அடுத்த முதல்வர் ரஜினியா …? – ஒரு ஜோதிடப் பார்வை.

கடந்த சில நாட்களாக ஊடகங்களிலும், இணையத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்று சூடாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பொதுவாழ்வும், அரசியலும் பிரிக்க முடியாத ஒன்று என்ற வகையில், என்றைக்கு ஒருவர் பொதுவில் கருத்துச் சொல்லி, கவனிக்கப்படும் வகையில் பிரபலமாக இருக்கிறாரோ, அன்றே அவர் மறைமுகமாகவேனும் அரசியலில் இருக்கிறார் என்பதே உண்மை.

அதிலும் ரஜினிக்கு ஏற்கனவே ஒரு அரசியல் கட்சியினைப் போல ரசிகர் மன்றமும், ரசிகர்கள் என்ற பெயரில் தொண்டர்களும் இருக்கிறார்கள் என்பதால் அவர் பல்லாண்டு காலமாக தமிழ்நாட்டு அரசியலில் இருக்கிறார் என்பதுதான் சரி.

இங்கே ஜோதிடரீதியாக நான் எடுத்துக் கொள்வது ஏற்கனவே மறைமுகமாக அரசியலில் இருக்கும் ரஜினி, மக்கள் மன்றத்தில் தேர்தல் முறைக்கு வந்து, நேரடி அரசியலின் உச்ச பதவியான முதல்வர் பதவியை அடைவாரா என்பதைப் பற்றியது.

ஒருவர் பிறக்கும் போதே அவர் எதற்காகப் பிறந்திருக்கிறார் என்பது நிச்சயிக்கப்பட்டு விடுகிறது என்பதே வேதஜோதிடத்தின் சாரம். அவரது பிறந்த   நேரப்படி அமையும் கிரக நிலைகளின்படியே ஒருவரின் குண இயல்புகளும், ஆர்வம், ஈடுபாடு போன்றவைகளும் அமைகின்றன.

ஒரு யோக ஜாதகத்தில் எதற்காக அவர் பிறந்தாரோ அந்த இலக்கு நோக்கிய பயணத்தை பரம்பொருளே அமைத்துத் தருகிறது என்பதும் நிதர்சனம். நான் முயற்சி செய்து இதை அடைந்தேன், இந்த வெற்றி என்னால் கிடைத்தது என்று ஒரு மனிதன் சொல்லிக் கொள்வதற்கு இங்கே ஒன்றுமே இல்லை.

தமிழகத்தில் ரஜினி என்பவர் ஒரு மாபெரும் வசீகரத்தன்மை கொண்ட கவர்ச்சியாளர் என்பதும் திரைத்துறையில் அறுபது வயது கடந்தும் அவர் செய்து கொண்டிருக்கும் சாதனைகளும் யாராலும் மறுக்க முடியாதவை. அதேபோல சமீபகாலங்களில் பகுத்தறிவு பூமியாக அறியப்படும் தமிழ்நாட்டில், பகுத்தறிவு பேசி வளர்ந்த நடிகர்களைக் கொண்ட தமிழ்த் திரையுலகில் தன்னை ஒரு பரிபூரண ஆன்மீகவாதியாக வெளிக்காட்டி ஜெயித்தவரும் இவர் ஒருவர்தான்.

அரசியலுக்கு வர ரஜினிக்கு தைரியம் இல்லை என்று சிலரால் விமர்சிக்கப் படுகிறது. தைரியம் என்பது வேறு. ஈடுபாடு என்பது வேறு. எதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ அதை அடைவதில்தான் உங்களுக்கு துணிச்சல் பிறக்கும்.

