குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (03-08-2020 முதல் 09-08-2020 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

மேஷம்:

ராசிநாதன் செவ்வாய் பனிரெண்டில் மறைந்திருப்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டிய வாரம் இது. அதேநேரத்தில் கொரோனா நிலைமையையும் மீறி கையில் பணப்புழக்கம் இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சந்தோஷமும் மனைவி, குழந்தைகளுடன் சண்டையிடாமல் இருப்பதும் நடக்கும். ஆறாமிடம் வலுவிழப்பதால் எதிரிகளையும், எதிர்ப்புகளையும் ஜெயிக்க முடியும். கடன்தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். பயமுறுத்திக் கொண்டிருந்த கடன்காரர்கள் இனிமேல் உங்கள் மேல் நம்பிக்கை வைப்பார்கள்.புதிய கடன் வாங்கி பழைய கடன்களை அடைக்க முடியும். பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகள் இருக்கும். சிலருக்கு ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் உதவி உண்டு. குறிப்பிட்ட சிலருக்கு சொத்து சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னை முடித்து வைக்கப்படும். வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்களில் முன்னேற்றம் இருக்கும். சிலர் எதிர்மறை எண்ணங்கள் உடைய நபர்களை சந்திப்பீர்கள். சிலருக்கு மட்டும் ஒரு சிறப்பு பலனாக கோபமூட்டக்கூடிய சம்பவங்கள் நடக்கும்.

ரிஷபம்:

அரசு ஊழியருக்கு இது நல்லவாரம். காவல்துறை, ராணுவத்தில் இருப்பவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள்  கிடைக்கும். சிலருக்கு அரசு வேலை பற்றிய தகவல்கள் வந்து சேரும். திருமணம் ஆகாதவருக்கு அது உறுதி ஆகும். குடும்பத்தில் சுப காரியம் உண்டு. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் சந்தோஷத்தை தருவார்கள். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டு. விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள். சொத்து பிரச்னை உள்ளவருக்கு சாதகமான தீர்வு கிடைக்கும்.

சிலருக்கு தீர்த்த யாத்திரை, குலதெய்வ வழிபாடு போன்ற ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்களுக்கு இது உற்சாகமான வாரம். அனைத்துப் பாக்கியங்களும் குறைவின்றிக் கிடைக்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தந்தையிடம் ஏதேனும் ஒரு காரியத்தை சாதிக்க நேரம் எதிர்பார்த்து இருந்தவர்கள் இந்த வாரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஆசைப்பட்டுக் கேட்கும் விஷயத்திற்கு அப்பா சம்மதிப்பார். குருபகவான் எட்டில் சுபவலுப்பெற்றதால் இழுத்தடித்தாலும் நல்ல பணவரவு இருக்கும்.

மிதுனம்:

புதன், ராகு இணைவு விலகிவிட்டதால் வாரம் முழுவதும் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். உற்சாகமாக இருப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தி ஜெயித்துக் காட்டுவீர்கள். சூரியன் இரண்டாம்  வீட்டில் இருப்பதால் அரசு ஊழியர்கள், அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்டவர்கள், காண்ட்ராக்டர்கள் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு நன்மைகள் உண்டு. எப்படியும் எதன்மூலமாகவும் தேவையான அளவிற்கு வருமானங்களும், பணவரவும் இருக்கும் என்பதால் கஷ்டங்கள்  எதுவும் இல்லை. கலைத்துறையினருக்கு இனி வாய்ப்புக்கள் உண்டு.

சிலர்  நல்ல பெயர் வாங்கும்படியான சம்பவங்கள் நடக்கும்.  முயற்சி ஸ்தானம் வலுப்பெறுவதால் இதுவரை இருந்து வந்த தன்னம்பிக்கை இல்லாத நிலை விலகும். அனைத்து விஷயங்களிலும் விடாமுயற்சியுடன் இறங்கி சாதித்து காட்டுவீர்கள். 6,10 ஆகிய நாட்களில் பணம் வரும். 2-ம் தேதி பகல் 12.56 மணி முதல் 4-ம் தேதி இரவு 8.47 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் அனைத்து விஷயங்களிலும் நிதானத்துடனும், கூடுதல் கவனத்துடனும் இருக்க வேண்டும். மேற்கண்ட நாட்களில் புதிய முயற்சிகள், நீண்ட பிரயாணங்கள் வேண்டாம்.

