குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (29-03-2021 முதல் 04-04-2021 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888

மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் வாழ்க்கைத்துணை விஷயத்தில் பெருமைப்படும் வாரம் இது. அவரவருக்கு நடந்து கொண்டிருக்கும் பிறந்த ஜாதக தசா புக்திகளின் அளவிற்கேற்ப  வாழ்க்கைத் துணைவரால் சந்தோஷமும்,  உற்சாகமும் இருக்கும். அதேநேரம் எல்லை மீறும் சில விஷயங்களால் வீட்டில் கருத்து வேறுபாடுகளும் வரும். இளைஞர்கள் சிலருக்கு இந்த வாரம் பணி இடங்களில் சங்கடங்கள் உண்டு. ஆறுக்குடைய புதன் நீச்சம் அடைவதால் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவசியத் தேவைகளின்றி கடன் வாங்க வேண்டாம்.

அடுத்த வாரம் நடக்க இருக்கும் அதிசார குருப்பெயர்ச்சி மேஷத்திற்கு நன்மைகளைத் தரும். குரு லாப வீட்டிற்கு வருவது நல்ல அமைப்பு. வாரம் முழுவதும் ஆண்களை வேலை வாங்க பெண்களுக்கு அருமையான வாய்ப்புகள் வரும். பெண்களின் வீட்டு நிர்வாகம் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள். வாரம் முழுவதும் பண வரவுகள் இயல்பாகவே இருக்கும். உங்களில் சிலருக்கு வெகுதூரப் பயணங்கள் உண்டு. 1-ம்தேதி அதிகாலை 1.56 முதல் 3-ம்தேதி அதிகாலை  3.56  மணி வரை சந்திராஷ்டம நாட்கள்.

ரிஷபம்:

ரிஷபத்தினரின் வீடு, வாகனம், தாயார் போன்ற வகைகளில் கவலைகள் இருந்து வந்த நிலைமை அடுத்த வாரம் நடக்க இருக்கும் அதிசார குருப்பெயர்ச்சியால் மாறும். ஏப்ரல் மாதம் முதல் ரிஷபத்திற்கு தாயாரால் நன்மைகள் நடக்கும். ராசிநாதனின் உச்ச நிலையால் வரப்போகும்  வாரங்கள் யோக வாரங்கள்தான். சுக்கிர நிலையால் சிலருக்கு வீண் செலவுகளும் இருக்கும். வருமானம் இருக்காது குறிப்பிட்ட ஒருபலனாக இதுவரை உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் குணமடைவார்கள். வருமானப் பாதிப்பு இந்த வாரம் இல்லை.

உங்களில் சிலர் எதிலும் ஒரு தடங்கலை உணருவீர்கள். அனைத்தும் தடையாகும் வாரம் இது. எந்த ஒரு விஷயமும் நீண்ட முயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும். கடின உழைப்பும் விடாமுயற்சியும் தேவைப்படும். அனைத்து விஷயங்களிலும் ஒரு முறைக்கு இரண்டுமுறை யோசித்து செயல்படுவது நல்லது. தந்தைவழி உறவினர்களிடம் இருந்து உதவிகள் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு வார பிற்பகுதியில் நல்லவை நடக்கும்.

மிதுனம்:

மிதுனத்திற்கு இந்த வாரம் மிகப்பெரிய கெடுபலன்கள் எதுவும் சொல்லுவதற்கு இல்லை.  ஆயினும் பனிரெனடில் செவ்வாய், ராகு சேர்க்கை உள்ளதால் உங்களில் சிலருக்கு காவல்துறை, நீதிமன்றம் போன்ற சிகப்பு நிற கட்டிடங்களுக்குள் செல்லும் நிலை இருக்கும். உங்களில் சிலர் அவமானமாக உணருவீர்கள். ஆயினும் பெரிய அளவில் சோதனைகள் இருக்காது. எந்த ஒரு விஷயத்திலும் அடுத்தவரை நம்பி ரிஸ்க் எடுக்க வேண்டாம். மிதுனம்  கவனமுடன் இருக்க வேண்டிய வாரம் இது.

ராசிநாதன் புதன் நீச்ச நிலையில் இருப்பதால் எதிலும் ஒரு தடுமாற்றம் இருக்கும். கைப் பொருளின் மேல் கவனம் இருக்கட்டும். பொருட்கள் தொலைந்து போவதற்கோ, திருட்டு நடப்பதற்கோ, விரயம் ஆவதற்கோ வாய்ப்பு இருக்கிறது. செல்போனை மறதியாக எங்காவது விட்டுவிட்டு தேடிக்கொண்டிருப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் குழந்தைகளின் மேல் ஒரு கண் வைத்திருங்கள். உறவுகளைப் பற்றி புரிய வரும் வாரம் இது. வெகுநாட்களாக கிடைக்காத சில அனுபவங்கள் இந்த வாரம் உங்களுக்கு உண்டு.