மன்மத உருவம் கொண்டவர்கள் சினிமாவில் கோலோச்சிய காலகட்டத்தில், மாறுபட்ட கருப்பான உருவத்துடன் துணிச்சலாக, தன்னம்பிக்கையுடன் வந்து வாய்ப்புத் தேடி ஜெயித்துக் காட்டியவர் ரஜினி. அதிலும் ஒரு முரண்பாடாக வில்லனாக வந்து நாயகனாக மாறியவர். எனவே விரும்பும் துறையில் நுழைய தைரியம் இல்லாதவர் இல்லை அவர் .

ஆனால் ஒருவருடைய மனம் எதில் அதிக நாட்டம் கொள்கிறதோ அதில்தான் அவர் ஜெயிப்பதும், தோற்பதும் இருக்கும். அதைக் கணிப்பதில்தான் ஜோதிடத்தின் சூட்சுமமும் அடங்கியிருக்கிறது. அதிலும் முதல்வரைப் போன்ற ஒரு உச்ச பதவி நீங்கள் ஆசைப்பட்டு, திட்டமிட்டு அடைவது அல்ல.

எந்த ஒரு காரியமும் இங்கே பரம்பொருளின் அனுமதியின்றி நடப்பது இல்லை. அனைத்தும் உங்களின் பூர்வ ஜென்ம கர்மவினைகளின்படியே நடக்கின்றன. பேரறிஞர் அண்ணா அவர்களை காலன் அழைத்துச் சென்றிருக்காவிட்டால் கலைஞர் அந்தத் தருணத்தில் முதல்வராகி இருக்க முடியாது. அது திட்டமிட்டு நடந்த ஒன்றல்ல. அந்த நேரத்தில் அந்தப் பதவி கலைஞரை தேடித்தான் சென்றது.

அதைப்போலவே நான்கு வருடங்களுக்கு பிறகு தான் மரணமடைந்து விடுவோம் என்று உணர்ந்து 1983-ல் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். அரசியலுக்கு அறிமுகப் படுத்தவில்லை. உண்மையில் எம்.ஜி.ஆர் முதலில் வேறொரு நடிகையைத்தான் ஜெயலலிதாவின் இடத்திற்கு கொண்டு வந்தார். கொண்டு வரப்பட்டவர் அரசியலுக்கு வருவதில் சில சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன என்று தெரிய வந்த சில நாட்களுக்கு பிறகே அவருக்குப் பதிலாக ஜெயலலிதா அறிமுகப் படுத்தப்பட்டார்.

ஆக எது உங்களுக்கு கிடைக்க இருக்கிறதோ, அது எங்கோ ஒரு இடத்தில் உங்களின் வருகைக்காக காத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஏதோ ஒரு வழியில் அது உங்களுக்கு கிடைத்தே தீரும். உங்களுக்கானதை பரம்பொருள் தக்க தருணத்தில் உங்களுக்கு கொடுத்தே தீரும்.

இன்னொரு நிலையாக ஒரு மாபெரும் கவர்ச்சி என்பது வேறு, அதிகாரத்தை விரும்பும் ஆளுமை என்பது வேறு. மிகப் பெரிய கவர்ச்சியும், ஆசையும் சேருகின்ற ஒரு இடத்தில்தான் ஒரு அரசனோ, ஆளுபவனோ பிறக்கிறான். இந்த அமைப்பை கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஜாதகங்களில் தெளிவாக உணரலாம்.

மிகப் பெரிய ஈர்ப்பாளர்களாக, தங்களை நிரூபித்த தமிழகத்தின் முந்தைய ஆட்சியாளர்களான கலைஞர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஜாதகங்களில் லக்னம் அல்லது ராசிக்கு பத்தாமிடத்திலோ அல்லது பத்தாமிடத்திற்கு அருகிலோ திக்பலம் பெற்ற நிலையில் சூரியனும், சந்திரனும் தங்களுக்குள் கேந்திரங்களில் இருக்கின்ற அமைப்பைக் காணலாம். இது அதிகாரத்தை விரும்புகின்ற ஆளுமை அமைப்பு.

