குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (12-04-2021 முதல் 18-04-2021 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத வாரம் இது. வேலை, தொழில் நிலைகளில் இருக்கும் சில கட்டுப்பாடுகளால் ஒரு ஜெயில் கைதியைப் போல உணருவீர்கள். நினைத்ததை நினைத்தார் போலவே செயல்படுத்த முடியாது. கைகள் கட்டப்பட நிலையில் நீங்கள் இருக்கும் வாரம் இது. பத்தில் சனி இருப்பதால் குழப்பங்கள் இருக்கும். அதே நேரத்தில் உங்களில் சிலர் கடினமான வேலைகளை எடுத்துச் செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். மேஷம் எதிலும் அவசரப் படக்கூடாத வாரம் இது.

இளைய பருவத்தினருக்கு நட்பு வட்டாரங்களில் சிக்கல்கள் இருக்கும். நெருங்கியவர்களுடன் கருத்து வேறுபாடு உண்டு. மதுக் கடைகளுக்கு இரவில் செல்ல வேண்டாம். நீங்கள் சும்மா இருந்தாலும் வம்புகள் தேடி வரும் வாரம் இது. எதிலும் பொறுமை தேவை. உங்களில் சில வயதானவர்கள் மருத்துவ விஷயங்களுக்கு பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும். இரண்டில் ராகு வலுவாக இருப்பதால் வருமானமே இல்லாத நிலையில்  விரயங்களும் வீண் செலவுகளும் இருக்கும். உறவுகளால் மறைமுக தொல்லைகள் வரும்.

ரிஷபம்:

ரிஷபத்தினர் இந்த வாரம் செலவு செய்வதில் கவனம் தேவை. தேவையற்ற விரையங்கள் இருக்கும். அவசியமின்றி கடன் வாங்க வேண்டாம். ஆறாமிடம் வலுப் பெறுவதால்  சிறிய ஆரோக்கிய பிரச்சனை என்றாலும் ஒரு முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். எதையும் நிதானமாக சிந்திப்பது நல்லது. குறுக்குவழி வேண்டாம்.  எதிலும் அவசரப்பட வேண்டாம். சிக்கல்கள் எதிலாவது ஆறைத் தொடர்பு கொள்ளும் சுக்கிரன் மாட்டி வைப்பார். அனைத்து விஷயங்களும் இழுத்துக்கொண்டே போய் வார இறுதியில்தான் நன்றாக முடியும்.

பொறுமை தேவைப்படும் வாரம் இது. குறிப்பாக வேலை தொழில் இடங்களில்  எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் கோபத்திற்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற தெய்வ வாக்கை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள், மருத்துவம்  சம்பந்தபட்டவர்களுக்கு நல்ல தகவல் உண்டு. இரண்டில் இருக்கும் செவ்வாயை குரு பார்ப்பதால் ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீண்ட நாட்கள் எதிர்பார்த்த விஷயம் முடியும்.

மிதுனம்:

வார ஆரம்பத்தில் பங்கம் எதுவும் இன்றி ராசிநாதன் புதன் நீச்ச நிலையில் இருப்பதால் மிதுனத்தினருக்கு  மனக் குழப்பங்கள் அதிகரிக்கும் வாரம் இது. ஆயினும் எந்த ஒரு விஷயத்தையும் மனஉறுதியுடன் சமாளிப்பீர்கள். உங்களில் சிலருக்கு அனைத்திலும் இப்போது நெருக்கடிகள் இருக்கும். அஷ்டமச் சனியின் தயவால் மன அழுத்தம் உள்ள வாரம் இது. உங்களில் சிலருக்கு அடுத்தவர் வேலையையும் செய்ய வேண்டியிருக்கும். வார இறுதிக்கு பிறகு இந்த நிலை மாறி நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள்.

பணியிடங்களில் கருத்து  வேறுபாடுகள் தோன்றி கோபப்படும் சூழல் உருவாகும். வாரம் முழுவதும் அவசரப்படாமல் நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்லது.  சுக்கிரன் வலுவாக இருப்பதால் செலவுகள் குறையும். வீண் விரையங்கள் இருக்காது. குடும்பத் தலைவியாக இருக்கும் பெண்களுக்கு கணவருடன் இருந்த பிணக்குகள் தீர்ந்து சந்தோசம் இருக்கும். சிலநேரம் குழந்தைகளின் தொல்லைகளைத் தாங்க முடியாமல் எரிச்சல் அடைவீர்கள். துன்பத்திலும் இன்பம் காணும் வாரம் இது.

