Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 167 (26.12.17)

ஜி. பரணி சுந்தர், விருதுநகர்.

கேள்வி :

 

அரசியலில் நுழைந்து வெற்றி அடைய வாய்ப்புள்ளதா? அப்படி இருந்தால் அந்த காலகட்டம் எப்போது? திருமணம் எப்போது நடைபெறும்?

 

பதில்:

சூ,பு

சந்

செவ்

சுக்

ரா

12-5-1983
காலை 11.10
சிவகாசி
 ல
கே குரு  சனி

 

அரசியலில் ஒருவர் வெற்றியை அடைவதற்கு சூரியனின் தயவு தேவை. உங்கள் ஜாதகத்தில் சூரியன் உச்சமாகி பத்தாமிடத்தில் திக்பலம் பெற்றுள்ளதால் உங்களுக்கு அரசியல் ஆசைகள் இருக்கும். அதேநேரத்தில் அடையும் வெற்றியை அனுபவிக்கவோ, தக்க வைத்துக் கொள்ளவோ லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டியது அவசியம்.

 

உங்கள் ஜாதகம் மேம்போக்காக அரசியலில் சாதனைகளை செய்யும் ஜாதகம் போலவும், முன்னாள் முதல்வர் ஒருவரின் ஜாதகம் போலவும் இருந்தாலும் லக்னத்தையும், லக்னாதிபதி சந்திரனையும் ஒருசேர உச்ச சனி பார்ப்பதும், லக்னாதிபதி சந்திரன் தேய்பிறை சந்திரனாக அமாவாசைக்கு அருகில் இருப்பதும், தற்போது கடக லக்னத்திற்கு அவயோகரான ராகுவின் தசை நடப்பதும் சாதகமற்ற அமைப்புகள்.

 

ஆனாலும் சூரியன் திக்பலமோடு அமர்ந்து லக்னத்தை குரு பார்ப்பதாலும், ஊராட்சி மன்றங்களில் கவுன்சிலர், சேர்மன் போன்ற பதவிகளைத் தரும் சனி உச்சமாக இருப்பதாலும், ஜாதகப்படி 2019ல் நடக்க இருக்கும் குருபுக்தியிலும் அதனை தொடர்ந்து வர இருக்கும் சனிபுக்தியிலும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற முடியும். அஷ்டமச் சனி முடிந்துவிட்டதால் அடுத்த வருடம் அக்டோபர் மாதத்திற்குள் திருமணம் நடைபெறும்.

 

ரா. பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர் – 2.

 

கேள்வி:

 

எனது தங்கைக்கு 2015-ல் திருமணம் நடைபெற்று ஆறு மாதகாலம் வாழ்ந்த நிலையில் தற்சமயம் ஒன்றரை வருடமாக பிரிந்திருக்கிறார்கள். பொருத்தம் பார்க்கும்போது தங்கையின் கணவர் ஜாதகத்தை மாற்றி எழுதிக் கொடுத்து விட்டார்கள் என்பது பின்னால்தான் தெரிந்தது. எனது சகோதரி பிடிவாத குணத்துடனும், பொய் பேசும் பழக்கத்துடனும், எதிலும் அலட்சியமாகவும் இருக்கிறார். அவருக்கு இனி வரும் காலம் எவ்வாறு இருக்கும்?

 

பதில்:

 

ஒருவரின் ராசி லக்னத்தோடு சனி தொடர்பு கொண்டாலே நீங்கள் சொன்ன பொய் பேசுதல், பிடிவாதம் போன்ற குணங்கள் இருக்கும். தங்கையின் ஜாதகத்தில் ராசி, லக்னம் இரண்டையும் சனி பார்க்கின்ற அமைப்பு இருக்கிறது. மேலும் தற்போது ஆறுக்குடைய சனியின் தசையும் நடக்கிறது. அதனால்தான் சிக்கல்கள் வந்திருக்கின்றன. ஆயினும் லக்னாதிபதி பரிவர்த்தனையாகி ஜாதகம் வலுவுடன் இருப்பதால் பெரிய கஷ்டங்கள் எதுவும் அவருக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை. 2018 ஏப்ரலுக்குப் பிறகு அனைத்து நிலைமைகளும் சீராகும்.