கலைஞர் நடிப்புத் துறையில் இல்லையே, அவருக்கு என்ன கவர்ச்சி இருந்தது என்று அவரைத் தெரியாத இன்றைய தலைமுறையினர் நினைக்கலாம். ஆனால் நடிப்பு என்ற கவர்ச்சியை தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு பேச்சு என்ற வசீகரம் அவரிடம் இருந்தது.

அறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்குப் பிறகு தமிழகமே கலைஞரின் பேச்சுக்கு கட்டுண்டு கிடந்ததை இன்றைய தலைமுறை அறியாது. ஆகவே கலைஞருக்கு நடிப்பு என்ற கவர்ச்சி இல்லாமல் இருந்தாலும் ஒருவரை எதைச் செய்யவும் தூண்டிவிடக் கூடிய, எதிரியையும் ஈர்க்க கூடிய பேச்சுத்திறன் இருந்ததன் காரணமாகவே அவர் முன்னிலைக்கு வந்தார்.

எனவே அதிகார ஆசை கொண்ட ஆளுமையும், மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் ஏதோவொரு வசீகரமும் இணையும்போது மட்டுமே சரித்திரத்தை மாற்றக் கூடிய ஒரு தலைமை தோன்றுகிறது. இதில் அதிகாரம் செய்ய விரும்பும் ஆவேச ஈடுபாடு தலைமைக்கு வர விரும்புபவருக்கு அவசியம்.

எப்போது ஒருவரின் ஈகோ தூண்டி விடப்படுகிறோ அப்போதுதான் அவர் தன்னை மறைந்த ஒரு ஆவேச நிலைக்குச் சென்று, தான் எதற்காக இந்த பூமியில் பிறந்தோமோ அந்த இலக்கை நோக்கி பயணிப்பார்.. லக்னாதிபதி வலுப் பெற்ற ஜாதங்களில் இது நிச்சயமாக நடைபெறும். 1970- களில் எம்.ஜி.ஆருக்கும், 1980- களில் ஜெயலலிதாவிற்கும் இது நடந்தது. அவர்கள் ஜெயித்தார்கள்.

இதே போன்ற ஒரு ஆவேச நிலை 1996-ல் ரஜினிக்கும் உண்டானது. அதனால்தான் மூப்பனார், கலைஞருடன் இணைந்து அவர் அன்று ஆளும் அரசுக்கு எதிராக குரல் கொடுத்தார். ஆனால் ஜாதகப்படி ரஜினிக்கு உச்ச பதவியின் மேல் ஆசையோ, ஈடுபாடோ இல்லாத காரணத்தால் அன்றைக்கு அவரே முதல்வராக முடியாமல் போய்விட்டது.

அன்றைய காலகட்டத்தில் ரஜினிகாந்த் தனி ஒருவனாக களமிறங்கி தமிழகத்தை சுற்றி வந்திருந்தால், எம்.ஜி.ஆருக்கு கூட கிடைக்காத ஒரு மகத்தான வெற்றியை தமிழக மக்கள் ரஜினிக்கு கொடுத்திருப்பார்கள் என்பதை அவரை வெறுப்பவர்கள் கூட ஒத்துக் கொள்வார்கள்.

சரி.. ஜாதகப்படி ரஜினி என்பவர் எப்படிப்பட்டவர்..? சினிமாவில் அவரது சாதனைகளுக்கும், அவரின் ஆன்மீக ஈடுபாட்டுக்குமான ஜோதிடக் காரணங்கள் என்ன..?

ரஜினியின் ஜாதகப்படி, அவரது சிம்ம லக்னத்திற்கு தொழில் ஸ்தானாதிபதியான கலைத்துறைக் காரகன் சுக்கிரன் தன் வீட்டிற்கு எட்டில் மறைந்து, ஒரு இயற்கைச் சுப கிரகம் திரிகோண பாவமான ஐந்தில் இருப்பது நன்மைகளைத் தரும் என்ற அமைப்பில் இருக்கிறார். கேந்திராபத்திய தோஷம் பெற்ற ஒரு சுப கிரகம் தன் கேந்திர வீட்டிற்கு எட்டில் மறைந்தது மிகவும் மேன்மையான அமைப்பு.

