குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (24-08-2020 முதல் 30-08-2020 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

மேஷம்:

ஐந்துக்குடைய சூரியன் ஆட்சி பெறுவதோடு குருவின் பார்வையிலும் இருப்பது  மேஷராசிக்கு யோகம் தரும் ஒரு நிலை. கூடுதலாக ராசிநாதன் செவ்வாயும் ராசியில் இருப்பதால் மேஷத்தினர் எதையும் சாதிப்பீர்கள்.  இந்த வாரம் ஒரு சிறப்பு பலனாக உங்களில் சிலருக்கு பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற துறைகளில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும். சிலருக்கு இளைய சகோதரரிடம் கருத்து வேறுபாடு வரும். தந்தைவழி உறவினர் வகையில் மனக்கசப்புக்கள் அல்லது இடையூறுகள் இருக்கும். பொதுவில் நல்ல வாரம்தான் இது. 


உங்களில் பரணி நட்சத்திரக்காரர்களுக்கு இன்னும் சில வாரங்களில் நல்ல முன்னேற்ற மாற்றங்கள் நடக்க இருக்கிறது. சனி இப்போது பத்தாம் இடத்தில் நிலை கொண்டிருக்கிறார். அதனால் தொழில் நிலைகளில் நல்ல விஷயங்கள் நடக்கும். சனி நவம்பர் மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் இருந்து விலகுகிறார். அதன்பிறகு துன்பங்கள் எதுவும் பரணியை அணுகாது. 25-ம் தேதி காலை 8.16 மணி முதல் 27-ம் தேதி மதியம்  12.37 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. இந்த நாட்களில் முக்கியமான முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் இரண்டாம் வீட்டில் ராகுவுடன் இணைந்திருப்பதால் அனைத்தும் தடங்கலாகும் வாரம் இது. அதேநேரத்தில் நட்புக் கிரகமான புதன் நல்ல நிலையில் இருப்பதால் பெரிய பின்னடைவுகள் எதுவும் இருக்காது. எதையும் உங்களால் சமாளிக்க முடியும். வரும் நவம்பர் மாதம் எட்டில் இருக்கும் குரு விலக இருப்பதால் இனிமேல் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் தொல்லைகள் இருக்காது. அம்மாவழி உறவினர்களால் ஆதாயங்கள் இருக்கும். அம்மாவின் ஆதரவும் உண்டு. 

இனிமேல் வேலை செய்யும் இடத்தில் பிரச்னைகள் எதுவும் இருக்காது. வியாபாரத்தில் இலாபம் உண்டு. சிலருக்கு சொல்லிக் கொள்ளும்படியான பணவரவு கிடைக்கும். பணக்கஷ்டங்கள் தீரும். முதல் திருமணம் முறிந்த சிலருக்கு இரண்டாவது திருமணத்திற்கான அமைப்பு உருவாகும். கவலைகள் தீரும் வாரம் இது. 1,2,4 ஆகிய நாட்களில் பணம் வரும். 27-ம் தேதி மதியம் 12.37 மணி முதல் 29-ம் தேதி இரவு 7.13 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகள் முதலீடுகளை இந்த நாட்களில் ஒத்தி வைப்பது நல்லது. 

மிதுனம்:

பனிரெண்டுக்குடைய சுக்கிரன் ராசியில் ராகுவுடன் இணைந்துள்ள நிலையில்  ராசிநாதன் புதன் சூரியனுடன் இருப்பதால் இது மிதுன ராசிக்கு மாற்றங்களும், அலைச்சல்களும் உள்ள வாரமாக இருக்கும். சிலருக்கு வெளி மாநில அல்லது வெளிநாட்டு பயணங்களும், இட மாறுதல்களும் இருக்கும். மூன்றாமிடம் வலுப்பெறுவதால் இளைய சகோதர, சகோதரிகளால் சிலர் நன்மை அடைவீர்கள். வெளிநாடுகளில் பணிபுரிபவர்களுக்கு இப்போது முன்னேற்றத்திற்கான மாற்றங்கள் இருக்கும். இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் முடிந்து பணவரவு உண்டு. 

பெண்கள் உதவுவார்கள். எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள். வாழ்க்கைத்துணை மூலம் ஒரு உதவி அமையும். கணவன் மனைவி இருவரும் பேசி நல்ல திட்டங்களைத் தீட்டி அதை செயல்படுத்தவும் செய்வீர்கள்.  மந்தமாக இருந்த கூட்டுத் தொழில் சிறப்பாக நடைபெறும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனி நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும்.

