குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (07-06-2021 முதல் 13-06-2021 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888

மேஷம்:

மேஷ ராசிக்கு கெடுபலன்கள் எதுவும் சொல்ல இயலாத வாரம் இது. ராசிநாதன் செவ்வாய் நீச்ச பங்க நிலையில் நான்காம் இடத்தில் இருப்பது நல்ல அமைப்பு. சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமும், பங்குச்சந்தை சூதாட்டம் போன்ற ஸ்பெகுலேசன் துறைகளில் லாபம் வருவதும் இப்போது உண்டு.  தந்தைவழி உறவினர்களிடம் நெருக்கம் உண்டாகும். பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும்.


ராசிநாதன் சந்திரனுடன் பரிவர்த்தனை வலுவாகவும் இருப்பதால் எடுக்கின்ற முயற்சிகள் வெற்றி பெறும். பெண்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும். சிலருக்கு தாயார் வழியில் செலவுகளோ, விரயங்களோ இருக்கும். வீடு ரிப்பேர், வாகன பழுது போன்றவைகளை செய்ய வேண்டி இருக்கும். பணவரவு இருக்கும் என்றாலும் அதற்கு சரியாக வீண் செலவுகளும் இருக்கும் என்பதால் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யவும். அரசுத்துறையில் இருப்பவர்களுக்கு இது நல்ல வாரம்தான்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு எண்ணம் போலவே எல்லாம் நடக்கின்ற வாரம் இது. சுக்கிரன் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதால் பெண்களின் மூலமான அனுகூலங்களும், நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கிடைக்காமல் போன சில விஷயங்களும் இப்போது கிடைக்கும். சுக்கிரன் இரண்டில் இருப்பதால் உங்களில் சிலருக்கு வாழ்க்கைத் துணையால் செலவுகள் இருக்கலாம் அல்லது வீடு ரிப்பேர், வீட்டை அழகுபடுத்துதல் போன்ற செலவுகள் இருக்கலாம். வீடு வாகன விஷயங்களில் புதிய மாற்றங்கள் இருக்கும்.

சிலருக்கு ஒரு காரியத்தை நல்லவிதமாக முடித்து பாராட்டுப் பெறக்கூடிய சம்பவங்கள் இருக்கும்.  மூன்றாமிட செவ்வாயால்  பொருளாதார மேன்மைகள்   இருக்கும். அதிகாரம் செய்யும் பதவியில் உள்ளவர்களுக்கு இந்த வாரம்  சிறப்பான வாரம். சிலருக்கு எதிர்பார்த்த சில விஷயங்கள் கிடைக்காமல் தள்ளிப் போகும். அனைத்து விஷயங்களிலும் பொறுமையை கடைப்பிடியுங்கள். நடுத்தர வயதுக்காரர்களுக்கு வாழ்க்கைத்துணை விஷயத்தில் சிறப்பான சம்பங்கள் இப்போது இருக்கும்.

மிதுனம்:

மிதுன ராசியை இதுவரை வாட்டி வதைத்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் இனிமேல் உங்களிடம் இருக்காது. ராசிநாதன் புதன் பரிவர்த்தனை வலுவாக இருப்பதும் யோகாதிபதிகளான சுக்கிரனும், சனியும் நல்லநிலையில் இருப்பதும் மிதுனத்திற்கு குறைகள் எதுவும் சொல்ல முடியாத அமைப்பு. அதேநேரத்தில் செலவுகளை குறிக்கும் விரயாதிபதி ராசியில் இருப்பதால் உங்களில் பெரும்பாலானவர்களுக்கு பெண்கள் சம்பந்தப்பட்ட விரையங்கள் உண்டு.

முக்கிய பலனாக என்றைக்கோ ஒருநாள் பிரதிபலன் பாராமல் செய்த உதவியால் இப்போது நல்லபலன்கள் கிடைக்கும். செவ்வாய் பாபத்துவ வலுவாக இருப்பதால் போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அவைகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது கடினம். தேவை இல்லாமல் யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். கூடுமானவரை எல்லோரையும் அனுசரித்து போவது நல்லது. தாயார், வீடு, வாகனம் வழியில் மன வருத்தங்கள் வரும். வீடு கட்டுபவர்கள் காண்ட்ராக்டர்களிடம் ஏமாற நேரிடும். கவனமாக இருங்கள்.