அதிலும் சினிமாவிற்குரிய இந்த சுக்கிரன் தன்னுடைய சொந்த நட்சத்திரமான பூராடத்தில் அமர்ந்து, நவாம்சத்தில் ஆட்சியானதும், இன்னொரு சினிமா கிரகமான ராகு,கேதுக்களுக்கு பத்தாமிடத்தில் அமர்ந்ததும் மிக உயரிய அமைப்பு. மேலும் ஜாதகப்படி அவரது தொழில் வீடு ராசிக்கும், லக்னத்திற்கும் சுக்கிரனின் வீடாகவே அமைகிறது. இதுவும் சாதனை புரிய வைக்கும் ஒரு நிலை. எம்ஜிஆர் ஜாதகத்தில் கூட இந்த அமைப்பு இல்லை.

சுக்கிரனின் இந்த அமைப்பால்தான் ரஜினியால் உலக அளவில் திரைத்துறையில் தனி முத்திரையைப் பதிக்க முடிந்தது. இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் தமிழ் நடிகர்களில், ஏன் இந்திய நடிகர்களில், உலக அளவில் அறியப்பட்ட, வரவேற்கப்பட்ட, மற்ற மொழி பேசுபவர்களால் கூட ரசிக்கப்பட்ட ஒரே நடிகர் ரஜினிகாந்த் மட்டும்தான்.

அவரை விட மேம்பட்ட ஒரு திரைச்சக்தியாக அறியப்பட்ட எம்.ஜி.ஆருக்கு கூட இந்த வாய்ப்பு ஏற்படவில்லை. தமிழைத் தவிர பிற இடங்களில் எம்.ஜி.ஆர் அறியப்படாதவர். இதற்கு எம்.ஜி.ஆரின் ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில் சுக்கிரன் நட்பு நிலையில் இருந்தாலும் நவாம்சத்தில் நீசமானதும் ஒரு காரணம்.

சரி… சினிமாவில் சாதிக்க சுக்கிரனின் இந்த அமைப்பு கை கொடுத்த நிலையில்   ரஜினியின் அளப்பரிய, தூய்மையான, ஆன்மீக ஈடுபாட்டிற்கும், அவரது துறவி போன்ற பற்றற்ற மனநிலைக்குமான ஜோதிடக் காரணங்கள் என்ன..?

சாதனை செய்ய வல்ல எந்த ஒரு யோக ஜாதகத்திலும் லக்னம், ராசி, குறைந்தபட்சம் லக்னாதிபதிக்கு குருபார்வை இருக்கும். கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஆகிய மூவரின் ஜாதங்களிலும் உள்ள இந்த அமைப்பு அவர்களை அரசியலில் முதன்மை பெற வைத்தது.

இந்த குருபார்வை நிலை ரஜினிக்கும் இருக்கிறது. ஆனால் அந்த குரு எங்கிருந்து பார்க்கிறார் என்பதும், எந்த நிலையில் இருக்கிறார் என்பதும் ஜோதிடத்தில் மிக முக்கியம்.

மற்ற மூவருக்கும் ஒளியுடன் கூடிய அதிகார அமைப்பில் இருந்து லக்னத்தைப் வலுப் பெற்றுப் பார்க்கும் குருபகவான், ரஜினியின் ஜாதகத்தில், முற்றும் துறந்த மனோநிலை, மற்றும் எதிலும் ஒட்டாத தாமரை இலைத் தண்ணீர் போன்ற உணர்வினையும், அனைத்தும் இருந்தும் அனுபவிக்க விரும்பாத ஒரு துறவு நிலையையும் தரக்கூடிய சனியின் கும்ப வீட்டில் இருந்து பார்க்கிறார்.

