குரு அருளும் ராஜயோகம் C – 024 – Guru Arulum Raajayogam

சந்திர அதி யோகம்

சென்ற அத்தியாயத்தில் விளக்கிய சகட யோகம் என்ற அமைப்பில், குருவுக்கு ஆறு, எட்டில் சந்திரன் அமரும் போது, இன்னொரு அமைப்பாக குரு, சந்திரனுக்கு ஆறு, எட்டில் இருக்கும் நிலை பெறுவார்.

இந்த அமைப்பைப் பற்றி நமது மூல நூல்கள் “சந்திர அதி யோகம்” என்ற நல்ல யோகமாகச் சொல்லுகின்றன. அதாவது சந்திரனுக்கு ஆறு, ஏழு, எட்டில் சுப கிரகங்கள் எனப்படும் குரு, சுக்கிரன், புதன் ஆகியோர் இருக்கும் பொழுது ஏற்படும் யோகத்திற்கு சந்திராதி யோகம் என்று பெயர்.

ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் இரண்டாவது தலையாய ஒளிக் கிரகம் சந்திரன் என்பதாலும், நம் பூமிக்கு மிக நெருங்கியிருந்து சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் கிரகம் சந்திரன் என்பதாலும், மதியின் பார்வை எனப்படும் ஒளி இங்கே சிறப்பித்துச் சொல்லப்படுகிறது.

சந்திரனுக்கு ஆறு, ஏழு, எட்டில் கிரகங்கள் இருப்பது அதி யோகம் எனப்படுவதன் சூட்சுமம் என்னவெனில், ஒரு கிரகம் தன் நேரெதிரில் இருக்கும் கிரகத்தையும், ஏழாவது வீட்டையும் பார்க்கும் என்றாலும் அந்த ஒளியின் சிதறல்கள் ஏழாம் வீட்டின் முன் பின் இருக்கும் ஆறு, எட்டாம் வீடுகளிலும் விழும் என்பதே.

பொதுவாக ஒரு கிரகத்தின் பார்வை என்பது அதன் நேரெதிர் புள்ளியை மையமாக வைத்து முன் பின் பத்து டிகிரி அளவில் வலுவாக இருக்கும். அதனையடுத்த முன் பின் ஐந்து டிகிரிக்குள் ஓரளவு வலுவாக இருக்கும். சரியாக முன் பின் பதினைந்து டிகிரியாகிய முப்பது டிகிரியில் அந்த கிரகத்தின் பார்வை எனப்படும் ஒளி வீச்சு முடிந்து விடுவதில்லை.

முன் பின் பதினைந்து டிகிரி எனப்படும் நிலைக்குப் பிறகும் ஓரளவு அந்த கிரகத்தின் ஒளிச் சிதறல்கள், அதாவது பார்வையின் தாக்கம் இருந்தே தீரும்.

இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் ஒரு கிரகம் தனக்கு நேரெதிரில் உள்ள வீட்டை மட்டும் தனது ஏழாம் பார்வையால் பார்த்தாலும் அந்தப் பார்வையின் வலிமையைப் பொருத்து, அதன் தாக்கம் ஏழாம் பாவத்தின் முன் பின் வீடுகளான ஆறு, எட்டிலும் இருக்கும்.

அதிலும் பூமிக்கு மிக அருகில் இருந்து இரவில் ஒளியை வெள்ளமென நமக்குத் தரும் சந்திரனின் பார்வை ஏழாம் வீட்டைத் தவிர்த்து அதன் இரு புறங்களிலும் உள்ள ஆறு, எட்டாம் வீடுகளில் கூடுதலாகவே விழும். இந்த அமைப்பு  சூரியனுக்கும் பொருந்தும்.

சில நேரங்களில் ஜோதிட பலனில் தவறு ஏற்படுவது இந்தப் பார்வை பற்றிய கணிப்பில் உள்ள குறையினால்தான்.

