குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (22-02-2021 முதல் 28-02-2021 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

மேஷம்:

பதினொன்றாமிடத்தில் சூரியன் இருப்பது யோக அமைப்பு என்பதால் மேஷத்தினருக்கு  முன்னேற்றங்கள் மட்டுமே இருக்கும் வாரம் இது. தன ஸ்தானாதிபதி சுக்கிரன்  சூரியனுடன் லாபத்தில் இணைந்திருப்பதால் வாரம் முழுவதும் தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளில் நல்லவைகள் நடக்கும். தொட்டது துலங்கும். உங்கள் செயல்களில் புத்துணர்ச்சியும், புதுமையும், விவேகமும் இருக்கும். உதவிகள் கிடைக்கும். இளைஞர்கள் சோம்பலாக இருக்காதீர்கள். முயற்சிகளைச் செய்யுங்கள். மேஷத்தினருக்கு யோக வாரம் இது.


பெரியவர்களுக்கு மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் முடிக்க முடியாமல் இருந்த நிலை மாறி வரன் உறுதியாகும். தொழிலர்கள், கலைஞர்களுக்கு வெற்றிகள் தரக்கூடிய அமைப்புகளும் நிகழ்ச்சிகளும் இப்போது உண்டு. ஏழுக்கதிபதி நட்பு வலுவுடன்  இருப்பது திருமணத்தை துரிதப்படுத்தும் கிரகநிலை என்பதால் இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு. ஏற்கனவே மணமாகி முறிந்தவர்களுக்கு இரண்டாவது அமைப்பு உருவாகும். மேஷத்திற்கு நிதானமாக நன்மைகள் நடந்தாலும் நல்லவை மட்டும் நடக்கும் வாரம் இது.

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் பத்தில் பகைவருடன் இருந்தாலும் குருவின் பார்வையில் ராசி இருப்பதால் ரிஷபத்திற்கு இது தொல்லைகள் இல்லாத வாரமாக இருக்கும். உங்களில் சிலருக்கு இன்டர்நெட் மூலமாக காதல் வரும். குறிப்பாக பேஸ்புக் போன்ற நவீன வசதிகள் மூலமாக நல்ல விஷயங்கள் உண்டு. சிலருக்கு நீண்ட தொலைவு பயணங்களும் மேற்கு திசையால் நன்மைகளும் பெற்றோரால் உதவிகளும் இருக்கும். வாரம் முழுவதும் வருமானங்களும், சந்தோஷங்களும் உண்டு. ரிஷபத்திற்கு மகிழ்ச்சியை  மட்டும் தரும்  வாரம் இது.

மாணவர்கள் நன்கு படிப்பீர்கள். அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள். இளைய பருவத்தினருக்கு திருமணம், வேலை, குழந்தை பாக்கியம் போன்றவைகள்  இருக்கும். கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் ரிஷப ராசிக்காரர்கள் துணிவுடன் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். புதன், சனி  வலுப் பெற்று இருப்பதால் நீங்கள் அவசரப்பட்டு சில காரியங்களைச் செய்தாலும் முடிவில் அது நன்மையாகவே இருக்கும். அனைவருக்குமே பெண்களால் வயதுக்கேற்ற சந்தோஷம் உண்டு.

மிதுனம்:

மிதுன ராசியில் முப்பது, நாற்பது வயதுகளில் இருப்பவர்களுக்கு வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துக் கொள்ள வேண்டிய அனுபவங்கள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு சில பின்னடைவான விஷயங்கள் இருக்கிறது. இது பெரிய தொந்தரவுகளைத் தருமோ என்று  கலங்கத் தேவையில்லை. பாதகமானது எதுவும் நடக்காது. எட்டில் இருக்கும் சனியால் எதுவும் சற்று நிதானமாகத்தான் நடக்கும். அதே நேரத்தில் கவலைப்படும்படியாக எதுவும் இருக்காது.

வேலை தேடிக் கொண்டிருக்கும் இளம் பருவத்தினருக்கு ஏமாற்றம் இருக்கும். நீங்கள் விரும்பிய வேலை இழுத்தடிக்கும். உங்களை எரிச்சல்படுத்தி பார்ப்பதற்கென்றே சிலர் வருவார்கள் சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு நிரந்தரமாக கடன்கள் மனக்கலக்கத்தை தந்தாலும் கட்டுக்குள் இருக்கும். மிதுனராசிக்கு இது எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் காலகட்டமாக அமையும் என்பதால் இப்போது ஏற்படும் அனுபவங்களால் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள்.