கடகம்:

யோகாதிபதிகள் குரு, செவ்வாய் இருவரும் எட்டு, பனிரெண்டாம் இடங்களில் மறைவதால் கடக ராசிக்கு இன்னும் சில வாரங்களுக்கு வருமானங்கள் இன்றி விரையங்கள் மட்டும் உண்டு. கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. சுக்கிரன் வலுப் பெறுவதால் உங்களில் சிலர் பெண்களுக்கு அடங்கிப் போக வேண்டியிருக்கும். தாய் வழி உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும். நடுத்தர வயதுக்காரர்கள் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம்.

இளைய பருவத்தினர் உங்களிடம் இப்போது இருக்கும் சோம்பலை விட்டு ஒழியுங்கள். அதிகாலையில் எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்து வேலையை பார்க்க வந்து விட்டாலே பாதி வேலை முடிந்து விட்டதாக அர்த்தம். எனவே சுறுசுறுப்பாக ஆக்டிவாக இருங்கள். நீண்டகாலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு இப்போது கூடுதல் சம்பளத்துடன் கிடைக்கும்.  கடன் வாங்கி வீடு அல்லது பிளாட் வாங்கும் யோகம் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள்  தங்களின் திறமையை அடுத்தவர்களுக்கு காட்டும் வாரம் இது. வார இறுதியில் சூரியன் ஒன்பதாமிடத்திற்கு மாறி உச்சவலுவாக இருப்பதால் எல்லா விதமானா நன்மைகளும் உங்களுக்கு நடக்கும் வாரம் இது. வாரம் முழுவதும் மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். துணிவுடன் எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். சிம்மத்திற்கு இப்போது மிகவும் நல்ல நேரம். எதையும் சாதிக்கலாம். ரிஸ்க் எடுத்து வெற்றி பெறலாம். உங்களைப் பற்றி நீங்களே தெரிந்து கொள்ளும் நல்ல வாரம் இது.

வருமானம் இருந்தாலும் செலவுகளும் விரயங்களும் இருக்கும். வயதானவர்களை வீட்டில் வைத்திருப்பவர்கள் அவர்களது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு இது மிக நல்ல வாரம். இதுவரை உங்களை, உங்களின் திறமைகளைப் புரிந்து கொள்ளாத வாழ்க்கைத் துணைவர் இனிமேல் புரிந்து கொள்ள ஆரம்பிப்பார். ஒரு சிறப்பு பலனாக தொல்லைப் படுத்திக் கொண்டிருந்த போட்டி, பொறாமைகள் இப்போது விலகும். சிம்மத்தினர் நிம்மதி காணும் வாரம் இது.

கன்னி:

இதுவரை பிரச்னைகளைக் கண்டு ஒதுங்கிப் போய்க் கொண்டிருந்த கன்னியினர் இந்த வாரம் வலியப் போய் பிரச்னைகளில் மாட்டுவீர்கள். ராசிநாதன் புதன் எட்டில் மறைவதால் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவசியத் தேவைகளைத் தவிர வேறு எதற்கும் கடன் வாங்க வேண்டாம். மற்றபடி பிரச்னைகள் இல்லாத வாரம்தான் இது. ராசிநாதன் மறைந்தாலும் செவ்வாயுடன் பரிவர்த்தனை யோகம் அடைவதால் உங்களில் சிலருக்கு வீட்டில் உற்சாகம் தரக்கூடிய சம்பவங்கள் நடக்கும். சிலருக்கு வெளிமாநிலம் வெளிநாடு விஷயத்தில் நல்ல தகவல் உண்டு.

உங்களில் சிலர் வெகுநாட்களாக தவற விட்ட உறவுகளை இப்போது உணருவீர்கள். சிலர் மறந்து விட்ட தொலைபேசி எண்களை தேடி எடுத்து நட்பு, உறவுகளை புதுப்பித்துக் கொள்வீர்கள். பெற்றோர்களுக்கு கல்லூரி செல்லும் வயதில் உள்ள குழந்தைகள் விஷயத்தில் சண்டைகள் வரலாம். தலைமுறை இடைவெளி என்பதை இப்போது உணருவீர்கள். 12-ம்தேதி காலை 11.29 முதல் 15-ம்தேதி அதிகாலை 12.09 மணி வரை சந்திராஷ்டம நாட்கள். எதிலும் கவனம் தேவை  

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் ஏழில் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் துலாம் ராசிக்கு இந்த வாரம் கெடுபலன்கள் எதுவும் இல்லை. இந்த மாதம் முழுவதும் இது நீடிக்கும். அதிசார குரு ராசியைப் பார்ப்பதும் துலாம் ராசிக்காரர்களுக்கு குடும்ப விஷயங்களிலும், தொழில் விஷயங்களிலும் நன்மைகளைத் தரக்கூடிய அமைப்பு என்பதால் உங்களுக்கு நல்லது நடக்கும் வாரம் இது. ஒரேசமயத்தில் குருவும், சுக்கிரனும், ராசியைப் பார்ப்பது நல்லதை மட்டுமே தரும். குறிப்பிட்ட பலனாக சிலருக்கு குறுக்குவழியில் பணவரவு இருக்கும்.