கடகம்:

தனாதிபதி சூரியன் ஆட்சி பெற்று முயற்சி ஸ்தானாதிபதி புதன் அவருடன் இணைந்திருக்கிறார். யோகாதிபதி செவ்வாயும் ஆட்சி நிலையில் இருக்கிறார். இவர்கள் எல்லோருக்கும் குருபார்வை இருக்கிறது. கடக ராசிக்காரர்களின் முயற்சிகள் வெற்றி பெற்று  பணவரவு இருக்கும் வாரம் இது. உங்களில் கணினி, மென்பொருள், கணக்கு, ஆடிட்டிங், புத்தகம், பிரிண்டிங், எழுத்து  மற்றும் பத்திரிகைத் துறையினர் சிறப்பான நன்மைகளைப் பெறுவீர்கள். தொந்தரவு கொடுத்து கொண்டிருக்கும் பிரச்சனைகள் விலகும் வாரம் இது. கடக ராசிக்கு நன்மைகள் நடக்க இனி தடைகள் இல்லை.

இதுவரை கிடைக்காத திருமண பாக்கியம் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான ஆரம்பங்கள் சிலருக்கு இருக்கும். வியாபாரிகளுக்கு இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆர்டர்கள் கிடைக்கும். சிலருக்கு வெளிமாநில, வெளிநாட்டு பயணங்கள் உண்டு. அதனால் இலாபங்கள் இருக்கும். அனைத்து விஷயமும் எவ்வித தடைகளும் இல்லாமல் சுமூகமாகவும், பிரச்னைகள் எதுவும் இல்லாமலும் நடக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள். கடகத்திற்கு நல்ல வாரம் இது.

சிம்மம்:

சிம்மநாதன் சூரியன் ராசியில் ஆட்சி பெற்று, அவருடன் புதன் நட்பு நிலையில் இணைவு பெற்றுள்ளதும், யோகாதிபதி செவ்வாயும் ஆட்சி நிலையில் ஒன்பதில் இருப்பதும், இவர்கள் அனைவருக்கும் குருபார்வை இருப்பதும் சாதகமான அம்சங்கள் என்பதால் இந்தவாரம் சிம்மத்திற்கு எதிர்மறை பலன்கள் எதுவும் இல்லாத நன்மைகள் உள்ள வாரமாக இருக்கும். யோகக் கிரகங்கள் வலுவான நிலையில் இருப்பதால் சந்தோஷமான மனநிலையில் இருப்பீர்கள். திரைக் கலைஞர்களுக்கு குறிப்பாக தொலைக்காட்சி துறையினருக்கு இது நல்ல வாரம். பணவரவு நன்றாக இருக்கும். வருமானத்திற்கு குறை இருக்காது. 

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்திற்கான ஆரம்பங்களோ அல்லது திருமண உறுதி நிகழ்வுகளோ நடக்கும். முதல் திருமணம் தோல்வி அடைந்து வேதனையில் இருப்பவர்களுக்கு இந்தவாரம் எதிர்கால நல்வாழ்விற்கான அடித்தளங்கள் அமையும். நீண்டகால லட்சியங்களை இப்போது நிறைவேற்றிக் கொள்ள முடியும். கடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு நல்லபடியாக ஒரு முடிவு வரும். சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கு உயர்வு கிடைக்கும். 

கன்னி:

இராசிநாதன் புதன் பனிரெண்டில் மறைந்து, சூரியனுடன் சிம்ம வீட்டில் இணைந்திருப்பதால் வலிமை இழந்து பலவீனம் பெறுகிறார். எனவே இந்த வாரம் கன்னிக்கு எதிலும் கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத நிலை இருக்கும். எல்லாமே இழுபறியாக தாமதமாக முடியும். முக்கியமான ஒரு விஷயத்தில் அன்னிய மத நண்பர் கை கொடுப்பார். அதிகாரம் செய்யும் வேலையில் இருப்பவர்களுக்கு அலைச்சல் மிகுதியாக இருக்கும். ஆனாலும் நல்லபெயர் கிடைக்கும். கையருகே சாப்பாடு இருந்தாலும் எடுத்துச் சாப்பிடுவதற்கு நேரம் இல்லாமல் உழைப்பீர்கள். 

நிரந்தர வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டு இருந்தவருக்கு நிலையான உத்தியோகம் அமையும். பெண்களுக்கு சிறப்புகள் தேடி வரும். நான்கு பேர் கூடும் இடத்தில் மரியாதையுடன் நடத்தப் படுவீர்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். அறிமுகம் இல்லாதவரிடம் வாக்குவாதங்களை தவிருங்கள்.  உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். தொழில்நஷ்டம், வேலையிழப்பு போன்றவைகளை சந்தித்தவர்கள் இனிமேல் நல்ல மாற்றங்கள் நடந்து ஏற்கனவே இருந்து வந்தவைகளை விட நல்ல தொழில். வேலைகளை அடைவீர்கள். 

