காலே இல்லாதவனைப் பார்க்கும் வரை” என்ற சீனப் பழமொழி தான் நினைவுக்கு வருகிறது அம்மா. வாழ்க்கையில் எத்தனையோ விதமான கஷ்டங்களை அனுபவிப்பவர்களுக்கு மத்தியில் பரம்பொருள் உனக்கு ஒரு நிரந்தரமான அரசுவேலையைக் கொடுத்திருக்கிறது. வாழ்வதற்கான அடிப்படை நமக்கு கிடைத்துவிட்டாலே நாம் அனைத்திலும் அதிர்ஷ்டசாலிதான்.

அழகு என்பது நம் மனதில் இருக்கிறது. உடலில் இல்லை. உடல் அழகை விட மன அழகுதான் முக்கியம். உன் கடிதத்தைப் பார்க்கும்போது உன்னுடைய உடல் கெட்டிருப்பதை விட உன் மனம் கெட்டிருப்பதுதான் பளிச் சென்று தெரிகிறது. ஜாதகப்படி நீதான் எதிலும் குறை காண்பவளாக, கடுமையான கோபக்காரியாக இருப்பாய்.

ஒருவரிடம் நீ என்ன கொடுக்கிறாயோ அதைத்தான் உனக்கு அவர் திருப்பித் தருவார். அன்பைக் கொடுத்தால் அன்பு வரும். வெறுப்பைக் கொடுத்தால் வெறுப்புத்தான் வரும். சிறுவயது முதல் நாம் அழகில்லை என்ற தாழ்வு மனப்பான்மையால் உனக்கு யாரைக் கண்டாலும் வெறுப்பு வந்து விட்டது. அதை அப்படியே கணவனிடமும் குழந்தையிடமும் காட்டி விட்டாய். அவர்கள் இருவரும் பதிலுக்கு உன்னை வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஒரு பெண்ணுக்கு அழகே அன்பு மட்டும்தான் அம்மா. அன்பானவளை உலகமே விரும்பும். முதலில் சகலரிடமும் அன்பு செலுத்த ஆரம்பி. உலகமே உன் காலடியில் கிடைக்கும். இந்த தாழ்வு மனப்பான்மையை தூர ஏறி. நீ அழகானவள் என்பதை முதலில் நீ நம்பு. பிறகு உன்னை உலகம் நம்பும்.

கடந்த மூன்று வருடங்களாக உன் மேஷராசிக்கு அஷ்டமச் சனி நடந்ததால் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பாய். அதைவிட மேலாக தற்போது மேஷத்திற்கு அவயோகியான புதன் புக்தி இந்த வருடம் டிசம்பர் வரை நடந்து கொண்டிருக்கிறது. புதன் நீசமடைந்து ஆறாமிடத்தோடு தொடர்பு கொண்டிருப்பதால் உனக்கு குடும்பத்தில் எரிச்சல் வரும் விஷயங்களையே செய்வார். புதன் நீசம் என்பதால்தான் உனக்கு கணக்கும், இப்போது வாழ்க்கையும் கசக்கிறது.

வருடம் முடிந்ததும் நீ விரும்பும் மாறுதல்கள் வரும். கணவனுடன் ஒத்துப் போ. கணவனையும் குழந்தையையும் நேசிக்க ஆரம்பி. அவர்கள் உன் மாற்றத்தை உணர்ந்த பிறகு ஒன்றுக்குப் பத்தாக அதைத் திருப்பித் தருவார்கள். இத்தனை அழகில்லாத நம்மை எப்படி, எதைப் பார்த்து இவர் திருமணம் செய்து கொண்டார் என்று கொஞ்சம் சிந்தித்துப் பார். நீ உண்மையில் அழகானவள் என்பது புரியும். மன அழகே உலகம் மயங்கும் அழகு. நன்றாக வாழ்வாய் அம்மா. வாழ்த்துக்கள்.

1 Comment on Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 180 (27.3.18)

  1. ஐயா எனக்கு வாழ ஒரு வழி சொல்லுங்கள் 3/7/1986 நேரம் 3.10 pm சேலம் ,மேட்டுர் டேம்

Leave a Reply