குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (22-06-2020 முதல் 28-06-2020 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

மேஷம்:

ஆறாம் அதிபதி புதன் மூன்றாமிடத்தில் ராகுவுடன் இணைவதால் நீங்கள் மறைமுகமான எதிர்ப்புகளையும், செலவுகளையும், மந்தமான சூழ்நிலைகளையும் சந்திக்கும் வாரம் இது. அதே நேரத்தில் தெய்வத்தின் அருள் மேஷ ராசியினருக்கு இப்போது பூரணமாக கிடைக்கும். நட்பு வட்டாரம் கை கொடுக்கும். நீண்ட நாள் பிரிந்திருந்த ஒருவரை பார்ப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கும். நாற்பது வயதை தாண்டியவர்கள் உடல்நலத்தில் கவனம் வையுங்கள். வேலைக்காரர்களை நம்ப வேண்டாம். அவர்களால் சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.  


தேவைப்படும் பணம் எப்படியும் கடைசி நேரத்திலாவது கிடைத்து விடும். இளைஞர்களுக்கு புதிய அனுபவங்கள் உண்டு. சிலருக்கு இதுவரை தெரியாத விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் அனுபவம் கிடைக்கும். இப்போது நடக்கும் திருப்பு முனையான சம்பவங்களால் உங்கள் எதிர்காலம் நன்றாக இருக்கும்.  நடக்கும் சில விஷயங்கள் பிடிக்காதவையாக தேவையற்றவையாக தோன்றினாலும் அவை யாவும் எதிர்கால நன்மைக்கு அஸ்திவாரம் போடும் அமைப்புகள் என்பதை பின்னால் உணர்ந்து கொள்வீர்கள்.

ரிஷபம்:

உங்களில் ரோகிணி நட்சத்திரக்கார்களுக்கு அலுவலகத்திலும், வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவி கிடைக்கும். கொரோனாவையும் மீறி பிரச்னைகள் இல்லாத வாரம் இது. வியாபாரிகள், இளைஞர்கள், தலைமைப்பதவியில் இருப்பவர்கள், தொழிலதிபர்கள், அரசு வேலை செய்பவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நீண்ட நாட்களாக தடையாகி இருந்த காரியங்கள் நிறைவேறும். தந்தையுடன் பிறந்த அத்தைகள் உதவுவார்கள். எதிலும் இருந்து வந்த முட்டுக்கட்டை விலகும்.

அலுவலக வேலையை வீட்டிலேயே செய்யும் பெண்களுக்கு வேலைப்பளு குறையும். வீட்டிலும் உங்கள் பேச்சை மற்றவர்கள் கேட்பார்கள். சற்று நிம்மதியாக உணர்வீர்கள். கடன் தொல்லைகள் எதுவும் இருக்காது. எதிரிகள் ஒழிவார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல்கள் உண்டு. அப்பா வழி உறவினர்களால் மனக்கசப்புக்கள் இருக்கும் இளைய பருவத்தினருக்கு திருப்பு முனைகள் இருக்கும். திருமணம் ஆகாதவருக்கு அது உறுதி ஆகும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டு.

மிதுனம்:

அரசு ஊழியர், பொதுவாழ்வில் இருப்பவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்மைகளைத் தரும் வாரம் இது. சிலருக்கு குறுகிய பயணங்கள் மற்றும் விருப்பமில்லாத மாற்றங்கள் இருக்கும். அம்மா வழி உறவினர்களால் லாபம் உண்டு. விரயாதிபதி வலுப்பெறுவதால் செலவு செய்து ஏதேனும் ஒரு அத்தியாவசிய பொருள் குடும்பத்திற்கு வாங்குவீர்கள். குடும்பத்தில் மனமகிழ்ச்சியான சம்பவங்களும், வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்களில் முன்னேற்றமான போக்கும் இருக்கும்.

மனதிற்கு சந்தோஷமான விஷயங்கள் நடக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரப் பதவி கிடைக்கும். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் உண்டு. மைத்துனர்கள் உதவுவார்கள். கொரோனா பிரச்சனைகள் இருந்தாலும் கூட்டுத் தொழில் சிறப்படையும்.  பொன், பொருள் சேர்க்கை உண்டு. புதிய நபர்களிடம் இந்த வாரம் கொடுக்கல், வாங்கல் செய்ய வேண்டாம். இளைய பருவத்தினருக்கு அவர்கள் வயதிற்கே உரிய உல்லாச அனுபவங்கள் ஏற்படும்.