கடகம்:

வார ஆரம்பத்தில் ராசிநாதன் சந்திரன் பவுர்ணமி நிலையில் வலுவுடன் அமர்ந்து, உச்சநிலையில் உள்ள சுக்கிரனின் பார்வையில் இருப்பதால் கடகத்தினருக்கு  நல்லவைகளுக்கான மாற்றங்கள் உண்டாகும் வாரம் இது. வீட்டிலும், பணியிடங்களிலும் வருகின்ற சங்கடங்களை மனஉறுதியுடன் சமாளிப்பீர்கள். உங்களில் சிலருக்கு அனைத்து விஷயங்களிலும் இப்போது  நெருக்கடிகள் இருக்கும். அடுத்தவர் வேலையையும் நீங்களே செய்ய வேண்டியிருக்கும். ஆயினும் பணவரவில் குறையில்லை.

இருக்குமிடத்தில் கருத்து  வேறுபாடுகள் தோன்றி கோபப்படும் சூழல் உருவாகும். இந்த வாரம் முழுவதும் அவசரப்படாமல் நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. வருமானம் நிறைவாக இருப்பதால் செலவுகள் பெரிதாக தெரியாது. விரையங்கள் இருக்காது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடுவீர்கள். குடும்பத் தலைவியாக இருக்கும் பெண்களுக்கு சந்தோசம் இருக்கும். சிலநேரம் குழந்தைகளின் தொல்லைகளைத் தாங்க முடியாமல் எரிச்சல் அடைவீர்கள். துன்பத்திலும் இன்பம் காணும் வாரம் இது.

சிம்மம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் சூரியன் எட்டில் இருப்பதாலும், ராகுவுடன் சேர்ந்த செவ்வாயின் நான்காம் பார்வை ராசியில் விழுவதாலும் டென்ஷனாக இருப்பீர்கள். காரணமின்றி கோபமும் எரிச்சலும் வரும். எல்லோரையும் சந்தேகப்படும் சூழ்நிலை வரலாம். பிடிவாதமான போக்கை கடைப்பிடிப்பீர்கள். உங்களில் பெரும்பாலோனோருக்கு வருமானம் இல்லாத நிலையில்  செலவுகளும், விரயங்களும் ஏற்படும். எதிலும் கவனமாக இருங்கள். அவசியமின்றி கிரடிட் கார்டை உபயோகிக்க வேண்டாம்.

பணவரவு குறையும். கடன் வாங்கியாவது சமாளிப்பீர்கள். இளைஞர்களுக்கு எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும். சூரிய, உச்ச சுக்கிர சேர்க்கையால் சிலர் காதலிப்பீர்கள். சிலர் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இப்போது வாட்ஸ்அப்பில் சந்திப்பீர்கள். முகநூலில் சிலருக்கு இனிமையான அனுபவங்கள் இருக்கும். பணியிட எதிர்ப்புக்களை சுலபமாக சமாளிக்க முடியும். வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி போன்றவைகளிலும், நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில்வகைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல தகவல் உண்டு.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களின் அனைத்து விஷயங்களிலும் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத வாரம் இது. ஒரு கைதியைப் போல உணருவீர்கள். நினைத்ததை நினைத்தார் போலவே செயல்படுத்த முடியாது. ராசிநாதன் புதன் நீச்ச நிலையில் இருப்பதால் கைகள் கட்டப்பட நிலையில் கன்னி இருக்கும். எதிலும் குழப்பங்கள் இருக்கும். அடுத்த வாரம் நடக்க இருக்கும் குருவின் அதிசார பெயர்ச்சியால் உங்களில் சிலர் கடினமான வேலைகளை எடுத்துச் செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். அதேநேரம் தூர இடங்களில் இருந்து நல்ல தகவல்கள் உண்டு.  

இளைய பருவத்தினருக்கு எதிர்பாலினத்தவரிடம் வம்புகள் காத்துக் கொண்டிருக்கும். அவசியமின்றி சண்டை போடாதீர்கள். உங்களில் சிலருக்கு வழக்குகள் தேடி வரும் வாரம் இது. சிலர் மருத்துவ விஷயங்களுக்கு பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஒன்பதில் செவ்வாய், ராகு பாபத்துவ வலுவாக இருப்பதால் வருமானமே இல்லாத நிலையில்  விரயங்களும் வீண் செலவுகளும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களால் மறைமுக தொல்லைகள் வரும்.