கடகம்:

இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் சந்திராஷ்டம தினங்கள் என்பதால் இது டல்லான வாரம்தான். அதேநேரத்தில் அடிப்படை விஷயங்களில் நல்ல பலன்களே நடக்கும். சிலருக்கு எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் இழுபறி இருக்கும். சந்திரன், சனி இணைவதால் மனம் ஒருநிலையில் இருக்காது. யாருக்கும் எதுவும் வாக்குத் தருவதற்கும் தயக்கமாக இருக்கும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக இருங்கள். பண விஷயங்களில்  எச்சரிக்கை தேவை. வேலை வியாபாரம் தொழில் போன்ற அமைப்புக்களில் நல்ல பலன்கள் இருக்கும். பணவரவுக்குப் பஞ்சமில்லை.

எட்டாமிடம் வலுவடையும் போது மனம் குழப்பமான நிலையில் இருக்கும். அதனால்தான் சந்திராஷ்டம நாட்களில் நம் மனம் தெளிவற்று முடிவெடுக்கும் திறன் குறைவாக இருக்கும் என்று வேதஜோதிடம் அந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதுவும் செய்வதை தடை செய்கிறது. 7,8,9 ஆகிய நாட்களில் பணம் வரும். 4-ம் தேதி இரவு 8.47 மணி முதல் 7-ம் தேதி காலை 6.57 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள், முதலீடுகள், ஆரம்பங்கள் எதையும் தவிர்ப்பது நல்லது. எவரிடமும் வாக்குவாதமோ, வீண் பிரச்சனைகளையோ செய்ய வேண்டாம்.

சிம்மம்:

சிம்மத்தில் பிறந்த சுயதொழில் புரிவோருக்கும், வியாபாரிகளுக்கும் இந்த வாரம் நல்ல சூழ்நிலைகள்  இருக்கும். கொரோனா நிலைகளையும் மீறி வாரம் முழுவதும் பணவரவும் உண்டு. பனிரெண்டாம் இடம் வலுப்பெறுவதால் அலைச்சல்கள் அதிகம் இருக்கும். நிலுவையில் இருந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். கலைஞர்கள் வளம் பெறுவார்கள். கெடுதல்கள் எதுவும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை.

ராகு, சுக்கிரன் இணைந்திருப்பதால் குடும்ப விஷயத்தில் முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பீர்கள். இளைஞர்கள், மாணவர்கள் எதிர்கால நல்வாழ்வில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பெண்கள் விஷயத்தில் உங்கள் கவனம் சிதறுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. 8,9,10 ஆகிய நாட்களில் பணம் வரும். 7-ம் தேதி காலை 6.57 மணி முதல் 9-ம் தேதி இரவு 7.06 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் புதிய முயற்சிகள், புதிய ஆரம்பங்கள் எதையும் ஒத்தி வைப்பது நல்லது. எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

கன்னி:

வார ஆரம்பத்தில் ராசிநாதன் புதன்  பதினொன்றில் வலுப் பெற்று தனயோகம் ஏற்படுவதால் கன்னிக்கு இப்போது கொரோனா நிலையையும் மீறி வருமானம் நன்றாக இருக்கும். வியாபாரிகள், விவசாயிகள், பத்திரிக்கை துறையினர், கலைஞர்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நல்ல பலன்கள் நடக்கும். சிலருக்கு தந்தை விஷயத்தில் மனச்சங்கடங்கள் இருக்கும். ஒரு சிலருக்கு மட்டும் உறவினர் விஷயத்தில் எதிர்மறை பலன்கள் இருக்கும். வயதானவர்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

கடன் தொல்லைகளில் சிக்கி நிம்மதியை இழந்தவர்களுக்கு அதில் இருந்து விடுபடுவதற்கான வழிகள் தோன்ற ஆரம்பிக்கும். பெண்கள் விஷயத்தில் இனிமையான நிகழ்ச்சிகள் உண்டு. இளைய பருவத்தினருக்கு காதல் அனுபவங்கள் இருக்கும். சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைத்துணையை இப்போது சந்திப்பீர்கள் அல்லது தீர்மானிப்பீர்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு நன்மைகள் இருக்கும். பெண்களை உயரதிகாரிகளாகக் கொண்டவர்களுக்கு நல்லவைகள் உண்டு.

 துலாம்:

துலாம் ராசிக்கு இது தொல்லைகள் எதுவும் இல்லாமல் பிரச்னைகளுக்கு தீர்வுகள் ஏற்படும் வாரமாக இருக்கும். இளைஞர்கள் வேலைக்காக மிகுந்த அலைச்சல்களில் இருப்பீர்கள். சிலருக்கு குலதெய்வ தரிசனமோ ஞானிகள் தரிசனமோ உண்டு. எதற்கெடுத்தாலும் எரிச்சலும் கோபமும் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் கோபத்தைக் கட்டுபடுத்துங்கள். நான்கில் சனி  இருப்பதால் வம்பு, வழக்கு, தேவையற்ற வீண்பழி, கைப்பொருள் திருட்டுப் போகுதல், பிடிக்காதவரின் கை ஓங்குதல், வீண்செலவு, அனாவசிய கடன் போன்ற பலன்கள் நடக்கும்.