எப்படியெனில், ஒரு கிரகம் எந்த நிலையிலும் தனக்கு நேரெதிரில் உள்ள 180-வது டிகிரி புள்ளியில் இருக்கும் கிரகத்தை மிக வலுவாகப் பார்க்கும். பார்க்கப்படும் கிரகம் 170 அல்லது 190 டிகிரியில் இருக்குமாயின் அதன்மேல் விழும் பார்வைக்கு வலு சற்றுக் குறைவாக இருக்கும்.

பார்க்கும் கிரகத்தின் கோணம் பத்து டிகிரியில் இருந்து விலகுமாயின், சில நிலைகளில் மேம்போக்காக ராசிக் கட்டத்தில்  பார்க்கும் பொழுது அந்தக் கிரகத்தின் மேல் பார்வை படுவது போலத் தோன்றினாலும் உண்மையில் அங்கே பார்வை இருப்பதற்குச் சாத்தியமில்லை.

ஒரு ராசியின் ஆரம்பம், முடிவு போன்ற சந்தி நிலைகளில் இருக்கும் கிரகங்களின்  அமைப்பில் இது போன்ற பார்வை விலகல் கோணங்கள் பெரும்பாலும் அமையும் போது ஜோதிட கணிப்பு தவறக் கூடும்.

சந்திராதி யோகமும் இப்படிப்பட்ட நுண்ணிய ஒன்றுதான். சந்திரன் வலுவான நிலையில் இருந்து அதற்கு எதிரில் ஆறு, ஏழு, எட்டு ஸ்தானங்களில் சுப கிரங்கள் வலிமையிழந்த நிலையில் இருந்தாலும் சந்திர ஒளியால் அவை  வலுவூட்டப்பட்டு வலிமையான கிரகங்களாக மாற்றப் படுகின்றன. இதற்கு சந்திரன் பலமான நிலையில் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

சந்திரன் நீசமாகவோ அல்லது ஏதேனும் ஒரு வகையில் பாதிப்படைந்து பார்வை பலம் இல்லாத நிலையில் இருந்தாலோ சந்திராதி யோகம் பலன் தருவது இல்லை.

குரு சண்டாள யோகம்

ஜோதிடத்தில் பாபக் கிரகங்களாகச் சொல்லப்படும் ராகுவும், சனியும் சுபத்துவமின்றி இருக்கும் நிலைகளில் கீழ்நிலைப் பணிகளைச் செய்ய வைக்கும் கிரகங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. இவ்விரு கிரகங்களுடன் உயர் நிலை வேலைகளைச் செய்ய வைக்கும் அந்தணக் கிரகமாக சொல்லப்படும் குரு இணையும் பொழுது ஏற்படும் நிலை சண்டாள யோகம் எனப்படுகிறது.

இந்த அமைப்பில் இரண்டு வேறு சூட்சும நிலைகள் உள்ளன. முதலில் பன்றியுடன் சேரும் கன்றும் எதையோ சாப்பிடும் என்ற நிலைப்படி, சேரும் வீட்டையும், இணையும் தூரத்தையும் பொருத்து குரு தனது வலிமையை சனியுடனோ, ராகுவுடனோ பறி கொடுப்பார்.

அதாவது தன்னுடைய நல்ல தன்மையை அவர்களுக்கு கொடுத்து, தான் வலிமை இழந்து, பன்றியாக இருந்த அவர்களை பசுவாக்கி, பசுவாக இருந்த தான் தன் இயல்பை இழப்பார்.

அடுத்த நிலையில் தான் வலிமையாக இருந்து சனியுடனோ, ராகுவுடனோ ஒரே வீட்டில் இருந்தாலும் அவர்களுடன் மிக நெருக்கமாக இணையாத பட்சத்தில், தன்னுடைய வலிமை குறையாமலும், தன் இயல்பை இழக்காமலும் சனியைப் புனிதப் படுத்தி பரிபூரண ஆன்மிக கிரகமாக்கி, ஜாதகனை முழுக்க முழுக்க தெய்வ நம்பிக்கை உள்ளவனாகவும், ஆன்மிக வாதியாகவும் மாற்றுவார்.

