ஜெயா – சசி. ஆளுமையும், தோழமையும்..! – 84

ஜோதிடத்தில் “பூரக ஜாதகம்” என்கிற ஒரு நிலை உண்டு. இதனை துணை செய்யும் அமைப்பு என்று சொல்லலாம்.

வாழ்வியல் விதிகளின்படி ஒருவருக்கு பிறப்பிலிருந்து இறப்புவரை பல நிலைகள் இருக்கின்றன. அதனை குழந்தை, வாலிபன், காதலன், கணவன், தகப்பன், தாத்தா என்று பலவாறு பிரிக்கலாம்.

இந்த பரிணாம அடுக்கில் பெரும்பாலானவர்களுக்கு ஏதேனும் ஒரு முக்கியமான சம்பவத்திற்குப் பிறகு அவர்களது வாழ்க்கையில் ஒரு திருப்பம் வந்திருக்கும். அல்லது மனைவி, மகன் போல ஏதேனும் ஒரு புதிய உறவு வந்த பிறகு பெரிய மாற்றங்கள் இருந்திருக்கும்.

இதனையே சிலர் “இவள் கழுத்தில் என்றைக்குத் தாலி கட்டினேனோ அன்றிலிருந்து நன்றாக இருக்கிறேன்” என்று சொல்லுவார்கள். இன்னும் சிலர் “பையன் பிறந்ததிலிருந்து எனக்கு வளர்ச்சிதான்” என்றோ, “கடைசிப் பெண் பிறந்த பிறகுதான் நான் கோடீஸ்வரனானேன்” என்றோ சொல்லக் கேட்டிருக்கலாம்.

இதுபோன்று புதிய உறவுகள் நம் வாழ்க்கையில் இணையும் போது நமக்கு ஏற்படும் உயர்வான மாற்றங்களையே வேதஜோதிடம் “பூரக ஜாதகம்” என்று சொல்கிறது.

மேற்கண்ட இந்த அமைப்பிற்கு ஒரு நல்ல உதாரணமாக மறைந்த முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா மற்றும் அவரது தோழி திருமதி. சசிகலா ஆகியோரின் ஜாதகங்களைச் சொல்லலாம். இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட ஆழமான நட்பிற்கும், ஒருவருக்கொருவர் கொண்டிருந்த புரிந்துணர்விற்கும், இவர்கள் இருவரின் ஜாதக அமைப்பே காரணம்.

ஒரே லக்னம், ஒரே ராசியைச் சேர்ந்தவர்கள் அல்லது ஒருவரின் ராசி இன்னொருவரின் லக்னமாக அமைந்தவர்கள் ஒருவருக்கொருவர் உதவியாகவும், காதலர்கள் அல்லது நண்பர்களாகவும் இருப்பார்கள் என்பது ஜோதிட விதி.

அதன்படி ஜெயலலிதாவின் ராசியான சிம்மத்தை லக்னமாகக் கொண்டு பிறந்தவர் சசிகலா என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெயலலிதாவின் மிதுன லக்ன அதிபதி கிரகமான புதனின், முதன்மை நண்பரான சூரியனின் சிம்ம லக்னத்தில் பிறந்தவர் சசிகலா. எனவே மிகப்பெரிய ஆளுமையாக விளங்கிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, திருமதி. சசிகலாவிடம் நம்பிக்கை வைத்ததிலும், அவரைத் தனக்கு உண்மையானவராக அருகிலேயே வைத்துக் கொண்டதிலும் வியப்பில்லை.

இவர்கள் இருவரின் ஆழமான நட்பிற்கு ஜெயலலிதாவின் ஜாதகத்தில், சசிகலாவின் லக்னாதிபதியான சூரியனும், ஜெயாவின் லக்னாதிபதியான புதனும் இணைந்திருந்ததும் ஒரு காரணம். இந்த அமைப்பால்தான் இருவரில் ஒருவர் இறக்கும்வரை நீடித்த உறவாக இவர்களது நட்பு இருந்தது.