இளைய பருவத்தினர் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். தொழில், வேலை அமைப்புகளில் தடைகள் இருக்கும். கடைசிநேரத்தில் ஒரு பணவரவு வந்து அனைத்தையும் சமாளிக்க கைகொடுக்கும் என்பதால் கவலைகளுக்கு இடமில்லை. பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். நல்ல சம்பவங்கள் நடக்கும் வாரமாக இருக்கும் என்றாலும் ராசிநாதன் சுக்கிரன் ராகுவுடன் இணைவதால் நன்மைகள் அனைத்தையும் நீங்கள் முழுமையாக  அனுபவிக்க முடியாதபடி நெருடல்கள் இருக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்கு பெரிய குறைகள் இல்லாத வாரம் இது. உங்களில் சிலரின் கணவருக்கோ மனைவிக்கோ எதிர்பாராத நன்மைகள் இருக்கும் வியாபாரிகளுக்கு நன்மைகளும் மறைமுகமான வருமானங்களும் இருக்கும். சகோதரர்களுடன் அனுசரித்துப் போவது நல்லது. ஆயுதங்களை கையில் வைத்து பணிபுரியும் டெய்லர் போன்ற துறையினருக்கு லாபங்கள் உண்டு. அன்னிய இன, மத, மொழிக்காரர்கள் சரியான நேரத்தில் பெரிய உதவிகளை செய்வார்கள். குறிப்பாக இஸ்லாமிய நண்பர்களால் நன்மைகள் இருக்கும்.

இந்த வாரம் எதிர்ப்புகளையும், எதிரிகளையும் வெற்றி கொள்வீர்கள். பிறந்த ஜாதகப்படி நல்லவைகள் நடக்காத உங்களில் சிலரை சுற்றி இப்போது இருக்கும் அதிர்ஷ்டமில்லாத நிலை விலகப் போகிறது. இனிமேல் நன்றாக இருக்கப் போகிறீர்கள். ஆறாமிடம் கெடுவதால் எதிர்ப்புகள் அருகிலேயே வராது. உங்களைப் பிடிக்காதவர்கள் தூரத்தில் உங்களைப் பார்த்தாலே பக்கத்துத் தெருவுக்குள் நுழைவார்கள். வழக்குகள் சாதகமாக முடியும். அதேநேரத்தில் ஏதேனும் ஒரு சுபச்செலவுக்கு கடன் வாங்க வேண்டியிருக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்கு வேலை செய்யும் இடங்களிலும், தொழில் அமைப்புகளிலும் உள்ள பிரச்னைகள் தீரும் வாரம் இது. ஏற்கனவே உங்களின் பிரச்னைகள் தீருவதற்கான ஆரம்பங்கள் நடக்க ஆரம்பித்து விட்டன. எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடிய சில விஷயங்களை இப்போது சிலர் செய்வீர்கள். ஒரு சிலருக்கு வீடு அல்லது வாகனம் புதியதாகவோ ஏற்கனவே உள்ளதை மாற்றியோ அமையும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். தந்தை வழி உறவினர்கள் உதவுவார்கள்.

ஏழு, பத்துக்குடைய புதனின் பலவீனம் இந்த வாரம் முதல் விலகுவதால்  உங்களால் இப்போது எதையும் சாதித்துக் காட்ட முடியும். சிலருக்கு பெண் குழந்தைகள் மூலமாக நல்ல செய்திகள் கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் சிறப்பான பலன்கள் இருக்கும். வருமானம் வரும். கலைத்துறையினர் நல்ல மாற்றங்களை உணருவீர்கள். எதிர்ப்புகளும், போட்டியாளர்களும் விலகுவார்கள். பெண்களுக்கு இது நல்ல வாரம். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை சற்று அக்கறையுடன் பார்த்து கொள்வது நல்லது.

