குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (29-06-2020 முதல் 05-07-2020 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

மேஷம்:

யோகாதிபதி குரு அதிசார நிலையில் இருந்து விலகி இந்த வாரம் மீண்டும் ஒன்பதாமிடத்திற்கு வந்து ராசியைப் பார்க்கப் போவதால் மேஷத்தினர் இனிமேல் நல்லது நடக்கப் பெறுவீர்கள். இனி எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகிறது. யோகக்கிரகங்கள் வலுப்பெறுவதால் கொரோனாவையும் மீறி எதையும் சமாளிக்கும் திறனும், தைரியமும் வரும். ராசிநாதன் செவ்வாய் பனிரெண்டில் இருப்பது சாதகமற்ற அமைப்புத்தான் என்றாலும் ராசிக்கு குருவின் பார்வை இருப்பதால் கெடுதல்கள் எதுவும் இருக்காது.


கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு விலகும். யாராவது ஒருவர் கோபம் தணிந்து விட்டுக் கொடுத்து போவீர்கள். பணவரவுக்கு தடை  இல்லை. பொருளாதார நிலைமை ஓரளவு நன்றாகவே இருக்கும். செவ்வாயின் வலுவால் தொழிலில் நல்லவை நடக்கும். 1,2,7,8, ஆகிய நாட்களில் பணம் வரும். 1-ம்தேதி இரவு 8.56 மணி முதல் 4-ம்தேதி  அதிகாலை 12.08 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் வீண் வாக்குவாதங்களோ தேவையற்ற பேச்சுக்களோ பேசாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளும் வேண்டாம்.  

ரிஷபம்:

உங்களில் கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு இந்த வாரம் விரயங்களும், செலவுகளும் இருக்கும். சுக்கிரன் ராசியில் இருப்பதால் பணவரவு உண்டு. ஆனால் சேமிக்க முடியாமல் போகும். வீட்டிற்குப் பயந்து காதலை மனதிற்குள் பூட்டி ஒளித்து வைத்திருந்தவர்கள் தைரியம் வந்து பெற்றோரிடம் சொல்லி சம்மதம் பெறுவீர்கள். சிலருக்கு வழக்கு விஷயங்களில் வெற்றிகக்கான திருப்பங்கள் கிடைக்கும். பெண்களுக்கு வேலைப்பளு குறையும். வீட்டிலும் உங்கள் பேச்சை மற்றவர்கள் கேட்பார்கள். சற்று நிம்மதியாக உணர்வீர்கள்.

கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகள் வளம் பெறுவார்கள். சுயதொழில் புரிவோருக்கும், வியாபாரிகளுக்கும் கொரோனா முடக்க நிலையையும் மீறி வருமானம் இருக்கும். மகன், மகள்களால்  சந்தோஷம் இருக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத்துணை கேட்கும் உதவிகளை செய்வீர்கள்.4-ம்தேதி அதிகாலை 12.08 மணி முதல் 6-ம்தேதி காலை 5.01 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் வீண் வாக்குவாதங்களோ தேவையற்ற பேச்சுக்களோ பேசாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளும் வேண்டாம். 

மிதுனம்:

ராசிநாதன் புதன் ராகுவுடன்  இணைந்திருப்பதால் எதிலும் நீங்கள் தெளிவின்றி இருக்கும் வாரம் இது. எட்டில் இருக்கும் பாபத்துவ சனி சிலரின் குடும்பத்தில் குழப்பங்களைத் தருவார். கவனமாக இருங்கள். புதிய நபர்களிடம் கொடுக்கல், வாங்கல் செய்ய வேண்டாம். உறவினர்கள், பங்காளிகள் போன்றோர்களால் செலவுகள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் யோசித்து தலையிடவும். வார இறுதியில் இளைய பருவத்தினருக்கு வயதிற்கே உரிய உல்லாச அனுபவங்கள் ஏற்படும். பொதுவில் நிதானமான வாரம் இது.

விரயாதிபதி சுக்கிரன் வலுப்பெறுவதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். திணறித்தான் போவீர்கள். மனைவி வழியில் நல்ல விஷயங்கள் உண்டு. மைத்துனர்கள் உதவுவார்கள். கூட்டுத் தொழில் சிறப்படையும். வாகன மாற்றம் உண்டு. வார பிற்பகுதியில் சந்திரன் சுபவலு பெறுவதால் சிலருக்கு முக்கிய மாற்றங்கள், சிறு பயணங்கள் இருக்கும். வெளிநாட்டு விஷயங்கள் கை கொடுக்கும். கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. உடல்நலம் இல்லாமல் இருப்பவர்கள் குணம் அடைவார்கள்.

