சுபர் அசுபர் அமைந்த சூட்சுமம்…. – 36

சென்ற வாரம் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் இருக்கும் சுக்கிரன் புதன் சந்திரன் மற்றும் பூமிக்கு வெளியே இருக்கும் செவ்வாயின் தூரங்களையும் அதன் ஒளிப் பிரதிபலிப்பு நிலைகளையும் விளக்கிய நிலையில் இந்த வாரம் குருபகவான் மற்றும் சனி பகவான் இருவரின் தூரம் மற்றும் ஒளி பிரதிபலிப்பு நிலைகளைப் பற்றிப் பார்ப்போம்…..


சூரியமண்டலக் கிரகங்களிலேயே மிகப் பெரிதானவர் குருபகவான்தான். அவர் சூரியனைச் சுற்றி வர சுமார் பனிரெண்டு வருடங்களை எடுத்துக் கொள்கிறார்.

ஜோதிட சாஸ்திரத்தில் முதன்மைச் சுபர் என்று போற்றப்படுபவரான குருபகவான் சூரியனிலிருந்து ஏறத்தாழ 77 கோடியே 80 லட்சம் கி.மீ தூரத்தில் இருக்கிறார். இது செவ்வாய் இருக்கும் தூரத்தை விட மூன்று மடங்கிற்கும் மேலானது என்பது குறிப்பிடத் தக்கது.

குருபகவான் நம் பூமியிலிருந்து தோராயமாக ஒரு நிலையில் 62 கோடி கி.மீ. தூரத்தில் இருக்கிறார். இவ்வளவு தூரத்தில் இருந்தாலும் குருவின் ஒளி நம்மை வந்தடைவது 10 என்ற எண் அளவில்…! அதாவது 33.3 சதவிகிதம் ஆகும்.

குருகிரகம்தான் சூரியமண்டத்திலேயே மிகப்பெரிய குறிப்பிடத்தக்க கிரகம். 1979 ல் அனுப்பப்பட்ட வாயேஜர் விண்கலமும், 1989 ல் அனுப்பப்பட்ட கலிலியோவும் குருவை ஆராய்வதற்காகவே அனுப்பப்பட்டன.

இருப்பினும் இவை அனைத்திலும் முக்கியமானது என்ன தெரியுமா..?

சூரியமண்டலக் கிரகங்களிலேயே குரு மட்டுமே சூரியனிடமிருந்து தான் பெறும் ஒளியை இருமடங்காகத் திரும்பப் பிரதிபலிக்கிறது.

இது நவீன விஞ்ஞானத்தில் இப்போது நிரூபிக்கப்பட்ட விஷயம். சர்வதேச விஞ்ஞானிகளை தற்போது குழப்பத்தில் ஆழ்த்துவது குருவின் இந்த இருமடங்கு பிரதிபலிப்பு விஷயம்தான். இது ஏன், எப்படி நிகழ்கிறது என்று இதுவரை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

கிரகங்களின் பார்வை என்பதே அவற்றின் ஒளிவீச்சுத்தான் என்பதை நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். “குரு பார்க்கக் கோடி நன்மை” எனப் பெயர் பெறக் காரணமான அவரது பார்வை ஏன் சிறப்பாகக் சொல்லப்படுகிறது என்பதன் காரணம் இப்போது உங்களுக்குப் புரியும்.

வானத்தில் வெறும் கண்ணால் பார்க்க இயலும் கிரகங்களில் மிகப் பிரகாசமாக நமக்குத் தென்படுபவை குருவும், சுக்கிரனும் மட்டும்தான். தான் பெறும் ஒளியை இருமடங்காகத் திரும்பப் பிரதிபலிக்க முடிவதால்தான் நினைத்துப் பார்க்க முடியாத தூரத்தில் இருந்தும் குருவால் மிகப் பிரகாசமாக ஒளிர முடிகிறது.

அடுத்ததாக…

சனிக்கிரகம் குருவிடமிருந்து இருமடங்கு தூரத்தில் உள்ளது. அதாவது சூரியனிடமிருந்து 143 கோடி கி.மீ. தூரத்தில் இருக்கிறது. குருவிற்கு அடுத்து மிகப் பெரிய கிரகம் சனி. அதோடு மிகக் குறைந்த எடை உள்ள ஒரு வாயுக்கிரகமும் சனிதான்.

நீரின் அடர்த்தியை விட சனியின் எடை குறைவு. அதாவது சனியை விட மிகப் பெரிய கடலில் அதனை தூக்கிப் போட்டால் சனிகிரகம் அதில் மிதக்கும்.

