குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (06-07-2020 முதல் 12-07-2020 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888


மேஷம்:

மூன்றாமிடத்தில் ராகுவுடன் இருக்கும் சூரியனால் பணியிடங்களில் வீண்பழியோ, சிரமங்களோ, செலவுகளோ வரும் என்பதால் வம்பு தும்புகளை விட்டு சற்றுத் தள்ளியே இருக்க வேண்டிய வாரம் இது. அதேநேரத்தில் எது நடந்தாலும் அது உங்கள் நன்மைக்காகவே இருக்கும் என்பதும் உறுதி. பேச்சினால் தொழில் செய்ய கூடிய ஆசிரியர்கள் வக்கீல்கள் போன்றவர்களுக்கு மாற்றங்கள் இருக்கும். இளைய பருவத்தினருக்கு திருமண காலம் கூடி வருகிறது. தடைகள் நீங்கி வரன்கள் கூடிவந்து நவம்பருக்கு மேல் திருமணம் நடக்கும்.


தாயார் சம்பந்தமாக செலவுகள் ஏற்படும். வயதான அம்மாவை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். தொழில் ஓரளவு சுமுகமாக இருக்கும். அரசுத்துறை, தனியார்துறை ஊழியர்கள் வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அனைத்து விஷயங்களையும் நிதானமாகவும் திட்டமிட்டும் சரியாகச் செய்யுங்கள்.

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் ராசியில் வலுவுடன் இருக்கும் நல்ல வாரம் இது. கொரோனாவின் தாக்கத்தையும் மீறி உங்களின் பொருளாதார நிலைமை மேம்படும். கொடுக்கும் வாக்குறுதி பலிக்கும். தொழில் செய்வோருக்கு முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆரம்பங்கள் நடக்கும். வியாபாரிகளுக்கு குறை இருக்காது. நான்காம் அதிபதி சூரியன், ராகுவுடன் இணைந்திருப்பதால் பெண்கள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். அவர்களால் வம்புகள் வரலாம் என்பதால் கவனமுடன் இருங்கள். மனைவியுடன் கருத்து வேற்றுமை இருக்கும்.

திருமணமாகாதவர்களுக்கு வரும் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு திருமணம் நடைபெறும். சூரிய, ராகு சேர்க்கையால்  சிலருக்கு பெற்றோர் வழியில் செலவுகள்  வரும். குடும்பத்தில் உங்களுடைய ஆலோசனைகளை ஏற்காமல் தவிர்த்து அதனால் பிரச்னைகளில் சிக்கித் தவித்தவர்கள் இனிமேல் உங்களின் அருமை பெருமைகளை உணர்ந்து உங்களின் சொல்லைக் கேட்பார்கள். வேலை தொழில் வியாபாரத்தில் போட்டிகளையும், சிக்கல்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நிலைமை சாதகமாக மாறும்.

மிதுனம்:

கடந்த சில வாரங்களாக உங்களில் சிலருக்கு இருந்து வந்த பய உணர்வுகளும், கலக்கமான மனநிலையும் விலகி மனத்தில் ஒரு புத்துணர்ச்சி பிறந்து மிதுனத்தினர் புதுமனிதராக மாறப் போகிறீர்கள். வரும் ராகு,கேதுப்பெயர்ச்சியால் ராகு தற்போது உங்கள் ராசியில் இருக்கும் நிலை மாறி, யோகம் தரும் ஸ்தானமான பனிரெண்டாமிடத்திற்கு வரப் போவதால் உங்களின் அனைத்துப் பிரச்னைகளும் நல்லபடியாக முடிவுக்கு வந்து மீண்டும் அதிர்ஷ்டம் தேடி வந்து உங்களிடம் ஒட்டிக் கொள்ளப் போகிறது.