கடகம்:

உங்களின் கை தாழ்ந்து உங்களைப் பிடிக்காதவர் கை ஓங்கும் வாரம் இது. ராசிநாதன் சந்திரன் இருள் நிலையில் உள்ளதால் சிலருக்கு ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும். சிலருக்கு மருத்துவச் செலவுகள் இருக்கலாம். பாபத்துவ சனியின் பார்வையில் இருக்கும் செவ்வாயின் ராசி இருப்பால் உங்களுக்கு அதிகம் கோபம் வரும். யாரையாவது நீங்கள் கோபப்பட்டுத் திட்டி அதனால் ஏதாவது எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம் என்பதால் இந்த வாரம் கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது.

இளைய பருவத்தினர் வேலையில் அக்கறையுடன் இருங்கள். எட்டில்  இருக்கும் குரு உங்களை எங்கே கொண்டு போய் கவிழ்க்கலாம் என்று செயல்படுவார்  என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. சுக்கிரன் வலுவாக இருப்பதால் பெண்கள் விஷயத்தில் நன்மைகள் நடக்கும். சகோதரிகள் உதவுவார்கள். குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் இன்னும் நான்கு வாரங்களுக்கு ஒருவிதமான முடக்க நிலையை சந்திப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருக்க வேண்டும்.

சிம்மம்:

எதிர்ப்புகள் அனைத்தையும் நீங்கள் வெற்றி கொள்ளும் வாரம் இது. ஆறாம் இடத்தில் உள்ள சனியும், ஏழில் உள்ள குருவும் எதிர்ப்புகள் அனைத்தையும் ஒடுக்கி உங்களுக்கு வெற்றியைத் தேடித் தருவார்கள். சிலருக்கு தந்தையிடமிருந்து ஆதாயம் இருக்கும். இளைஞர்களுக்கு தேவையான ஒன்றை அப்பா தருவார். வெளிநாட்டு விஷயங்கள் பலன் அளிக்கும் என்பதால் அனைத்தும் இப்போது உங்களுக்கு ஆன்லைன் வழியாக நன்மை தரும். ஒருவரை நேரில் பார்க்காமலேயே அனைத்தையும் முழுமையாக முடித்து லாபம் பெறுவீர்கள்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட தொழில் விஷயங்களில் இனிமேல் எந்தவித சிக்கல்களும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. உங்களின் வேலையும் சுமுகமாகவே நடைபெறும். வேலை மாற்றத்தை எதிர்பார்க்கும் இளைய பருவத்தினருக்கு மாற்றங்கள் உண்டு.   அரசு ஊழியர்கள் அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு நேர்மையற்ற விஷயங்களை செய்யாதீர்கள்.  கணவன்-மனைவி உறவில் ஒருவருக்கு ஒருவர் புரிந்துணர்வு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு இது நல்ல நேரம். மேலிடத்தின் பார்வையில் உங்களின் உழைப்பு தென்பட்டு பதவிகள் கிடைக்கும்.

கன்னி:

வாரம் முழுவதும் ராசிநாதன் புதன் பரிவர்த்தனை நிலையில் இருப்பதும், வீடு, வாகனம், தாயார், கல்வி போன்றவைகளை தரும் நான்காம் அதிபதி குரு அவரைப் பார்ப்பதும் கன்னி ராசிக்கு மேற்கண்ட வகைகளில் நன்மைகளை தரும் அமைப்பு என்பதால் நல்லவை நடக்கும் வாரம் இது. சிலர் எதிர்கால வாழ்க்கைத் துணையை இப்போது சந்திப்பீர்கள். சுக்கிரன் வலுவாக இருப்பதால் காதல் வரும் நேரம் இது. இளைய பருவத்தினர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்த வேலை தொழில் அமைப்புகள் கூடி வரும்.