சனியின் ஒளி அளவு நம்மை வந்தடைவது வெறும் எண் 1 என்ற அளவில்தான். மேலும் தன்னைத்தானே வெறும் பத்துமணி நேரத்தில் சுற்றிக் கொள்ளும் சனி, சூரியனைச் சுற்றி வர சுமார் முப்பதுவருடங்களை எடுத்துக் கொள்கிறது. இதனுடைய ஒளி அளவு சதவிகிதம் வெறும் 3.3 மட்டும்தான். கிட்டத்தட்ட ஒளியே இல்லை எனும் அளவு என்றும் கூடச் சொல்லலாம்.

இந்த ஒளியளவு மற்றும் தூர அளவுகளின்படி பார்த்தோமானால்….

நம் பூமிக்கு மிக அருகில் 4 லட்சம் கி.மீ.தூரத்தில் இருக்கும் சந்திரனுக்கு 16 என்ற அளவும்,

சூரியனுக்கு 11 கோடி கி.மீ. தூரத்திலும், நம்மிலிருந்து ஏறத்தாழ 4 கோடி கி.மீ. தூரத்திலும் (சில நிலைகளில் அதிகமான தூரமாக மாறுபடும்) இருக்கும் சுக்கிரனுக்கு 12 என்ற அளவிலும்,

சூரியனுக்கு 6 கோடி கி.மீ. தூரத்திலிருக்கும் புதனுக்கு 8 என்ற அளவிலும், நினைத்துப் பார்க்க இயலாத வெகுதூரத்தில் இருந்தாலும் தான் பெறும் ஒளியை இரண்டு மடங்காக பிரதிபலித்து நம் பூமிக்கு அனுப்பி நம்மை பாதிக்கும் குருவிற்கு 10 என்ற எண்ணும் மகரிஷி காளிதாசரால் தரப்பட்டிருக்கின்றன.

குருகிரகம் ஒளியை இருமடங்காகப் பிரதிபலிக்கிறது என்பது சமீபத்தில்தான் நவீன கருவிகளைக் கொண்டு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப் பட்டது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இதை நமது ரிஷிகள் எந்த கருவிகளின் துணையுமின்றி கண்டு பிடித்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது நமது இந்திய வேத ஞானிகளின் மெய்ஞான அனுபவங்களைப் பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை..

கிரகங்களின் ஒளியைப் பிரதிபலிக்கும் அளவையும் அவை இருக்கும் தூரத்தையும் பொறுத்தே நமது ஞானிகளால் சுபக் கிரகங்கள் மற்றும் அசுபக் கிரகங்கள் என்று இரு பிரிவுகள் அமைக்கப்பட்டன.

ஒளியை அதிகமாக பூமிக்குத் தரும் கிரகங்களின் செயல்பாடுகள் (காரகத்துவங்கள்) மனிதனுக்கு நன்மையைத் தருவதாக இருக்கின்றன என்றும், ஒளியைக் குறைவாகத் தரும் கிரகங்களின் செயல்பாடுகள் மனிதனுக்கு நன்மை தருவதில்லை எனவும் அறியப்பட்டு அதன் மூலம் கிரகங்களின் தனித்தனி காரகத்துவங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனை நான் இன்னொரு உண்மையாலும் விளக்குவேன்…

அதாவது சூரியனிடமிருந்து ஒளியை சிறிது சிறிதாகப் பெற்று வளரும் வளர்பிறைச் சந்திரன் சுபராகவும், பௌர்ணமி பூரணச்சந்திரன் முழுச் சுபராகவும், ஒளியை படிப்படியாக இழக்கும் தேய்பிறை மதி பாபராகவும் முழுக்க ஒளி இல்லாத அமாவாசை சந்திரன் முழுமையான பாபராகவும் நமது கிரந்தங்களில் சொல்லப்பட்டிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இது ஒன்றே கிரகங்களின் ஒளிஅளவை வைத்தே சுபர் அசுபர் எனப் பிரித்தறியப் பட்டன என்பதை நிரூபிக்கும்.

ஆகவே, நாம் பிறக்கக் காரணமான, நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஒளியையே, கதிர்வீச்சின் அளவையே, அதைப் பிரதிபலிக்கும் தன்மையையே கிரகங்களின் சுப, அசுபத் தன்மையை, நிர்ணயிக்கும் சக்தியாக மகரிஷிகள் அளவிட்டிருக்கிறார்கள்.

அதாவது…..

