குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (15-06-2020 முதல் 21-06-2020 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

மேஷம்:

மூன்றாமிடத்தில் இருக்கும் ராகுவால் தொழிலிலும், சொந்த வாழ்க்கையிலும் உள்ள  எதிரிகளையும், எதிர்ப்புகளையும் ஜெயிக்க முடியும். கடன்தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். இதுவரை பயமுறுத்திக் கொண்டிருந்த கடன்காரர்கள் உங்கள் மேல் நம்பிக்கை வைப்பார்கள். வாடகை கொடுக்க முடியும். கொரோனாவின் தயவினால் பாதிக்கப்பட்ட அனைத்திலிருந்தும் இனி மீண்டு வருவீர்கள். ராசிநாதன் செவ்வாய் இந்த வாரம் முதல் குருவின் வீட்டில் இருப்பதால் தொழில், வியாபாரம் போன்றவைகள் இனி நன்றாக நடக்கும்.


மஞ்சள் நிற பொருட்களால் லாபம் அடைவீர்கள். பிடிவாத குணத்தால் சில நல்ல வாய்ப்புகளை இழப்பீர்கள். கலைஞர்களுக்கு மீண்டும் பணி கிடைக்கும். அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு இனி பிரச்னைகள் எதுவும் இருக்காது. குறிப்பிட்ட சிலருக்கு வேலை மாற்றம் நல்லது பணி இடமாற்றம் இருக்கும். உங்களில் சிலருக்கு பெண்களால் லாபங்கள் உண்டு. சொன்ன வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதுவரை பாராட்டாதவர்கள் இப்போது உங்களின் தனித்திறமையை உணரும்படி நடந்து கொள்வீர்கள்.

ரிஷபம்:

பரம்பொருளின் அருளினால் இந்த வாரம் ரிஷபராசிக்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டு. கொரோனாவினால் உங்களுக்கு ஏற்பட்ட முடக்கத்தையும் மீறி செயலாற்றுவீர்கள். இனிமேல் நல்லபடியாக குறிப்பிடத்தக்க அளவில் பணவரவு இருக்கும் என்பதால் பொருளாதார நிலையும் மேன்மையாகவே இருக்கும். எதிர்ப்புகளும் எதிரிகளும் பலம் இழக்கும் வாரம் இது. யோகாதிபதிகள் வலுப்பெற்று இருப்பதால் அனைவருக்கும் ஏதேனும் ஒரு விஷயத்தில் நிச்சயமாக மனதிற்கு சந்தோஷமான சம்பவங்களும், லாபங்களும் உண்டு.

குடும்பத்தில் புதிய வெளிச்சம் இருக்கும். ஏழுக்குடையவன் பதினொன்றில் வலுவாகி இருப்பதால் வாழ்க்கைத்துணை வழியில் இலாபங்களும், வரவுகளும், ஆதரவான நிலையும் இருக்கும். சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைத்துணையை இன்னார்தான் என்று தெரியாமல் சந்திப்பீர்கள். தந்தையைப் பிரிந்து இருப்பவர்கள் அவரைத் தேடிச் சென்று ஆசிகளைப் பெற்று வாருங்கள். அனைத்தும் சிறக்கும். பெண் தொழிலாளிகளை கொண்ட தையல், எக்ஸ்போர்ட் போன்ற நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு இந்த வாரம் நன்மைகள் உண்டு.

மிதுனம்:

ராசிநாதன் புதன் ராசியிலேயே ராகு, சூரியனுடன் இணைந்துள்ளதால் இந்த வாரம் மிதுன ராசிக்கு தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் சிக்கல்களும், குறைகளும் இருக்கும். பணவரவில் சுணக்கம் இருக்கலாம். எதிர்பார்ப்புகள் இழுபறியாக இருக்கும் என்பதால் எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது. மனதில் குழப்பங்களும் முடிவெடுக்க முடியாத தடுமாற்றங்களும் இருக்கும். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். எவருக்கும் எதுவும் செய்து தருவதாக வாக்குக் கொடுத்தால் நிறைவேற்றுவது கடினம்.