கடகம்:

கடகத்திற்கு மனக்குழப்பங்கள் உள்ள வாரம் இது. சில விஷயங்களில் இது பாம்பா, கயிறா என்று அடையாளம் காண முடியாமல் தவிப்பீர்கள். இந்த வாரம் பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டி விடும் சம்பவங்கள் நடக்கும். செலவுகளும் விரயங்களும் இருக்கும். சிலருக்கு இளைய சகோதரரிடம் கருத்து வேறுபாடு வரும். தந்தைவழி உறவினர் வகையில் மனக்கசப்புக்கள் அல்லது பூர்வீகச்சொத்து விஷயத்தில் இடையூறுகள் இருக்கும். ஜீவனஸ்தானம் வலுவாக இருப்பதால் தொழிலில் வருமானங்களுக்கு குறை இருக்காது.

வேலையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவி வரும். நகைச்சுவை நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். பங்காளிகளை நம்ப வேண்டாம். கலைஞர்களுக்கு உழைத்த கூலியை பெறுவதற்கு போராட வேண்டி இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த வாரம் திருமணம் நடப்பதற்கான உறுதி நிகழ்ச்சிகள் இருக்கும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். ஒரு சிலர் சிறு பயணம் செல்வீர்கள்.

சிம்மம்:

ராசிநாதன் சூரியன் தனது நண்பரான புதனுடன் லாபஸ்தானத்தில் இணைந்து அங்கே ராகுவும் இருப்பதால் உங்களில் இளைய பருவத்தினருக்கு சில நல்ல அறிமுகங்கள் கிடைக்கும் வாரம் இது. குறிப்பாக உங்களில் வியாபாரிகளுக்கு நல்ல பலன்கள் இருக்கும். சிலருக்கு தாயார் வழியில் நல்ல விஷயங்களும், அவர் மூலம் ஆதாயங்களும் இருக்கும். சொந்த வீடு இல்லாதவருக்கு வீடோ, மனையோ அமைவதற்கான ஆரம்பங்கள் இருக்கும். சிலர் வாகன யோகம் பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தை காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.

கெடுதல்கள் இல்லாத வாரம் இது. ராசிநாதன் ராகுவுடன் இணைவதால் சொந்தமாக தொழில் தொடங்கவோ, இருக்கும் தொழிலை விரிவுபடுத்தவோ இப்போது வேண்டாம். ஒரு மாதம் தள்ளிப் போடுங்கள். சூரியன் ராகுவுடன் இணைந்திருப்பதால் அவரின் முழு நன்மைகளும் கிடைப்பது கடினம். எனவே புதிய முயற்சிகள் இப்போது சிரமத்தை தரும். பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவாக இருப்பதால் தெய்வ அருள் உண்டு. சுயதொழில் புரிவோருக்கும் நல்ல வாரம் இது. இளைஞர்களுக்கு  சில நல்ல அனுபவங்கள் இருக்கும்.

கன்னி:

ராசிநாதன் புதன் ராகுடன் இணைந்திருந்தாலும் குருவின் பார்வையில் இருப்பது யோக அமைப்பு. எனவே இந்த வாரம் கன்னிக்கு குறைகள் எதுவும் இல்லாத வாரமாக இருக்கும். குரு பகவானும் ஆட்சி வீட்டில் சுப வலுவாக உள்ளதால் பண வரவு இருக்கும். வாரம் முழுவதும் சுக்கிரனும் வலுப் பெறுவதால் வேலை செய்யும் இடங்களில் இருந்த தொந்தரவுகள் நீங்கும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்கள் வளம் பெறுவார்கள். வெளிநாடு லாபம் உண்டு.

கொரோனாவால் தாமதமாகி வந்த அனைத்து விஷயங்களும் தடைகள் நீங்கி நடக்கும். இளைய பருவத்தினருக்கு திருமணம் நிச்சயம் ஆகும். தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் உண்டு. வயதானவர்கள் குடும்பத்தில் மதிக்கப்படுவார்கள். அவர்களின் ஆலோசனை ஏற்கப்படும். வழக்குகளால் அலைந்து கொண்டு நிம்மதி இழந்தவர்களுக்கு வழக்கு வெற்றி பெறும் நிலை உருவாகும், எதிர்ப்புகள் விலகும். அரசு, தனியார் துறை ஊழியருக்கு இது நல்ல வாரம். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு.