ராகுவுடன் குரு மிக நெருங்கி, அந்த வீடு ராகுவிற்கு வலிமையான இடமாகவும் குருவிற்கு வலுக் குறைவான இடமாகவும் இருந்தால், ராகுவின் ஆதிக்கம் மேலோங்கி, ராகுவின் இயல்பான கடவுளே இல்லை என்று சொல்லும் பகுத்தறிவுவாதி என்று சொல்லப்படும் நாத்திகனாக ஜாதகர் மாறுவார்.

சனியுடனோ, ராகுவுடனோ குரு நெருக்கமாகச் சேரும் சண்டாள யோகம் எனப்படும் நிலையில் குருவின் தசை நன்மைகளைச் செய்யாது போகலாம். ஆனால் ராகுதசையிலும், சனி தசையிலும் அபரிமிதமான நன்மைகள் ஜாதகருக்கு இருக்கும்.

குறிப்பாக ராகு தன்னுடன் இருப்பவரின் பலனைக் கவர்ந்து, இணைந்திருப்பவரின் பலனை எடுத்துச் செய்பவர் என்பதால் குருவுடன் சேர்ந்த ராகுவின் தசையில் ராகு முழுக்க முழுக்க குருவாக மாறி, குருவின் காரகத்துவங்களான தனம், புத்திரம் எனப்படும் அளவற்ற பணம், மற்றும் நல்ல குழந்தைகளைத் தருவார். இந்த நிலையில் ராகுதசை ஜாதகருக்கு மறக்க முடியாத அளவிற்கு மேன்மைகளைத் தரும்.

அதேநேரத்தில் ராகுவோடு மிக நெருங்கி எட்டு டிகிரிக்குள் குரு இணைந்திருந்தால் குரு தசை தன் இயல்பை இழந்து குருவினால் கிடைக்கும் எவ்வித நன்மைகளையும் கிடைக்கச் செய்யாது.

இதைப் போலவே சனி தசையிலும் சனியை, குரு புனிதப் படுத்துவதால், குருவோடு சேர்ந்த சனி தசையில் நல்ல தன லாபமும், ஆன்மிக ஈடுபாடும் ஜாதகருக்கு இருக்கும். சனியின் கெட்ட காரகத்துவங்கள் எதுவும் ஜாதகருக்கு இருக்காது. அதேநேரத்தில் சனியும், குருவும் இணையும் தூரத்தைப் பொருத்து இந்த பலன்கள் வேறுபடும்.

மற்ற பாபக் கிரகங்களான செவ்வாய், சூரியன் இருவரும் குருவின் நண்பர்கள் என்பதால் இவர்களுடன் தொடர்பு கொள்ளும் குருவின் யோகங்கள் அவர்களின் பாபத் தன்மையை நீக்கி குருவையும் செழுமைப் படுத்தி நல்ல யோகங்களாக அமைகின்றன.

நல்ல குணங்கள் கொண்ட நண்பனுடன் தொடர்பு கொள்ளும் கெட்டவனும் நல்லவன் ஆவான் என்பது இதில் உள்ளடங்கியிருக்கும் சூட்சுமம். அந்த வகையில் செவ்வாயோடு, குரு தொடர்பு கொள்வது குரு மங்கள யோகம் எனப்படுகிறது. (செவ்வாய்க்கு மங்களன் என்பது இன்னொரு பெயர்) சூரியனுடன் குரு தொடர்பு கொள்வது சிவராஜ யோகம் எனப்படுகிறது.

ஒருவரை அரசனாக்கும் சிவராஜ யோகம்…!

சூரியனுக்கு நேரெதிரில் ஏழாமிடத்தில் அதி வக்ர கதியில் குரு இருக்கும் நிலை  சிவராஜ யோகம் எனப்படுகிறது.