தனது வாழ்க்கையின் ஆரம்பக் கட்டங்களில் துரோகங்களை மட்டுமே எதிர்கொண்டு வந்த செல்வி. ஜெயலலிதா தனது உடன்பிறவா சகோதரி என்று பகிரங்கமாக திருமதி. சசிகலாவைச் சொன்னதற்கும் மேற்கண்ட கிரகநிலைகள்தான் காரணம்.

இந்த இருவரில் முதலாமவர் ஆளுமைக்கு உதாரணமாகவும், இரண்டாமவர் தோழமைக்கு உதாரணமாகவும் இருந்தார்.

அரசாங்கத்தை இயக்குவதற்கும், அரசில் பதவி வகிப்பதற்கும், தலைமைப் பொறுப்பில் இருப்பதற்கும் சூரியனின் வலுவே காரணமாக அமையும். ஒருவர் ஆட்சி அதிகாரத்தில் நேரடியாகப் பங்கேற்க வேண்டுமானால் அவரது ஜாதகத்தில் ஒளிக்கிரகங்களான சூரியனும், சந்திரனும் தங்களுக்குள் கேந்திர, கோணங்களில் நின்று சிம்மம் வலுப்பெற வேண்டும்.

மேற்கண்ட அமைப்பு இருந்தாலும் சூரியனோ, சந்திரனோ லக்னத்திற்கோ, ராசிக்கோ பத்தாமிடத்தோடு தொடர்பு கொள்ளவோ அல்லது பத்திற்கு அருகில் இருக்கவோ வேண்டும். அதாவது தலைமைக்கு காரகனான சூரியன் திக்பலத்திற்கு அருகில் இருக்க வேண்டும்.

இந்த அமைப்பு இல்லாதவரால் நேரடியாக ஒரு அரசுப் பதவியை வகிக்க முடியாது. அதேநேரத்தில் அதிகாரத்தைக் குறிக்கும் ராசியான சிம்மமும். அதன் அதிபதியான சூரியனும் வலுவாக இருந்தால், அவரால் மறைமுகமாக அதிகாரம் செலுத்த முடியும்.

இது “கலெக்டர் சொன்னது நடக்கும், கலெக்டரின் மனைவி சொல்லாததும் நடக்கும்” என்பதைப் போன்றது. நமது அரசியல் சட்டப்படி பெண்களுக்கு ஆட்சி அமைப்புகளில் 33 சதவீதம் பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்று சட்டம் வந்த பிறகு ஏராளமான பெண்கள் தேர்தலில் வெற்றி பெற்றாலும் உண்மையில் அவர்களது கணவரோ அல்லது குடும்ப ஆண் உறுப்பினரோதான் மறைமுக அதிகாரம் செய்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஜாதகங்களில் எல்லாம் இந்த அமைப்பு இருக்கும்.

நான் மேலே சொன்னதைப் போல சூரியனும், சந்திரனும் எதிரெதிரே கேந்திரங்களில் பவுர்ணமி யோகத்தில் அமைய, சூரியன் பத்தாமிடத்திற்கு அருகில் அமர்ந்து, சிம்மத்தை சூரியனும் குருவும் பார்த்த, நேரிடையாக ஆட்சி அதிகாரம் செலுத்தக் கூடிய ஒரு மாபெரும் ஆளுமையான ஜாதகத்தைக் கொண்டவர் ஜெயலலிதா.

திருமதி. சசிகலாவுக்கு சூரியனும் சந்திரனும் சஷ்டாஷ்டகமாக அதாவது ஆறுக்கு எட்டாக அமைந்தாலும், ராஜ ராசியான சிம்மம் லக்னமாகி, சிம்மாதிபதி சூரியன் ஆட்சி பெற்றதால் நேரிடையாக ஆட்சி செலுத்த முடியாத, அதேநேரத்தில் சிம்மம் வலுப் பெற்றதால் மறைமுகமாக பின்னால் இருந்து அதிகாரம் செலுத்தக் கூடிய அமைப்பைக் கொண்ட ஜாதகம்.