கடகம்:

கடக ராசி இளைய பருவத்தினரை ஏமாற்றாத வாரம் இது. இந்த வாரம் யோகத்தை தரப் போவதோடு காரியத் தடைகளையும் துரதிர்ஷ்டங்களையும் விரட்டி அடிக்கும் விதமாகவும் அமையும். வாரம் முழுவதும் ராசிநாதன்  நல்ல நிலையில் வலுவுடன் இருப்பதால் வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்றம் அடைந்து பொருளாதார மேன்மையை அடைவீர்கள். சென்ற வருடத்தை போல இந்த வருடம் கஷ்டங்கள் எதுவும் கடக ராசிக்கு இருக்காது. இனி எல்லாம் சுகம்தான்.

மூன்றாம் அதிபதி புதன் அதிநட்பு நிலையில் நண்பர் சனியின் வீட்டில் உள்ளதால் அனைத்தும் வெற்றியாகும் வாரம் இது. உங்கள் செயல்களில் புத்துணர்ச்சியும், புதுமையும், விவேகமும் உண்டு. சிலருக்கு பயணங்களும், ஆன்மீகம் சம்பந்தபட்ட யாத்திரைகளும் இருக்கும். பதவி, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. கணவன், மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள்.

சிம்மம்:

மாசி மாதம் முழுவதும் சிம்மத்திற்கு நல்ல மாதம் என்பதால் இது சிறப்புகள் மட்டுமே உள்ள வாரமாக இருக்கும். ஆறில் சனி, குரு இணைந்திருப்பதும், பத்தில் செவ்வாய், ராகு உள்ளதும் அனைத்திலும் உங்களை ஜெயிக்க வைக்கும் அமைப்பு. துணிந்து செயல்படும் எதிலும் வெற்றி காண்பீர்கள். அதேநேரம் மூன்றாம் மனிதரை நம்பாமல் நீங்களே எதிலும் நேரிடையாக செயல்படுவது நல்லது. சிலருக்கு இழுபறியாக இருக்கும் கடன் தொகையோ, நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சம்பள உயர்வு தொகையோ இப்போது கிடைக்கும். தொட்டது துலங்கும் வாரம் இது.

தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும். பன்னாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில்  வேலை செய்பவர்களுக்கு  துறைசார்ந்த நெருக்கடிகள் இருக்கும். மேலதிகாரிகளிடம் சற்றுத் தள்ளியே இருங்கள். செய்யாத தவறுக்கு வீண்பழி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. வங்கிக்கடன் வாங்கி வீடு கட்டவோ நல்ல பிளாட் வாங்கவோ முடியும். விருச்சிகத்திற்கு இனிமேல் நல்லகாலம் மட்டும்தான்.

கன்னி:

கன்னிக்கு அனைத்தும் நன்மையாகும் வாரம் இது. இன்னும் நல்லது நடக்காத உங்களில் சிலருக்கும் இப்போது மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது நடக்கும் மற்றும் இனிமேல் நடக்கப் போகும் மாற்றங்கள் அனைத்தும் நன்மையாகவே முடியும் என்பதால் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. இளைய பருவத்தினர் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்கப் போகிறீர்கள். எதையும் சமாளிக்கும் திறன் கொண்ட உங்களுக்கு இனி நன்மைகள் மட்டும்தான் நடக்கும்.

சூரியன் ஆறில் அமர்ந்து தன் வீட்டையே பார்ப்பது உங்களுக்கு நல்ல பண வரவைத் தரும். குறிப்பாக சுய தொழிலர்கள் முன்னேற்றம் அடைவீர்கள். அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள். இன்னும் சில வாரங்களில் வரும் குருவின் அதிசார பெயர்ச்சி கூட கன்னிக்கு   யோகம்தான். குரு சனியுடன் இணைந்திருப்பதால்  உங்களுக்கு தொட்டது துலங்கும். முயற்சிகள் பலனளிக்கும். எனவே சோம்பலை உதறித்தள்ளி சுறுசுறுப்பாக காரியம் ஆற்ற வேண்டியது அவசியம்.