சென்ற அத்தியாயத்தில்  நான் குறிப்பிட்டதைப் போல ஒரு அமைப்பை ராஜ யோகம் என்று ஞானிகள் தனிப்பட்டு அடையாளப் படுத்திக் காட்டினாலே அது உண்மையிலேயே ஒருவரை அரசனைப் போல வாழ வைக்கும் யோகத்தைத் தருவதாகும்.

ஒருவரின் ஜாதகத்தில் ராஜயோகம் என்ற பெயரில் நமது மூலநூல்கள் சுட்டிக் காட்டும் ஓரிரு யோகங்கள் இருந்து, தர்ம கர்மாதிபதி யோகம் மற்றும் பஞ்ச மகா புருஷ யோகம் போன்ற யோகங்கள் அவற்றிற்குத் துணையிருந்தால் ஒரு ஜாதகர் உண்மையிலேயே அரசனாவார்.

அரச யோகம் எனப்படும் அமைப்பு உண்மையில் ஒருவரை அதிகாரம் செலுத்தக் கூடிய பதவியில் இருக்க வைக்கும் என்பதால், தலைமைக்கு உரிய கிரகமான சூரியனின் வலு ஒரு ஜாதகத்தில் மிக முக்கியமானது. அதேபோல திடமான மனதோடு சரியான முடிவை எடுக்க வைக்கும் இன்னொரு ஒளிக் கிரகமான சந்திரனின் வலுவும் முக்கியமானது.

அந்த வகையில் அதிகாரம் செய்ய வைக்கும் சூரியனை, குரு நேருக்கு நேர் நின்று பார்க்கும் சிவராஜ யோகம் ராஜ யோகங்களில் முக்கியமானது.

இந்த யோகத்தின் வழியாக ஒரு சூட்சும விஷயத்தையும் ஞானிகள் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது சூரியனுக்கு ஐந்து, ஒன்பதாம் இடங்களில் இருந்து சூரியனைக் குரு பார்த்தால் அது சிவராஜ யோகம் என்று சொல்லப்படவில்லை.

சூரியனுக்கு சம சப்தமமாக, நேர் ஏழாமிடத்தில் வக்ர கதியில் இருக்கும் குரு சூரியனைப் பார்த்தால் மட்டுமே சிவராஜ யோகம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

கிரகங்கள் அனைத்தும் சூரியனிடமிருந்தே ஒளியைப் பெற்று பிரதிபலிக்கும் நிலையில், சூரியனிடமிருந்து பெற்ற ஒளியை தன்னுள் வாங்கி, தனது நல்ல கதிர்களைக் கலந்து வேறுபடுத்தி, சூரியனுக்கே திரும்பக் கொடுத்து, பிதாவாகிய சூரியனை வலுப்படுத்தி, குருவும் சூரிய ஒளி எனும் பார்வையால்  வலுப்படும் நிலையில் உலகையாளும் இந்த யோகம் அமைகிறது.

இந்த யோகம் உண்மையான ராஜ யோகத்தைத் தர வேண்டுமெனில் சூரியனும், குருவும் நல்ல ஸ்தானங்களில் பகை, நீசம் பெறாமல் வலுவுடன் இருக்க வேண்டியது முக்கியமானது.

(ஜூலை 2 – 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

5 Comments on குரு அருளும் ராஜயோகம் C – 024 – Guru Arulum Raajayogam

  • வணக்கம்
   இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும்.
   ஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
   வணக்கம்
   தேவி
   ADMIN

 1. சூரியனும் குருவும் இணைந்து இருந்தால் சிவராஜ யோகம் என்றே இதுவரை படித்திருக்கிறேன். ஆனால் தங்களின் இந்தப் பதிவு தகவல் சமசப்தமபார்வை படுவதை வைத்தே என்று விவரிப்பதால் இது எந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கிறது என்று அறிந்து கொள்ள விரும்புகின்றேன்.

Leave a Reply