சந்திரகிரகணம் …யாருக்கு தோஷம்?

இந்த வருட சந்திரகிரகணம். இன்னும் இரண்டு தினங்களில் வரும் ஏப்ரல் மாதம் நான்காம் தேதி 4.4.15 சனிக்கிழமையன்று இந்திய நேரப்படி பகல் 3.44 மணிக்கு ஆரம்பித்து மாலை 7.15 வரை நீடிக்கிறது. சூரியன் அஸ்தமித்த பிறகு சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே இந்த கிரகணத்தை நம்மால் பார்க்க முடியும்.

தமிழகத்தில் அன்று சூரியன் மேற்கில் மறையும் நேரமான மாலை 6.19 மணிக்கு சந்திரன் கிழக்கில் உதயமாகும். அப்போதிருந்து கிரகணம் தெரிய ஆரம்பிக்கும். முழுகிரகணம் முடிந்தும் புறநிழல் கிரகணம் எனப்படும் கிரகணத்தின் மங்கலான தாக்கத்தினை இரவு சுமார் எட்டரை மணிவரை கிழக்குத் திசையில் வெறும் கண்களால் நம்மால் பார்க்க முடியும்.

சூரியன் பூமி சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இதில் சந்திரன் மறைக்கப்படும் போது சந்திரகிரகணமும் சூரியன் மறைக்கப்படும்போது சூரியகிரகணமும் நிகழ்கிறது.

பௌர்ணமி தினமன்று சந்திர கிரகணமும் அமாவசை தினத்தன்று சூரிய கிரகணமும் நடக்கும். இதில் பெரும்பாலோருக்கு தெரியாத ஒரு உண்மை என்னவெனில் பௌர்ணமி திதி முடிந்து அடுத்த பிரதமை ஆரம்பிக்க இருக்கும் நேரத்தில்தான் எப்போதுமே சந்திர கிரகணம் நடக்கும்.

உலக சரித்திரம் முழுமைக்கும் இந்த கிரகணங்களைப் பற்றிய அச்சங்களும் மூடநம்பிக்கைகளும் எல்லா நாடுகளிலும் அனைத்து இன வரலாறுகளிலும் விரவிக் கிடக்கின்றன.

அமெரிக்காவை முதலில் அறிந்த கொலம்பஸ் தனக்கு மிகவும் எதிர்ப்புக்காட்டிய அமெரிக்கப் பழங்குடி செவ்விந்தியர்களை சூரியகிரகணம் ஏற்படும் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்ததால் இன்று சூரியன் மறைக்கப்படும் என்று பயமுறுத்தி தன்னை தெய்வாம்சம் பொருந்தியவராக காட்டிக்கொண்டே பணியவைத்தார் என்பது வரலாறு.

கிரகணங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று ராகுவால் ஏற்படும் கிரகணம் இன்னொன்று கேதுவால் ஏற்படும் கிரகணம். இந்த இரண்டு வகைகளில் தற்போது ஏற்படுவது சந்திரனுடன் ராகு இணைவதால் ஏற்படும் ராகு க்ரஸ்த கிரகணமாகும்.

இது வடமேற்குத் திசையில் தொடங்கி தென்கிழக்குத் திசையில் முடிகிறது. முழுகிரகணமாக இது இருந்தாலும் தமிழகத்தில் ஒரு பகுதிவரைதான் தெரியும். அதாவது கிரகணம் முடியும் நேரத்தில் சந்திரன்பாதி அளவுக்கு மறையும்..

இனி ஜோதிடரீதியாக இந்த கிரணங்களை பார்க்கப் போவோமேயானால் ராகு கேதுக்களை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உணர்ந்து இவை ஏற்படும் நேரங்களை முன்கூட்டியே கணித்து இவற்றை ஜோதிடத்திலும் பயன்படுத்திய இந்திய ஞானிகளின் மேதமை வெளிநாட்டினரை வியக்க வைக்கும் ஒன்று,.

இந்திய ஜோதிடத்தில் மட்டுமே ராகு கேதுக்களுக்கு கிரக அந்தஸ்து கொடுக்கப் பட்டு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன.ராமாயண காலம் எனப்படும் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன் ராகு கேதுக்களைப் பற்றிய குறிப்புக்கள் நம்மிடையே இல்லை.