துலாம்:

துலாத்திற்கு இது நல்ல வாரமே. வருமானம் இருக்கும். உங்களில் சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். இளைய பருவத்தினருக்கு திருமணம் உறுதி ஆகும். செவ்வாய் ஆறில் உள்ளதால் மருத்துவத்துறையினர், சிவில் இன்ஜினியர்கள், சிவப்புநிற பொருட்கள் சம்பந்தப்பட்டவர்கள், ரியல்எஸ்டேட் துறையினர், சீருடை பணியாளர்கள், காவல்துறை, ராணுவம் போன்றவர்களுக்கு நன்மைகள் இருக்கும்.

வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு சுபகாரியம் நடத்த முன்னேற்பாடுகள் உண்டு. கலைஞர்களுக்கு இனி வாய்ப்புக்கள் வரும். சிலர் இந்த வாரம் புகழ் பெறுவீர்கள். மீடியா துறையினருக்கு அலைச்சல்கள் அதிகம் உண்டு. பேச்சுக்களில் நிதானம் தேவை. கணவன் மனைவி உறவில் கருத்து வேற்றுமைகள் இருக்கும். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மூன்றில் கேது இருப்பதால் தெய்வ ஆசிர்வாதம் உண்டு. வழிபாடு செய்வீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்கு எதுவும் கை கொடுக்கும் வாரம் இது. இதுவரை கஷ்டப்பட்டு செய்த காரியங்கள் அனைத்தும் இனிமேல் அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றியாக நடந்து உங்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கும். உங்களில் சிலர் இப்போது புதிய மனிதராக உணர்வீர்கள். அரசியல்வாதிகளில் சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும். சொத்து பிரச்னைகள் உள்ளவருக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். எட்டுக்குடைய புதன் ராகுவுடன் இணைவதால் சிலருக்கு மாற்றங்களும்,  சிறு பிரயாணங்களும் இருக்கும். உறவினர்களால் லாபம் உண்டு.

சிலர் பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். சொந்த வீடு இல்லையே என்று ஏங்குவோரின் கனவு இனி நனவாகும். பொன், பொருள் சேர்க்கை இந்த வாரம் உண்டு. கஷ்டங்கள் இனிமேல் படிப்படியாக விலகத் தொடங்கும். ஒரு சிலர் மனத்தெளிவு கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த மனக்கசப்புகள் விலகி, தீர்வுகள் தெரிய ஆரம்பிக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இது நல்ல வாரமே. வியாபாரிகள் வளம் பெறுவார்கள்.

தனுசு:

இந்த வாரம் முதல் ராசிநாதன் குரு மீண்டும் ராசியிலேயே ஆட்சி பெறுவது தனுசுக்கு சிறப்பான அமைப்பு. வாரம் முழுவதும் நல்ல செயல்திறனுடன் இருப்பீர்கள். நன்கு சிந்திப்பீர்கள். எதிர்காலத்திற்கு திட்டமிடுவீர்கள். கொரோனா தந்துள்ள முடக்கத்தையும்  மீறி தொழில் நடக்கும். வியாபாரம் ஓரளவு விருத்தியாகும். வேலை செய்யும் இடத்தில் பெயர்  பெறுவீர்கள். பதவி உயர்வு உண்டு. வருமானம் ஓரளவு இருக்கும். நீண்ட நாட்களாக முடியாமல் இருக்கும் ஒரு விஷயத்தை முடித்துக் காட்டி, மற்றவரின் பாராட்டைப் பெறுவீர்கள்.

சுயதொழில் செய்வோர் தொழில் முன்னேற்றத்திற்கான அடிப்படை நிகழ்வுகள் நடக்கும். வியாபாரிகளுக்கு குறை இருக்காது. இளைஞர்களுக்கு கெடுதல்கள் நடக்காது. வேலையில் பிரச்னை ஏற்பட்டு, வேலைமாற்றம் ஏற்பட்டவருக்கு வேலை அமையும். மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். வீட்டில் மதிக்கப்படுவீர்கள். உங்களின் திடமான மன ஆற்றலும்; தைரியமும் வெளிப்படும் வாரம் இது. சந்திரன் வலுப்பெறுவதால் மிகுந்த உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். காரிய வெற்றி உண்டு.