கடகம்:

யோகாதிபதி செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் வலுவாக இருப்பதால் அந்தஸ்து, கௌரவம் மேம்படும். அதிர்ஷ்டம் கைகொடுக்கும். தெய்வ ஆசிர்வாதம் உண்டு. அரசு ஊழியர்கள், அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்டவர்கள், காண்ட்ராக்டர்கள் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது நன்மைகளைத் தரும் வாரம். அதேபோல தந்தையின் தொழிலை செய்பவர்களுக்கும் இப்போது நன்மைகள் நடக்கும். உடல் நலமில்லாமல் இருந்தவர்கள் முன்னேற்றம் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் இப்போது கிடைக்கும். வியாபாரிகளுக்கும் சுயதொழில் செய்பவர்களுக்கும் இது மிகவும் நல்ல வாரம். வேலையில் பிரச்னை ஏற்பட்டு, வேலைமாற்றம் ஏற்பட்டவருக்கு மீண்டும் வேலை அமையும்.  மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். மாமியார் வீட்டில் மதிக்கப் படுவீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். கடக ராசிக்காரர்களுக்கு தெய்வம் துணையிருக்கும் வாரம் இது. கவலைகள் வேண்டாம்.

சிம்மம்:

யோகாதிபதி செவ்வாய் எட்டில் மறைந்தாலும் குருவின் வீட்டில் வலுவாக இருப்பதால் வியாபாரம், வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இந்த வாரம் தொந்தரவுகள் எதுவும் இருக்காது. வியாபாரிகளுக்கு கொள்முதல் சற்று முன் பின்னாக இருந்தாலும், வியாபாரத்தில் குறைவிருக்காது. உங்களில் சிலருக்கு கொரோனாவால் லாபம்தான். சொந்தத்தொழில் செய்பவருக்கு வருமானம் உண்டு. உங்களில் சிலர் ஏதேனும் ஒரு நல்ல காரியம் செய்வீர்கள். பாக்யாதிபதி வலுவாக இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். அம்மா வழியில் ஆதாயங்கள் உண்டு.

எந்த ஒரு செயலும் வெற்றியாக முடியும். பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு நன்மைகள் நடப்பதற்கு தடைகள் எதுவும் இல்லை. புதிய வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு தொழில் அல்லது வேலை மாற்றம் உண்டு. அது எதிர்காலத்திற்கு நல்லதாக இருக்கும். ஆன்லைனில் படிக்கும் பிள்ளைகளின் மேல் ஒரு கண் இருக்கட்டும். விளையாட்டில் குழந்தைகள் அதிகம் கவனம் செலுத்துவார்கள். மருத்துவம், ஆன்மிகம், எலக்டிரிகல் எலக்ட்ரானிக்ஸ், அன்றாடம் அழியும் பொருட்கள், அழகு, ஆடம்பரம், கலைகள் போன்ற துறைகளில் இருப்பவர்கள் லாபம் அடைவீர்கள்.

கன்னி:

ராசிநாதன் புதன் இந்தவாரம் ராகு தொடர்பு பெறுவதால் இப்போது மிதுனத்தினரின் தன்னம்பிக்கை குறைவுபடும். உங்களில் சிலருக்கு மனக்கலக்கமும் குழப்பமும் அதிகரிக்கும். சிலருக்கு வேலை தொழில் நிலைகளில் சங்கடங்கள் இருக்கும். தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் நல்ல சந்தர்ப்பங்களை நழுவ விடுவீர்கள். இன்னும் சிலருக்கு எதை செய்தாலும் தடைகளைச் சந்தித்து, முட்டுச்சந்தில் போய் முட்டி நிற்பதைப் போல் உணருவீர்கள்.

வீட்டை அழகுபடுத்துவீர்கள். வாரத்தின் கடைசி இரண்டு நாட்களில் எந்தவித தொல்லைகளோ கஷ்டங்களோ இருக்காது. தனியார் ஊழியர்களுக்கு வருமானங்கள் இருக்கும். போக்குவரத்து துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. கலைஞர்கள் வாய்ப்பு பெறுவார்கள். இளைஞர்களுக்கு சில நல்ல அனுபவங்கள் இருக்கும். அரசு ஊழியர்கள், பத்திரிக்கை துறையினர், தொலைக்காட்சித் துறையினர் நன்மைகளை பெறுவார்கள். சிறு வியாபாரிகள், விவசாயிகளுக்கு  இது நல்ல பலன்களை தரும் வாரமாக அமையும்.