 

ஏ. பாலன், சென்னை- 13.

 

கேள்வி:

 

அரசு ஒப்பந்ததாரரான 70 வயதாகும் என்னுடைய பணம் கடந்த டிசம்பர் 2011 முதல் பொய்யான காரணத்தால் முடக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு மனு விசாரணையில் உள்ளது. அரசிடம் இருந்து வரவேண்டிய பணம் வருமா? வராதா? கிடைக்குமா? கிடைக்காதா? சமீபகாலமாக வாழ்க்கையே விரக்தியாக உள்ளது. இந்த வயதில் சிவன்கோவிலில் வேலை செய்கிறேன். நல்ல வாக்கினை கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 

பதில்:

 

இப்போது இருக்கும் கடினமான நிலைமை அடுத்த வருடம் முதல் மாறும். ஜூலை மாதத்திற்கு மேல் உங்களுக்கு சாதகமான அமைப்புகள் உருவாகி, 2018 அக்டோபருக்கு பிறகு உங்கள் பணம் முடக்கப்பட்டது தவறு என்று விசாரணையில் முடிவாகும். ஆனாலும் பணம் விடுவிக்கப்பட்டு கையில் கிடைப்பதற்கு இன்னும் ஒரு வருடம் தாமதமாகி 2019-ம் ஆண்டு செப்டம்பருக்கு பிறகு பணம் கையில் கிடைக்கும். நம்பிக்கை இழக்க வேண்டாம்.

 

வி. சுவேதா, செங்கல்பட்டு.

 

கேள்வி:

 

கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறேன். தற்போது எங்களுக்கு தேர்வு  நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுவேனா? கல்லூரிப் படிப்பு எப்படி இருக்கும் ? படித்து முடித்ததும் வேலை கிடைக்குமா? எதிர்காலம் எப்படி ?

 

பதில்:
 சந்

குரு

சனி

சூ,சுக்

செவ்

பு

28-5-2000,
காலை 7.15,
திருச்செந்தூர்
ரா
 கே

கல்விக்கு அதிபதியான புதனின் கன்னி லக்னத்தில் பிறந்த உனக்கு, 21 வயதிற்குப் பிறகு லக்னத்தில் ஆட்சி பெற்ற புதன்தசை நடக்க இருப்பதால் உன்னுடைய எதிர்காலம் எவ்வித சிக்கல்களும் இன்றி மிகவும் நன்றாக இருக்கும். படித்து முடித்ததும் உன் மனதிற்கு ஏற்ற வேலை கிடைக்கும். புதன் வலுத்ததால் நீ கொஞ்சம் புத்திசாலி பெண்ணாகத்தான் இருப்பாய். ஆனால் உன்னை படி, படி என்று தூண்டி விடுவதற்கு பக்கத்திலேயே ஒரு ஆள் இருக்க வேண்டும். இந்த தேர்வில் பாசாகி விடுவாய்.

 

ஆர். செல்வகுமார், சேலம் – 1.

 

கேள்வி:

 

21 வயது தங்கையை திடீரென இழந்து நிம்மதி இல்லாமல் இருந்த நிலையில் எனக்கு ஒரு பெண்குழந்தை பிறந்ததால், தங்கையே பெண்ணாக வந்து பிறந்து விட்டாள் என்று சந்தோஷமாக இருந்தோம். ஆனால் என் இரண்டு வயது பெண் குழந்தைக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய் விடுகிறது. குழந்தைக்கு ஆயுள் தீர்க்கமாக உள்ளதா? குழந்தை நிலைக்குமா? என் மகளின் ஜாதகப்படி எனக்கு ஆயுள் குறைவு என்று இங்குள்ள ஜோதிடர்கள் சொல்லி எனது பெயரை மாற்றிக்கொள்ளச் சொன்னார்கள் அதன்படி பெயர் மாற்றி இருக்கிறேன். இது சரியா? எனக்கு ஆயுள் குறைவா? இந்தக் கடிதம் உங்கள் கையில் சேரும் நேரம் இப்போது இருக்கும் வேலையில் இருப்பேனா என்று தெரியவில்லை. எப்போது நிரந்தர வேலை கிடைக்கும்? இரண்டு வருடத்திற்கு முன்பு என் நண்பன் என்னிடம் 2 லட்சம் கடன் வாங்கி விட்டு இன்னும் திருப்பி தரவில்லை. அவன் அரசுவேலை வாங்கி தருகிறேன் என்று சொல்கிறான். நம்பலாமா? எனக்கு அரசு வேலை கிடைக்குமா?

