கேது தரும் நன்மைகள் – C – 064 – Kethu Tharum Nanmaigal…

ஞானக் காரகனான கேது எப்போது நன்மைகளைத் தருவார்? ஆறாமிட கேதுவால் தீமைகளும் உண்டா? ஜோதிட உலகில் இதுவரை எவரும்சொல்லாத விளக்கங்கள்.. குருஜியின் புகழ் பெற்ற ஜோதிடம் எனும் தேவரகசியம் கட்டுரைகள்...

தான் அமரும் பாவத்தைக் கெடுத்து பலன்களை ராகு செய்வதைப் போல இருக்கும் வீட்டைக் கேது கெடுப்பது இல்லை. அமரும் வீட்டை பலவீனமாக்கும் அளவிற்கு அதிகமான பாபத் தன்மையும் கேதுவிற்குக் கிடையாது. ஆகவே திருமணம் மற்றும் புத்திர தோஷங்களைக் கொடுக்கக் கூடிய 2, 5, 7, 8 மிடங்களில் ராகு இருப்பது போன்று கேது கெடுபலன்களைச் செய்வது இல்லை.

ஆயினும் கேது ஒரு பாபக் கிரகம் எனும் அடிப்படையில் மேற்கண்ட பாவங்களில் கேது இருப்பது நல்ல நிலை அல்ல. ராகுவைப் போல ஒரு கடுமையான தோஷத்தைக் கேதுவால் தர இயலாது என்ற அர்த்தத்தில் மட்டுமே இது சொல்லப் படுகிறது.

நமது மூல நூல்களில் செவ்வாயைப் போல கேது பலன் தருபவர் என்று சொல்லப் பட்டிருக்கிறது. இதன்படி செவ்வாய் யோகம் தரும் லக்னங்களான கடகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய சூரிய, சந்திர, குருவின் லக்னங்களுக்கு சுப, சூட்சும வலுவுடன், லக்ன சுபர்களின் தொடர்பு இருக்கும் நிலையில் கேது மிகப் பெரிய நன்மைகளைச் செய்வார்.

அதேபோல செவ்வாயின் லக்னங்களான மேஷம், விருச்சிகம் ஆகிய இரண்டிற்கும் லக்னாதிபதியைப் போல செயல்பட்டு நன்மைகளை மட்டுமே கேது செய்வார். கடுமையான நிலைகளில், லக்னத்தின் 6, 8-க்குடையவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு, மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது மட்டுமே மேற்கண்ட ஆறு லக்னங்களுக்கும் கேது சாதகமற்ற பலன்களைத் தருவார்.

எனினும் என்னுடைய நீண்டகால அனுபவத்தில் கடகம், சிம்மம், மேஷம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்களுக்கு சுபராக மட்டுமே கேது செயல்படுவதை உணர்ந்திருக்கிறேன்.

கேதுவிற்கு விருச்சிகம், கன்னி, கும்பம் ஆகியவை நன்மைகளைத் தரும் இடங்கள் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். சில மூலநூல்களில்  மேஷம் முதல் கன்னி வரையிலான ஆறு இடங்களில் இருக்கும் ராகு நன்மைகளைச் செய்வார் என்றும் துலாம் முதல் மீனம் வரையிலான ஆறு பாவங்களில் இருக்கும் கேது நன்மைகளைச் செய்வார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதன் சூட்சுமம் என்னவெனில், ராகு,கேதுக்கள் இரண்டும் தனித் தனிக் கிரகங்களாகக் குறிப்பிடப்பட்டாலும் அடிப்படையில் இவையிரண்டும் ஒன்றுதான். ஒரே உடலும், உயிரும் கொண்டவைதான்.

சந்திரனின் நிழலால் உண்டாகும் இவற்றின் வளையம் போன்ற சுற்றுப் பாதை வடபாதி, தென்பாதி என இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு ஒன்று ராகுவாகவும் இன்னொன்று கேதுவாகவும் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.

சந்திரனின் சுற்றுக் கோணத்தைப் பொருத்து இந்தப் பாதை பூமியின் சுற்றுப் பாதையோடு சரிசமமாக இல்லாமல் ஏறத்தாழ நான்கு டிகிரி அளவில் விலகி இருக்கிறது.

பூமியின் சுற்றுப் பாதையும், சந்திரனின் சுற்றுப் பாதையும் இணையாக இருந்திருப்பின், ஒவ்வொரு அமாவாசை, பவுர்ணமி அன்றும் கிரகணங்கள் ஏற்படும். இணையாக இல்லாத காரணத்தினால் வடபாதி, தென்பாதி எனப்படும் மேல்,கீழ் நிலைகள்  சந்திரனின் பாதைக்கு ஏற்படுகின்றன.

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி இதில் மேல் எனப்படும் வடபாதி பாதை பாம்பின் தலை எனப்படும் ராகுவானதால் கால புருஷனின் தலை எனப்படும் மேஷம் முதல் ஆறு ராசிகளான கன்னி வரை ராகுவிற்கு வலு என்றும், கீழ்பாதியான வால் எனப்படும் தென்பாதி பாதை கேதுவானதால் கால புருஷனின் வால் பகுதியான மீனம் முதல் துலாம் வரை கேதுவிற்கு வலு என்றும் சொல்லப்பட்டது.

