குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (24-05-2021 முதல் 30-05-2021 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888

மேஷம்:

ராசிநாதன் செவ்வாய் மூன்றாம் இடத்தில் சுக்கிரனின் இணைவில் குருவின் பார்வையில் இருக்கும் நல்ல வாரம் இது. மேஷ ராசிக்கு கஷ்டங்கள் விலகி விட்டது. கோரனா பாதிப்பில் இருந்தும் சீக்கிரம் மீண்டு வருவீர்கள். இனிமேல் நல்ல வாழ்க்கைக்கு திரும்புவீர்கள். கடந்த சில வாரங்களாக வருமானம் இல்லை என்பதால் இந்தவாரம் செலவுகள் அதிகம் இருக்கும். ஒரு குறிப்பிட்ட பலனாக எவரிடமும் கருத்து மோதல்களிலோ, வாக்குவாதங்களிலோ ஈடுபட வேண்டாம். யாரையாவது நீங்கள் கோபப்பட்டு திட்டினால் அது நீண்டநாள் மனஸ்தாபத்தில் கொண்டு போய்விடும்.

இரண்டு, எட்டில் ராகு கேதுக்கள் இருப்பதால் எந்த ஒரு நல்லதும் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகே கிடைக்கும். மறைமுக எதிரிகளும், போட்டிகளும் இருக்கும். எந்த ஒரு விஷயமும் நீண்டமுயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும். கடினஉழைப்பும் விடாமுயற்சியும் தேவைப்படும். 25 ம் தேதி இரவு 10.55 மணி முதல் 27ம் தேதி இரவு 10.29 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

ரிஷபம்:

ஐம்பது வயதுகளுக்குள் இருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு பண விஷயத்தில் சில துரோக அனுபவங்கள் கிடைக்கும் வாரம் இது. உங்களில் ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு யாரையாவது நம்பி ஏமாறும் கசப்பான அனுபவம் உண்டு. தகுதி இல்லாதவரை நம்புவது உங்கள் குற்றம் என்பதால் ஏமாற்றுபவரை குறை சொல்லி பிரயோஜனம் இல்லை. ரிஷப ராசிக்காரர்களுக்கு பணம், உறவு, நட்பு ஆகியவைகளை பற்றி கிரகங்கள் சொல்லி கொடுக்கும் வாரம் இது. ஆயினும் எதுவும் எல்லை மீறாது. கவலை வேண்டாம்.

இனி உங்களுக்கு கெடுபலன்கள் எதையும் சொல்வதற்கு இல்லை. அதேநேரத்தில் எதுவும் படிப்படியாகத்தான் நடக்கும். நொந்து கொள்ளாதீர்கள். கடந்த ஒரு வருடம் நீங்கள் அனுபவித்த தொல்லைகள் ஐந்து நிமிடத்தில் போய் விடாது. அப்படிப் போனால் அது தொல்லையாக இருக்காது. உங்களின் நம்பிக்கை திரும்பக் கிடைக்கும் வாரம் இது. 27 ம் தேதி இரவு 10.29 மணி முதல் 29 ம் தேதி இரவு 11.39 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மனம் ஒரு நிலையில் இருக்காது. யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

மிதுனம்:

ராசிநாதன் புதன் ராசியில் குரு பார்வையில் அமர்ந்திருக்கும் நல்ல வாரம் இது. ராசியின் யோகர்களான சுக்கிரன், சனி, புதன் மூவரும் ஆட்சி மற்றும் நட்பு நிலையில் இருப்பதால் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கோரோனா தொல்லைகளையும் மீறி மன நிம்மதி உண்டு குறிப்பாக திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் நம்பிக்கை கிடைக்கப் பெறுவீர்கள். இளைய பருவத்தினருக்கு  எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக அமையக்கூடிய சம்பவங்களும் அறிமுகங்களும் இப்போது நடக்கும். இதுவரை இல்லாத அளவிற்கு மனதில் நிம்மதி இருக்கும்.

பொதுவாக மிதுனத்தினர் பொறுமைசாலிகளாக இருப்பீர்கள். பள்ளிப் படிப்பை விட அனுபவத்தை வைத்தே வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். சுலபத்தில் உங்களை யாரும் ஏமாற்ற முடியாது. யாராவது உங்களை அன்பு காட்டி ஏமாற்றினால்தான் உண்டு. பெண்களுக்கு இந்த வாரம் எதிர்பார்த்த வாய்ப்புகள் வரும். சுற்றுப்புறங்களில்  பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள்.  உங்களில் சிலருக்கு வந்து கொண்டிருந்த நிரந்தர வருமானம் போய் விட்டதே என்ற கவலை இருக்கும். ஆயினும் அது இந்த வாரம் சரி செய்யப்படும்.

