சனி தரும் நன்மை நிலைகள் C – 039 Sani Tharum Nanmai Nilaigal…

பனிரெண்டு லக்னக்களுக்கும். சனி சுபத்துவம் பெற்றால் தரும் நன்மைகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

மகரம், கும்பம் லக்னங்களுக்கு லக்னாதிபதியாகி நன்மைகளைத் தரக் கடமைப்பட்டவர் சனி. இந்த இரண்டு லக்னங்களுக்கும் அவர் ஆட்சி வலு அடைந்திருந்தால் கூட சுபத்துவமோ, சூட்சும வலுவோ பெற்றிருந்தால் மட்டுமே நன்மைகளைச் செய்வார்.

சுபர் பார்வையின்றி அவர் லக்னத்தில் ஆட்சி பெற்றிருப்பதோ அல்லது உச்சம் பெற்றிருப்பதோ ஜாதகருக்கு நன்மைகளைத் தராது. அதோடு சனி சுக  வாழ்வையும் தர மாட்டார்.

உலகில் உள்ள பணக்காரர்களில் பெரும்பாலோர்கள் சனி நீசமான அமைப்பில் பிறந்து சுபத்துவமோ, சூட்சும வலுவோ பெற்ற ஜாதக அமைப்பைக் கொண்டவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

லக்னத்தில் சனி ஆட்சி பெற்றிருக்கும் நிலையில், குரு ஐந்து, ஒன்பதாம் இடங்களிலிருந்து சனியைப் பார்க்கும் போது ஜாதகருக்கு நல்ல பலன்கள் இருக்கும். ஆயினும் இவ்விரண்டு லக்னங்களுக்கும் குரு ஐந்து, ஒன்பதில் அமரும்போது பகை நிலை பெறுவார் என்பதால் அவரது பார்வை முழுப் பலனை அளிக்காது.

மகரத்திற்கும், கும்பத்திற்கும் சனி உச்சம் பெறும் நிலையில் மேஷத்தில்  குரு அமர்ந்து பார்த்தால் நல்ல பலன்களை அளிப்பார். உச்சம் பெற்ற சனியுடன் கேது இணைந்திருப்பதும் நன்மைகளைத் தரும்.

சனி நேர்வலு எனப்படும் ஆட்சி, உச்சத்தை அடைகையில் குருவின் பார்வை, இணைவு ஆகியவை முதல்நிலை சுபத்துவத்தையும், அடுத்து சுக்கிரனின் பார்வை, இணைவு இரண்டாம் நிலையையும், பின்னர் தனிப் புதன், இறுதியாக வளர்பிறைச் சந்திரன் ஆகியோரின் பார்வை அல்லது இணைவு மூன்றாம் மற்றும்  நான்காம் நிலை சுபத்துவத்தையும் சனிக்கு அளிக்கும். சில நிலைகளில் கேதுவின் இணைவும் அவரைப் புனிதப்படுத்தும்.

மகரத்திற்கு சனி இரண்டில் ஆட்சி பெறுவது நல்ல நிலையல்ல. இந்த அமைப்பினால் தாமத திருமணம், நிம்மதியான குடும்ப வாழ்க்கை அமையாத நிலை போன்றவற்றை சனி செய்வார். சனி இரண்டாம் வீட்டிற்கு அதிபதியாகவே இருந்தாலும் கூட அந்த வீட்டில் அமரவோ, தன் வீட்டைத் தானே பார்க்கவோ கூடாது. தனது வீடாகவே இருந்தாலும் சனியின் பார்வை அந்த வீட்டைக் கெடுக்கவே செய்யும்.

அதேபோல இந்த லக்னங்களுக்கு சனி ஏழில் அமர்ந்து லக்னத்தைப் பார்ப்பதும் லக்னத்தைப் பலவீனப்படுத்தும். மகரத்திற்கு சுபத்துவமற்ற சனி ஏழாமிட ஜல ராசியான கடகத்தில் அமர்ந்து லக்னத்தைப் பார்க்கும் நிலையில் ஜாதகரை குடி அல்லது வேறுவிதமான போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்குவார். கும்பத்திற்கு ஏழில் அமர்ந்து லக்னத்தைப் பார்க்கும் சனி, ஜாதகரை நிலையற்ற குணமுள்ளவராகவும் சந்தேகம், தாழ்வு மனப்பான்மை உள்ளவராகவும் மாற்றுவார்.