இந்த அமைப்புத்தான் “ எதுவாக இருந்தாலும் போடா… ஆண்டவனுக்கு முன்னால் அனைத்தும் துச்சம் ” என்கிற ஒரு மனநிலையை எப்போதும் ரஜினிக்கு கொடுக்கிறது. ஜாதகத்தில் உள்ள இந்த நிலையால்தான் கடந்த பத்தொன்பது வருடங்களாக நடக்கும் சனி தசையில் அவருக்கு அதிகமான ஆன்மீக ஈடுபாடு இருந்து வருகிறது.

லக்னம் எந்த ஆளுமையில் இருக்கிறதோ, அதைச் சுற்றித்தான் உங்களுடைய மனம் இயங்கும். “தெய்வ அருள் எப்போது கிடைக்கும்” என்ற கட்டுரையில் நான் ஏற்கனவே எழுதியுள்ளபடி, கன்னியில் சனியும், கேதுவும் இணைந்து சூட்சும வலுப் பெற்று, குருவின் ஒளிக்கு அருகில் இருப்பதனாலேயே ரஜினி ஆன்மீக எண்ணங்களால் தூண்டப்படுகிறார்.

 ரஜினிகாந்த் ஜாதகம்
ரா
குரு ராசி
சந்
செ
 ல
பு
சுக்
சூ சனி
கே

இதனால்தான் நடக்கும் சனி தசையில் அவருக்கு அபரிமிதமான ஆன்மீக ஈடுபாடும், ஞானிகள் தரிசனமும், மகத்தான உண்மைக்கு அருகில் செல்லுதலும் நடந்தன. கதாநாயகியை கட்டிப் பிடித்து ஆல்ப்ஸ் மலையில் கொஞ்சிக் கொண்டிருந்த போது கூட ரஜினியின் மனம் கயிலைநாதனின் திருப்பாதங்களை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்திருக்கும். அதுவே சனியின் சூட்சும வலு தரும் ஆன்மீக முகம்.

ஆன்மீக உச்ச நிலையை அடைந்த ரஜினியால் அரசியல் உச்ச நிலையையும் அடைய முடியுமா? நாளை பார்ப்போம்….

 (19-5-2017 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது)

2 Comments on அடுத்த முதல்வர் ரஜினியா …? – ஒரு ஜோதிடப் பார்வை.

  1. எப்படி இவ்வளவு துல்லியமாக ரஜினியின் திரையுலக வாழ்க்கையையும்,ஜாதகப்படி அவரின் அரசியல் வாழ்க்கையையும் அக்குவேறு ஆணிவேறாக அலசியுள்ளீர்கள் ஐயா. உங்களின் ஜோதிட ஞானத்தில் மயங்கி என்னையே மறந்து விட்டேன்.அவரின் மனமும் நோகாமல் ஒரு சிறந்த தத்துவமும் ஜோதிட ஞானமும கொண்ட. கட்டுரையை படித்த திருப்தி ஏற்படுகிறது.எனவே அவர் அரசியலுக்கு வராமல் தனது ஆன்மீக பயணித்திலும் தடை ஏற்படுத்திக். கொள்ளாமலும் இருப்பதே புத்திசாலிதனம் என்பதேஉண்மை. அவர் மேலும் மேலும் ஆன்மீகத்தில் ஈடுபட்டு அருள் வாழ்க்கை வாழ்ந்து அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று மீண்டும் பிறவா நிலை என்னும் ஒளி நிலை பெற குருஅருளும் திருஅருளும் துணை நிற்கட்டும்.

    • as per rajni ;s horoscope kethu 2 ragu 8 like mine it will take for anmigam /spritual is a good choice for him , political is not possible if he wants it he may leave in the half way
      choice he has to decide spiritual or politics

Leave a Reply