கடகம்:

யோகாதிபதி செவ்வாய் பனிரெண்டாம் இடத்தில் இருந்தாலும் சுக்கிரன் இணைவு, குருவின் பார்வை என நல்ல நிலையில் இருப்பதாலும், சூரியன் லாப ஸ்தானத்தில் உள்ளதாலும் கடக ராசிக்காரர்கள் சிக்கல்களில் இருந்து வெளியே வரும் வாரம் இது. அதேநேரத்தில் சனியின் பார்வை ராசிக்கு இருப்பதால் உங்களில் சிலருக்கு மனம் பதற்றப்படும் விஷயங்கள் நடக்கும். எதிலும் நிதானமாகவும் இருக்க வேண்டிய வாரமிது. ஐந்தில் இருக்கும் கேதுவால் சிலருக்கு கொடுக்கல் வாங்கல்களில் ஏமாற்றம் இருக்கும் என்பதால் பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை. கொரானாவின் தாக்கத்தையும் மீறி நல்லவை நடக்கும் வாரம் இது.

மனதில் தைரியம் இருக்கும். வேலை, தொழில் விஷயங்களில் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டும், சஞ்சலப்பட்டுக் கொண்டும் இருந்தவர்களுக்கு இனிமேல் தெளிவு பிறக்கும். சுக்கிரன் சுப வலுவுடன் இருப்பதால், வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா போன்ற பெண்கள் சம்பந்தப்பட்ட மங்கள நிகழ்ச்சிகளுக்கு தகவல் வரும். இந்த வாரம் ரேஸ், லாட்டரி, பங்குச்சந்தை, சூதாட்டம் போன்றவைகள் கை கொடுக்காது. மேற்கண்ட இனங்களில் கவனமுடன் இருக்கவும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களின் தொழில்துறை சிக்கல்கள் தீரும் வாரம் இது. ராசிநாதன் சூரியன் பத்தில் இருப்பதால் உங்களில் சிலருக்கு வெகுநாட்களுக்குப் பிறகு இந்த வாரம் வருமானம் உண்டு. சூரியன் ராகுவுடன் இருப்பதால் சிலர் மறைமுகமான தொழில் வேலைகளில் ஈடுபட்டு பெயரைக் கெடுத்து கொள்ளாமல் வெற்றியும் பெறுவீர்கள். உங்களில் பூரம் நட்சத்திரக்காரர்கள் மேன்மை பெறுவீர்கள். கொரனாவின் பாதிப்பால் சிலருக்கு வருமானமே இல்லாமல் வீண்செலவுகள் இருக்கும். மகம் நட்சத்தினருக்கு தொழில்ரீதியான பயங்கள் இருக்கும்.

திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு இப்போது திருமண பேச்சு வந்து தடைபட்டு நிற்கும். குறிப்பிட்ட சிலர் விரும்பிய வாழ்க்கையை அடைய முயற்சி மேற்கொள்வீர்கள். வீட்டிற்குப் பயந்து காதலை மனதிற்குள் பூட்டி ஒளித்து வைத்திருந்தவர்கள் தைரியம் வந்து பெற்றோரிடம் சொல்வீர்கள். வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் கொரனாவினால் இருந்து வந்த தடங்கல்களும் எதிர்மறை அனுபவங்களும் இனிமேல் இருக்காது. தொழில் நல்லபடியாக நடக்கும். வியாபாரம் பெருகும். 

கன்னி:

ராசிநாதன் புதன் ராகுவுடன் இணைந்தாலும் வார பிற்பகுதியில் ராசியில் ஆட்சி நிலையில் இருப்பதால் கன்னியினர் சோதனைகளை மாற்றிக் கொள்ளும் வாரம் இது. எட்டுக்குடைய செவ்வாய் பத்தாமிடத்தில் இருப்பதால் உங்களில் சிலருக்கு வருமானம் விரையமாகும் நிலையும் வருமானமே இல்லாத நிலையும் உண்டு. உங்களில் அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் தேவையின்றி செலவு செய்வீர்கள். ராசிநாதன் ஆட்சியாக  இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் மன உறுதியுடன் செயல்படுவீர்கள். இது உங்களுக்கு நல்ல வாரம்தான்.