ராசிநாதன் புதன் ராகுவுடன்  இருந்தாலும் குருவின் பார்வையில் இருப்பதால் இது நல்ல வாரம்தான். கொரோனாவையும் மீறி தொழில் முன்னேற்றத்திற்கான அனைத்தையும் தற்போது செய்ய முடியும். தடைகள் நீங்கப் போவதால் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். 6-ம்தேதி அதிகாலை 5.01 மணி முதல் 8-ம்தேதி பகல் 12.31 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் செய்யவேண்டாம். மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் எவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

கடகம்:

கடக ராசிக்கு ஒரு சிறப்பு பலனாக, முதல் திருமணம் கோணலாகி காவல் நிலையம், வழக்கு, நீதிமன்றம் என்று அலைந்து திரிந்தவர்களுக்கு இப்போது நல்லபடியாக ஒரு முடிவு வந்து தெளிவு பிறக்கும். இரண்டாவது வாழ்க்கைக்கான அமைப்புகள் உருவாகும். மகன் மகள் விஷயத்தில் இதுவரை இருந்துவந்த மனக்கவலைகள் இனிமேல் இருக்காது. வீடு கட்டுவதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தி இருந்தவர்கள் நல்ல விதமாக வேலையை முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள்.

ராசிநாதன் சந்திரன் வாரம் முழுவதும் வலுவாக இருக்கிறார். ஆனாலும் ராசி  இப்போது சனியின் பார்வையில்  இருக்கிறது. இதனால் கடக ராசிக்கு முதலில் தடைகள் வந்து பிற்பகுதியில் அனைத்துப் பிரச்சினைகளும் சாதகமாக மாறி தீர்வு கிடைக்கும். 11,12 ஆகிய நாட்களில் பணம் வரும். 8-ம்தேதி பகல் 12.31 மணி முதல் 10-ம்தேதி இரவு 10.54 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய விஷயங்கள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம். யாரிடமும் கோபப்பட்டு பேசுவதும் இந்த நாட்களில் கூடாது.

சிம்மம்:

ராசிநாதன் சூரியன் ராகுவுடன் நெருங்கி கிரகண தோஷத்தில் இருப்பதால் சிம்மத்தினருக்கு அனைத்திலும், தடைகளும், தாமதங்களும் இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் கடும் முயற்சிக்கு பின்பே வெற்றிகரமாக முடிக்க முடியும். பிறந்த இடத்தை விட்டு தூரத்தில் இருப்பவர்களுக்கு மாற்றங்களை தரும் நல்ல நிகழ்ச்சிகள் உண்டு. இதுவரை பொருளாதார சிக்கல்களில் இருந்த சிலருக்கு புதன்  பனிரெண்டாமிடத்திற்கு மாறப் போவதால் பின்னடைவுகள் அனைத்தும் நீங்கி நன்மைகள் ஆரம்பிக்கும். நட்பு வட்டாரத்தால் பாராட்டப் படுவீர்கள்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வாரத்தின் பிற்பகுதியில் சந்திரனின் தயவால் திடீர் பண வரவு ஒன்றும் உண்டு. 12,13, ஆகிய நாட்களில் பணம் வரும். 10-ம்தேதி இரவு 10.54 மணி முதல் 13-ம்தேதி காலை 11.14 மணி வரை சந்திரன் எட்டில் மறையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் உங்களுக்கு தெளிவற்ற மனநிலை இருக்கும். இந்த நாட்களில் எவ்வித புதிய ஆரம்பங்களும், முயற்சிகளும் செய்ய வேண்டாம்.

கன்னி:

ராசிநாதன் புதன் ராகுவுடன் இணைந்து கிரகண தோஷத்தில் இருப்பதால் உங்களில் சிலருக்கு கடுமையான மன அழுத்தம் தரும் நிகழ்வுகள் இருக்கும். இன்னும் இரண்டு வாரங்களில் எல்லாம் சரியாகும். கன்னியினருக்கு இப்போது எதிலும் நிதானம் தேவை. வரும் நாட்களில் பிரச்னைகள் அனைத்தும் நல்ல முறையில் தீரும். கணவன் மனைவி உறவு  சீரடையும். மனதில் நினைத்திருந்த திட்டங்களை நல்லவிதமாக செயல்படுத்த முடியும். உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள்.

காவல்துறை, ராணுவம் போன்றவைகளில் பணிபுரிபவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் நல்லபடியாக கிடைக்கும். தோல்வி மனப்பான்மையில் இருந்தவர்கள் அது விலகப் பெற்று சுறுசுறுப்பாவீர்கள். எந்த நேரமும் பரபரப்பாக அலைந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் லாபங்கள் குறைவாகத்தான் இருக்கும். பெண்களுக்கு வேலை செய்யும் இடங்களில் மனக்கசப்புகள் நல்லபடியாகத் தீரும்.