 • 78 கோடி கி.மீ.க்கும் அதிகமான தூரத்தில் இருந்தும், சூரியனிடமிருந்து பெறப்படும் ஒளியை உள்வாங்கி அதை இருமடங்காக பிரதிபலித்து 33.3 சதவிகித ஒளித்தன்மையை பூமிக்குத் தருபவராக குருபகவான் இருப்பதினால் அவர் சுபக்கிரகங்களில் முதன்மைச் சுபராக அமைந்தார்.
 • ஒளித்தன்மையில் அதிகமான 40 சதவிகிதத்தைக் கொண்டவராக இருந்தும், சூரியனிடமிருந்து வெறும் 11 கோடி கி.மீ தூரத்திலும், பூமிக்கு மிக அருகே சுமார் 4 கோடி கி.மீ.தூரத்திலும் (மாறுதலுக்குட்பட்டது) சுக்கிர பகவான் இருப்பதால் தூரத்தில் இருந்து ஒளி அளவை அதிகமாக தருபவரின் சக்தியே முதன்மையானது என்பதின் அடிப்படையில், சுபகிரகங்களில் குருவுக்கு அடுத்து இரண்டாமவராக சுக்கிரன் ஆக்கப்பட்டார்.
 • மேலும் சுக்கிரன் பூமிக்கு உட்சுற்றுக் கிரகமாகவும், குருபகவான் வெளிச்சுற்றுக் கிரகமாகவும் நேர் எதிர் நிலைகளில் இருப்பதினாலேயே இருவரும் சுபர்களாக இருந்தாலும், அதிலும் இரு பிரிவுகளாக ஆக்கப்பட்டு அசுரகுரு, தேவகுரு என்ற இரு வேறு எதிர் நிலைக்கு ஆளாக்கப்பட்டனர். அதாவது இவர்கள் இருவரும் பூமிக்கு நேர் எதிர் எதிர் நிலைகளில் எப்பொழுதுமே இருப்பார்கள்.
 • மூன்றாவதாக சூரியனிடமிருந்து மிக அருகே சுமார் 6 கோடி கி.மீ தூரத்தில் இருந்தாலும் ஒளித்தன்மையில் 8 என்கிற எண் அளவையும், 26.7 என்ற சதவிகிதத்தையும் உடைய புத பகவான் (பூமியிலிருந்து ஏறத்தாழ 9 கோடி கி.மீ. ) மூன்றாவது சுபராக அமைந்தார்.
 • நான்காவதாக சூரிய ஒளியை 16 என்ற எண்ணிலும், மிக அதிக அளவாக 53.3 என்ற சதவிகிதத்திலும் பிரதிபலித்தாலும், பூமிக்கு மிக அருகில் வெறும் நான்கு லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் சந்திரன் இருக்கும் காரணத்தால் நான்காவது சுபராக அமைந்தார்.
 • மேலும் அவருக்கு ஒளியை வைத்தே வளர்பிறை, தேய்பிறை போன்ற நிலைகளும் அமைந்ததால், ஒளியுடன் கூடிய வளர்பிறைச் சந்திரன் மட்டுமே சுபரானார். ஒளியை இழக்கும் தேய்பிறைச் சந்திரன் பாபர் ஆனார்.

இனி பாவகிரக வரிசையைப் பார்ப்போமானால்….

 • சூரியனிடமிருந்து 23 கோடி கி.மீ தூரத்திலும், பூமிக்கு அருகில் சுமார் 8 கோடி (மாறுதலுக்கு உட்பட்டது) கி.மீ தூரத்திலேயே செவ்வாய் பகவான் இருந்தாலும் குரு, சுக்கிரன், புதன் ஆகியோரை விட மிகக் குறைந்த ஒளி அளவான 6 என்ற எண்ணிலும், பூமிக்கு கிடைக்கும் மற்ற கிரக ஒளி அளவுகளை விடக் குறைந்த வெறும் 20 சதவிகித அளவைத் தருபவராகவும் செவ்வாய் இருப்பதினால், பாவராக ஆகி, பாவர்களில் இரண்டாவதாக அமைந்தார்.
 • அடுத்து சனிபகவான் சூரியனுடைய ஒளியைப் பெற முடியாத தூரத்தில் அதாவது 143 கோடி கி.மீ. க்கு அப்பால் இருந்து தான் பெறும் ஒளியை பூமிக்கு பிரதிபலிக்க முடியாத நிலையில் ஒளி அளவு எண் வெறும் 1 எனவும், சதவிகிதம் மிகவும் குறைவாக 3.3 என்றாகி உயிருக்கும் மனிதனின் சுக வாழ்க்கைக்கும் ஆதாரமான ஒளியைத் தர முடியாத சூழலில் முதன்மைப் பாவர் ஆனார்.