இது போன்ற மறைமுகமாக அதிகாரம் செலுத்தக் கூடிய ஜாதக அமைப்பைக் கொண்ட சசிகலா முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன் ஜெயலிதாவுடன் இணைந்த, அவரைச் சந்தித்த நாள் முதல், அதாவது ஒரு புதிய உறவு பிறந்த நாள் முதல், வேதஜோதிடம் சொல்லும் “பூரக ஜாதகம்” என்ற அமைப்பு வேலை செய்ய ஆரம்பித்து சசிகலாவின் வளர்ச்சி ஆரம்பமானது.

மிக முக்கிய ஒரு விதியாக பூரக ஜாதக அமைப்பின் கீழ் வளர்ச்சியைப் பெறுபவர்கள், துணையான ஜாதகத்தைக் கொண்டவர்கள் அவர்களை விட்டு விலகும் போது அல்லது பிரியும்போது வளர்ச்சி தடுக்கப்படும் ஒரு நிலையை அடைவார்கள்.

“என் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்ததிலிருந்து கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறேன்.” என்று சொல்லுகின்ற தந்தையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். திருமதி. சசிகலாவின் ஜாதகமும் இது போன்ற அமைப்பைக் கொண்டதுதான்.

கீழே இருவரின் ஜாதகத்தையும் கொடுத்திருக்கிறேன்.

இதில் மறைந்த முதல்வர் அவர்களின் ஜாதகத்தின் அதிகாரச் சிறப்புகளை ஏற்கனவே முகநூலில் விளக்கியிருக்கிறேன். ஒரு நேரடியான அதிகாரத்திற்கு உதாரணமான உன்னத ஜாதகம் அது. சூரியனும் சந்திரனும் பவுர்ணமி யோகத்தில் கேந்திரங்களில் அமர்ந்து, மகத்தில் இருக்கும் பூரணச் சந்திரனைக் குரு பார்த்து, பதவியைக் குறிக்கும் லக்னத்திற்கு பத்தாம் அதிபதி மூலத்திரிகோணமும், ராசிக்கு பத்தாம் அதிபதி உச்சமாகியும் உள்ள ராஜயோக ஜாதகம் அது.

ஆனால் சசிகலாவின் ஜாதகத்தில் இந்த அமைப்புகள் பழுதுபட்டிருக்கின்றன. அவரது ஜாதகத்தில் லக்னமோ ராசியோ பலம் பெற்ற குருவின் பார்வையில் இல்லை. ராசி மட்டும் வலுக்குறைந்த சுக்கிரனால் பார்க்கப்படுகிறது. பதவியைக் குறிக்கும் லக்னத்திற்கு பத்திற்குடையவர் நீசமாகி இருக்கிறார். ஆயினும் தலைமைப் பண்பைக் குறிக்கும் சூரியன் லக்னாதிபதியாகி லக்னத்திலேயே வலுவாக ஆட்சி பெற்றிருக்கிறார்.

இதுபோன்ற ஜாதகங்கள் பின்னால் இருந்து ஒருவரை இயக்குபவராகவே அமையும். உண்மையில் கடந்த காலங்களில் ஜெயலலிதாவின் நல்ல திடமான ஒரு சில அரசியல் முடிவுகளுக்குப் பின்னால் நிச்சயம் சசிகலா இருந்திருப்பார். உண்மையில் கட்சிக்கும் ஆட்சிக்கும் உறுதியான நன்மை தரும் சில முடிவுகள் சசிகலாவினுடையதாக இருந்திருக்கும். அவை ஜெயலலிதாவின் ஒப்புதலோடு வெளியிடப் பட்டிருக்கும்.