சுக்கிரன் வலுவாக இருப்பதால் தாமதித்து வந்த வேலை இப்போது கிடைக்கும். வேலை பற்றிய தகவல்கள் வந்து சேரும். பணியில் இருப்போருக்கு சிக்கல்கள் தீரும். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த வேலை தொழில் போன்றவைகள் இனி படிப்படியாக மீண்டு வரும். எதிலும் ஒரு நிறைவு இருக்கும். பற்றாக்குறை இருக்காது. கடன் தொல்லைகளால் சிக்கல்களில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் கடனை தீர்ப்பதற்கான வழிகள் தெரிய ஆரம்பிக்கும். சிலர் வெளியூர் பயணம் செல்வீர்கள். அனைத்து தரப்பினருக்கும் கெடுதல்கள் இல்லாத வாரம் இது.

கடகம்:

ராசிநாதன் சந்திரன் நல்ல பலன் தரும் இடங்களான பத்து, பதினொன்றில் இருப்பதால் குறிப்பிட்ட சில கடகத்தினர் இந்த வாரம் கொரோனாவின் பாதிப்புகளையும் மீறி தொழில், வியாபாரம் போன்றவைகளில் நன்மைகளைப் பெறுவார்கள். பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் எச்சரிகையுடன் இருக்கவும். விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சூதாட்டம், லாட்டரி சீட்டு போன்றவைகளை நம்ப வேண்டாம். மனதில் இருப்பதை வெளிப்படையாக எவரிமும் பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம்.

தந்தை வழியில் செலவுகள் வரலாம். சூரியன் ராகு சேர்க்கையால் தந்தையின் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். சகோதர உறவு முன்பின்னாகத்தான் இருக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயங்கள் இருக்கும். சிலருக்கு வேலை கிடைக்கும். நேர்மையற்ற வழிகளில் வரும் வருமானத்தின் போது கவனமுடன் இருப்பது நல்லது.

சிம்மம்:

உங்களில் முதல் திருமணம் தோல்வி அடைந்து வேதனையில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் எதிர்கால நல்வாழ்விற்கான அடித்தளங்கள் அமையும். புதிதாக தொழில் தொடங்க இருப்பவர்களுக்கு மற்றவர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். முப்பது வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஒரு மாற்றம் உண்டு. சிம்மத்தினார் இனிமேல் கொரோனாவின் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவீரகள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். வாழ்க்கைத்துணை விஷயத்தில் இனிமையான சம்பவங்கள் உண்டு.

இளைய பருவத்தினருக்கு சந்தோஷமான விஷயங்கள் இருக்கும். பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற யூக வணிக தொழிலில் உள்ளவர்களுக்கு நற்பலன்கள் உண்டு. போட்டி, பந்தயங்கள் வெற்றியை தரும். நீண்ட நாள் சந்திக்காத ஒரு உறவினரையோ, நண்பரையோ சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். 19,20,21,24 ஆகிய தினங்களில் பணம் வரும். 13-ம்தேதி பகல் 2.46 மணி முதல் 16-ம்தேதி அதிகாலை 3.17 மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் இந்த நாட்களில் அலைச்சல் தரும் வேலைகளைச் செய்ய வேண்டாம்.

கன்னி:

பத்தாமிடத்தில் இணைந்திருக்கும் சூரியன்,புதன்,ராகுவால் இனி உங்களால் சாதித்துக் காட்ட முடியும். அன்னிய இன, மத, மொழிக்காரர்கள் சரியான நேரத்தில் நல்ல உதவிகளை செய்வார்கள். குறிப்பாக கிறிஸ்துவ நண்பர்களால் நன்மைகள் இருக்கும். சிலருக்கு இட மாறுதல்கள்  இருக்கும். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து சாதிப்பீர்கள். கொரோனாவினால் எப்படி இருக்கிறார்களோ என்று பயந்து கொண்டிருந்த நிலையில் வெளிநாட்டில் இருக்கும் மகன், மகளிடமிருந்து நல்ல செய்தி வரும்.