கும்பத்திற்கு பதினொன்றில் சனி அமர்ந்து லக்னத்தைப் பார்ப்பது சிறப்பு. மகரத்திற்கு நான்கில் நீசமாகி சுபத்துவமும், சூட்சும வலுவும் அடைந்து லக்னத்தைப் பார்த்தால் ஜாதகரை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்வார்.

மகரத்திற்கு மூன்று மற்றும் ஆறில் சனி அமர்வது லக்னத்தில் இருப்பதை விட சிறப்பைத் தரும். கும்பத்திற்கு நான்கு, எட்டு, பதினொன்றில் இருப்பது மிகுந்த நன்மை அளிக்கும்.

இன்னுமொரு தனித்த நிலையாக சனி ஒரு இயற்கை பாபக் கிரகம் என்பதால் திரிகோண பாவங்களில் அவர் இருக்கக் கூடாது. அதாவது ஐந்து, ஒன்பதாமிடங்களில் சனி இருப்பது ஜாதகருக்கு நன்மைகளை அளிக்காது.

பாபரான சனி திரிகோண ஸ்தானங்களில் இருப்பதை விட நான்கு, ஏழு, பத்து ஆகிய கேந்திரங்கள் மற்றும் அவர் ஸ்தான பலம் பெறும் மூன்று, ஆறு, பதினொன்றாம் இடங்களில் சுப வலுப் பெற்று அமர்ந்திருப்பதும் அவரது தசைகளில் நன்மைகளைத் தரும்.

அடுத்து சுக்கிரனின் ரிஷப, துலாம் லக்னங்களுக்கு சனி யோகாதிபதியாகவும், துலாத்திற்கு பூரண ராஜயோகாதிபதியாகவும் அமைவார். ரிஷபத்திற்கு பாதகாதிபத்தியம் பெற்ற ராஜயோகாதிபதி எனும் அமைப்புப் பெறுவார்.

ரிஷபத்திற்கு பாதகாதிபதியாக அமைவதால்தான் சனி ஆறாமிடத்தில் உச்சம் பெறுகிறார். ஆறில் மறைந்து வலுப்பெறும் இந்த நிலையில் சனி நல்ல யோகங்களைச் செய்வார். உச்ச நிலையோடு சுபத்துவமும், சூட்சும வலுவும் சேர்ந்தால் ஜாதகரை தனது தசையில் தனது காரகத்துவங்களின் மூலம் வாழ்வின் உச்சத்துக்குக் கொண்டு செல்வார்.

அதேநேரத்தில் ரிஷபத்திற்கு ஒன்பதாமிடத்தில் ஆட்சி பெறுவதன் மூலம் ஒன்பதாமிடத்தைக் கெடுத்து தனது பாதகாதிபத்தியத்தை வலுப்படுத்துவார். வேறு வழிகளில் வலுவிழக்காமல், சுபத்துவமும் அடைந்திராத நிலைகளில் தனது தசையில் கொடுத்துக் கெடுப்பார். தசையின் ஒரு பகுதியில் செல்வங்களைக் கொடுத்து தசை இறுதியில் வீழ்ச்சியினை உண்டு பண்ணுவார். அவரது சுபத்துவம், மற்றும் சூட்சும வலு மட்டுமே இப்பலன்களை மாற்றும்.

சனி பத்தாமிடத்தில் இருக்கின்ற நிலையை பார்த்தோமேயானால் இங்கே அவர் ஆட்சி என்பதோடு மூலத் திரிகோண வலுவையும் பெறுவார். ஜீவனாதிபதி தன் வீட்டில் ஆட்சியாக இருக்கிறார் எனும் நிலை சனியிடம் எடுபடாது. இங்கு அமரும் சனி ஜாதகரின் நிரந்தர வேலை, தொழில் அமைப்பைக் கெடுப்பார் என்பதே சரி.