துலாம்:

யோகாதிபதி சனி நான்கில் இருந்தாலும் குருவின் இணைவால் சுபத்துவத்தை அடைகிறார் என்பதால் துலாம் ராசிக்கு நன்மைகள் அதிகம் நடக்கும் வாரம் இது. உங்களில் சிலருக்கு கடன் வாங்கி விரையம் செய்யும் அமைப்பு இருப்பதால் வீடு வாங்குதல், கல்யாணம் போன்ற சுபகாரியங்களுக்கு கடன் வாங்க அடிபோடும் வாரம் இது. கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் வயதுக்கேற்ற நல்ல விஷயங்கள் இப்போது நடக்கும். பாக்கியஸ்தானம் வலுவிழந்து காணப்படுவதால் தந்தையால் கிடைக்கும் நன்மைகள் தடைப்படும்.

உங்களில் சிலர் வயதான தந்தைக்கான மருத்துவ செலவுகளை எதிர்கொள்வீர்கள். சொத்துக்களை விற்கும் நிர்பந்தம் உள்ளவர்கள் இன்னும் இரண்டு வார காலத்திற்கு தள்ளி வைக்கவும். குடும்பச் சொத்துக்களை தற்போது விற்கக்கூடாது. புத்திரம் இல்லாத தம்பதியினருக்கு குழந்தை உருவாகும். சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும், தைரியமும் உங்களை தேடி வந்து ஒட்டிக் கொள்ளும் நேரமிது. இதுவரை வேலை, தொழில் அமையாதவர்களுக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய ஜீவன அமைப்புகள் அமைந்து இனிமேல் மாதமானால் வருமானம் வரக்கூடிய சூழல் வரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இனி இருக்கும்.

விருச்சிகம்:

ராசிநாதன் செவ்வாய் ராசியைப் பார்ப்பதாலும், ஐந்துக்குடைய குரு நீச்சபங்க வலுப் பெறுவதாலும், பத்துக்குடையவன் தன் வீட்டையே பார்ப்பதாலும் விருச்சிகத்திற்கு தொட்டது துலங்கும் வாரம் இது. ஏழாமிடம் வலுப் பெறுவதால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவீர்கள்.. அலுவலகத்தில் சாதகமான மாற்றங்கள் இருக்கும். கொடுத்த கடன் திரும்பி வரும். தடங்கலாகிக் கொண்டிருந்த தொழில் முன்னேற்றங்கள் பின்னடைவும் இல்லாமல் சென்று மகிழ்ச்சியில் ஆழ்த்தும். தொழில் விஷயத்திலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் குறை இருக்காது.

வேலையை விட்டு விடலாமா என்று யோசனையில் இருந்தவர்களுக்கு சூழ்நிலைகள் நல்லவிதமாக அமைந்து வேலையை விட வேண்டிய நிலை நீங்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். விருச்சிகத்திற்கு இன்னும் மூன்று வருடங்களுக்கு கோட்சார கிரக நிலைகள் சாதகமாக இருக்கிறது. 21-ம் தேதி இரவு 9.55  முதல் 24-ம் தேதி காலை 7.10 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்க்கவும். வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம்.

தனுசு:

ராசிநாதன் குரு மூன்றாம் அதிபதி சனியுடன் இணைந்து நீச்ச பங்க வலுவுடன் இருப்பதால் இது நண்பர்கள் மூலம் ஆதாயங்களும், உதவிகளும் பெறும் வாரமாக இருக்கும். சிலருக்கு அன்னிய, இன மத மொழி நண்பர்கள் நல்லவைகளைச் செய்வார்கள். வேலை செய்யும் இடத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் இனி வேறுவிதமான வடிவங்களைப் பெறும். சமாளிக்க முடியாமல் இருந்தவைகளை இனி சுலபமாக சமாளிக்க முடியும். பிள்ளைகள் விஷயத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் உண்டு. தனுசுக்கு இது கலக்கம் தராத நல்ல வாரம்.

ஆறில் செவ்வாய் ராகுவுடன் இருப்பதால் சொத்து சம்பந்தமான வில்லங்கம் வரலாம். வழக்குகள் இன்னும் கொஞ்ச காலத்திற்கு சாதகமாக இருக்காது. சின்ன விஷயங்கள் பெரிதாகி தொந்தரவு தரும். வீட்டில் நடக்கும் சம்பவங்கள் எரிச்சல்படுத்திப் பார்க்கும். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. 2,3 ஆகிய நாட்களில் பணம் வரும். 24-ம்தேதி காலை 7.10 முதல் 26-ம்தேதி மதியம் 12.35 வரை  சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் வெகுதூர பிரயாணங்களை தள்ளி வைப்பது நல்லது. புதிய முயற்சிகளும், ஆரம்பங்களும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.