மகரம்:

மகர ராசிக்கு இது நல்லதும் கெட்டதும் கலந்த வாரமாக அமையும். பிள்ளைகள் வழியில் மனச்சங்கடங்களும், எதிர்பாராத செலவுகளும் வரும். இரண்டாமிடம் வலுவாக இருப்பதால் பணவரவிற்கு தடை இல்லை. ராசியில் சனி இருப்பதால் நடுத்தர வயதை தாண்டியவர்கள் உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. குடும்பத்தில் பாகப்பிரிவினை, சொத்து பிரச்சனை சம்பந்தமாக பேச்சுவார்த்தை இருந்தால் தள்ளி வையுங்கள். புது முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். யாருக்கும் ஜாமீன் நிற்க வேண்டாம்.

வங்கியிலிருந்து பணம் எடுத்துவரும் போது அதிக கவனம் தேவை. சிலர் செல்போனை தொலைப்பீர்கள். உஷாராக இருங்கள். பெண்கள் விஷயத்தில் சில கசப்பான அனுபவங்கள் ஏற்படும். எதிலும் நிதானமும் எச்சரிக்கையும் தேவை. அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக இருங்கள். எதிலும் அகலக்கால் வைத்துவிட வேண்டாம். ஜென்மச்சனி முடிந்ததும் நல்ல எதிர்காலம் அமையும். அனைத்தையும் ஜெயிப்பீர்கள். கவலை வேண்டாம். அதுவரை பொறுமை தேவை. இப்போது எந்த விஷயமும் தீவிர முயற்சிக்குப் பிறகுதான் வெற்றி பெறும்.

கும்பம்:

ராசிநாதன் சனி, பனிரெண்டாமிடத்தில் இருப்பதால் இதுவரை வெளிநாட்டுப் படிப்பு, வேலைகளுக்கு முயற்சி செய்து வந்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும் வாரம் இது. பிள்ளைகள் விஷயத்தில் நல்ல பலன்கள் நடைபெறும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். நீண்டநாள் நினைத்திருந்த ஒரு காரியம் சாதகமாக நடைபெறும். சிலருக்கு மட்டும் தொழில் விஷயமாக கடுமையான அலைச்சலும், நெருக்கடியும் இருக்கும். வேலை, வியாபாரம், தொழில் விஷயங்களில் இடைஞ்சல்கள்` நீங்கும். உங்களைப் பிடிக்காதவர்களிடம் மனமாற்றம் உண்டாகும். எதிரி நண்பன் ஆவார்.

அதிகாரிகளாக இருப்பவர்கள் கீழே பணிபுரிவோர்களை புரிந்து கொள்வது நல்லது. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களுடன் எதையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சிலநேரங்களில் சுவருக்குக் கூட கண்களும், காதுகளும் இருக்கின்றன என்பதை மறக்காதீர்கள். ஏற்றுமதி இறக்குமதி மற்றும் வெளிநாடு சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்கள் நன்மைகளையும், பணவரவுகளையும் பெறுவார்கள். பங்குச்சந்தையில் லாபம் வரும். சூதாட்டம், லாட்டரி சீட்டு கை கொடுக்கும். அதற்காக பேராசைப்பட்டு எதையும் செய்ய வேண்டாம்.

மீனம்:

மீனத்திற்கு வீட்டிலும், தொழில் அமைப்புகளிலும் நன்மைகளும், சந்தோஷமான விஷயங்களும் நடக்கும் வாரம் இது. சிலருக்கு பதவி உயர்வு, அல்லது வேலைமாறுதல் உண்டு. கொரோனாவையும் மீறி சரளமான பணப்புழக்கமும், நல்ல வருமானமும் ஏற்படும். தூரத்தில் இருக்கும் மகன், மகளிடமிருந்து நல்ல செய்தி வரும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் லாபங்களை பெறுவார்கள். வாழ்க்கைத் துணைவர் மூலம் சந்தோஷமான நிகழ்ச்சிகள் இருக்கும். அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். மற்றவர்களால் மதிக்கப் படுவீர்கள். மேல் அதிகாரியின் தொந்தரவு இருக்காது.

பணவரவிற்கு குறையில்லை என்பதால் பற்றாக்குறை இருக்காது. கடன் தொல்லைகளால் கஷ்டபட்டவர்கள், எந்த ஒரு விஷயத்தையுமே நல்லவிதமாக முடிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் இந்த வாரத்தில் இருந்து அனைத்து பின்னடைவுகளும் நீங்கப் பெற்று சந்தோசம் அடைவீர்கள். மீனத்திற்கு இன்னும் மூன்று வருடத்திற்கு மிகவும் நல்ல காலம் ஆரம்பிக்கிறது. எதையும் துணிந்து செய்யுங்கள். நன்றாக இருப்பீர்கள். ஐம்பது வயதுகளுக்குள் இருப்பவர்களுக்கு இது மிகவும் முக்கிய காலகட்டம்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.