குருஜியின் வார ராசிபலன்கள் (20- 06 -2022 முதல் 26 -06 -2022 வரை)

#adityagurujivararasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு ராசிநாதன் செவ்வாய் குருவோடு இணைந்து சுபத்துவமாக பன்னிரண்டாம் இடத்தில் இருப்பதால் மிகவும் நற்பலன்கள் நடக்க கூடிய வாரம் இது.  யோக கிரகங்கள் வலுவாக இருக்கின்றன. சூரியன் மூன்றில் இருக்கிறார். அடுத்த ஆண்டு நல்லநிலைக்கு வரப் போவதான் அடையாளமாக, சனி இப்போது அதிசார நிலையில் லாப ஸ்தானத்தில் இருக்கிறார் இதுவும் மிகவும் நல்ல நிலை. மேஷத்தினர் சாதிக்கின்ற வாரம் இது


சிலருக்கு விரையங்கள் அதிகமாக இருந்தாலும் கூட வருமானம் வரக் கூடிய வாரமாகவே இது இருக்கும். பெண் உறவுகளின் மூலமான செலவுகள், மற்றும் பெண்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்தல் என தவிர்க்க முடியாத செலவுகள் இப்போது மேஷத்திற்கு நடக்கும். பெண்களால் சங்கடங்களை அனுபவித்தவர்களுக்கு தீர்வுகள் கிடைக்கும். அரசுஊழியர், பொதுவாழ்வில் இருப்பவர்கள், விவசாயிகள் உள்ளிட்டவருக்கு நன்மைகளைத் தரும் வாரம் இது.

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே ஆட்சியாக உள்ள யோக வாரம் இது. கடந்த வாரங்களில் ராகுவுடன் சுக்கிரன் இணைந்திருந்ததால் வேலை, தொழில், வியாபார நிலைகளில் சிக்கல்களை சந்தித்தவர்கள் மற்றும் எதிலும் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த ரிஷபத்தினருக்கு உள்ளமும், உடலும் புத்துணர்வோடு இருக்க கூடிய நல்ல வாரம் இது.  

ராசிநாதன் சுக்கிரன் ராசியில் ஆட்சி பெறுவது, சில மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கக்கூடிய நிகழ்வு என்பதால் இந்த வாரத்தில் இருந்து இன்னும் சில வாரங்களுக்கு ரிஷபத்தினர் தொட்டது துலங்கக்கூடிய நிலை அமையும்.  ராசியில்  புதன், சுக்கிரன் கூடி, சனி ஆட்சியாக இருப்பது, அதாவது உங்களுடைய யோக கிரகங்கள் மூவருமே நல்ல நிலையில் இருப்பதால் ரிஷபத்தினர் எதையும் சாதிக்க முடியும். சில மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே அமையக்கூடிய இது போன்ற கிரக நிகழ்வுகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் ரிஷபத்தினர்  எல்லாவற்றையும் சாதிப்பீர்கள்

மிதுனம்:

அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தில் இருக்கின்ற மிதுனத்தினர் அனைவருக்கும் படிப்படியாக துன்பங்கள் விலக ஆரம்பிக்கின்ற வாரமாக இதை சொல்லலாம். அதிசார நிலையில் சனி தற்போது ஒன்பதில் இருக்கிறார். ராசிநாதன் புதன் பன்னிரண்டில் இருந்தாலும் கூட, நண்பரான சுக்கிரனோடு சேர்ந்து இருக்கிறார். இது செலவுகள் அதிகமாக இருந்தாலும் கூட சமாளிக்கின்ற அளவிற்கு பணமும் வரும் என்பதைக் காட்டுகிறது. கஷ்டத்தில் இருக்கின்ற மிதுனத்தினர்  அனைவருக்குமே தீர்வு கிடைக்க கூடிய நல்ல வாரம் இது.  

திருவாதிரை மற்றும் புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு ஆறுதல் அளிக்கின்ற விதமாக நற்பலன்கள் நடக்கும்.. கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களாக மிகப் பெரிய மனச்சங்கடங்களில் சிக்கி உள்ளவர்களுக்கு தூரத்தில்  ஒளி தெரிகின்றது போன்ற நம்பிக்கைகள் பிறக்கும். இந்த வாரம் நடக்கும் திருப்பு முனையான சம்பவங்களால் உங்கள் எதிர்காலம் நன்றாக இருக்கும். மிதுனத்தினருக்கு விடிவு வெகு அருகிலேயே இருக்கிறது.  