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் ராகுவிடம் இருந்து விலகப் போகும் நல்ல வாரம் இது. சுக்கிரனுக்கு வீடு கொடுத்த புதன் நட்பு நிலை பெற்றதால் மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். எதிலும் ஒரு நல்ல முடிவு எடுக்க முடியும். இனிமேல் உங்களுக்கு எதிலும் கெடுதல்கள் இல்லை. எல்லா விஷயத்திலும் துலாமிற்கு நன்மை மட்டும்தான். இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். துலாம் ராசிக்கு இந்த வாரம் குதூகலம்தான்.

ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தெரியும். விரயச் செலவுகள் இனி இருக்காது. ஏதேனும் ஒரு தொகையை அது சிறியதாக இருந்தாலும் சேமிக்க முடியும். குடும்பத்தில் மங்களகாரியங்கள் நடக்கும் என்பதால் வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்ப சுபச்செலவுகளும் இருக்கும். சொத்து வாங்குவீர்கள். மனைவிக்கு நகை, பெண்குழந்தைகளின் திருமணத்திற்கென்று நகைசேமிப்பு போன்றவைகளை இப்போது செய்ய முடியும். பெண்களுக்கு நன்மைகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும். 

விருச்சிகம்:

நீண்ட காலமாக முடியாமல் இருக்கும் விஷயங்களை விருச்சிகத்தினர் இப்போது முடித்துக் காட்டுவீர்கள்.  அதிர்ஷ்டம் கை கொடுக்கும் வாரம் இது. சூரியன் செவ்வாய் இருவரும் குருவின் பார்வையில் இருப்பது யோகம் தரும் அமைப்பு என்பதால் இது விருச்சிக ராசிக்கு கெடுபலன்கள் இல்லாத நல்ல வாரம். குறிப்பாக பெண்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும். உங்களில் அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு எல்லாவிதமான நன்மைகளும் கூடுதலாக இருக்கும். நல்லவேலை கிடைக்காத இளையவர்களுக்கு குறை நீங்கும். எதையும் சுறுசுறுப்பாக செய்வீர்கள்.

உங்களில் சிலருக்கு புதிய வீடு, புது வாகன யோகம் இருக்கிறது. அண்ணன், அக்காக்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். வயதான அப்பாவை கொண்டவர்கள் அவருடைய ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருங்கள். ரியல் எஸ்டேட்காரர்கள், பில்டர்ஸ் போன்ற துறையினருக்கு தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். கலைஞர்கள் நல்ல வாய்ப்புக்களைப் பெற்று பரபரப்பாக இருப்பீர்கள். குறிப்பிட்ட சிலர் இருக்கும் இடத்தை விட்டு தூர இடங்களுக்குப் போவதற்கான நிகழ்வுகள் உண்டு.

தனுசு:

தனுசு ராசியின் வேதனை விலகி விட்டது. நல்லவைகள் நடக்க ஆரம்பித்தும் விட்டது. ஒளி வரப்போகிறது. இன்னும் சில வாரங்களில் அது கண்ணுக்கே தெரியப் போகிறது. உங்களில் சிலர் மட்டும் இதை இன்னும் உணராமல் இருக்கிறீர்கள். விட்ட குறை தொட்ட குறையாக இன்னும் சில பூராடம் நட்சத்திரக்காரர்கள் பட்டுக் கொண்டிருக்கும் துன்பமும் இந்த வாரம் முதல் விலகும். இனி குறைகள் சொல்ல எதுவும் இல்லை. இனி எதிலும் இலாபங்கள் மற்றும் வருமானங்கள் இருக்கும். கடந்த காலங்களில் உங்களுக்கு நடந்த. மாற்றங்கள் இனிமேல் எதிர்கால நன்மைக்கு அடிப்படையாக இருக்கும். 

ராசிநாதன் குரு, சுக்கிர பார்வை பெறுவதால் உங்களில் சிலருக்கு மட்டும்  இந்த வாரம் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையில் இருக்கும். சிலருக்கு எல்லாவற்றிலும் முதலில் பிரச்னைகள் தோன்றி பிறகு அனைத்தும் நல்லபடியாக முடியும். பணவரவிற்கு குறை இல்லை என்றாலும் சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழல்கள் இருக்கும். நடுத்தர வயதுடையவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வார இறுதியில் புனித இடங்களுக்கு செல்வதோ, குல தெய்வ வழிபாடோ செய்வீர்கள். கணவன் மனைவி உறவில் முணுமுணுப்புக்கள் உண்டு. குழந்தைகள் செலவு வைப்பார்கள். 