வீண் செலவுகளும், தேவையற்ற விரயங்களும் இருக்கும் என்பதை ராகுவுடன் இணையும் புதன் உணர்த்தினாலும் செலவு செய்வதற்கு ஏற்ப தேவையான வருமானமும் இருக்கும் என்பதை சுக்கிரனின் நிலை உறுதி செய்கிறது. கவலைகளுக்கு இடமில்லை. 12,13 ஆகிய தினங்களில் பணம் வரும். 5-ம்தேதி இரவு 11.27 மணி முதல் 8-ம்தேதி மதியம் 12.23 மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் இந்த நாட்களில் அலைச்சல் தரும் வேலைகளைச் செய்ய வேண்டாம். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

துலாம்:

துலாம் ராசிக்கு சிறப்புகளைத் தரும் வாரம் இது. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அனைத்தையும் ஜெயித்து உங்களுடைய சாமர்த்தியத்தை  நிலை நாட்டுவீர்கள்.  துலாத்திற்கு இனி ஒருபோதும் சரிவுகள் இல்லை. இந்த வாரம் இளைய பருவத்தினர் சிலருக்கு மனம் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். கொரோனாவின் பாதிப்புகளையும் மீறி உங்களுக்கு சில நன்மைகள் உண்டு. காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். பிள்ளைகளால் நல்ல விஷயங்கள் நடக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல் உண்டு.

வேறு வேறு ஊர்களில் பிரிந்து வேலை செய்யும் கணவன் மனைவிக்கு இப்போது ஒரே ஊருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். வார இறுதி நாட்களில் மட்டும் குடும்பத்தோடு இருந்த நிலை மாறி குடும்பம் ஒன்று சேரும். தென் மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும். 14,15,16 ஆகிய நாட்களில் பணம் வரும். 8-ம்தேதி மதியம் 12.23 மணி முதல் 11-ம்தேதி அதிகாலை 1.09 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் தொல்லைகள் எதுவும் இருக்காது. ஆயினும் மனம் ஒருநிலையில் இருக்காது.

விருச்சிகம்:

விருச்சிகத்தினருக்கு  இது யோகவாரமே. ஒரு குறிப்பிட்ட பலனாக உங்களில் சிலருக்கு ஒன்பதாம் வீட்டில் நீச்ச நிலையில் இருக்கும் ராசிநாதன் செவ்வாயால்  அப்பாவைப் பற்றி அல்லது அவரது ஆரோக்கியத்தைப் பற்றி வருத்தமான சம்பவங்கள் இருக்கலாம். தந்தையின் உடல்நிலையை கவனியுங்கள். இளைய பருவத்தினர் எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் வாரம்  இது. உங்களில் சிலருக்கு இப்போது இருக்கும் கொரோனா சூழ்நிலை வேலை தொழிலில் சாதகமான பலங்களைச் செய்யும்.

உங்களில் சிலருக்கு எதிர்காலத்தில் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த வாரம் நிர்ணயிக்கும். எதிர்ப்புகள் பலவீனமாகும். கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்கள் உண்டு. அரசு, தனியார்துறை ஊழியருக்கு இது நல்ல வாரமே. 11,12 ஆகிய நாட்களில் பணம் வரும். 11-ம் தேதி அதிகாலை 1.09 மணி முதல் 13-ம்தேதி மதியம்  12.32 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.

தனுசு:

பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தினரின் நல்ல வாரம் இது. தடைகள் எதுவும் இந்த வாரம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். நிலுவையில் இருக்கும் விஷயங்கள் முடிவுக்கு வந்து உங்களுக்கு சாதகமாக அனைத்தும் நடக்கும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். நல்லவை நடக்கும். காவல்துறை, கோர்ட் போன்றவற்றில் வழக்கு இருப்பவர்கள் சந்தோஷப்படும் அளவிற்கு வழக்கு சாதகமாகும். வேலை செய்யும் இடத்தில் உங்களைப் பிடிக்காதவரின் கை தாழ்ந்து உங்கள் கை உயரும்.

மூலம் நட்சத்திரத்தினரின் வேதனைகள் தீரப் போகிறது. தெய்வ அனுகூலம் முழுமையாக கிடைக்கும். அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த தொல்லைகள் தடைகள் தாமதங்கள்  விலகப் போகிறது. இனி எல்லா நாட்களும் உங்கள் நாட்கள்தான். உங்களில் சிலருக்கு வேலைக்கு செல்லும் மனைவியால் உதவிகளும் தேவைகள் நிறைவேறுதலும் இருக்கும். விருப்பமான வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். அடைக்கப்பட்ட அனைத்து கதவுகளும் இனி திறக்கும். நீங்களும் அதை உணருவீர்கள்.