துலாமிற்கு மேன்மை தரும் வாரம் இது. செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இதுவரை எல்லா விஷயங்களிலும் இருந்து வந்த தடைகள் விலகும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு நல்ல திருப்பங்கள் இருக்கும். கவலைகள் தீரும். வியாபாரத்தில் போட்டியைச் சந்தித்தவர்கள் அது விலகுவதைக் காண்பீர்கள். வேலை செய்யுமிடங்களில்  நல்ல பலன்கள் இருக்கும். 15-ம்தேதி அதிகாலை 12.09 முதல் 17-ம்தேதி அதிகாலை 1.09 மணி வரை சந்திராஷ்டம நாட்கள்.

விருச்சிகம்:

இதுவரை செய்யாமலும், சொல்லாமலும் யோசிக்க மட்டுமே செய்து கொண்டிருந்த விஷயங்களில் தயக்கங்கள் விலகி இந்த வாரம் பளிச்சென்று தெளிவான முடிவுகளை விருச்சிகத்தினர் எடுப்பீர்கள். அதுபோலவே எத்தகைய நிர்ப்பந்தங்கள் வந்தாலும் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்காமல் உறுதியாகவும் இருப்பீர்கள். ஆறு, எட்டுக்குடைய செவ்வாயும் புதனும் பரிவர்த்தனை நிலையில் இருப்பதால் ஏதேனும் ஒரு விஷயத்திற்கு கடன் வாங்க வேண்டி இருக்கும். உங்களில் சிலருக்கு கண்களில் பிரச்னை வரும். கவனம் தேவை.

இரண்டில் கேது இருப்பதால் நெருங்கியவர்களிடம் பேசுவதிலோ, மற்றவர்களைத் திட்டுவதிலோ கவனமாக இருங்கள். வாயைக் கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தில் ஒருவர் ஏதாவது பேசிவிட்டாலோ, திட்டிவிட்டாலோ மற்றவர்கள் பொறுத்துப் போங்கள். குடும்பப் பிரச்னைகளை அனைவரும் ஒன்று சேர்ந்து மனம் விட்டு உட்கார்ந்து பேசினாலே ஒன்றும் இல்லாமல் செய்து விடலாம். இளைய வயதில் இருப்பவர்களுக்கு இப்போது காதல் வரும். 17-ம்தேதி அதிகாலை 1.09 முதல் 20-ம்தேதி இரவு 12.28 மணி வரை சந்திராஷ்டம நாட்கள்.

தனுசு:

ராசிநாதன் குரு ஒன்பதைப் பார்த்து,  பாக்கியாதிபதி சூரியனும் உச்சம் எனும்  வலுவான நிலையில் இருப்பதால் அதிர்ஷ்டமும், தொழிலும் உங்களுக்கு கை கொடுக்கும் வாரம் இது. அதே நேரத்தில் பேச்சைக் குறிக்கும் வாக்குஸ்தானத்தை செவ்வாய் பார்த்து, அங்கே சனியும் இருப்பதால் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியது கண்டிப்பாக அவசியம். சிறு விஷயத்திற்கு கூட பொறுமை இழந்து எரிச்சல் படுவீர்கள் மற்றும் யாரையாவது கடும் சொற்களால் திட்டி விடுவீர்கள் என்பதால் எதிலும் நிதானமாக இருங்கள்.

அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு அலுவலகங்களில் நெருக்கடிகள் இருக்கும். பத்திரிக்கை துறையினருக்கு இது நல்ல வாரம். அனைத்து விஷயங்களிலும் ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்து செயல்படுங்கள். தலைமைப் பதவியில் இருப்பவர்கள் கீழே பணிபுரிவோர்களை புரிந்து கொள்வது நல்லது. அவர்களுடன் எதையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சில நேரங்களில் சுவருக்குக் கூட கண்களும், காதுகளும் இருக்கின்றன என்பதை மறக்காதீர்கள். சூரிய வலுவால் அனைத்தையும் சமாளித்து வெற்றி வீரனாக வலம் வருவீர்கள்.

