அதிசார சனிப்பெயர்ச்சி யாருக்கு நல்ல பலன் தரும்..?

இன்று ஜனவரி மாதம் 27-ந்தேதி சனிபகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி விருச்சிக ராசியில் இருந்து தனுசுக்கு அதிசாரம் என்ற முறைப்படி மாற இருக்கிறார்.

ஜூன் மாதம் 20 ம் தேதிவரை அவர் தனுசு ராசியிலேயே இருப்பார். பின் வக்கிர நிலையில் மீண்டும் ஜூன் 21 ம்தேதி விருச்சிகத்திற்கு வந்து, சில மாதங்களுக்குப் பிறகு விருச்சிகத்திலிருந்து வெளியேறி அக்டோபர் மாதம் 26 ம் தேதி இரவு நிரந்தரமாக தனுசுக்கு பெயர்ச்சியாவார்.

இந்த மாறுபட்ட நிலைகளில் அக்டோபர் மாதம் 26 ம் தேதி நடைபெற இருக்கும் சனிப் பெயர்ச்சியே முறையான, நிரந்தரமான பெயர்ச்சியாகும். எனவே அன்றைய தினத்திலிருந்தே சனிபகவான் தனுசுக்கு மாறுகிறார் என்று ஜோதிடப்படி கணக்கிடப்படும். இன்றைய அதிசார சனிப்பெயர்ச்சி தற்காலிகமானதுதான்.

அதிசாரம் எனப்படுவது வேகமான இயக்கம் என்கின்ற பொருள்படும். கிரகங்கள் பூமிக்கு அருகில் வரும்போதும், பூமி தன்னுடைய சூரியனைச் சுற்றும் பாதையில் ஒரு வளைவில் திரும்பும் போதும் வக்ரம் மற்றும் அதிசாரம் எனப்படும் சில மாறுதல்களான தோற்றங்கள் பூமியில் இருப்பவர்களுக்கு தெரியும்.

வக்ரம் என்ற சொல்லுக்கு மாறுதலான இயக்கம் என்று அர்த்தம். வக்ரம் அடையும் கிரகங்கள் நாம் பூமியில் இருந்து பார்க்கும் போது பின்னால் போவது போன்ற தோற்றத்தை தருகின்றன. அதிசாரம் எனப்படுவது இதற்கு நேர் மாறாக ஒரு கிரகம் முன்னோக்கிப் போவது போன்ற தோற்றத்தை தருவதாகும்.

உண்மையில் கிரகங்களின் வேகங்கள் ஒருபோதும் மாறுவது இல்லை. இரண்டு ரெயில்கள் ஒரே வேகத்தில் அருகருகே செல்லும்போது ரயிலுக்குள் இருப்பவர்களுக்கு இரண்டுமே நகராமல் நிலையாக இருப்பது போல தோன்றும். அவை விலகும் போது பின்னோக்கியோ அல்லது முன்னோக்கியோ செல்வது போன்ற தோற்றம் தெரியும். இது போன்றதுதான் இந்த வக்கிரம், அதிசாரம் போன்ற நிலைகளும்.

சனி பொதுவாக ஒரு ராசியில் இரண்டரை வருடங்கள் இருப்பார். சில நேரங்களில் வக்கிரம், அதிசாரம் போன்ற நிலைகளால் அவர் கூடுதலாக ஒரு ராசியில் சில மாதங்கள் இருப்பது உண்டு. அதுபோன்ற நிலை இப்போது தனுசு ராசிக்கும், விருச்சிக ராசிக்கும் ஏற்படுகிறது.

கடந்த 2014 டிசம்பர் மாதம் ஜென்மச்சனியாக விருச்சிக ராசிக்குள் சனிபகவான் நுழைந்து ஏறத்தாழ இரண்டு வருடங்கள் முடிவடைந்த விட்ட நிலையில் அவர் இன்னும் ஆறு மாதங்களுக்கு மட்டுமே விருச்சிகத்தில் இருக்க முடியும்.

 

ஆனால் உண்மையான சனிப்பெயர்ச்சி இந்த வருடம் அக்டோபர் மாதம் 26-ந் தேதிதான் நடைபெறுகின்ற நிலையில் சனி விருச்சிக ராசியில் மூன்று வருடங்கள் இருக்கின்ற நிலை பெறுவதால், இந்த கூடுதலான மாதங்களில் அவர் அதிசாரம் எனப்படும் முன்னோக்கி செல்லும் நிலையில் தனுசு ராசிக்கு சென்று பின்னர் மீண்டும் ஜூன் மாதம் 21-ம்தேதி விருச்சிகத்திற்கே திரும்புவார்.