மகரம்:

தகராறுகள் வரும் வாரம் இது. உங்களில் திருவோணம் நட்சத்திரக்காரர்களில் மது அருந்தும் பழக்கம் உள்ள இளைஞர்கள் சிறிது காலம் அதனைக் கை விடுவது நல்லது. முடியவில்லை என்றால் அந்த நேரத்தில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். சனி உங்கள் ஜென்மராசியில் சென்று கொண்டிருப்பதால் பலவிதமான தொல்லைகளை அவரது காரகத்துவமான மதுப் பழக்கத்தின் மூலமாகவே தருவார் என்பதால் மனதை ஜெயிக்க முடிந்தால், மரணத்தையும் ஜெயிக்கலாம்.

குழந்தைகளில் உடல்நலத்தில் அக்கறையும், கவனமும் தேவைப்படும். சிறு குழந்தைகளுக்கு சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்வது நல்லது. எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிருங்கள். அவசரம் என்று கிடைக்கும் வட்டியில் பணம் வாங்கினால் பின்னால் கடன் பிரச்னைகளால் மனக் கலக்கம் வரலாம். பணியிடங்களில் எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். பொறுமை தேவைப்படும் வாரம் இது,

கும்பம்:

கும்ப ராசியினர் திருப்புமுனையான நல்ல விஷயங்களை சந்திக்கும் வாரம் இது. அதேநேரத்தில் முப்பதுவயதுகளில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு ஏழரைச் சனி அமைப்பின் காரணமாக பின்னடைவுகள் வரக்கூடும் என்பதால் எதிலும் அகலக்கால் வைக்காமல், புதிய முயற்சிகளைத் தொடங்காமல் கவனத்துடன் இருக்க வேண்டிய வாரமாகவும் இது இருக்கும். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். 

பிள்ளைகள் விஷயத்தில் சிலருக்கு மனவருத்தங்களும் செலவுகளும் இருக்கும். சனி குழந்தைகளின் போக்கில் மாற்றங்களை உண்டு பண்ணுவார் என்பதால் பருவ வயதுக் குழந்தைகளின் மேல் ஒரு கண் வைப்பதும் அவர்களை கண்காணிப்பதும் நல்லது. சிலருக்கு வாழ்க்கைத்துணைவர் விஷயத்தில் சில ஏறுக்குமாறான விஷயங்கள் நடக்கும். கணவன் மனைவி உறவில் கருத்து வேறுபாடுகள் இருக்கும். இருவரில் ஒருவர் பொறுத்துப் போவதன் மூலம் எதையும் சமாளிக்கலாம் என்பதால் பொறுத்துப் போங்கள்.

மீனம்:

மீன ராசிக்கு இது தடைகள் உள்ள வாரமாக இருக்கும். யோகாதிபதி செவ்வாய் நீச்சனாக இருந்தாலும் பரிவர்த்தனை அமைப்பில் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் இருக்காது. கொரோனாவின் தயவால் உங்களில் வேலை,தொழிலில் நிம்மதியின்றி அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு அமைதி கிடைக்கும் நேரம் இது. பொறுப்பில் இருப்பவர்களுக்கு சில சங்கடங்கள் இருக்கும். அடுத்தவர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். கீழே வேலை பார்ப்பவரிடம் எந்த விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அதனால் சிக்கல்களும் நம்பிக்கை துரோகங்களும் இருக்கும்.இளைய பருவத்தினருக்கு திருமண காலம் கூடி வருகிறது. தடைகள் நீங்கி வரன்கள் கூடிவந்து நவம்பருக்கு மேல் திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். ஒரு சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து வாழ்க்கைத் துணைவரை அடையாளம் காண்பீர்கள். எவரையும் நம்பி முதலீடு செய்வதோ, அடுத்தவரை நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவதோ வேண்டாம். புதிதாக வேலை தேடிகொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும்

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 ,+91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.