ரிஷப லக்னக்காரர் ஒருவருக்கு சனி பத்தில் ஆட்சி பெற்றிருந்தும் நிரந்தர வேலை தொழில் அமைப்பைத் தந்திருக்கிறார் என்றால் அவர் அங்கே புதனுடன் இணைந்தோ, குருபார்வை பெற்றோ வேறு வழிகளில் சுபத்துவமாகியோ இருப்பார் என்பது உறுதி.

சில நிலைகளில் குருவின் வீடுகளான எட்டு மற்றும் பதினொன்றாம் இடங்களில் சுபத்துவத்தோடு இருக்கும் நிலைகளில், ரிஷபத்திற்கு சனி நன்மைகளைச் செய்வார். இதை விடுத்து வேறு எந்த நிலைகளில் அவர் இருப்பதும் நன்மைகளைத் தராது.

அவரது நட்பு வீடுகள் என்று சொல்லப்படும் லக்னம் மற்றும் இரண்டாமிடமான மிதுனம் ஆகிய இடங்களில் தனித்து சுபர் பார்வையின்றி இருப்பதும் நன்மை தராது. இன்னொரு நட்பு வீடான ஐந்தாமிட கன்னியில் இருப்பது குழந்தைகள் விஷயத்தில் குறைகளைத் தரும்.

துலாம் லக்னத்திற்கு லக்னத்தில் சனி உச்சம் பெற்றால் உயரம் குறைந்த நிலையைத் தருவார். கூடவே ஜாதகருக்கு குறுகிய மனப்பான்மை, சுயநலம், பிடிவாதம் போன்ற குணங்களும் இருக்கும். சுபத்துவமோ, சூட்சும வலுவோ பெற்றால் மட்டுமே இப்பலன்கள் மாறும். இங்கிருக்கும் சனியால் தாமத திருமணம், திருமணத்திற்கு பிறகும் நிம்மதியற்ற வாழ்க்கை இருக்கும்.

துலாத்திற்கு சனி மேஷத்தில் நீசம் பெற்று, ஸ்தான பலம் இழந்து, ஏழாமிடத்தில் அமர்ந்ததால் திக்பலம் அடைந்து, தனித்து பதினொன்றில் அமர்ந்த குருவின் பார்வையைப் பெறுவது உச்சத்தை விட மேலான ஒரு மேன்மையை ஜாதகருக்குத் தரும். குருவும், சனியும் வர்க்கோத்தமம் அடைந்திருப்பது சிறப்பு.

அடுத்து துலாத்திற்கு நான்காம் வீட்டில் அமர்ந்திருப்பது ஒரு வகையில் நன்மையே. இங்கிருக்கும் சனியால் வீடு, வாகனம், தாயார் போன்ற விஷயங்கள் பாதிக்கப்பட்டாலும் சூட்சுமவலு அடைந்திருக்கும் நிலையில் சனிதசை நன்மைகளைச் செய்யும்.

ஐந்தாமிடத்தில் ஆட்சி மற்றும் மூலத் திரிகோண அமைப்பை துலாம் லக்னத்திற்கு சனி பெறுவதாலும், அது திரிகோண ஸ்தானம் என்பதாலும் ஐந்தில் சனி வலுப் பெற்று அமர்வது நன்மைகளைத் தராது. இங்கிருக்கும் சனியால் புத்திர விஷயம் குறைவு படும். குழந்தைகளால் நிம்மதி கெடும். சமயத்தில் குழந்தைகளே கெடும்.

துலாத்திற்கு மூன்று, ஆறு, எட்டு, பனிரெண்டாம் இடங்களில் சுபத்துவம் பெற்று அமரும் சனி தனது தசையில் நன்மைகளைச் செய்வார். அதேநேரத்தில் இந்த நன்மைகளை தனது புக்திகளில் செய்யமாட்டார்.

எந்த ஒரு கிரகமும் தன்னுடைய இயல்பான நன்மை, தீமைகளை தன்னுடைய தசையில் மட்டுமே செய்யும். இன்னொருவருடைய தசையில் தன்னுடைய தனித்தன்மையை எந்த கிரகத்தாலும் காட்ட இயலாது.