வாழ்க்கைத் துணைவர் மூலம் சந்தோஷங்கள் உண்டு. அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். மேல் அதிகாரியின் தொந்தரவு இருக்காது. உங்களில் சிலர் இன்னும் சில காலம் வீட்டிலேயே இருந்து வேலை செய்ய வேண்டியிருக்கும். 16-ம்தேதி அதிகாலை  3.17 மணி முதல் 18-ம்தேதி மதியம் 3.03 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் புதிய முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. எவரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

துலாம்:

துலாத்திற்கு இப்போது அனைத்திலும் மேன்மையான பலன்களே நடக்கும். ராசிநாதன் சுக்கிரன் வக்ரமானாலும் ஆட்சி வலுவுடன் இருப்பதால் உங்களின் நீண்டநாள் எண்ணங்களையும் லட்சியங்களையும் இப்போது நிறைவேற்றி கொள்ள முடியும். தனாதிபதி செவ்வாயும் நன்மை தரும் அமைப்பில் உள்ளதால் வருமானத்திற்கு வழி உண்டு. நான்கில் சனி குருவின் இணைவுடன் ஆட்சியாக இருப்பது சாதகமான அம்சம் என்பதால் இது எதிர்மறை பலன்கள் எதுவும் இல்லாத வாரமாக இருக்கும்.

பணவரவு மீண்டும் வரும். கொரோனாவையும் மீறி பொருளாதார நிலைமை நன்றாகவே இருக்கும்.  தொழில் முட்டுக்கட்டைகள் விலகும். வேலையில் நிம்மதி கிடைக்கும்.  வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் உண்டு. 18-ம் தேதி மதியம் 3.03 முதல் 21-ம்தேதி அதிகாலை 12.35 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் தூரப்பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம்.

விருச்சிகம்:

ராசிநாதன் செவ்வாய் ஐந்தில், குருவின் வீட்டில் இருக்கும் யோக வாரம் இது. உங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவும் நபர்களை இப்போது சந்திப்பீர்கள்.. வியாபாரிகளுக்கு இனிமேல் சிக்கல்கள் எதுவும் இல்லை. கொரோனாவினால் ஏற்பட்ட தாக்கம் மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும். பங்குச்சந்தை, சூதாட்டம் போன்றவைகளில் சிறிய லாபங்கள் கிடைக்கும். வழக்குரைஞர்கள் சிலர் தங்களின் தனிச்சிறப்பான வாதத்தால் இப்போது பிறரால் கவனிக்கப் பெறுவார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான ஆரம்பங்கள் இருக்கும்.

வேலையின் காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒரே இடத்திற்கு மாற்றலாவார்கள். அதிக பணம் புரளும் இடங்களில் பணி புரிபவர்கள், வங்கித் துறையினர் அலுவலகங்களில் மதிப்பு, மரியாதைகளை பெறுவார்கள். பதினொன்றாம் அதிபதி புதன் எட்டில் ராகுவுடன் இருப்பதால் எதிர்பாராத லாபங்கள் உண்டு. வெளிநாடு சம்மந்தப்பட்ட மல்டிநேஷனல் கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கு சிறப்புகள் சேரும். பெண்களால் இந்த வாரம் செலவுகள் இருக்கும். மனைவிக்கு ஏதேனும் நகை வாங்கி கொடுப்பீர்கள்.

தனுசு:

கடந்த காலங்களில் வேதனைகளையும் அவுமானங்களையும் மட்டும் சந்தித்த தனுசு ராசி இளைய வயதினர் இனிமேல் முன்னேற்றத்தை காண்பீர்கள். ஜென்மச் சனியால் அவதிப்பட்ட உங்களுக்கு இந்த வாரம் யோகாதிபதி செவ்வாய்  நல்ல நிலை பெறுவதால் கொரோனாவையும் மீறி தொழில், வியாபாரம், வேலை முதலிய ஜீவன அமைப்புகளில் ஆறுதலான வகையில் நல்ல பலன்கள் நடக்கும். சிரமங்கள் குறையும். திருமணம் ஆகாதவருக்கு இப்போது உறுதி ஆகும். நல்ல பலன்கள் நடைபெறும் வாரம் இது.

கடன் தொல்லைகளில் சிக்கி நிம்மதியை இழந்தவர்களுக்கு அதில் இருந்து விடுபடுவதற்கான வழிகள் தோன்றவும், செயல்படவும் ஆரம்பிக்கும். வேலையில் இருப்பவருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு, நீண்டநாள் நிலுவையில் இருக்கும் தொகைகள் கிடைத்தல் போன்ற பலன்கள் நடைபெறும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் சந்தோஷத்தை தருவார்கள். விரும்பிய விஷயங்கள் நடக்கும். தனுசு ராசிக்கு இது பயனுள்ள வாரமாகவே இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மகரம்:

மகரத்திற்கு இந்த வாரம் மகிழ்ச்சி நிகழ்ச்சிகள் உள்ள வாரமாக இருக்கும். பத்துக்குடைய சுக்கிரன் ஆட்சி பெற்று நான்காமிடத்தைப் பார்ப்பதால் நல்ல வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு இப்போது பொருத்தமான வேலை அமையும். கலைத்துறையினருக்கு இனிமேல் வாய்ப்புகள் கிடைக்கும். உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். ஆறில் புதன் பாபவலுப் பெறுவதால் எதற்கெடுத்தாலும் எரிச்சலும் கோபமும் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்.