இந்த நிலை மீண்டும் சமப்படுத்தப்பட்டு, அவரது நிலையான மாறுதல் அக்டோபர் மாதம் 26-ம் தேதி நடந்து அன்றைக்கு நிரந்தரமாக தனுசுக்கு பெயர்ச்சி ஆவார். எனவே அக்டோபர் மாதம் நடக்க இருக்கும் பெயர்ச்சியே உண்மையான சனிப்பெயர்ச்சியாக இருக்கும்.

முறையான இயக்கமோ, அதிசார முறையோ, நிரந்தரமோ, தற்காலிகமோ, பூமியில் உள்ளவர்களின் பார்வைத் தோற்றத்தின்படி, சனி, தனுசு ராசிக்கு சென்று விடுவதால் கடந்த சில வருடங்களாக விருச்சிக ராசிக்கு இருந்து வந்த துயரங்கள் இன்றுமுதல் விலக இருக்கிறது. இனிமேல் விருச்சிகத்திற்கு ஜென்மச்சனி கொடுத்த வேதனையான அனுபவங்கள் இருக்காது.

அதேபோல கடந்த இரண்டு வருடங்களாக மேஷராசிக்காரர்கள் அஷ்டமச் சனி அமைப்பால் வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகளிலும், சொந்த வாழ்க்கையிலும் பின்னடைவான ஒரு கால கட்டத்தை சந்தித்தீர்கள். அவை அனைத்தும் நீங்கி இனிமேல் மேஷத்திற்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டு.

துயரங்கள் நீங்குகின்ற ராசிகள் விருச்சிகமும், மேஷமும் என்றால் இந்த அதிசாரப் பெயர்ச்சியின் மூலம் நன்மைகளை அடைகின்ற ராசிகள் கும்பம், கடகம், துலாம் ராசிகளாக இருக்கும்.

துலாம் ராசிக்கு ஏழரைச்சனி முழுவதுமாக முடிந்து சனிபகவான் நன்மைகளையும் உதவிகளையும் தர இருக்கின்ற மூன்றாமிடத்திற்கு மாறுகிறார். இது துலாத்திற்கு அதிர்ஷ்டம் செய்கின்ற அமைப்பு. அதேபோல கும்பத்திற்கு பதினொன்றாம் இடமான லாபஸ்தானத்திற்கு செல்கிறார். இதன்மூலம் கும்பத்தினர் செய்யும் முயற்சிகள் அனைத்தும் பலிதமாகி அவர்களுக்கு லாபங்கள் உண்டு.

கடகத்திற்கு கடன், நோய், எதிர்ப்பு இவைகளை ஒழிக்கக் கூடிய ஆறாமிடத்திற்கு சனி மாறுகிறார். இதன் மூலம் கடகத்தினர் கடனில்லாமல் வாழக்கூடிய ஒரு அமைப்பு உண்டாகிறது. ஏற்கனவே இருந்து வந்த கடன்களை அடைக்கும் அளவிற்கு நல்ல பணவரவு கடகராசிக்கு இனிமேல் கிடைக்கும்.

ரிஷபத்திற்கு இந்த பெயர்ச்சியால் அஷ்டமச் சனி அமைப்பு உண்டாகிறது. ரிஷப ராசிக்கு சனியே பூரண யோகாதிபதி என்பதால் சனியால் கெடுபலன்கள் ஒருபோதும் ஏற்படாது. இப்போது நடப்பது அதிசார பெயர்ச்சி என்பதாலும் ரிஷபத்தினர் கவலைப்பட ஒன்றுமில்லை.

தனுசுக்கு ஏழரைச்சனியின் நடுப்பகுதியான ஜென்மச்சனி அமைப்பும், மகரத்திற்கு ஏழரைச்சனி துவங்குகின்ற அமைப்பும் உண்டாகிறது. இந்த இரண்டு ராசிக்காரர்களும் வேலை, தொழில் அமைப்புகளில் கண்ணும் கருத்துமாகவும், அகலக்கால் வைக்காமலும், புதியவைகளை தொடங்காமலும் இருப்பது நல்லது. குறிப்பாக இவ்விரு ராசி இளைஞர்கள் எதிலும் நிதானமாக, பெரியவர்கள் சொல்லைக் கேட்டு நடக்க வேண்டும்.