கடகம்:

வார ஆரம்பத்தில் ராசிநாதன் சந்திரன் எட்டில் உள்ள சனியுடன் இணைந்தாலும், யோகாதிபதி குரு நன்மை தரும் அமைப்பில் உள்ளதால் கடக ராசிக்காரர்களின் வருமானத்திற்கு குறைவு இருக்காது. பணப்புழக்கம் கையில் இருக்கும். பணம் புரளும் இடங்களில் பணி புரிபவர்கள், வங்கித்துறையினர் மதிப்பு, மரியாதைகளை பெறுவார்கள். தொழில் ஓரளவு நன்றாகவே இருக்கும். வியாபாரம விருத்தியாகும். வேலை செய்யும் இடத்தில் புகழ் பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. அரசு ஊழியருக்கு வருமானங்கள் இருக்கும்.

பிறந்த ஜாதகப்படி வலுவுள்ள தசா,புக்திகள் உள்ளவர்களுக்கு இப்பொழுது நான் சொல்வதைவிட கூடுதலான நன்மைகள் கிடைக்கும். கோட்சார ரீதியாக யோகக்  கிரகங்கள் சாதகமாக இருப்பதால் பெரிய கஷ்டங்கள் எதுவும் இந்த வாரம் கண்டிப்பாக வந்துவிடாது. நினைத்தது நடக்கும் என்ற நல்ல வாரம் இது. மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். மாமியார் வீட்டில் மதிக்கப் படுவீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். கடக ராசிக்காரர்களுக்கு தெய்வம் துணையிருக்கும் வாரம் இது. கவலைகள் வேண்டாம்.

சிம்மம்:

உங்களைத் தொல்லைப்படுத்தி கொண்டிருந்த கடன் சிக்கல்களில் இருந்து இந்த வாரம் மீண்டு வருவீர்கள். இதுவரை நீங்கள் தவறாக நினைத்துக் கொண்டிருந்த ஒரு நபர் முக்கியமான நேரத்தில் உதவுவார். எதிர்ப்புகள் விலகும் வாரம் இது. சிலருக்கு இதுவரை இருந்து வந்த உடல்நலக் கோளாறுகள் சரியாகும். குறிப்பாக பெண்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி மேன்மைகளைத் தரும் வாரம் இது. திருமண விஷயத்தில் வழக்கு, கோர்ட் என அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு  சாதகமான திருப்பங்களும் முடிவுகளும் உண்டு.

குடும்பத்தில் நடக்க இருக்கும் சுபகாரியங்களுக்கு அல்லது வீடு வாங்க வேண்டி வீட்டுக்கடனுக்கு வங்கியில் விண்ணப்பிப்பது போன்றவைகள் இருக்கும். யோகாதிபதி செவ்வாய் எட்டில் மறைந்தாலும் குருவுடன் இணைந்து சுபத்துவம் அடைவதால் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி தேடித்தந்து உங்களை புகழ் அடைய வைப்பார். 20 ம் தேதி இரவு 10.35 முதல் 23ம் தேதி காலை 6.14 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய ஆரம்பங்கள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.

கன்னி:

ராசிநாதன் புதன் ஒன்பதாம் வீட்டில் சுக்கிரனுடன் இணைந்து வலுவாக இருப்பதால் அந்தஸ்து, கௌரவம் மேம்படும். அதிர்ஷ்டம் கைகொடுக்கும். தெய்வ ஆசிர்வாதம் உண்டு. பத்தில் உள்ள சூரியனால் அரசு ஊழியர்கள், அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்டவர்கள், காண்ட்ராக்டர்கள் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது நன்மைகளைத் தரும் வாரம். அதேபோல தந்தையின் தொழிலை செய்பவர்களுக்கும் இப்போது நன்மைகள் நடக்கும். உடல்நலமில்லாமல் இருந்தவர்கள் சுகம் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் இப்போது கிடைக்கும். வியாபாரிகளுக்கும் சுயதொழில் செய்பவர்களுக்கும் இது மிகவும் நல்ல வாரம். வேலையில் பிரச்னை ஏற்பட்டு, வேலைமாற்றம் ஏற்பட்டவருக்கு மீண்டும் வேலை அமையும்.  23-ம் தேதி காலை 6.14 மணி முதல் 25-ம் தேதி மாலை 5.02 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் அலைச்சல் தரும் வேலைகளைச் செய்ய வேண்டாம். பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது.