 

பதில்:

 

குழந்தையின் ஜாதகப்படி லக்னத்திற்கு ஆறாமிடத்தில் சுபத்துவமற்ற ராகு அமர்ந்து, பிறந்தது முதல் ராகுதசை நடப்பதாலும், மனைவிக்கு மேஷ ராசியாகி, அஷ்டமச் சனி நடந்ததாலும், பிறந்தது முதல் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. புதுவருடத்தில் குழந்தைக்கு உடல்நலம் சீராகும். 13 வயதிற்கு பிறகு எவ்வித ஆரோக்கியக் குறைவும் இன்றி குழந்தை நன்றாக இருப்பாள். லக்னத்தை லக்னாதிபதி பார்த்து, எட்டில் சனி, சுக்கிரனுடன் சுபத்துவமாக இருப்பதால் உங்கள் குழந்தை தீர்க்காயுளுடன் இருக்கும்.

 

மகள் ஜாதகப்படி ஐந்து, ஒன்பதுக்குடைய சூரியனும், குருவும் பரிவர்த்தனையாகி, இருவரும் ஆட்சிநிலை பெறுவதால் மகளின் ஜாதகப்படியே நீங்கள் 80 வயதிற்கு மேல் நல்லபடியாக இருப்பீர்கள். பெயர் மாற்றி வைத்தால் ஆயுள் நீட்டிக்கும் என்றெல்லாம் ஜோதிடத்தில் சொல்லப்படவில்லை. உங்கள் ஜாதகப்படி விருச்சிக லக்னமாகி, லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்ற நிலையில், அவரை உச்ச சந்திரன் பார்ப்பது தீர்க்காயுள் அமைப்பு. எனவே ஆயுள் பற்றிய பயமுறுத்தல்களை நம்ப வேண்டாம்.

 

உங்களின் ரிஷப ராசிக்கு இப்போது அஷ்டமச் சனி நடப்பதால் ஆண்டவனே நேரில் வந்து அரசு வேலை வாங்கி கொடுப்பதாக சொன்னாலும் நம்ப வேண்டாம். பணம் கொடுத்தால் திரும்ப வராது. ஏற்கனவே கொடுத்திருக்கின்ற பணத்தை திரும்பக் கேட்கவும், அரசு வேலை அமைப்பு உங்களுக்கு இல்லை. அஷ்டமச் சனி நடப்பதால் என்ன கஷ்டம் வந்தாலும் அனுசரித்து, போங்கள். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளவும். இரண்டு வருடம் கழித்து அனைத்தும் சரியாகும்.

 

எம். எழில் அரசன், மதுரை.

 

கேள்வி:

 

தற்போது 22 வயதாகும் மகளுக்கு இருபத்தி எட்டு வயதில்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று இங்குள்ள ஜோதிடர் சொல்லுகிறார். பொருத்தம் பார்க்க ஜாதகங்களை கொண்டு சென்றாலும் பார்க்க மறுத்து விட்டார். அப்படிப்பட்ட அமைப்பு என் மகள் ஜாதகத்தில் இருக்கிறதா?

 

பதில்:

 

அந்த ஜோதிடர் சொல்வது மிகவும் சரியானது. மகள் ஜாதகப்படி லக்னம், ராசிக்கு இரண்டு எட்டாமிடங்களில் சனி, செவ்வாய் இருப்பதால், இருபத்தி எட்டு வயதில் வர இருக்கும் ராகு தசை, சுக்கிர புக்தியில்தான் திருமணம் நடக்கும். இடைப்பட்ட காலங்களில் உங்கள் மகள் வெளிமாநிலங்களில் வடக்கே வேலை செய்வாள். அதனால் திருமணம் தடையாகும்.

 

களத்திர தோஷம் என்றால் என்ன?

 

அ. பழனிவேல், வலசை அஞ்சல்.