ஏழாமிடம் சனியின் பார்வையால் பாபத்துவம் அடைந்திருப்பதால் வாழ்க்கைத் துணையுடன் சண்டை போடுவீர்கள். ராசிக்கு செவ்வாய் பார்வை இருப்பதால் திடீரென மூட்அவுட் ஆவீர்கள். முகத்தை சிடுசிடுவென மாற்றிக்கொள்வீர்கள். நண்பர்கள் உங்களை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறிப் போவார்கள். நீங்களே இந்த வாரம் மற்றவர்களுக்கு புரியாத புதிராகத்தான் இருப்பீர்கள்.  அனைத்து விஷயங்களிலும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு நிம்மதி தெரியும் வாரம் இது.

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து, ராசிக்கு குருபார்வை இருக்கும் இருக்கும் வாரம் இது. கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் எவ்வித தடங்கலும் இல்லாமல் நினைத்த காரியம் நன்றாகவே முடியும். உங்களில் சுவாதி   நட்சத்திரக்காரர்களுக்கு இருந்து வந்த கடன் தொல்லை, உடல்நலக் கோளாறுகள் தீரும். பெண்களுக்கு நல்ல பலன்கள் இருக்கும்.  வேலைக்கு செல்லும் பெண்களுக்கும், குடும்பத்தலைவியாக இருக்கும் பெண்களுக்கும் நன்மைகள் நடைபெறும். மனம் தெளிவாக இருக்கும். கோரனா தொல்லைகள் இனி இருக்காது. 

யோகாதிபதி சனி  ஆட்சி நிலையில் ராசியைப் பார்ப்பதால் குடும்ப விஷயங்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நன்மைகள் இருக்கும். வார ஆரம்பத்தில் வேலை, தொழில் பற்றிய மனக்கலக்கம் உருவானாலும் நண்பர்கள் உதவியுடன் பிரச்சினையை சமாளிக்க முடியும். மருத்துவத் துறையில் இருப்பவர்கள், காய்கறி, மளிகை கடைக்காரர்கள், இறைச்சி வியாபாரிகள் போன்றவர்களுக்கு நன்மைகள் இருக்கும். வைரசின் பாதிப்பில் இருந்து நீங்கள் மீண்டு வரும் வாரம் இது.

விருச்சிகம்:

வார ஆரம்பத்தில் எட்டில் இருக்கும் செவ்வாயாலும் மற்ற கிரகநிலைகளாலும் நண்பர்கள் விஷயத்தில் சண்டை, சச்சரவுகள், கருத்து வேறுபாடு தோன்றும். எதிலும் விட்டுக் கொடுத்து போவது நல்லது. மற்றவர் செய்யும் தவறையும் பொறுத்துப் போங்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பணவரவு இருக்காது. அதே நேரத்தில் மூன்றில் சனி இருப்பதால்  எத்தகைய பிரச்னைகளையும் சமாளிப்பீர்கள். ராசியில் கேது சுபத்துவமாக இருப்பதால் கோரனாவையும் மீறி விருச்சிகத்திற்கு இது யோக வாரம்தான். 

அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு இருந்து வந்த குழப்பங்கள் தீரும். ராசிநாதன் செவ்வாய் அஷ்டமாதிபதி புதனின் ராசியில் இருப்பதால் பொருளாதார சிக்கல்கள் வரும். உங்களில் சிலருக்கு இந்த வாரம் ஆன்மீக தொடர்புகள் கிடைக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். கலைஞர்கள் வளம் பெறுவார்கள். பெரும்பாலான கிரகங்கள் நல்ல நிலையில் உள்ளதால் சோதனைக்குப் பிறகு விருச்சிகத்தினர் சாதிக்கும் வாரம் இது.

தனுசு:

ஐந்திற்குடைய செவ்வாய் சுக்கிரனுடன் இணைந்து ஏழில் இருப்பதால் நீங்கள் சொல்வதை பிள்ளைகள் கேட்காமல் அவர்கள் இஷ்டத்திற்கு ஏதாவது செய்து, அது சிக்கலில் முடிந்து, கடைசியில் அந்த சிக்கலையும் நீங்களே தீர்க்க வேண்டிய வரும். பிள்ளைகளின் மேல் ஒரு கண் வைக்கவும். உங்களில் மூலம் நட்சத்திரக்காரர்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் குழப்பமாகி முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பீர்கள். நீண்டநாள் இருந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். மிக முக்கியமாக கோரனா பாதிப்பில் இருந்து வெளியே வருவீர்கள்.

விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டியது அவசியம். எவரையும் நம்பி ஜாமீன் போடுவதோ, யாருக்கும் வாக்கு கொடுப்பதோ கூடாது. போட்டி பந்தயங்கள், லாட்டரி சீட்டு, ரேஸ் போன்றவை தற்போது கை கொடுக்காது. நெருங்கியவர்களே எதிராகத் திரும்ப வாய்ப்பு இருப்பதால் அனைத்திலும் கவனமாக இருங்கள். உறவினர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்கள், சிறு சண்டைகள் வரலாம். வேலைப்பளு அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மகரம்:

வாரம் முழுவதும் யோகாதிபதி சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருப்பதால் மகர ராசிக்கு வெளிப்படையாக எதுவும் தெரியாமல் மறைமுக நல்லவை நடக்கும் வாரம் இது. நான்குக்குடைய செவ்வாயும் ஆறாம் வீட்டில் சுபத்துவமாக இருப்பதால் வேலை, தொழிலில் லாபம் உண்டு. கோரனாவினால் நஷ்டப்பட்ட தொழில்துறையினர் இனிமேல் வாய்ப்புகளை பெறுவீர்கள். நூதனக் கருவிகளை இயக்கும் துறையினர் முன்னேற்றம் அடைவார்கள். உங்களின் திறமைகள் இப்போது வெளிப்படும். எதிரிகளை வெல்வீர்கள்.

உதவி ஸ்தானம் வலுப்பெறுவதால் இதுவரை யாரிடமாவது நீங்கள் உதவி கேட்டு அதைச் செய்ய முடியாத நிலையில் இருந்தவர்கள் இந்த வாரம் உங்களுக்கு உதவுவார்கள். பிள்ளைகள் விஷயத்தில் ஏதேனும் மனவருத்தம் வரலாம். நிதானம் தேவைப்படும் வாரம் இது. அரசு, தனியார்துறை ஊழியருக்கு இந்த வாரம் நல்ல வாரமே. காவல்துறை போன்ற அதிகாரம் மிக்க துறையினர் வளம் பெறுவார்கள். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. மாணவர்கள் இனிமேல் படிப்பீர்கள்.

கும்பம்:

சுக்கிரன் ஐந்தில் அமர்ந்து குருவின் பார்வை பெறும் வாரம் இது. சுக்கிர தயவால் உங்களை எதிர்த்து கொண்டிருந்தவர்கள் இப்போது அடிபணிவார்கள். உங்களின் கருத்துக்களுக்கு இதுவரை கிடைக்காத அங்கீகாரம் தற்போது கிடைக்கும். உங்களில் அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு குடும்ப விஷயங்களில் நல்ல திருப்பங்கள் உண்டு. குடும்பத்து பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். குழந்தைகளின் எதிர்கால நன்மைக்கான சில காரியங்களை இப்போது செய்ய முடியும்.

இளைய பருவத்தினர் சிலருக்கு காதல் வரும். நான்கு, பத்தில் இருக்கும் ராகு-கேதுவால் சிலருக்கு மறைமுகமான வருமானங்கள் இருக்கும். இதுவரை எதிர்ப்பு உருவாகிக் கொண்டிருந்த விஷயங்கள் இப்போது சாதகமாக முடியும். இன்னும் சில வாரங்களில் குரு மீண்டும் விரைய வீட்டிற்கு சென்றவுடன் தற்போது கோரனாவினால் ஏற்பட்ட பாதிப்புகள் மெல்ல மெல்ல குறையும். வருமானம் வரும் என்பதால் இருக்கும் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. நிதானமாக இருப்பதன் மூலம் சாதிக்கும் வாரம் இது.

மீனம்:

உங்கள் ராசிநாதன் குரு பனிரெண்டில் மறைந்து தொல்லைகளைக் கொடுக்கும் சவாலான வாரம் இது. உங்களில் இளம்பருவ ரேவதியினருக்கு சகல விஷயத்திலும் நெருக்கடிகள் இருக்கும். குறிப்பாக இப்போது முதுகில் குத்துதல், காலை வாருதல் போன்ற நம்ப முடியாத எதிர்மறை விளைவுகளால் மனக்கலக்கம் அடைவீர்கள். ஆயினும் ராசியின் யோகர்கள் வலுவாக இருப்பதால் நீங்கள் எதிரிகளை ஜெயிக்கும் வாரம் இது. குறிப்பாக பணம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளும் வாரம் இது.

வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள் எந்த ஒரு நிலையிலும் அடுத்தவர்களை நம்ப வேண்டாம். என்னதான் வேலை செய்தாலும் தகுந்த பிரதிபலன் கிடைப்பது கஷ்டமாக இருக்கும். உங்களில் பலர் கோரனாவின் பாதிப்பால் துவண்டு போய் இருப்பீர்கள். 23 ம் தேதி இரவு 11.04 மணி முதல் 25 ம் தேதி இரவு 10.55 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள். சோதனைகள் எதுவும் இல்லாத வாரம் இது.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 ,+91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.