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் எட்டில் இருந்தாலும் பாக்கிய ஸ்தானம் குருவின் பார்வையில் இருப்பதால் துலாத்தினருக்கு இந்த வாரம் கொரோனாவையும் மீறி பொருளாதார அனுகூலம் கிடைக்கும். ஏழாமிடம் வலுப் பெற்றுக் காணப்படுவதால் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பீர்கள். பொருளாதார சிக்கல்கள் ஏற்படுவதற்கு இனிமேல் வாய்ப்பு இல்லை. கலைஞர்களுக்கு இது நல்ல வாரமாக அமையும். கெடுதல்கள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. பெண்களுக்கு பொருள் சேரும் யோகம் உண்டு.

எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். கலைஞர்கள் வளம் பெறுவார்கள். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. வாழ்க்கைத் துணை விஷயத்தில் நல்லவை நடைபெறும். திருமணமாகாமல் இருப்பவருக்கு திருமண உறுதி செய்யும் நிகழ்ச்சிகள் இருக்கும். கூட்டுத் தொழில் சிறப்படையும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். அலுவலகத்தில் எந்த பிரச்னையும் வருவதற்கு வாய்ப்பு இல்லை.

விருச்சிகம்:

விருச்சிகத்திற்கு திருப்புமுனையாக அமையக்கூடிய நிகழ்ச்சிகள் இந்த வாரம் இருக்கும். அலுவலகங்களில் ஓரளவு நல்ல சூழ்நிலை இனி இருக்கும். மற்றவர்களால் மதிக்கப் படுவீர்கள். மேலதிகாரியின் தொந்தரவு இருக்காது. பணியிடங்களில் சலுகைகள் கிடைக்கும். மகன், மகள் விஷயங்களில் நல்ல அனுபவங்கள் இருக்கும். குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். சிலருக்கு தூர இடங்களில் இருந்து நல்ல தகவல்கள் வரும். இளைஞர்கள் வேலை தொழில் பற்றிய மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள்.

யோகாதிபதி குரு இரண்டில் அமர்ந்து தொழில் வீட்டை பார்ப்பது குடும்ப விஷயங்களிலும், தொழில் விஷயங்களிலும் நன்மைகளைத் தரக்கூடிய அமைப்பு. ஜூலை மாதம் முழுமையும் விருச்சிகத்திற்கு நல்லவை தரும் மாதம்தான். பெண்களுக்கு நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவி உயர்வு, கூடுதல் சம்பளம் போன்ற பலன்கள் இருக்கும். ராசிநாதனின் செவ்வாயின் ஐந்தாமிட வலுவால் உங்களின் செயல்திறன் கூடும். தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள்.

தனுசு:

தனுசு ராசிக்கு இனி கஷ்டங்கள் எதுவும் இல்லை. உங்களில் மூலம், பூராடம், உத்திராடம் மூன்று நட்சத்திரக்காரர்களும் இனிமேல் நன்றாக இருக்கப் போகிறீர்கள். எனவே நேற்றைய எதையும் நினைத்து கலக்கம் அடையாமல் நாளை கிடைக்கப் போகும் வெற்றியை நினையுங்கள். குறிப்பாக உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் தீர்வை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறீர்கள். உங்களின் மன அழுத்தம் விலகப் போகிறது. இனிமேல் தனுசுக்கு சில வருடங்களுக்கு துன்பம் இல்லை. எதற்கும் இனி கவலை வேண்டாம். இனி எல்லாம் சுகப்படும்.

இந்த வாரத்தின் முக்கிய பலனாக கடந்த காலங்களில் உங்களுக்கு நடந்த கெட்ட சம்பவங்களின் அர்த்தம் புரியும். நெருங்கிய சிலரைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்வீர்கள். விடைதெரியாத பல கேள்விகளுக்கு இப்போது பதில் தெரியும். வியாபாரிகளுக்கு இது லாபங்கள் வரக்கூடிய ஒரு காலகட்டமாக அமையும். மத்திய மாநில அரசுகளின் முதன்மைத் தேர்வுகளான ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் போன்ற அரசு வேலையை  எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு இனிமேல் நல்லசெய்தி உண்டு.