எனினும் கிமு 5114ல் அவதரித்ததாக கருதப்படும் ஸ்ரீராமபிரானின் ஜாதகத்தில் தனுசுராசியில் ராகு இருந்தார் என்று கணிக்கப் பட்டதாலேயே தனுசில் இருக்கும் ராகுவிற்கு கோதண்டராகு என்ற பெயர் ஏற்பட்டது.

ஒரு வருடத்தில் சாதாரணமாக இரண்டு சூரிய கிரகணங்களும் இரண்டு சந்திர கிரகணங்களும் ஏற்படும். சிலசமயம் மூன்று கிரகணங்கள் ஏற்படுவது உண்டு. இம்முறை சனிக்கிழமையன்று ஏற்படும் கிரகணம் அஸ்தம் நட்சத்திரத்தில் நடக்கிறது. அதாவது அஸ்த நட்சத்திரத்தில் ராகுவும் சந்திரனும் இணையும் நேரத்தில் இந்த கிரகணம் ஏற்படுகிறது.

கிரகணத்தின்போது கிரகணம் ஏற்படும் நட்சத்திரத்திற்கு முன்பின் நட்சத்திரங்கள் மற்றும் அதே நட்சத்திரத்தின் திரிகோணபத்தாவது நட்சத்திரங்களான அந்த நட்சத்திர அதிபதியின் மற்ற நட்சத்திரங்களும் தோஷம் அடையும் என்ற ஜோதிட விதிப்படி இந்த கிரகணத்தினால் உத்திரம், அஸ்தம், சித்திரை, திருவோணம், ரோகினி ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திரன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தோஷங்கள் ஏற்படும்.

இதனால் கிரகணம் நிகழும் ராசியான கன்னி, மற்றும் அதன் முன்பின் ராசிகளான சிம்மம் துலாம் மற்றும் மகரம், ரிஷபம் ஆகிய ராசிகளுக்குள் அடங்கிய மேற்கண்ட நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது நல்லது.

மேற்கண்ட நட்சத்திரக்காரர்களின் தாயாருக்கோ, தாயார்வழி உறவினர்கள், அல்லது தாய்வழி அமைப்புகளில் கெடுபலன்களோ அல்லது மேற்கண்ட நட்சத்திரக்காரர்களின் ஜாதகங்களில் சந்திரன் எந்த ஆதிபத்தியத்திற்கு உரியவரோ அந்த பாவபலன்களில் குறைகளும் கெடுபலன்களும் இருக்கும்.

சந்திரன் ராகுவால் பீடிக்கப்படுவதால் மேற்கண்ட நட்சத்திரக்காரர்கள் கிரகண தினத்தன்று ஆதரவற்ற ஏழை, எளியோருக்கு தங்களால் இயன்ற அளவுக்கு உளுந்தம் பருப்பைதானம் செய்வதும் உளுந்தினால் ஆன உளுந்தங்கஞ்சி, மெதுவடை போன்ற உணவு பொருட்களை தானம் செய்வதும் கெடுபலன்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் சிறந்த பரிகாரங்கள்.

பூமி பிறந்ததற்கும் பூமியில் உயிர்கள் தோன்றியதற்கும் சூரிய ஒளியும் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் சந்திரனின் ஒளியுமே முக்கிய காரணம் என்பதால் மேற்கண்ட சூரிய சந்திரர்களின் ஒளியை பூமிக்கு கிடைக்க விடாமல் தற்காலிகமாகத் தடைசெய்யும் கிரகணங்களை இந்திய ஜோதிடம் ஒரு சிறப்பு நிகழ்வாக எடுத்துக்கொள்கிறது.

சூரியனோ, சந்திரனோ இந்த சில நிமிட மறைப்புக்குப் பதிலாக சில மாதங்கள் மறைக்கப்பட்டாலும் பூமியில் உணவுச் சங்கிலி அடிபட்டு அனைத்து உயிர்களும் அழிந்துவிடும் என்பது விஞ்ஞான உண்மை.

எனவே இப்படிப்பட்ட இன்றியமையாத சூரிய-சந்திர ஒளியை மறைத்துத் தடுத்து பூமிக்கு கிடைக்கவிடாமல் செய்வதனாலேயே கிரகணங்கள் ஒரு தோஷ நிகழ்வாக ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.

ஜோதி வடிவான சூரிய சந்திரர்களையே சிவன்-சக்தி அம்மை அப்பன் என வழிபடும் நமது மேலான இந்து மதத்தின் திருக்கோவில்கள் கிரகண நேரத்தில் இவர்கள் வலுவிழப்பதால்தான் நடை சாத்தப்பட்டு கிரகணம் முடிந்தபின் பரிகார பூஜைகள் செய்விக்கப்பட்டு மீண்டும் திறக்கப்படுகின்றன.