துலாம்:

துலாம் ராசிப் பெண்களுக்கு வேலைப்பளு அதிகம் உள்ள வாரம் இது. சிலருக்கு வாகனம், வீடு மாற்றம் உண்டு. இதுவரை இருந்ததை விட நல்ல வீட்டிற்குப் போவீர்கள். பழைய வாகனத்தை விற்று விட்டு அதைவிட உயர்ந்த வாகனம் வாங்குவீர்கள். ராசியில் கேது இருப்பதால் தேவையற்ற விஷயங்களில் வீண் பிடிவாதம் பிடிப்பீர்கள். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். யாரிடமும் வாக்குவாதமோ, சண்டையோ போட வேண்டாம். இன்னும் சில வாரங்களுக்கு  ராசிநாதன் வலு அடைவதால் சிலருக்கு பணவரவு இருக்கும்.

கணவன் மனைவி உறவு கருத்து வேற்றுமைகள்  இருந்தாலும் மனக் கசப்புகள் வராது. பணிச்சுமை அதிகம் இருக்கும். வேலை முடிந்து எப்போதடா வெளியேறுவோம் என்று இருப்பீர்கள். 25-ம் தேதி மாலை 5.02 மணி முதல் 28-ம் தேதி காலை 5.33 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் புதிய முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. எவரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

விருச்சிகம்:

உங்களில் அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு சொத்து விவகாரங்களில் இருந்து வந்த வில்லங்கங்கள் இப்போது சாதகமாக முடியும். திரவ ரீதியிலான பொருள்  விற்பனை செய்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல பணவரவு உண்டு. விருச்சிகத்தினர் அனைவருக்குமே மனம் சந்தோஷப்படும்படியான நிகழ்ச்சிகள் இருக்கும். சிலர் தொழில் அமைப்பில் நல்ல விஷயங்களை செய்வீர்கள். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்கள் வளம் பெறுவார்கள்.

தாமதமாகி வந்த அனைத்து விஷயங்களும் தடைகள் நீங்கி இனிமேல் நல்லவை நடக்கும். இளையபருவத்தினருக்கு திருமணம் நிச்சயம் ஆகும். வயதானவர்கள் குடும்பத்தில் மதிக்கப்படுவார்கள். அவர்களின் ஆலோசனை ஏற்கப்படும். 27,28,29 ஆகிய தினங்களில் பணம் வரும். வார ஆரம்பத்தில் சந்திரன் சனியுடன் இருந்தாலும் வலுவாக உள்ளதால் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். காரிய வெற்றி நிச்சயம் உண்டு. பணவரவு இருக்கும். தன்னம்பிக்கையுடன் உற்சாகமாக செயல்படுவோருக்கு இந்த வாரம் நன்மைகள் மட்டும்தான்.

தனுசு:

தனுசு ராசியினரின் ஆற்றலும்; தைரியமும் வெளிப்படும் வாரம் இது. உங்களில் மூலம்  நட்சத்திரக்காரர்கள் பிரச்னைகள் தீருவதற்கான சம்பவங்கள் இந்த வாரம் நடக்கப் பெறுவீர்கள். சிலர் வெகு நாட்களுக்குப் பிறகு சாதனைகள் செய்வீர்கள். எல்லாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் இது நல்ல வாரம். கோர்ட் கேஸ், நிலம் சம்பந்தப்பட்ட வில்லங்கங்களில் சிக்கியவர்களுக்கு வழக்குகள் சாதகமாகத் திரும்பும். கணவன் மனைவி உறவு நன்றாக  இருக்கும். நண்பர்கள், பங்குதாரர்களுக்குள் இருந்த பிரச்னை தீர ஆரம்பிக்கும். 

எல்லாத் தரப்பு தனுசு ராசிக்கும் இனி அதிர்ஷ்டம் மட்டுமே வரும். தொல்லைகள் ஓயும். சனி விலகப் போவதால் இனி எவ்விதக் குறையும் இருக்காது. பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகள் இருக்கும். கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். யோகாதிபதிகள் வலுப் பெற்று இருப்பதால் துயரங்கள் எதுவும் இல்லை. பாக்கிய ஸ்தானம் வலுவாக இருப்பதால் தெய்வஅருள் உண்டு. உங்களின் எல்லாக் கவலைகளும் தீரப் போகிறது.