துலாம்:

அடுத்த வாரம் நடக்க இருக்கும் அதிசாரப் பெயர்ச்சி மூலம் குருபகவான் யோகம் தரும் ஐந்தாம் ஸ்தானத்திற்கு வருவதால் இன்னும் சில வாரங்களுக்கு துலாத்திற்கு வருமானங்கள் தாராளமாக உண்டு. எட்டில் செவ்வாய், ராகு இருப்பதால் கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. குறிப்பாக ஆண்கள் பெண்களுக்கு அடங்கிப் போக வேண்டியிருக்கும். தாய் வழி உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும். ராசிநாதன் சுக்கிரன் உச்சம் என்பதால் எதையும் உங்களால் சமாளிக்க முடியும்.  

இந்த வாரம் காவல்துறையால் உங்களில் சிலருக்கு தலைக்குனிவு இருக்கும். நடுத்தர வயதுக்காரர்கள் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். சிறிய அளவில் பிரச்சனை என்றாலும் மருத்துவரிடம் செல்வது நல்லது.   தேவையற்ற விஷயங்களுக்காக கடன் வாங்க வேண்டாம். அதனால் பிரச்னைகள் வர வாய்ப்பு இருக்கிறது.  பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்களால் தலைவலி தரும் சம்பவங்கள் இருக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்கள் தங்களின் ஆளுமைத் திறனை சுற்றி உள்ளவர்களுக்கு எடுத்து காட்டும் வாரம் இது. சர்ப்ப கிரகமான கேது ராசியில் இருப்பது சாதகமற்ற நிலை என்று தோன்றினாலும் ராசிநாதன் செவ்வாய் அவரைப் பார்ப்பதால்  கெடுதல்கள் எதுவும் வராது. அதேநேரம் உங்களில் சிலர் “மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி” என்பதைப் போல வீட்டிலும், பணியிடங்களிலும் ஏதேனும் ஒரு விஷயத்தால்  அவஸ்தைப்படுவீர்கள். ஆயினும் எதையும் நீங்கள் சமாளிக்கும் வாரம் இது.  

வருமானம் இல்லாமல் நிறைய செலவுகளும் விரயங்களும் இருக்கும். வயதானவர்களை வீட்டில் வைத்திருப்பவர்கள் அவர்களது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு இது நல்ல வாரம். இதுவரை உங்களை, உங்களின் திறமைகளைப் புரிந்து கொள்ளாத வாழ்க்கைத் துணைவர் இனிமேல் புரிந்து கொள்ள ஆரம்பிப்பார். உங்களில் சிலருக்கு வெளிமாநில, வெளிநாடு வாய்ப்புகள் இப்போது உண்டு. விருச்சிகத்தினர் அமைதி காணும் வாரம் இது.

தனுசு:

இதுவரை பிரச்னைகளைக் கண்டு ஒதுங்கிப் போய்க் கொண்டிருந்த நீங்கள் இப்பொழுது வலியப் போய் பிரச்னைகளில் மாட்டுவீர்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் அவசியத் தேவைகளைத் தவிர வேறு எதற்கும் ரிஸ்க் எடுக்க வேண்டாம். மற்றபடி பிரச்னைகள் இல்லாத வாரம்தான் இது. உங்களில் சிலருக்கு வீட்டில் உற்சாகம் தரக்கூடிய சம்பவங்கள் நடக்கும். வெகுநாட்களாக தவற விட்ட உறவுகளை இப்போது உணருவீர்கள். சிலர் மறந்து விட்ட தொலைபேசி எண்களை தேடி எடுத்து நட்பு, உறவுகளை புதுப்பித்துக் கொள்வீர்கள்.

தம்பதிகளிடையே கல்லூரி செல்லும் வயதில் உள்ள குழந்தைகள் விஷயத்தில் சண்டைகள் வரலாம். தலைமுறை இடைவெளி என்பதை இப்போது உணருவீர்கள். குடும்பத்தினர் விஷயத்தில் உங்களின் பலவீனங்கள் தெரிய வரும்.  உங்களில் சிலருக்கு மனைவியின் அருமை புரியும். கணவன்மார்கள் உங்களின் தொந்தரவு தராத தன்மையால் மட்டுமே மதிக்கப்படுவீர்கள். பொது இடங்களில் வீண் அரட்டை வேண்டாம். அதனால் சில விரோதங்கள் வரும்.