துலாம்:

துலாம் ராசியினரின் ஆற்றலும்; தைரியமும் வெளிப்படும் வாரம் இது. சுவாதி  நட்சத்திரக்காரர்கள் பிரச்னைகள் தீருவதற்கான சம்பவங்கள் இந்த வாரம் நடக்கப் பெறுவீர்கள். சிலர் வெகு நாட்களுக்குப் பிறகு சாதனைகள் செய்வீர்கள். உங்களில் எல்லாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் இது நல்ல வாரம். கோர்ட் கேஸ், நிலம் சம்பந்தப்பட்ட வில்லங்கங்களில் சிக்கியவர்களுக்கு வழக்குகள் சாதகமாகத் திரும்பும். கணவன் மனைவி உறவு நன்றாக  இருக்கும். நண்பர்கள், பங்குதாரர்களுக்குள் இருந்த பிரச்னை தீர ஆரம்பிக்கும். 

எல்லாத் தரப்பு துலாம் ராசிக்கும் இனி அதிர்ஷ்டம் மட்டுமே வரும். கொரோனா தொல்லைகள் ஓயும். இனிமேல் உங்களுக்கு எவ்விதக் குறையும் இருக்காது. பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகள் இருக்கும். கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். யோகாதிபதிகள் வலுப்பெற்று இருப்பதால் துயரங்கள் எதுவும் இல்லை. பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவாக இருப்பதால் தெய்வ அருள் இனிமேல் உண்டு. உங்களின் எல்லாக் கவலைகளும் தீரப் போகிறது.

விருச்சிகம்:

உங்களைத் தொல்லைப்படுத்தி கொண்டிருந்த கடன் சிக்கல்களில் இருந்து இந்த வாரம் மீண்டு வருவீர்கள். இதுவரை நீங்கள் தவறாக நினைத்துக் கொண்டிருந்த ஒரு நபர் முக்கியமான நேரத்தில் உதவுவார். எதிர்ப்புகள் விலகும் வாரம் இது. சிலருக்கு இதுவரை இருந்து வந்த உடல்நலக் கோளாறுகள் சரியாகும். குறிப்பாக பெண்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி மேன்மைகளைத் தரும் வாரம் இது. திருமண விஷயத்தில் வழக்கு, கோர்ட் என அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு  சாதகமான திருப்பங்களும் முடிவுகளும் உண்டு.

குடும்பத்தில் நடக்க இருக்கும் சுபகாரியங்களுக்கு அல்லது வீடு வாங்க வேண்டி வீட்டுக்கடனுக்கு வங்கியில் விண்ணப்பிப்பது போன்றவைகள் இருக்கும். மூன்றாம் அதிபதி சனி வலுவாக இருப்பதால் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி தேடித்தந்து உங்களை புகழ் அடைய வைப்பார். 27,28,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 21 ம் தேதி அதிகாலை 12.35 முதல் 23 ம் தேதி காலை 7.43 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய ஆரம்பங்கள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.

தனுசு:

தனுசு ராசிப் பெண்களுக்கு வேலைப்பளு அதிகம் உள்ள வாரம் இது. சிலருக்கு வாகனம், வீடு மாற்றம் உண்டு. இதுவரை இருந்ததை விட நல்ல வீட்டிற்குப் போவீர்கள். பழைய வாகனத்தை விற்று விட்டு அதைவிட உயர்ந்த வாகனம் வாங்குவீர்கள். சனி வாக்கு ஸ்தானத்தில் பாபத்துவமாக இருப்பதால்  தேவையற்ற விஷயங்களில் வீண் பிடிவாதம் பிடிப்பீர்கள். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். யாரிடமும் வாக்குவாதமோ, சண்டையோ போட வேண்டாம். இன்னும் சில வாரங்களில் புதன்  சுபவலு அடையப் போவதால் இனி சிலருக்கு பணவரவு இருக்கும்.

கணவன் மனைவி உறவு கருத்து வேற்றுமைகள்  இருந்தாலும் மனக் கசப்புகள் வராது. பணிச்சுமை அதிகம் இருக்கும். வேலை முடிந்து எப்போதடா வெளியேறுவோம் என்று இருப்பீர்கள். 26,27 ஆகிய நாட்களில் பணம் வரும். 23-ம்தேதி காலை 7.43 மணி முதல் 25-ம்தேதி மதியம் 12.26 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் புதிய முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. எவரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

மகரம்:

பாக்யாதிபதி புதன், ராகுவுடன் இணைந்தாலும், பாக்கிய ஸ்தானம் நன்மை தரும் அமைப்பில் உள்ளதால் மகர ராசிக்காரர்களின் வருமானத்திற்கு குறைவு இருக்காது. பணப்புழக்கம் கையில் இருக்கும். பணம் புரளும் இடங்களில் பணி புரிபவர்கள், வங்கித்துறையினர் மதிப்பு, மரியாதைகளை பெறுவார்கள். கொரோனாவையும் மீறி தொழில் ஓரளவு நன்றாகவே இருக்கும். வியாபாரம் இனி விருத்தியாகும். வேலை செய்யும் இடத்தில் புகழ் பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. அரசு ஊழியருக்கு வருமானங்கள் இருக்கும்.