மகரம்:

ஜென்மச்சனியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு இப்போது  தொழில், வியாபாரம், வேலை முதலியவற்றில் மாற்றங்கள் நடக்கும். சனி ராசியில் இருப்பதால் புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். இருக்கும் வேலையிலிருந்து மாறுவதிலும் கவனம் வேண்டும். இளைஞர்கள் விழிப்புடனும், மனக் கட்டுப்பாடுடனும் இருப்பதன் மூலம் கஷ்டமான ஜன்மச்சனி காலத்தை சமாளித்து வருகிறீர்கள். ஜோதிடர்களிடம் இப்போது ஜாதகம் பார்க்க வந்து கொண்டிருப்பவர்களில் மகர ராசியினர்தான் அதிகம்.

30 வயதிற்குபட்டவர்கள்  மனதில் நல்ல திட்டங்களை தீட்டி இப்போது அதை செயல்படுத்த முயற்சிப்பீர்கள். நடுத்தர வயதினர் மனைவிக்கோ குழந்தைக்கோ சொந்த வருமானத்தில் சேமிக்கப்பட்ட பணத்தில் இருந்து நகை வாங்கித் தருவீர்கள். ஜீவனஸ்தானம் வலுவாக இருப்பதால் தொழிலில் வருமானங்களுக்கு குறை இருக்காது. மறைமுகமான எதிரிகள் உங்களை கவிழ்க்கப் பார்த்தாலும் அவர்கள்தான் தோற்றுப் போவார்கள். வரும் குருப்பெயர்ச்சி முதல் அனைத்து சிறப்புக்களும் சேரும். 

கும்பம்:

உங்களில் சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு எச்சரிக்கை தேவைப்படும் வாரம் இது. எட்டாமிடத்தில் புதன், சூரியன், செவ்வாய் வலுப் பெறுவதால் இந்த வாரம் நிதானமான பலன்கள்தான் நடைபெறும். கடன் தொல்லைகளால் சிக்கல்களில் உள்ளவர்களுக்கு நெருக்கடிகள் இருக்கும். என்ன பிரச்னை என்றாலும் பணவரவு நன்றாக  இருக்கும். கொடுக்கும் வாக்கை காப்பாற்ற முடியும். எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். கணவன், மனைவிக்குள் வாக்குவாதங்களை தவிருங்கள். 

இரண்டாமிடம் சுபத்துவம் பெறுவதால் வருமானம் குறைய வாய்ப்பு இல்லை. வேலைப்பளு அதிகமாக இருக்கும். வார ஆரம்பத்தில் மனதில் குழப்பங்களும் முடிவெடுக்க முடியாத தடுமாற்றங்களும் இருக்கும். வாக்குக் கொடுத்தால் நிறைவேற்றுவது கடினம். வியாபாரிகளுக்கு விரயங்கள் ஏற்படும். கோர்ட்டுக்குச் சென்றவர்கள் சாதகமான தீர்ப்பை பெறுவீர்கள். நீண்டநாட்கள் சந்திக்காமல் இருந்த நண்பரையோ, தூரத்து உறவினரையோ சந்திப்பீர்கள். சிலருக்கு வேலை விஷயமாக தூரப் பயணங்கள் அமையும். வடமாநிலங்களுக்குச் செல்வீர்கள்.

மீனம்: 

ராகு  சுக்கிரனுடன் நான்கில் இணைவதால் மீனராசிக்கு இது பெண்களால் மனக்கலக்கம் உள்ள வாரமாக இருக்கும். மிகவும் எதிர்பார்க்கும் ஒன்று பிடிக்காத விதமாக திசை திரும்பி இப்படி ஏன் நடந்தது என்று குழம்பும் நிலை இருக்கும். நிதானம் காட்ட வேண்டிய வாரம் இது. தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் சிக்கல்களும், குறைகளும் இருக்கும். எதிலும் சுணக்கம் இருக்கலாம். எதிர்பார்ப்புகள் இழுபறியாக இருக்கும். எவரையும் நம்ப வேண்டாம். வெளிப்படையாக எதையாவது பேசி விரோதம் வரும் வாரம் இது.

அலுவலகங்களில் யாரையும் நம்ப வேண்டாம். மனதில் உள்ளதை எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். குழந்தைகள் வழியில் செலவு உண்டு. கல்லூரி, பள்ளி செல்லும் பிள்ளைகளை வைத்திருப்பவர்களுக்கு தேவையற்ற விரயங்கள் இருக்கும். 23-ம் தேதி காலை 6.06 முதல் 25-ம் தேதி காலை 8.16 வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல்கள் எதுவும் உங்களுக்கு நடக்காது. அதே நேரத்தில் புதிய முயற்சிகள் ஆரம்பங்கள் எதுவும் இந்த நாட்களில் வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.