ஆயினும் பூரக ஜாதக அமைப்பின்படி இவை அனைத்தும், கோடியில் ஒருவருக்கு மட்டுமே அமையும் ராஜயோகத்தைக் கொண்ட செல்வி. ஜெயலலிதா இருக்கும் வரைதான். உண்மையில் ஜெயலிதாவின் ஜாதகம் உயிரோடு இருக்கும் வரை மட்டுமே வலுவாக இருக்கும் ஜாதகம் சசிகலாவினுடையது. அவருக்குப் பின் யோகம் இல்லை.

அதனால்தான் ஜெயலலிதா இறந்ததிற்குப் பிறகு அவருக்கு நடக்க இருக்கும் தசை புக்திகள் பாபக் கிரக தொடர்புள்ளவையாகவே சசிகலாவிற்கு அமைந்திருக்கின்றன. தற்போதைய தசாநாதன் செவ்வாய் ராகுவுடன் இணைந்து சனி பார்வை பெற்றிருப்பதைப் போல அடுத்து நடக்க இருக்கும் தசையின் நாயகன் ராகுவும் செவ்வாயுடன் இணைந்து சனி பார்வையில் இருக்கிறார்.

சனி, செவ்வாயின் தொடர்புகள் ஏற்பட்டாலே ராகு நன்மைகளைச் செய்ய மாட்டார் என்பதை நான் அடிக்கடி எழுதியிருக்கிறேன். மேலும் ராகு சுயமாக நன்மை தரும் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய வீட்டிலும் இல்லை. ராகுவிற்கு வீடு கொடுத்த குருவும் பகைவீட்டில்தான் இருக்கிறார். எனவே அடுத்து நடக்க இருக்கும் ராகுதசையும் சசிகலாவிற்கு சிறப்பானது என்று சொல்வதற்கில்லை.

“அவரோடு போயிற்று அனைத்தும்” என்ற சொல் வழக்கு நம் தமிழில் உண்டு. பூரக ஜாதக அமைப்பிற்கும் இது பொருந்தும்.

சிறைவாச அமைப்பு ஏன்…?

பொதுவாக ராஜயோக அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தாலும் பாபக் கிரக அமைப்புகள் குறுக்கிடும் நேரங்களில் அவயோகங்களும், சோதனைகளும் இருக்கும்.

அதன்படி திருமதி. சசிகலாவிற்கு தற்போது செவ்வாய் தசையில் சுக்கிரன் புக்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தசாநாதனான செவ்வாய் இன்னொரு பாபக் கிரகமான ராகுவுடன் இணைவு பெற்று, மற்றொரு முழுமையான பாபரான உச்சமடைந்த சனியின் பார்வையைப் பெற்றிருக்கிறார். மேலும் பாபக் கிரகங்கள் இருக்கக் கூடாத திரிகோண பாவமான ஐந்தாமிடத்தில் செவ்வாய் இருக்கிறார்.

(இந்த அமைப்பினால்தான் சசிகலாவிற்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது புத்திரஸ்தானமான ஐந்தாமிடத்தில் இருபெரும் பாபக்கிரகங்களான செவ்வாயும், ராகுவும் அமர்ந்து அவ்விடத்தை இன்னொரு பாபியான சனியும் தன் மூன்றாம் பார்வையால் பார்த்து, புத்திரக்காரகன் குருவும் ராகுகேதுக்களுடன் இணைந்ததால் அவருக்குக் குழந்தை பாக்கியம் இல்லை.)

பாபர்களின் சம்பந்தத்தைப் பெற்ற சகோதரக்காரகனான செவ்வாய் தசை ஆரம்பித்ததில் இருந்தே சசிகலாவிற்கு சோதனைகள் இருந்து வந்தன. அதன் உச்சக்கட்டமாக தனக்கு மிகப்பெரும் உயர்வைத் தந்து, தன்னை உடன் பிறவா சகோதரியாக அறிவித்த ஒரு உன்னத சகோதர உறவை அவர் இழந்தார்.