மகரம்:

மகரத்தினரை எதிர்ப்புகள் லேசாக அசைத்து பார்க்கும் வாரம் இது. நீங்களும் சற்று குழம்பித்தான் போவீர்கள். எந்த ஒரு எதிர்ப்பும் இறுதியில் உங்களை விட்டு விலகி ஓடும் என்பது நிச்சயம். வார பிற்பகுதியில் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். முதலில் தடுமாறி பின்னர் வேகம் எடுக்கும் வாரம் இது. உங்களில் சிலருக்கு மனதில் நினைப்பதை அடுத்தவர்களிடம் சரியாக வெளிப்படுத்த முடியாமல் அவர்கள் தவறாக புரிந்து கொண்டு கருத்து வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. உங்களில் திருவோணத்தினருக்கு குழப்பங்கள் அதிகரிக்கும்.

இரண்டில் சூரிய, சுக்கிரன் இணைந்திருப்பதால் சிலருக்கு வேலை, தொழில் மாற்றங்கள் இருக்கும். எதிர்கால முதலீடாக குழந்தைகள் பெயரிலோ அல்லது உங்கள் பேரிலோ வீட்டுமனை வாங்குவீர்கள். வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள். தொல்லை தராத வாரம் இது. 26-ம் தேதி மதியம் 12.35  முதல் 28-ம் தேதி மதியம் 3.07 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்க்கவும். வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம்.

கும்பம்:

நடப்பவை அனைத்தும் உங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்பதால் நீங்கள் மாற்றங்களை எதிர்கொள்ள ஆரம்பிக்கும் வாரம்  இது. லாபாதிபதி குரு நீச்ச பங்க நிலையில் இருப்பதால் இதுவரை வேலை, தொழில் அமையாதவர்களுக்கு வருமானம் தரக்கூடிய வழிவகை உருவாகும். நண்பர்கள் உதவுவார்கள். இந்த வாரம் சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள் என்பதால் உங்கள் பொறுமை எல்லை மீறும். இதனால் மனவருத்தம் வீண் விரோதங்கள் வரும். வழக்குகளை முடிப்பதில் அவசரம் காட்ட வேண்டாம்.

சனி சாதகமாக இல்லாததால் யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். சமரசம் செய்து வைப்பது பஞ்சாயத்து பண்ணுவது போன்றவைகள் பக்கம் தலைவைத்துப் படுக்காதீர்கள். உடல்நலத்தில் அதிக கவனமுடன் இருப்பது நல்லது. வீடு சம்பந்தப்பட்ட அனைத்துக் காரியங்களும் நினைத்தபடியே நடக்கும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தியவர்கள் முழுதாக முடித்து கிரகப்பிரவேசம் செய்வீர்கள். சிலருக்கு தொழில்ரீதியான வருமானங்கள் உண்டு. கும்ப ராசிக்கு ஏற்றங்களைத் தரும் வாரம் இது.

மீனம்:

மீனத்திற்கு குறைகள் சொல்வதற்கு எதுவும் இல்லை. ராசிநாதன் குருவுடன் இணைந்து சனி, ராசியைப் பார்ப்பது யோக அமைப்பு. சிலருக்கு இதுவரை கிடைக்காத நல்ல அனுபவங்கள் இப்போது கிடைக்கும். தனாதிபதி செவ்வாய்  குரு பார்வையோடு மூன்றில்  இருப்பதால், வருமானங்களும் லாபகரமான பிரயாணங்களும் உங்களுக்கு இருக்கும். எதைப்பற்றியும் கலங்காமல் காரியமாற்றுவீர்கள். இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத விஷயங்கள் இப்போது தெய்வ அருளால் முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். மீனத்திற்கு நல்ல வாரம் இது.

நண்பர்கள், பங்குதாரர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு சச்சரவுகள் நீங்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த சந்தேகங்களும் தேவையற்ற பயங்களும் விலகும். உங்களில் சிலருக்கு எதிர்கால நன்மைக்கான மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது. வியாபாரிகளுக்கு வியாபாரம் நல்லபடியாக நடக்கும். போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். விவசாயிகளுக்கு இம்முறை இயற்கை ஒத்துழைக்கும். தேவையான நேரத்தில் மழை பெய்யும்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 ,+91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.