 

கேள்வி:

 

களத்திர தோஷம் என்றால் என்ன? அது எதனால் ஏற்படுகிறது? மாலைமலரில் எனக்கு அளித்த பதிலில் களத்திர தோஷம் இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். எனது களத்திர தோஷம் எப்போது முடிவுக்கு வரும்? இதில் இருந்து விடுபட பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?

 

பதில்:

 

ஜோதிடத்தில் சொல்லப்படும் பலவித தோஷங்களில் களத்திர தோஷமும் ஒன்று. தோஷம் எனும் சம்ஸ்க்ருத வார்த்தைக்கு குற்றம் அல்லது குறை என்று பொருள். களத்திரம் என்றால் கள உதரம் என்ற பொருளுடன் இந்த வார்த்தை ஒருவருக்கு வாழ்க்கைத் துணை அமைவதில் உள்ள குறைகளைக் குறிக்கிறது.

 

ஜாதகத்தில் ஆணுக்கு மனைவியையும், பெண்ணுக்கு கணவனையும் குறிக்கும் களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாமிடத்தில் பாபக் கிரகங்கள் எனப்படும் செவ்வாய், சனி, ராகு,கேதுக்கள் அமர்ந்திருந்தாலோ அல்லது குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கக் கூடிய களத்திர காரகன் சுக்கிரன் அங்கே தனித்து இருந்தாலோ, இது வாழ்க்கைத்துணை பற்றிய குறைபாடு என்ற அர்த்தத்தில் களத்திர தோஷம் எனப்படுகிறது.

 

கெடுதலைச் செய்யும் பாபக் கிரகங்கள் ஏழாமிடத்தில் இருப்பது குற்றம் என்பது தெரிகிறது. ஆனால் சுப கிரகமான சுக்கிரன் இருப்பதும் தோஷம் என்று சொல்கிறீர்களே, என்று கேட்டால், ஜோதிடத்தில் ஒரு காரகன் அந்த காரக பாவத்தில் இருப்பது “காரஹோ பாவநாஸ்தி” எனப்படும் நல்ல நிலை அல்ல என்று ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள்.

 

அதாவது ஒரு பாக்கியத்தை தருபவர் அந்த பாக்கியத்திற்கான வீட்டில் இருக்க கூடாது. இது காரஹோ பாவநாஸ்தி எனப்படும் சாதகமற்ற ஒரு அமைப்பு. அதன்படி வாழ்க்கைத்துணையை கொடுக்கக் கூடிய சுக்கிரன், கணவன்-மனைவியைக் குறிக்கும் ஏழாம் வீட்டில் தனித்து இருப்பதும் களத்திர தோஷம்தான். சனி, செவ்வாய், ராகு-கேது போன்ற பாபக்கிரகங்கள், இருக்கும் வீடு அல்லது பார்க்கும் வீட்டின் பலனைக் கெடுக்கும் அல்லது தாமதப்படுத்தும் என்பதன் அடிப்படையில் ஒருவரின் ராசிக்கோ, லக்னத்திற்கோ இரண்டு, ஏழு, எட்டில், பாபர்கள் இருப்பது தாரதோஷம் அல்லது களத்திர தோஷம் ஆகும்.

 

சனியோ, செவ்வாயோ ஏழு, எட்டாம் இடங்களில் இருக்கும்போது ஒருவருக்கு திருமணம் தாமதமாகும். இவர்களோடு ராகு-கேதுவும் இணையும் பட்சத்தில் “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்” கதையாக திருமணமே நடக்காமல் கூட போகலாம். களத்திர தோஷம் எப்போது முடிவுக்கு வரும் என்று கேட்டால், திருமணம் ஆன அந்த நிமிடத்தில் முடிவுக்கு வரும் என்பதுதான் பதில். பரிகாரம் என்பது இறை வழிபாடு மட்டும்தான். எந்தக் கோவிலில் சென்று வழிபடுவது என்பது தோஷத்திற்கு தகுந்தார்போல் மாறும்.

7 Comments on Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 167 (26.12.17)

  1. நீசன் அம்சத்தில் உச்சனுடன் இனைவு மற்றும் நீசனுக்கு வீடு கெடுத்தவன் அம்சத்தில் உச்சம் இது நீச பங்கமா

Leave a Reply