என்ன பிரச்னை என்றாலும் குருபகவான் ராசிநாதன் சனியுடன் இணைந்திருப்பதால் பணவரவு இருக்கும். மூன்றில் சுபத்துவமாக உள்ள செவ்வாயால் சகோதரர்கள் உதவி உண்டு. சிலருக்கு சொத்து சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னை முடித்து வைக்கப்படும். வெளிநாட்டில் இருக்கும் மகர  ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றங்கள் நடக்கும். எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடிய சில விஷயங்களை இப்போது செய்வீர்கள். ஒரு சிலருக்கு வீடு அல்லது வாகனம் புதியதாகவோ ஏற்கனவே உள்ளதை மாற்றியோ அமையும்.

கும்பம்:

ஐந்திற்குடையவன் புதனாகி சூரியனுடன் இணைந்து பாபர் ராகுவின் தொடர்பு பெறுவதால்  இந்தக் வாரம் உங்களில் சிலருக்கு பிள்ளைகள் வழியில் செலவு இருக்கும். பிள்ளைகள் ஏதாவது வம்பு இழுத்துக் கொண்டு வரலாம் என்பதால் குழந்தைகளின் மேல் அக்கறை வையுங்கள். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருக்கிறதா என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். சுக்கிரன் வலுவாக இருப்பதால் கலைஞர்களுக்கு இனிமேல் நல்ல பலன்கள் உண்டு. வேலை செய்யும் இடத்தில் பிரச்னைகள் எதுவும் இருக்காது. நிம்மதி இருக்கும்.

வியாபாரத்தில் இலாபம் உண்டு. கொரோனாவின் தாக்கத்தையும் மீறி சிலருக்கு சொல்லிக் கொள்ளும்படியான பணவரவு கிடைக்கும். கஷ்டங்கள் தீரும். மறைமுக இலாபங்கள் மற்றும் வருமானங்கள் இருக்கும். இளைய பருவத்தினருக்கு இந்த வாரம் காதல் வரும். சிலர் ரகசியமான காரியங்களை செய்வீர்கள். அவற்றில் வெற்றியும் பெறுவீர்கள். தூர இடங்களில் இருந்து நல்லசெய்திகள் கிடைக்கும். தந்தையின் ஆதரவும் ஆசிகளும் உண்டு. இன்சூரன்ஸ், மார்க்கெட்டிங், போன்ற துறையில் இருப்பவர்களுக்கு இது நல்ல வாரமாக அமையும்.

மீனம்:

மூன்றில் சுக்கிரன் ஆட்சியாகி முயற்சி ஸ்தானம் வலுப்பெறுவதால் உங்களில் சிலருக்கு இதுவரை இருந்து வந்த தன்னம்பிக்கை இல்லாத நிலை விலகும். எல்லாவற்றிலும் விடாமுயற்சியுடன் இறங்கி சாதித்து காட்டுவீர்கள். எடுத்துக் கொண்ட காரியங்களை நல்லவிதமாக முடித்து பெயர் எடுப்பீர்கள். தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். அப்பாவின் அன்பு கிடைக்கும். சிலருக்கு கொரோனாவையும் மீறி பணவரவு உண்டு. சிலரின் கணவருக்கோ, மனைவிக்கோ முக்கியமான விஷயங்களில் எதிர்பாராத நன்மைகள் இருக்கும்.

சகோதரர்களுடன் அனுசரித்துப் போவது நல்லது. இரும்பு ஆயுதங்களை கையில் வைத்து பணிபுரியும் டெய்லர் போன்ற துறையினருக்கு இந்தவாரம் லாபங்கள் உண்டு. யாரையும் நம்ப வேண்டாம். எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். யாருக்கும் வாக்கு கொடுப்பதோ, எவரையும் நம்பி பணம் தருவதோ கூடாது. பத்தாம் வீடு வலுப்பெறுவதால் இந்த வாரம் போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். அலுவலகங்களில் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.