அடுத்து மிதுன லக்னத்திற்கு சனி எட்டு மற்றும் ஒன்பதுக்கதிபதியாகி பாக்கியாதிபதி எனும் அந்தஸ்தைப் பெறுவார். இந்த லக்னத்திற்கு அவர் ஐந்தாமிடத்தில் உச்சம் பெறுவாரேயானால் வேறு ஏதாவது ஒரு வகையில் சுபத்துவம் அல்லது சூட்சும வலுவை அடைந்தே தீர வேண்டும். அல்லது வலுக் குறைய வேண்டும்.

ஒரு பாபக் கிரகம் திரிகோண ஸ்தானத்திற்கு அதிபதியாகி இன்னொரு திரிகோணத்தில் அமர்வது கண்டிப்பாக நல்லநிலை அல்ல. இந்த அமைப்பின் மூலம் ஐந்தாமிடத்தின் முக்கிய காரகத்துவமான புத்திரம் தாமதமாகும் அல்லது ஆண் குழந்தைகள் இல்லாத நிலை அல்லது காரகன் குருவும் பலவீனமாகியிருந்தால் குழந்தைகளே இல்லாத நிலை உண்டாகும்.

எட்டாமிடத்தில் அவர் ஆட்சி பெறுவது மிக நீண்ட ஆயுளை ஜாதகருக்குத் தரும். வேறு வழியில் சுபத்துவம் பெற்றிருந்து லக்னாதிபதியும் நல்ல நிலைமைகளில் இருந்தால் ஜாதகர் வெளிநாட்டில் நீடித்து வாழும் அமைப்பைப் பெறுவார். இதற்கு பனிரெண்டிற்கு அதிபதி சுக்கிரனும் ஒத்துழைக்க வேண்டும்.

அடுத்த ஆட்சி நிலையான ஒன்பதாமிடத்தில் சனி ஆட்சி பெறுவது நன்மைகளைத் தராது. இதற்கான காரணத்தை ரிஷப லக்ன விளக்கத்தில் சொல்லியிருக்கிறேன். ஒரு பாபக் கிரகம் திரிக்கோணத்திற்கு அதிபதியாகி அங்கே வலுப்பெறுவது நல்லதல்ல.

சில மூல நூல்களில் திரிகோணாதிபத்தியம் அடையும் பாபர்கள் சுபத்தன்மை அடைந்து நன்மைகளைச் செய்யும் என்று சொல்லப்பட்டிருப்பது உண்மைதான். என்னைப் பொருத்தவரை இது சனிக்குப் பொருந்தவே பொருந்தாது. நடைமுறையில் ஆய்வு செய்து பார்க்கும்போது இந்த உண்மை புரியும்.

திரிகோணாதிபத்தியம் எனப்படும் ஐந்து, ஒன்பதிற்கு அதிபதியாவதால் மட்டுமே பாபக் கிரகங்கள் சுபத்துவம் அடைவது இல்லை. சனியும், செவ்வாயும்  ஒன்பதாமிடங்களுக்கு அதிபதியாவதால்தான் சிம்மத்திற்கும், ரிஷபத்திற்கும் பாதகாதிபதி நிலையை அடைகின்றன என்பதை எனது “பாதகாதிபதி பற்றிய ரகசியங்கள்” ஆய்வுக்கட்டுரையில் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.

சனி நல்லது செய்ய வேண்டுமென்றால் கண்டிப்பாக குருவின் தொடர்பையோ அல்லது வேறுவழிகளில் சுபத்துவமோ, சூட்சும வலுவோ அடைந்தே இருக்க வேண்டும். திரிகோணாதிபத்தியம் அடைவதால் மட்டும் அவர் சுபராகி விடுவதில்லை.

நிறைவாக மிதுனத்திற்கு நான்கு, பத்து, பதினொன்று, பனிரெண்டாம் இடங்களில் சுபத்துவம் பெறும் சனி தனது தசையில் நன்மைகளைச் செய்வார். மற்ற இடங்களில் அவர் இருப்பது ஏதேனும் ஒரு வகையில் சிக்கலைத்தான் தரும்.

( நவ 14 – 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

1 Comment on சனி தரும் நன்மை நிலைகள் C – 039 Sani Tharum Nanmai Nilaigal…

Leave a Reply