மகரம்:

மகர ராசியினர் பணியிடங்களில் நெருப்பு சார்ந்த அமைப்பில் இந்த வாரம்  கவனம் தேவை. வியாபாரிகள் வேலைக்காரர்களை நம்ப வேண்டாம். உங்களில் சிலருக்கு கண் சார்ந்த பிரச்சனைகள் வரும். அருகில் இருக்கும் மருத்துவமனையில் கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். எதையும் நிதானமாக சிந்திப்பது நல்லது. குறுக்குவழி வேண்டாம்.  எதிலும் அவசரப்பட வேண்டாம். சிக்கல்கள் எதிலாவது ஜென்ம சனி மாட்டி வைப்பார். எல்லா விஷயங்களும் இழுத்துக் கொண்டே போய் இறுதியில்தான் நன்றாக முடியும்.

பொறுமை தேவைப்படும் வாரம் இது. அடுத்த வாரம் நடக்க இருக்கும் குருவின் அதிசாரப் பெயர்ச்சியால் இரண்டாமிடத்திற்கு குரு மாறுகிறார். பண வரவிற்கு இது நல்ல நிலை. இனிமேல் பணத் தட்டுப்பாடு இருக்காது. செவ்வாய், ராகு  ஐந்தில் இணைவதால் குழந்தைகளால் எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் கோபத்திற்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற தெய்வ வாக்கை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். திரவ பொருட்கள் விற்பனை செய்பவர்கள், துறைமுகம் சம்பந்தபட்டவர்களுக்கு நல்ல தகவல் உண்டு.

கும்பம்:

சாதாரணமாக சிறிய விஷயம்தானே என்று அலட்சியப்படுத்தும் ஒரு விஷயம் பூதாகரமாக உருவெடுத்து கும்ப ராசியினருக்கு  தலைவலியை தரும் வாரம் இது. குறிப்பாக இளைஞர்கள் எதிலும் அலட்சியமாக இருக்க வேண்டாம். அனைத்து விஷயங்களிலும் கண்டிப்பும் கவனமாகவும் இருக்க வேண்டும். ஒரு முக்கிய பலனாக மருத்துவ விஷயத்தை தவிர்த்து வேறு எதற்கும் யாருக்கும் பண உதவி செய்ய வேண்டாம். பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கும் முன் பத்து தடவை யோசியுங்கள்.

உங்களில் சிலர் தந்தைவழி உதவியை எதிர்பார்ப்பீர்கள். யாரிடமும் வீண் வாக்குவாதங்களைச் செய்யாதீர்கள். மது அருந்தும் இடங்களுக்கு செல்வதைக் கண்டிப்பாக தவிர்க்கவும். அப்படியே செல்ல நேர்ந்தாலும் அறிமுகம் இல்லாதவர்களிடம் நட்புப் பேச்சு வேண்டாம். உங்களில் சிலருக்கு காவல்துறையால் தொல்லைகள் உண்டு.  இளையவர்களுக்கு எதிர்பாலினத்தவரால் சந்தோஷங்கள் உண்டு. 28-ம்தேதி அதிகாலை 1.20 முதல் 30 -ம்தேதி அதிகாலை 1.42 மணி வரை சந்திராஷ்டம நாட்கள்.

மீனம்:

மீன ராசி இளைய பருவத்தினருக்கு வாழ்க்கையைப் புரிய வைக்கும் வாரம் இது. பிறந்ததில் இருந்தே கிடைக்காத சில அனுபவங்களை இப்போது பெறுவீர்கள். உங்களில் நயன்டி கிட்ஸ் என்று பெருமை பேசித் திரிந்த சிலருக்கு மலையைத் தூக்கி தலையில் வைத்திருப்பது போல சில பொறுப்புகள் கிடைக்கும். ஆனால் அது உங்களுக்கு தாங்க முடியாத விஷயமாக இருக்கும். மீனத்திற்கு பொறுமை தேவைப்படும் வாரம் இது. இன்னும் சில வாரங்களுக்கு நிலைமை இப்படித்தான்.

சிலருக்கு அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். கண்கொத்திப் பாம்பாக சுற்றும் உயர் அதிகாரியிடம் இருந்து தப்பிப்பது கடினமாக இருக்கும். நண்பர்களுடன் சேர்ந்து வெளியே சுற்றுவீர்கள். அதுவும் சண்டையும் சச்சரவுமாகத்தான் இருக்கும். உங்களில் சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். 30 -ம் தேதி அதிகாலை 1.42 முதல் 1-ம்தேதி அதிகாலை 1.56 மணி வரை சந்திராஷ்டம நாட்கள். சிலருக்கு வெளிமாநிலம் வெளிநாடு விஷயத்தில் நல்ல தகவல் உண்டு.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 ,+91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.