மிதுனம்: 2021 ஜுன் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888

மிதுனம்:

கோரனாவின் பாதிப்பில் இருந்து நீங்கி மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூன் நல்ல மாதமாகவே இருக்கும். இந்த மாதம் யோகாதிபதி சுக்கிரன் ராசியிலேயே அமர்ந்து,

குருவும் ராசியைப் பார்ப்பது யோக அமைப்பு என்பதால் இது உங்களுக்கு பின்னடைவுகள் இல்லாத மாதமாகவே இருக்கும். வாழ்க்கையில் இன்னும் முன்னேற்றம் வரவில்லையே என்று எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கும் உங்களில் சிலருக்கு இப்போது இருக்கும் அனைத்துப் பிரச்னைகளும் விலகி நல்ல மாற்றமும், முன்னேற்றமும் உண்டு. எனவே மிதுனத்தினர் நன்மைகளை எதிர் நோக்கும் மாதம் இது.


இதுவரை முடியாமல் இழுத்துக் கொண்டு இருந்த விஷயங்கள் சாதகமான முடிவுக்கு வரும். ராசிநாதன் நட்பு வீட்டில் இருப்பதால் பணவரவும், தனலாபங்களும் இருக்கும். கலைஞர்களுக்கு நற்பலன்கள் உண்டு. தடைபட்டுப் போன வேலைகள் நடக்கும். தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வரும். விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு சூழ்நிலைகள் மாறும். உலகம் முழுக்க வேலை நீக்கம் இருந்தாலும் வேலை கிடைக்காத மிதுன ராசி இளையபருவத்தினர் வேலையில் சேருவீர்கள். குருபகவான் ஒன்பதாமிடத்தில் இருப்பதால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேருவீர்கள்.

எட்டில் இருக்கும் சனியால் நிதிநிலைமை சிறிது பாதிக்கப்படலாம் என்றாலும் ராசியைக் குரு பார்ப்பதால் கொஞ்சம் தடுமாறினாலும் சுதாரித்துக் கொண்டு சமாளித்து விடுவீர்கள். சிலர் மருத்துவ விஷயங்களுக்கு பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும். ராகு வலுவாக இருப்பதால் விரயங்களும் வீண் செலவுகளும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களால் மறைமுக தொல்லைகள் வரும். இந்த வாரம் ஒரு சிறப்பு பலனாக சகோதர சகோதரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். உங்களிடம் காரியம் சாதித்து கொள்வார்கள். அவர்களுக்கு நீங்கள் உதவ முடியும். கடன் பிரச்னைகள் தீரும். வாடகை பாக்கி தர முடியும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் கிடைக்கும். சுயதொழில் செய்பவர்கள் வளம் பெறுவார்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இது நல்ல மாதமே. குறிப்பாக காவல்துறை, ரெவின்யூ போன்ற அதிகாரம் மிக்க துறையினர் வளம் பெறுவார்கள். வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு  திருமணம் உறுதியாகும். மிதுனத்திற்கு நல்லவை நடக்கும் மாதம் இது.

1,2,4,8,10,13,15,17,18,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 26-ம்தேதி காலை 9.55 மணி முதல் 28 -ம் தேதி மதியம் 1.00  மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் தூரப்பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகள் ஆரம்பங்கள் எதையும் மேற்கொள்ள வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.