சிலகோவில்களில் சந்திர கிரகணத்தன்று சக்தியாகிய அன்னையின் திருவுருவச் சிலை கிரகண சமயம் தர்ப்பைப் புற்களாலான போர்வையால் முழுக்க மூடிவைக்கப்பட்டு கிரகணம் முடிந்தபின் புநீக்கப்படுவது உண்டு. இதன் மூலம் கிரகணத்தன்று ஏற்படும் சக்தியிழப்பை தோஷக் கதிர்களைத் தடுக்கும் சக்தி தர்ப்பை புல்லுக்கு உண்டு என்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதன் காரணமாகவே கிரகண நேரத்தில் நாம் நீரோ உணவோ அருந்தக் கூடாது எனவும் அப்படித் தவிர்க்க முடியாமல் தண்ணீர் குடிக்க நேர்ந்தால் அதில் தர்ப்பைப் புல்லைப் போட்டுக் குடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது சூரிய கிரகணம் ஆரம்பிக்கும் நேரமும் சந்திர கிரகணம் முடியும் நேரமும் முக்கியமானது என்பதால் இந்த நேரங்களில் புனித நீராடுவது நல்லது.

ஒரு பொதுவான வழிகாட்டுதலாக கடகலக்னம் மற்றும் கடகராசி மற்றும் ஜாதகத்தில் சந்திர பகவானை சுபராகக் கொண்டவர்கள் கிரகண நேரத்தில் முக்கிய செய்கைகள் முடிவுகள் எதனையும் எடுக்காமல் இருப்பது நலம். அதைவிட இந்த நேரத்தில் சந்திர காயத்ரி போன்ற சந்திர துதிகளை தியானிப்பது அவர்களின் சந்திரபலத்தை தக்க வைக்கும்.

கிரகண நேரத்தில் குழந்தை பிறப்பது நல்லதா?

பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் சந்திரனின் ஒளி தேவைப்படுவதைப்போல இனி பிறக்கப் போகும் உயிரின் உடல் பலத்திற்கும் மன நலத்திற்கும் அது தேவை என்பதால்தான் கருவுற்றிருக்கும் பெண்கள் கிரகண நேரத்தில் வெளியே வர வேண்டாம் என ஜோதிடம் அக்கறையுடன் அறிவுறுத்துகிறது.

அதேபோல கிரகண நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தைக்கும் கிரகண தோஷம் எனப்படும் சந்திர வலுக்குறைவு ஏற்படுகிறது.

சந்திரன் என்பது ஒருவருக்கு தாயையும் மனோபலத்தையும் குறிக்கும் கிரகம் என்பதால் சந்திரன் ராகுவால் பாதிக்கப்படும் இதுபோன்ற நேரங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்வழி நன்மைகளும் ஆக்கசக்திக்கு தேவைப்படும் மனோபலமும் பாதிக்கப்படும் என்பது வேதஜோதிடத்தின் முடிவு.

அதேநேரத்தில் ஒரு குழந்தைபிறக்கும் நேரம் அதன் முந்தைய கர்ம வினைகளைப் பொறுத்தது. என்பதோடு அது நம் கைகளிலும் இல்லை. எந்த ஒரு ஜனனமும் பரம்பொருளின் விருப்பத்திற்கும் கட்டளைக்கும் உட்பட்டது.

இருப்பினும் என்னுடைய ஒரு சிறிய ஆலோசனையாக இந்த வாரம் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தைப்பேறை எதிர்நோக்கி இருப்பவர்கள் சந்திர கிரகணம் முடிந்து அடுத்த நாள் வரைக்கும் அதாவது சந்திரன் துலாம் ராசிக்கு மாறும் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒருமணிவரை அறுவைச் சிகிச்சையை தள்ளி வைக்க முடிந்தால் நல்லது.

ஆயினும் இது தாய் சேய் இரண்டின் உயிர்ப்பிரச்னை என்பதால் கடவுளுக்குச் சமமான மருத்துவரின் முடிவுக்கு கட்டுப்படுவது நல்லது.

( ஏப் 3 – 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது )

1 Comment on சந்திரகிரகணம் …யாருக்கு தோஷம்?

Leave a Reply