மற்ற ராசிக்காரர்களான மிதுனம், சிம்மம், கன்னி, மீனம் ஆகியோருக்கு சாதகமற்ற பலன்கள் எதுவும் நடக்காது. அவர்களுக்கு சனியால் தீமைகள் எதுவும் இல்லை. குறிப்பாக சிம்மத்தினருக்கு இனிமேல் வேலை தொழில் போன்ற அமைப்புகளில் முன்னேற்றம் இருக்கும்.

அதிசாரம் எனப்படும் இந்த சனியின் நகர்வு திருக்கணிதப்படி மட்டுமே நடக்கிறது. வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிபகவான் இன்னும் விருச்சிக ராசியிலேயே ஜென்மச்சனியாக நிலை கொண்டிருக்கிறார்.

வாக்கியப் பஞ்சாங்கங்கள் பிழையானவை. கிரகங்களின் உண்மை இருப்பு நிலையை அவை சொல்லவில்லை என்பதை அடிக்கடி எழுதி வருகிறேன். பொதுவாக அனைத்து பெயர்ச்சிகளிலும் வாக்கிய, திருக்கணித பஞ்சாங்கங்களுக்கு இடையே வித்தியாசங்கள் உண்டு. இவற்றில் சனி விஷயத்தில் அதிகமான வித்தியாசங்கள் ஏற்படும்.

எந்தவிதமான பஞ்சாங்கமாக இருந்தாலும் அவற்றை வெளியிடுபவர்கள் கிரகங்களின் அருகில் போய் நின்று கொண்டு அதன் இயக்கத்தை கண்டுணர்ந்து குறிப்பது இல்லை. இதற்கென சில கூட்டல், கழித்தல் முறைகள் இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் ஒரு மூலச் சமன்பாடு என்ற ஒன்று இருக்கிறது. அதை ஜோதிடப்படி சித்தாந்தம் என்று சொல்லுவோம்.

அதன்படி முந்தைய ஆண்டுகளில் சனி இந்த இடத்தில் இருந்தது, பூமி இங்கே இருந்தது. இந்த வருடம் சனி இவ்வளவு நகர்ந்திருக்கிறார், பூமி இவ்வளவு தூரம் பயணித்திருக்கிறது. எனவே சனி, பூமியில் இருந்து இவ்வளவு தூரம் இருக்கிறார் என்பதை மூலச் சமன்பாட்டின் தொடக்கத்தை வைத்து கணக்கீட்டு முறையிலேயே வாக்கிய, திருக்கணித, பஞ்சாங்க கர்த்தாக்கள் கிரக நிலையை அறிவிக்கிறார்கள்.

இதில் வாக்கிய பஞ்சாங்கத்தில் ஆதியில் ஏற்பட்ட சிறு வித்தியாசங்கள் திருத்தப்படாமல் கூடிக் கொண்டே போய், அதாவது நூற்றாண்டுகளுக்கு முன்பு நிமிடக் கணக்கில் ஆரம்பித்த ஒரு வித்தியாசம் இன்றைக்கு ஒவ்வொரு வருடமும் கூடிக் கொண்டே போய் நிமிடம், மணியாகி, மணி நாளாகி, நாட்கள் மாதங்கள் என்ற நிலையில் வந்து நிற்கிறது.

இவைதான் திருக்கணிதத்திற்கும், வாக்கியத்திற்கும் கிரகநிலைகள் மாறுபடுவதற்கான காரணம். சமன்பாடுகளின் மூலங்களில் மட்டுமே கிரக வித்தியாசத்தை திருத்த முடியும் என்பதால் இதை எப்படி நேர் செய்வது என்ற குழப்பத்தில் வாக்கியப் பஞ்சாங்கள் தெளிவற்ற ஒரு நிலையில் இருக்கின்றன.

சில ஜோதிடர்கள் வாக்கியம் ஞானிகள் அருளியது. திருக்கணித முறைகள் சமீபத்தில் உருவாக்கப்பட்டது. எனவே ஞானிகள் உருவாக்கிய வாக்கியத்தை மாற்றியமைப்பதற்கு யாருக்கும் அருகதை இல்லை என்று தவறாக நினைக்கிறார்கள்.