மகரம்:

இந்த வாரம் தன ஸ்தானத்தில் சந்திரன், சனி தொடர்பு பெறுவதால் பண விஷயத்தில் மகரத்தினரின் தன்னம்பிக்கை குறைவுபடும். சிலருக்கு மனக் கலக்கமும் குழப்பமும் அதிகரிக்கும். சிலருக்கு வேலை தொழில் நிலைகளில் சங்கடங்கள் இருக்கும். தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் நல்ல சந்தர்ப்பங்களை நழுவ விடுவீர்கள். இன்னும் சிலருக்கு எதை செய்தாலும் தடைகளைச் சந்தித்து, முட்டுச்சந்தில் போய் முட்டி நிற்பதைப் போல் உணருவீர்கள்.

வீட்டை அழகுபடுத்துவீர்கள். வாரத்தின் கடைசி இரண்டு நாட்களில் எந்தவித தொல்லைகளோ கஷ்டங்களோ இருக்காது. தனியார் ஊழியர்களுக்கு வருமானங்கள் இருக்கும். போக்குவரத்து துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. கலைஞர்கள் வாய்ப்பு பெறுவார்கள். இளைஞர்களுக்கு சில நல்ல அனுபவங்கள் இருக்கும். அரசு ஊழியர்கள், பத்திரிக்கை துறையினர், தொலைக்காட்சித் துறையினர் நன்மைகளை பெறுவார்கள். சிறு வியாபாரிகள், விவசாயிகளுக்கு  இது நல்ல பலன்களை தரும் வாரமாக அமையும்.

கும்பம்:

உங்களில் சதயம் நட்சத்திரக்கார்களுக்கு அலுவலகத்திலும், வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவி கிடைக்கும். பிரச்னைகள் இல்லாத வாரம் இது. வியாபாரிகள், இளைஞர்கள், தலைமைப் பதவியில் இருப்பவர்கள், தொழிலதிபர்கள், அரசு வேலை செய்பவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நீண்ட நாட்களாக தடையாகி இருந்த காரியங்கள் நிறைவேறும். தந்தையுடன் பிறந்த அத்தைகள் உதவுவார்கள். எதிலும் இருந்து வந்த முட்டுக்கட்டை விலகும்.

அலுவலக வேலையை வீட்டிலேயே செய்யும் பெண்களுக்கு வேலைப்பளு குறையும். வீட்டிலும் உங்கள் பேச்சை மற்றவர்கள் கேட்பார்கள். சற்று நிம்மதியாக உணர்வீர்கள். கடன் தொல்லைகள் எதுவும் இருக்காது. எதிரிகள் ஒழிவார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல்கள் உண்டு. அப்பா வழி உறவினர்களால் மனக்கசப்புக்கள் இருக்கும் இளைய பருவத்தினருக்கு திருப்பு முனைகள் இருக்கும். திருமணம் ஆகாதவருக்கு அது உறுதி ஆகும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டு.

மீனம்:

ராசிநாதன் குரு ராசியிலேயே இருப்பதால் வியாபாரம், வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இந்த வாரம் தொந்தரவுகள் எதுவும் இருக்காது. வியாபாரிகளுக்கு கொள்முதல் சற்று முன் பின்னாக இருந்தாலும், வியாபாரத்தில் குறைவிருக்காது. சொந்தத்தொழில் செய்பவருக்கு வருமானம் உண்டு. சிலர் பிறருக்கு உதவுவது போன்ற ஏதேனும் ஒரு நல்ல காரியம் செய்வீர்கள். ராசிநாதன்  வலுவாக இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். அம்மா வழியில் ஆதாயங்கள் உண்டு.

ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு நன்மைகள் நடப்பதற்கு தடைகள் எதுவும் இல்லை. புதிய வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு தொழில் அல்லது வேலை மாற்றம் உண்டு. அது எதிர்காலத்திற்கு நல்லதாக இருக்கும். ஆன்லைனில் படிக்கும் பிள்ளைகளின் மேல் ஒரு கண் இருக்கட்டும். விளையாட்டில் குழந்தைகள் அதிகம் கவனம் செலுத்துவார்கள். மருத்துவம், ஆன்மிகம், எலக்டிரிகல் எலக்ட்ரானிக்ஸ், அன்றாடம் அழியும் பொருட்கள், அழகு, ஆடம்பரம், கலைகள் போன்ற துறைகளில் இருப்பவர்கள் லாபம் அடைவீர்கள்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 ,8428 99 8888 , +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whats app ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.