இதன்படி நுணுக்கமாகச் சொல்லப் போனால் எந்த ஒரு லக்னமாக இருந்தாலும் துலாம் முதல் மீனம் வரை கேது இருக்கும் நிலையில் கெடுபலன்களைச் செய்வது இல்லை.

இனி தனித் தனியாக ஒவ்வொரு லக்னத்திற்கும் கேது என்ன பலன்களை அளிப்பார் என்று பார்ப்போமேயானால், மேஷ லக்னத்திற்கு கேந்திரங்கள் எனப்படும் லக்னம் 4, 7, 10-ல் 9-க்குடைய குருவுடன் சேர்ந்து கேள யோகம் எனப்படும் கோடீஸ்வர யோகத்தில் இருக்கும் நிலையில் கேது நல்ல பலன்களைச் செய்வார்.

குறிப்பாக லக்னம் 4, 7-மிடங்களான மேஷம், கடகம், துலாம் ஆகிய இடங்களில் கேது இருக்கும் போது மேஷத்திற்கு மேம்பட்ட நன்மைகள் இருக்கும். 9-மிடமான தனுசில் சந்திரன், சுக்கிரன், சனியுடன் கூடி சூட்சும வலுப் பெற்றிருக்கும் நிலைகளிலும் 11-மிடமான கும்பத்தில் இருக்கும் நிலையிலும் மேன்மையான பலன்களை மேஷத்திற்கு செய்வார்.

ரிஷப லக்னத்திற்கு கேது நன்மைகளைத் தர விதிக்கப்பட்டவர் இல்லை. எனினும் கன்னி, விருச்சிகம், கும்பம் ஆகிய இடங்களில் இருக்கும் நிலையில் ஓரளவிற்கு தொடர்பு கொண்டுள்ள கிரகங்களைப் பொருத்து சாதகமான பலன்களைச் செய்வார்.

11-மிடமான மீனத்தில் இருக்கும் போது குருவின் வலுவைப் பொருத்து வெளிநாடு தொடர்பான நன்மைகள் இருக்கும். ஐந்தாமிடமான கன்னி கேதுவிற்குப் பிடித்த வீடு என்பதால் இங்கே சூரிய, செவ்வாய், சனியுடன் சூட்சும வலுவுடன் இணைந்திருக்கும் நிலையில் தனது தசையில் நன்மைகளைச் செய்வார்.

6-மிடமான துலாத்தில் இருப்பது நன்மைகளைத் தராது. ரிஷப லக்ன நாயகன் சுக்கிரனே அந்த இடத்தின் அதிபதி என்பதாலும், சுக்கிரனுக்கு அந்த வீடு மூலத் திரிகோணம் என்பதாலும் இந்த இடத்தில் கேது இருக்கும் நிலையில் சுக்கிரனின் 6-மிடத்து காரகத்துவங்கள் மேலோங்கி கெடுபலன்கள் ஓங்கி நிற்கும்

மிதுன லக்னத்திற்கும் கேது நல்லபலன்களைத் தர இயலாத நிலையில் நான்காமிடமான கன்னியில் சனியுடனும், 6-மிடமான விருச்சிகத்தில் தனித்தும், 9-மிடமான கும்பத்தில் குரு அல்லது புதனுடன் இணைந்தும் தசை நடத்தும் நிலையில் நற்பலன்கள் இருக்கும்.

ஏழாமிடமான தனுசிலும், பத்தாமிடமான மீனத்திலும் சனியுடன் இணைந்து சூட்சும வலுப் பெற்று இருப்பதும் நன்மை தரும் அமைப்புதான் என்பதால் இதுபோன்ற நிலைகளில் மிதுன லக்னத்திற்கு சுபராக மாறி அவருடைய தசை புக்திகளில் நன்மைகளைச் செய்வார். நன்மைகளைத் தரும் அமைப்பில் கேது இருக்கும்போது இந்த லக்னத்தின் ஆறுக்குடையவரான செவ்வாய் சுப, சூட்சும வலு அடைந்திருக்க வேண்டும் என்பது முக்கியம்.

கடக லக்னத்திற்கு கேது நல்ல நன்மைகளைச் செய்வார். இந்த லக்னத்தின் மூன்றாமிடமான கன்னியிலும், ஐந்தாமிடமான விருச்சிகத்திலும் கேது தனித்தோ குருவுடன் இணைந்து அல்லது குரு பார்வையில் இருக்கும் நிலையிலோ, கேதுவால் நன்மைகள் இருக்கும். எட்டாமிடமான கும்பத்தில் சனியின் தொடர்புகள் ஏற்படாதவரை கெடுதல்களைச் செய்ய மாட்டார்.