உண்மையில் வாக்கியத்தை விட திருக்கணிதமே காலத்தால் முற்பட்டது. திருக்கணிதமே பழமையானது. ஜோதிடத்தின் ஆதி பிதாமகர்களான ஆரியபட்டர் வராகமிகிரர் போன்ற ஞானிகள் உபதேசித்தது திருக்கணித முறையைத்தான்.

நமது வானவியல் சாஸ்திரத்தின் ஆதிஞானிகளில் ஒருவரான ஆரியபட்டர் தன்னுடைய பெருமைமிகு நூலான சூரியசித்தாந்தத்தின் முதல் ஸ்லோகத்திலேயே தான் பிரம்மாவின் வழித்தோன்றல் எனவும் இரண்டாவதில் மயன், நம்முடைய மேலான இந்துமதத்தின் ஆதிநாயகனான சிவம் எனும் சூரியனை நோக்கித் தவமிருந்து இந்த பிரபஞ்சத்தின் சூட்சுமங்களையும், சூரியனைச் சுற்றி வரும் கிரகங்கள் எந்த இடத்தில் இருக்கின்றன என்பது போன்ற விவரங்களையும் தெரிந்து கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். இந்த மயன்தான் மேற்குறிப்பிட்ட பிரபஞ்ச ரகசியங்களை நாரதர் உள்ளிட்ட ஏழு ரிஷிகளுக்கும் தெரியப் படுத்தினார் என்றும் ஆரியபட்டர் தெளிவாகச் சொல்கிறார்.

13-ம் நூற்றாண்டு வரை ஆரியபட்டரின் திருக்கணித முறையே நம்முடைய பாரதத்தில் இருந்து வந்தது. 13-ம் நூற்றாண்டுக்குப் பிறகே தவறான வாக்கிய முறை இங்கே கையாளப்பட்டது. ஆரியபட்டரை அடுத்து வந்தவரான வரருசி அன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப தன்னுடைய வாக்கிய சித்தாந்தத்தை வெளியிட்டார். இந்த வாக்கியத்திலும் காலத்திற்கேற்ப மாறுதல்களை செய்து கொள்ளவும் சொன்னார்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் கிரக இருப்பில் ஏற்படும் மாறுதல்களை மாற்றிக் கொள்ள ஞானிகள் நம்மை அனுமதிக்கவே செய்திருக்கிறார்கள். ஆனால் வரருசியின் வாக்கிய சித்தாந்தம் அவ்வப்போது திருத்தப்படாமல் விடப்பட்டதால் இன்றைக்கு திருத்தவே முடியாத ஒரு தவறான நிலையில் வந்து நிற்கிறது.

விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா திருக்கணிதப்படியான கிரக இருப்புகளை மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளது. உண்மையைச் சொல்லப் போனால் நாசாவிற்கே விண்வெளி சமன்பாடுகளில் மூலக்கணிதங்களை அளித்தது திருக்கணித முறைகள்தான்.

வாக்கியத்திற்கும், திருக்கணிதத்திற்கும் உள்ள முரண்பாட்டை இன்னும் துல்லியமாக ஆராயப் போவோமேயானால், பூமி ஒரு வருடத்தில் சூரியனைச் சுற்றி வரும் நிரூபிக்கப்பட்ட துல்லியமான கால அளவான 365 நாட்கள், 6 மணி, 9 நிமிடம் என்பதை, வாக்கியங்களில் 3 நிமிடத்தை கூட்டி 365 நாட்கள், 6 மணி, 12 நிமிடம் என கணக்கிடுவதால் வித்தியாசம் வருகிறது.

தங்களுடைய கணிப்புகள் தவறுவதை உணர்ந்து வாக்கிய பஞ்சாங்க தயாரிப்பாளர்கள் தங்கள் முறையின் ஆதார கர்த்தரான வரருசியின் மூல முறையில் கணிப்பதை இப்போது கைவிட்டு விட்டனர். இது கிட்டத்தட்ட வாக்கிய முறை தவறு என்பதை ஒத்துக்கொண்டதற்கு சமம்தான்.