மகரம்:

ராசியில் சனி அமர்ந்து, ஆறில் புதன் ராகுவுடன் இணைந்திருப்பதால் இந்த வாரம் எல்லோரிடமும் கடுகடுவென இருப்பீர்கள். அடுத்தவர்கள் உங்களை கோபமூட்டி பார்த்தாலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய வாரம் இது. குறிப்பாக கணவர்-மனைவி இடையே கருத்து வேற்றுமைகள் வரும் என்பதால் கோபத்தை ஒத்தி வையுங்கள். சிலருக்கு கட்டிய வீடோ, காலிமனையோ வாங்குவதற்கு இப்போது சந்தர்ப்பம் வரும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட நல்ல  வாகனம் வாங்க முடியும்.

இளைஞர்களுக்கு இப்போது காதல் வரும். காதலுக்குப் பின்னாடியே பிரச்னைகளும் வரும். பள்ளிகள் இயங்கவில்லை என்றாலும் மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எல்லா வருடமும் பரீட்சை எழுதாமலேயே பாஸ் போட்டு விட மாட்டார்கள். வியாபாரிகள் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டியது அவசியம். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலை மாறும்.  மருத்துவத் துறையில் இருப்பவர்க்கு பொறுமை தேவைப்படும் வாரம் இது.

கும்பம்:

ஏழரைச் சனியின் தாக்கத்தை இன்னும் கும்ப ராசியினர் உணராமல் இருக்கிறீர்கள். புதிதாக எதையும் ஆரம்பிப்பது, இருக்கும் வேலையை மாற்ற நினைப்பது இப்போது வேண்டாம். விரையத்தில் இருக்கும் சனியால் இப்போது உறவினர்கள் பங்காளிகள் போன்றவர்களால் தகராறுகளோ வழக்கு விவகாரங்களோ ஏற்படலாம். உங்களில் சிலர் கோர்ட், போலீஸ் என அலைய நேரிடும். அதிகமான அலைச்சல்களாலும், வேலைப்பளுவாலும் எரிச்சல் படுவீர்கள். கொஞ்ச காலத்திற்கு நிதானமாக இருக்க வேண்டிய காலகட்டம் இது.

பெண்களுக்கு இது வேலைச்சுமையைத் தரும் காலமாகும். எங்கும், எதிலும்  நீங்கள்தான் அனைத்தையும் செய்ய வேண்டியது இருக்கும். யாரையும் நம்பி மனதில் உள்ளவைகளையோ குடும்ப விஷயங்களையோ பகிர்ந்து கொள்ள வேண்டாம். சிலருக்கு வீடுமாற்றம், தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும். அனைத்து மாற்றங்களும் உங்களின் எதிர்காலத்திற்கு நல்லதாகவே அமையும். பரம்பொருள் எப்போதும் துணையிருப்பார். கவலை வேண்டாம்.

மீனம்:

ராசிநாதன் குரு பத்தாமிடத்தில் ஆட்சி நிலையில் அமர்ந்திருப்பதால் நீங்கள் நன்மைகளை அனுபவிக்கும் வாரம் இது. அதேநேரத்தில் செவ்வாய் ராசியில்  இருக்கிறார். இதனால் குடும்பத்தில் உங்களை கோபமும் எரிச்சலும் படக்கூடிய விஷயங்கள் இன்னும் சில வாரங்களுக்கு நடக்கும். வீட்டில் ஒருவர் கோபத்தில் பேசினாலும் மற்றவர் அடங்கிப் போவதால் பிரச்னைகளை சமாளிக்க முடியும்.  கோபத்தை தவிருங்கள். பணியிடங்களில் அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தைப்பேறு கிடைக்கும். வீட்டில் சுப காரியத்திற்கான முன்னேற்பாடு போன்றவைகள் இருக்கும். இப்போது அறிமுகமாகும் நபர் ஒருவர் உங்கள் வாழ்நாள் முழுவதும் நல்ல நண்பராக தொடருவார். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். மகளிருக்கு மகிழ்ச்சியும் மரியாதையும் நிச்சயம் உண்டு. இளைஞர்களுக்கு நல்ல காரியங்கள் அனைத்தும் கூடி வரும். இந்தாண்டு இறுதிக்குள் நல்ல செய்தியைக் கேட்பீர்கள்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.