ஆறாமிடமான தனுசில் கேது தனித்து இருப்பது நன்மைகளைத் தராது. இது போன்ற அமைப்பில் இந்த லக்னத்தின் ஆறுக்குடையவரான குருவுக்கு தனுசு மூலத் திரிகோணவீடு என்பதால், இருக்கும் வீட்டின் இயல்பைப் பெறக் கூடிய கேது ஆறுக்குடையவனாக மாறி கடன், நோய், எதிரி போன்ற பலன்களைச் செய்வார்.

ஆறாமிடத்துக் கேது எப்போது கெடுதல் செய்வார்?

உப செய ஸ்தானங்களான மூன்று, ஆறு, பதினொன்றாமிடங்கள் ராகு கேதுக்களுக்கு நல்ல இடங்கள் என்று நமது மூல நூல்களில் சொல்லப் பட்டிருந்தாலும் அது ஒரு பொதுவான விதிதான். எல்லா நிலைகளிலும் இந்த மூன்று இடங்களில் உள்ள ராகு,கேதுக்கள் நன்மைகளைச் செய்வது இல்லை.

ஒரு பொதுவிதியோடு பல்வேறு நுணுக்கமான அமைப்புகளைப் பொருத்திப் பார்த்து, கிரகங்களின் செயல்பாட்டைப் புரிந்துகொண்டு பலன் அறிவதில்தான் ஒரு ஜோதிடரின் மேதமை அடங்கியிருக்கிறது.

கடக லக்னத்திற்கு குரு ஒன்பதுக்குடைய பாக்யாதிபதியாக இருந்தாலும் அவர் யோகர் அல்ல. சுபர் மட்டுமே. இரு ஆதிபத்தியமுள்ள ஒரு கிரகத்தின் மூலத் திரிகோண வீடு எதுவோ, அந்த வீட்டின் பலன்களையே அந்தக் கிரகம் முதலில் முன்னிறுத்திச் செய்யும் என்பதால் கடகத்திற்கு ஆறாமிடத்துப் பலன்களைத்தான் குரு முதலில் செய்வார்.அதிலும் ஆறாமிடத்தோடு குரு நேரடியாகத் தொடர்பு கொள்ளும் நிலையில் கெடுபலன்கள் அதிகமாக இருக்கும். குறிப்பாக ஆறாமிடத்தில் குரு ஆட்சி பெறுவது, இரண்டு, பத்தாமிடங்களில் அமர்ந்து ஆறாமிடத்தைப் பார்ப்பது, பனிரெண்டாம் இடத்தில் அமர்ந்திருப்பது போன்ற நிலைகள் கடகத்திற்கு குரு நன்மை தரும்  நிலைகள் அல்ல.

இன்னும் ஒரு நுணுக்கமான கணிப்பாக இரண்டாம் வீடான சிம்மத்தில் குரு இருக்கும்போது அதிநட்பு பெற்று மிக வலுவாவார் என்பதாலும், இரு ஆதிபத்தியங்களில் நல்ல வீடான ஒன்பதாம் வீட்டிற்கு, ஆறில் மறைந்து, கெட்ட வீடான ஆறாம் வீட்டிற்கு திரிகோணத்தில் அமர்ந்து, தனது வீட்டைப் பார்த்து வலுப் படுத்துவதாலும் கடகத்தின் இரண்டாமிடக் குரு தனது தசையில் ஜாதகனை கடன், நோய், எதிரி போன்ற அமைப்புகளில் வாட்டி வதக்குவார்.

இது போன்று குரு சுபத்துவம் பெறும் நிலைகளில், கேது அவரது வீட்டில் அமரும் போது கேதுவும் குருவின் இயல்பையே பிரதிபலிப்பார் என்பதால் நமது மூல நூல்கள் பொதுவிதியாகச் சொல்லும் ஆறாமிடத்துக் கேது நன்மைகளைச் செய்வார் எனும் விதி இந்த இடத்தில் மாறுபாடான பலன்களைச் செய்யும்.

(15-7-2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது) 

5 Comments on கேது தரும் நன்மைகள் – C – 064 – Kethu Tharum Nanmaigal…

  1. குருஜி க்கு வணக்கம்,மிக அற்புதமாகா கேது பலன்ளை குருஜி விவரித்துள்ளார்.

    நான் ஒரு சித்தமருத்துவர்,சித்தர்கள் அருளால் நான் ோதிடம் கற்க ஆரம்பித்துளேன். உங்களின் article நன்றாக உள்ளது.எனது பல சந்தேகங்களை நீக்கியது.

    குருஜி, எனக்கு ஒரு சந்தேகம்.
    கேந்திராதியபத்திய ோஷம் என்றால் என்ன? இரண்டு ஆதிபத்தியங்கள் பெற்ற கிரகங்கள் எதற்காக, எவ்வாறு கேந்திராதிபத்திய ோஷம் அடைகிறது. இவற்றை எனக்கு விளக்குங்கள், நன்றி

  2. Dhanush laknathipathi in rishabam having vakram, varkotamam and rohini 2 Saram. Here laknathipathi is strong or weak?dob jan 02 2013 time6.42am

Leave a Reply