மகரம்:

ஒன்பதுக்குடைய புதன் ராகுவுடன் இணைவு, ராசியில் சனி என்பதால் மகர ராசியினர் விரும்பாத அனைத்தும் நடக்கும் வாரம் இது. எதிலும் பொறுத்துப் போங்கள். யாரும் உங்களைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். எவரிடமும் இப்போது நம்பிக்கையைப் பெற முடியாது. உத்திராடத்திற்கு  சங்கடமான வாரம் இது. ஜென்மச் சனி நடப்பதால் வாய்ப்புக்கள் எதையும் சரியாகச் செயல்படுத்த முடியாத நிலையும் இருக்கும். வியாபாரம், வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்லது எதுவும் இருக்காது.

புதிதாக எந்த முயற்சிகளும் ஆரம்பிக்க கூடாது. இப்போது இருப்பதே நீடிக்கும்படி பார்த்துக் கொண்டாலே போதும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக இருங்கள். வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்போது எச்சரிக்கை தேவை. ஏதேனும் ஒரு விஷயத்தில் குழப்பமாகி முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பீர்கள். சிலருக்கு தீர்த்த யாத்திரை, புனித ஸ்தலங்களை பார்த்தல் போன்ற ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறும். 30 வயதுக்குட்பட்ட இளைய பருவத்தினருக்கு மாற்றங்கள் உண்டாகும். எதிர்பாராத பணவரவும் இந்த வாரம் இருக்கும்.

கும்பம்:

சந்திராஷ்டம நிலையில் இந்த வாரம் ஆரம்பிப்பதாலும், ஏழுக்குடைய சூரியன் ஐந்தில் ராகுவுடன் இணைவதாலும், கும்பத்தினருக்கு இது சங்கடங்களும் அதற்கேற்ற தீர்வுகளும் கலந்த வாரமாக இருக்கும். உங்களில் கோர்ட் கேஸ் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வழக்கு இப்போது சாதகமாக இருக்காது என்பதால் தீர்ப்பு வருவதை தள்ளி வைக்க முயற்சிப்பது நல்லது. நடுத்தர வயதுக்காரர்கள் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். கடன் வாங்க கூடிய அமைப்புகள் இருப்பதால் அனாவசிய தேவையற்ற செலவுகளுக்கு கடன் வாங்க வேண்டாம்.

வார பிற்பகுதியில் யோகாதிபதிகள் வலுப்பெற்று இருப்பதால் துயரங்கள் எதுவும் இல்லை. உங்களை பிடிக்காதவரின் கை தற்காலிகமாக ஓங்கி இருக்கும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுங்கள். வீண்வாக்குவாதம் வேண்டாம். 5,6,7 ஆகிய நாட்களில் பணம் வரும். 27-ம் தேதி  பகல் 3.50 மணி முதல் 29-ம் தேதி மாலை 6.26 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்டதூர பிரயணங்களோ எந்த ஒரு புதியமுயற்சியோ இந்த நாட்களில் செய்வதை தள்ளி வைப்பது நல்லது.

மீனம்:

தடைகளுக்குப் பிறகு நீங்கள் சாதனைகள் செய்யும் வாரம் இது. முதல் மூன்று நாட்கள் மட்டும் சோம்பலாக இருப்பீர்கள். பிற்பகுதியில் சிலிர்த்து, எழுந்து விட்டுப் போன வேலைகளை நல்லபடியாக முடிப்பீர்கள். குடுகுடுப்பைக்காரனைப் போலச் சொல்வது என்றால் மீன ராசிக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. இதுவரை செட்டில் ஆகாதவர்கள் கூட இன்னும் இரண்டு வருடத்திற்குள் வாழ்க்கையின் அனைத்தும் நிறைவேறி செட்டில் ஆவீர்கள். மீனத்தினர் எதிர்காலத்தில் நன்றாக இருக்கப் போவதற்கான நிகழ்வுகள் நடக்கும் வாரம் இது.

எல்லாவகையான ஆதரவுகளும் கிடைக்கும். ஆன்மபலம் கூடும். மிகவும் நம்பிக்கையாக இருக்க முடியும். படிப்பு முடிந்து வேலைக்காக அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். எதிலும் போட்டியைச் சந்தித்தவர்கள் இனிமேல் அது விலகுவதைக் காண்பீர்கள். 1,4,6 ஆகிய நாட்களில் பணம் வரும். 29-ம்தேதி மாலை 6.26 மணி முதல் 1-ம்தேதி இரவு 8.56 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களை தள்ளி வையுங்கள்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.