மகரம்:

மகரராசிக்கு ஜென்மச்சனி நடப்பதால் இதுவரை கிடைக்காத சில அனுபவங்களை இப்போது சிலர் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். வாழ்க்கையைப் புரிய வைக்கும் வாரம் இது. உங்களில் பலருக்கு பணம் என்றால் என்ன என்று புரிய வைக்க கூடிய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. உறவுகளில் வெறுப்பு வரும் காலம் இது. சிலர் சிலவற்றை இழந்து கொண்டிருக்கிறீர்கள். குறிப்பாக இளம் பெண்களுக்கு தேவையற்ற நட்பு, காதல் உள்ள வாரம் இது.  ஏப்ரல் வரை நிலைமை இப்படித்தான்.

பிள்ளைகள் விஷயத்தில் உங்களின் பலவீனங்கள் இப்போது தெரிய வரும். சிலருக்கு மனைவியின் அருமை புரியும். அக்கம் பக்க வீட்டாருடன் வீண் அரட்டை வேண்டாம். கண்டிப்பாக நண்பர்களுடன் சேர்ந்து தொழில் ஆரம்பிக்க  வேண்டாம். கைப்பொருளின் மேல் கவனம் இருக்கட்டும். பொருட்கள் தொலைந்து போவதற்கோ, திருட்டு நடப்பதற்கோ, விரயம் ஆவதற்கோ வாய்ப்பு இருக்கிறது. செல்போனை மறதியாக எங்காவது விட்டுவிட்டு தேடிக்கொண்டிருப்பீர்கள்.

கும்பம்:

கும்பராசியினருக்கு  எரிச்சல் தரும் வாரம் இது. உங்களில் இளைஞர்கள் எதிலும் அலட்சியமாக இருக்க வேண்டாம். அனைத்து விஷயங்களிலும் கண்டிப்பும் கவனமாகவும் இருக்க வேண்டும். ராசிநாதன் சனி பனிரெண்டில் இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் எதிர்ப்புகள் இருக்கும். எதுவும் சீக்கிரம் நடக்காது. ஒரு சிறப்பு பலனாக வேலை வாங்கித் தருவதாக எவராவது சொன்னால் முன்னாலேயே நம்பி பணம் தர வேண்டாம். ஏமாறுவீர்கள். பண விஷயத்தில் கறாராக உஷாராக இருங்கள்.

பெரியவர்கள் பருவ வயது குழந்தைகளின் மேல் ஒரு கண் வைத்திருங்கள். உறவுகள் மற்றும் நட்புகளைப் பற்றி புரிய வரும் வாரம் இது. வெகுநாட்களாக கிடைக்காத சில அனுபவங்கள் இந்த வாரம் உங்களுக்கு உண்டு. உங்களில் சிலர் பிறரிடம்  உதவியை எதிர்பார்ப்பீர்கள். யாரிடமும் வீண் வாக்குவாதங்களைச் செய்யாதீர்கள். அவசியமின்றி இரவு நேரங்களில் வெளியே நண்பர்களுடன் செல்வதை தவிர்க்கவும். சிலருக்கு காவல்துறையால் தொல்லைகள் உண்டு.

மீனம்:

உங்களில் சிலருக்கு அதிகமான ஆன்மீக ஈடுபாடும், கோவில் குளங்களுக்கு செல்வதும் இந்த வாரம் நடக்கும். தள்ளிப்போன காசி, ராமேஸ்வர யாத்திரைகளுக்கு இப்போது செல்வீர்கள். தாயார் சம்பந்தமாக செலவுகள் ஏற்படும். நான்கில் செவ்வாய் உள்ளதால் வயதான அம்மாவை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவி உறவு, கூட்டுத் தொழிலில் நன்மைகள் ஆகியவை சுமுகமாக இருக்கும். டைவர்ஸ் கேஸ், அடிதடி, போலீஸ் கோர்ட் என்று அலைந்து கொண்டிருந்தவர்களின் வழக்கு சாதகமாய் முடிவுக்கு வரும்.

காரிய வெற்றி நிச்சயம் உண்டு. தொழில் மேம்படும். வேலை செய்யும் இடத்தில் சந்தோசம் இருக்கும். வருமானம் நன்றாக இருக்கும். திங்கள் செவ்வாய் இரண்டு நாட்களும் நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். யோகர்கள் வலுப்பெற்று இருப்பதால் மனதிற்கு சந்தோஷமான விஷயங்கள் நடக்கும். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த காரியம் எண்ணம் போல் நிறைவேறும். உடல்நலம், மனநலம் சிறப்பாக இருக்கும். தெய்வ அருள் உண்டு.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 ,+91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.