இதுவே நமது மகரிஷிகள் சுப அசுபக் கிரகங்களை வரிசைப் படுத்திய சூட்சுமம் ஆகும்.

இதன்படி பார்த்தோமானால் நமக்குத் தேவையான ஆத்ம ஒளியான சூரியனின் ஒளியைப் சரியாக பிரதிபலிக்க இயலாத தூரத்தில் இருக்கும் இருள் கிரகமான சனிபகவான் நமக்கு ஒளியைத் தர முடியாத காரணத்தினால்தான் முழுப்பாபர் என்று ஞானிகளால் நமக்கு அடையாளம் காட்டப்பட்டார்.

அடுத்த வாரம் சனி பகவானைப் பற்றிய இன்னும் சில நுணுக்கங்களைப் பார்க்கலாம்…..

சூரியன் அரைப்பாபர் என்று சொல்லப்பட்டது ஏன்?

ஜோதிடத்தின் அடிநாதமே பூமி மையக்கோட்பாடுதான் என்பதையும், இதை நவீன விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதையும் சிலவாரங்களுக்கு முன் சொல்லியிருந்தேன்.

அதன்படி ஜோதிடத்தில் சிலநிலைகளில் சூரியன் என்ற வார்த்தையை பூமி என்று மாற்றிப்போட்டால் சில விஷயங்கள் உங்களுக்குப் பிடிபடும். சில புரியாத விஷயங்கள் தெளிவாகும்.

இன்னும் தெளிவாக சொல்லப் போனால் சூரியனின் ஒளியளவுகளில் ஒருபோதும் ஏற்றத்தாழ்வு உண்டாகாத நிலையில் சூரியன் உச்சம் என்று நம்மால் சொல்லப்படும் சித்திரை மாதத்தில் சூரியனின் தகிக்கும் ஒளியை நாம்தான் உணருகிறோம். ஆனால் சூரியன் நிலையானது. அதன் ஒளியளவு எல்லா மாதங்களும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளது.

சூரியனின் ஒளியைப் பெறும் பூமியின் நிலை மாறுவதாலேயே கோடையில் வெப்பம் கூடுதலாக நமக்குத் தெரிகிறது. அதே போல ஐப்பசி மாதம் சூரியன் நீசம் என்றால் சூரியன் எங்கும் ஒடி ஒளிந்து கொள்ளவில்லை. அது அங்கேதான் இருக்கிறது. சூரிய ஒளியைப் பெறும் பூமியின் நிலைதான் மேகமூட்டங்களால் மாறி சூரிய ஒளியைப் பெற முடியாமல் போகிறது.

இந்த நிலையை சூரியனின் அரைப்பாபர் நிலையோடு பொருத்திப் பார்த்தோமேயானால் நமது பூமி சூரிய ஒளியைப் பெறும் விஷயத்தில் ஒரே நாளில் இரண்டு நிலைகளாக அமைவதால் அதாவது ஒரேநாளில் பூமி சூரிய ஒளியைப் பெற்று பகலாகவும் அதேநாளில் ஒளியை இழந்து இரவாகவும் இருப்பதால் சூரியன் நிலையாக இருக்க நாம் அதன் ஒளியை உணரும் நிலை மாறுவதால் பூமியின் நிலையை ஒட்டி சூரியன் அரைப்பாபராகவும் மீதி சுபராகவும் சொல்லப்பட்டார். இதுவே சூரியனுடைய சுப அசுப சூட்சுமம்.


(அக் 15 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

6 Comments on சுபர் அசுபர் அமைந்த சூட்சுமம்…. – 36

 1. Excellent explanation You have beautifully mixed astrology with Astronomy and have proved that our sages are really great scientist/ Astronomers.
  You made it clear that Astrology is based on sound astronomial principles

 2. விஞ்ஞானமும்,மெய்ஞானமும் இணைத்து அழகாக அற்புதமாக பதிவினை வெளியிட்டுள்ளீர்கள்.இப்பதிவிற்கு வானவியலையும்,சோதிடவியலையும் அழகாக இணைத்து பகிர்ந்துள்ளீர்கள்.நன்றி ஐயா.

 3. என் ஜோதிட வாழ்வில் ஓர் அரிய களா பரிமான எண்….. என் குருஜி…நன்றி. படித்து அரிவதில் ஓர் ஆனந்த பரவசம் ஐயா..

Leave a Reply