விவசாயிகள், வியாபாரிகள், அரசு, தனியார்துறை, ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள் போன்ற சகல தரப்பினருக்கும் இந்த வாரம்  மாற்றங்களை தரும் வாரமாக இருக்கும். இளைய பருவத்தினருக்கு எதிர்கால வாழ்க்கைக்கான அடிப்படை நிகழ்வுகள் நடக்க ஆரம்பிக்கும். 25-ம்தேதி மதியம் 12.26 மணி முதல் 27-ம்தேதி பகல் 3.50 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் அலைச்சல் தரும் வேலைகளைச் செய்ய வேண்டாம். பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது.

கும்பம்:

உங்களில் சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு சொத்து விவகாரங்களில் இருந்து வந்த வில்லங்கங்கள் இப்போது சாதகமாக முடியும். உங்களில் திரவ ரீதியிலான பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு பொருள்வரவு உண்டு. கும்பத்தினர் அனைவருக்குமே மனம் சந்தோஷப்படும்படியான  நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். சிலர் தொழில் அமைப்பில் நல்ல விஷயங்களை செய்வீர்கள். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்கள் வளம் பெறுவார்கள்.

தாமதமாகி வந்த அனைத்து விஷயங்களும் தடைகள் நீங்கி இனிமேல் நல்லவை நடக்கும். இளையபருவத்தினருக்கு திருமணம் நிச்சயம் ஆகும். வயதானவர்கள் குடும்பத்தில் மதிக்கப்படுவார்கள். அவர்களின் ஆலோசனை ஏற்கப்படும். 27,28,29 ஆகிய தினங்களில் பணம் வரும். வார ஆரம்பத்தில் சந்திரன் எட்டில் இருந்தாலும் வலுவாக உள்ளதால் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். காரிய வெற்றி நிச்சயம் உண்டு. பணவரவு இருக்கும். தன்னம்பிக்கையுடன் உற்சாகமாக செயல்படுவோருக்கு இந்த வாரம் நன்மைகள் மட்டும்தான்.

மீனம்:

ராசிநாதன் குரு தொழில் ஸ்தானத்தில் நல்ல நிலையில் ஆட்சி அமைப்பில் இருப்பதால் இந்த வாரம்  நல்ல பலன்களை உங்களுக்குத் தரும். பெண்களுக்கு சந்தோஷம் கொடுக்கக் கூடிய வாரமாகவும் இது இருக்கும். சிலருக்கு வாழ்க்கைத்துணை உறுதியாகும். எதிர்காலத் துணைவரை சிலர் சந்திப்பீர்கள். 30 வயதிற்குட்பட்ட இளைய பருவத்தினருக்கு வாழ்க்கை நல்லவிதமாக அமைவதற்கான திருப்பு முனைகள் உண்டு. புதன் நான்கில் ராகுவுடன் இணைந்திருப்பதால் சிலருக்கு சந்தோஷ சுக அனுபவங்கள் இருக்கும்.

மீனத்தினர் இப்போது நல்ல செயல்திறனுடன் இருப்பீர்கள். நன்கு சிந்திப்பீர்கள். எதிர்காலத்திற்கு திட்டமிடுவீர்கள். முடியாமல் இருக்கும் ஒரு விஷயத்தை முடித்துக் காட்டி, மற்றவரின் பாராட்டைப் பெறுவீர்கள். தாயார் வழியில் நல்ல விஷயங்களும், அவர் மூலம் ஆதாயங்களும் இருக்கும். சொந்த வீடு இல்லாதவருக்கு வீடோ, மனையோ அமைவதற்கான ஆரம்பங்கள் இருக்கும். ஒரு சிலர் வாகன யோகம் பெறுவீர்கள். கஷ்டங்கள் இனிமேல் படிப்படியாக விலகத் தொடங்கும். வேலை கிடைக்காமல் இருந்தவருக்கு வேலை கிடைக்கும்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.