தசாநாதன் செவ்வாய் பாபக்கிரக இணைவைப் பெற்று அவயோகம் தரும் நிலையை அடைந்ததைப் போலவே, புக்திநாதனான சுக்கிரனும் நீசநிலை பெற்று யோகம் தர இயலாத நிலைக்கு ஆளானார். இங்கே புக்திநாதன் சுக்கிரன் சிறைவாசத்தைக் குறிக்கும் பனிரெண்டாம் இடத்தின் அதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் அமர்ந்து சந்திரனின் பார்வையையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜோதிடத்தில் ஒருவருக்கு சிறைவாசத்தைக் குறிப்பவை எட்டு, பனிரெண்டாமிடங்கள் ஆகும். இவருக்கு தற்போது நடைபெறும் புக்திநாதன் சுக்கிரனை, பனிரெண்டாம் அதிபதியான சந்திரன் எட்டாமிடத்தில் இருந்து பார்க்கிறார் என்பதாலும் சிறைவாசம் உறுதியாயிற்று.

இன்னொரு வலுக்கூட்டும் நிலையாக ஒருவருக்கு நடைபெறும் சம்பவங்களுக்கு அன்றைய கோட்சார நிலைகளும் காரணமாக இருக்கும் என்பதும் முக்கிய விதி. அதன்படி அவரது பிறந்த ஜாதகத்தில் செவ்வாயும் ராகுவும் இருக்கும் தனுசு ராசிக்கு கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி முதல் சனி மாறியது முதலே அவருக்கு சாதகமற்ற பலன்கள் நடக்கத் துவங்கின. அதாவது பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் ராகு இருக்கும் இடத்திற்கு சனி வந்ததால் நாடி விதிப்படி முக்கூட்டு பாபக்கிரக அமைப்பு உண்டாகி அவருக்கு தண்டனை உறுதியானது.

சுக் ரா  ல
 சூ
பு
ஜெயலலிதா
24.2.1948
மைசூர்
 சனி
 செவ்
சந்
 குரு  கே
சந்  குரு
கே
சசிகலா
18.8.1954
தஞ்சை
பு
 ல
சூ
 செவ்
ரா
சனி சுக்

5 Comments on ஜெயா – சசி. ஆளுமையும், தோழமையும்..! – 84

    • ஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.

    • Subathuva sootchama valu peratha Saniyin paarvayai petra raagu dasaiyil. Ragu dasai 2012 il mudinthathu guru dasai sani puthi aarambithu 4 naalil jailuku ponaar (guru baathagathipathi sani astamathipathi . Guru baathgathile valuvagum sani astamathayum paarthu valuvootivittargal) athe puthyin 2 maathaam iruppu irukkum munne iranthu vittar. Ithu ivarin katturaiyai vaithu solgiren sariyaa endru avarthaan sollavendum.thavarenil mannikavum.

  1. குருஜி ஐயாவிற்கு வணக்கம்.லக்ணஅதிபதி மறைவு ஸ்தானத்தில் இருந்தால் அதன் பலத்தை இழந்து,ராசியை வைத்துதான் பலன் கூறவேண்டும் என்று சொல்லிருக்கிறீர்கள்.எனக்கு சிம்ம ராசி, சிம்ம லக்னம் சூரியன் பரிவர்த்தனையாகி விருச்சிகத்தில் உள்ள குருவின் பார்வையிலும் புதன் ,சுக்கிரனிடம் இணைந்து12ல் கடகத்தில் உள்ளது அப்போ சூரியன் வலுபெறுமா எனக்கு வேலை எப்போது கிடைக்கும்.(31/07 /1995-8.53 AM) பூரம் நட்சத்திரம்,சிவகங்கை மாவட்டம்.

Leave a Reply