ஆனால் பலநாள் தவறை ஒரே முறையில் திருத்துவது எப்படி என்பதுதான் தற்போது பெரிய குழப்பத்தில் உள்ளது. இதுபோன்ற குழப்பங்களினால் சனிப்பெயர்ச்சி சில சமயம் இரண்டு பஞ்சாங்கங்களிலும் மூன்றரை மாத வித்தியாசம் வர ஆரம்பித்து விட்டது. எனவே அனைவரும் கிரக இருப்பின் உண்மையான நிலைமையை கூறுகின்ற திருக்கணித முறைக்கு மாறி அதனைக் கடைப்பிடிப்பது மட்டுமே இதற்கு ஒரு தீர்வாக இருக்கும்.

இந்த குழப்பங்களால் பாதிக்கப்படுவது ஜோதிடம் அறியாத பொதுமக்கள் தான்.   நட்சத்திர இறுதி நேரங்களில் பிறக்கும் ஒரு குழந்தைக்கு இரண்டு பஞ்சாங்கங்களும் வேறு வேறு நட்சத்திரத்தை சொல்லும் போது சாதாரண பொது மக்கள் ஜோதிடத்தையே குறை சொல்லும் நிலைமை ஏற்படுகிறது.

தவறான கணிப்பால் வாக்கிய பஞ்சாங்கப்படி சில நேரம் ஜாதகரின் லக்னமே மாறி விடுகிறது. இது சாஸ்திர துரோகம். இதை மாற்ற அனைத்து ஜோதிடர்களும் துல்லியமான கிரக இருப்பை சொல்லும் திருக்கணித பஞ்சாங்கங்களை மட்டுமே பின்பற்றுவது நல்லது.

மற்ற மாநிலங்களில் வாக்கியமா? திருக்கணிதமா?
எது நடைமுறையில் உள்ளது?

கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் இந்தியாவில் இருக்கும் வான சாஸ்திர நிபுணர்கள், பஞ்சாங்க கணிதர்கள் ஆந்திர மாநில திருப்பதியில் ஒன்று கூடி இனி இந்தியாவில் திருக்கணித அடிப்படையில் மட்டும்தான் பஞ்சாங்கங்களை வெளியிட வேண்டும். திருக்கணிதமே சரியானது மற்றும் துல்லியமானது என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

அதையொட்டி இப்போது தமிழ்நாட்டை தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் திருக்கணித முறை மட்டுமே பின்பற்றப்படுகிறது. உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் தவறு என்று தெரிந்தும் வாக்கிய பஞ்சாங்கங்கள் பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நமது பக்கத்து மாநிலங்களான கேரளத்திலும், ஆந்திரத்திலும் கூட திருக்கணித முறைப்படிதான் கோவில் திருவிழாக்கள், ராகு-கேது, குரு, சனி ஆகிய பெயர்ச்சிகள் நடத்தப்படுகின்றன. வாக்கியப் பஞ்சாங்கத்தை கோவில்களில் பின்பற்றும் முறை தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற மாநிலங்களில் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது.

( ஜனவரி 27 – 2017 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

7 Comments on அதிசார சனிப்பெயர்ச்சி யாருக்கு நல்ல பலன் தரும்..?

 1. ஐயா வணக்கம், நான் தனுசு ராசி,பூராடம் நட்சத்திரம்,மீன லக்னம் புதன்/சுக்ரன்,மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் ராகு,துலாமில் சனி,விருச்சகத்தில் செவ்வாய் கேது,தனுசில் குரு சந்திரன்…22/04/1984சித்திரை10,5:30am
  நீங்கள் கூறும் மேற்கண்ட பலன் இந்த ஜாதகத்திற்கு பொருந்துமா.ஏனெனில் தொழில் தொடங்கும் முயற்சியில் உள்ளேன்

  • வணக்கம்
   இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும்.
   ஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
   வணக்கம்
   தேவி
   ADMIN

 2. Excellent enlightening to interested highly educated academicians. Pl keep it up and let us get rid of VAAKIA PACHANGAM soon in Tamilnadu also thus save innocent
  Horoscope believing common public
  Pl keep highlighting this Vaakiapanchanga anomaly repeatedly in face book and Tweeter so many will learn and avoid usage of Vaakiapanchangam in future. Thanks

 3. Name: Sathia Bama
  DOB: 25/Nov/1973
  Time: 6:00 am
  Rasi: Vrichigam
  Lagnam: Vrichigam
  Star: Anusham

  Kindly suggest my professional status in tamil.

Leave a Reply