குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (20-04-2020 முதல் 26-04-2020 வரை)

மேஷம்:

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

ராசிநாதன் செவ்வாய் உச்ச நிலையில்  சனியுடன் இணைந்திருப்பதால் மேஷத்திற்கு  மனக்குழப்பங்கள் அதிகரிக்கும் வாரம் இது. கொரோனா தயவினால் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் நிலையினை சமாளிப்பீர்கள். இளைஞர்கள் சிலருக்கு இந்த வாரம் பணியிடங்களில் இருந்து நல்ல தகவல் வரும். இந்த மாத இறுதியில் நடைபெற இருக்கும் கிரகநிலைகள் மூலம் மாற்றங்கள் இருக்கும். சிலருக்கு அனைத்திலும் நெருக்கடிகள் இருக்கும். அடுத்தவர் வேலையையும் நீங்களே செய்ய வேண்டியிருக்கும். 


உலகம் முழுக்க வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் இன்றைய அமைப்பு பூமியைக் கட்டுப்படுத்தும் பிரபஞ்ச ஜோதிட விதிக்குள் வரும். இத்தகைய நெருக்கடி நிலைகளில் தனிமனித ஜோதிட விதி செயலற்றுப் போய் விடும் என்பதால் மே மாதம் நான்காம் தேதி வரை இப்போதைய நிலை மாறாது.  எதிலும் அவசரப்படாமல் நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரும்பாலும் வீட்டிலேயே இருப்பதால் செலவுகள் குறையும். விரையங்கள் இருக்காது. 

ரிஷபம்:

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத வாரம் இது. வீட்டிலேயே இருப்பதால் அனைத்திலும் ஒரு முடக்கமான நிலையை உணருவீர்கள். நினைத்ததை செயல்படுத்த முடியாது. தற்போது மகரத்தில் உச்ச நிலையில் சனியுடன் இணைந்திருக்கும் செவ்வாய் மே மாதம் நான்காம் தேதி அடுத்த ராசிக்கு மாறும் வரை இது நீடிக்கும். ஒன்பதில்  சனி, செவ்வாய், குரு கூடுவதால் மாதம் முழுவதும் குழப்பங்கள் இருக்கும். உங்களில் சிலர் கடினமான வேலைகளுக்கு ஒத்துக் கொள்வீரகுள். 

இளைய பருவத்தினருக்கு வீட்டுக்கு வெளியே சிக்கல்கள் காத்துக் கொண்டிருக்கும். அவசியமின்றி வெளியே போகாதீர்கள். சிலருக்கு வாகன வம்புகள் உண்டு. உங்களில் சிலர் மருத்துவ விஷயங்களுக்கு பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும். இரண்டில் ராகு வலுவாக இருப்பதால் வருமானமே இல்லாத நிலையில்  விரயங்களும் வீண் செலவுகளும் இருக்கும். வீட்டிலேயே இருக்கும் குடும்ப உறுப்பினர்களால் மறைமுக தொல்லைகள் வரும். 

மிதுனம்:

எட்டாமிடத்தில் குரு, சனி, செவ்வாய் கூடுவதால் இன்னும் சில வாரங்களுக்கு வருமானங்கள் இன்றி விரையங்கள் மட்டும் உண்டு. மே மாதம் நான்காம் தேதி செவ்வாய் ஒன்பதாமிடத்திற்கு மாறும் வரை இந்த நிலை நீடிக்கும். கொரோனா பயத்தினால் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய நிலைமை என்பதால் வீட்டில் கணவன், மனைவிக்குள் கருத்துப் பிணக்குகள் உண்டு. ஆண்கள் பெண்களுக்கு அடங்கிப் போக வேண்டியிருக்கும். உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும். இன்னும் சில வாரங்களுக்கு இந்த நிலைமைதான்.

உங்களில் சிலருக்கு வெளியிடங்களில் தலைக்குனிவு இருக்கும். நடுத்தர வயதுக்காரர்கள் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். சிறிய அளவில் பிரச்னை என்றாலும் உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது.   தேவையற்ற விஷயங்களுக்காக வீதிக்கு வர வேண்டாம். அதனால் பிரச்னைகள் வர வாய்ப்பு இருக்கிறது. குடும்பத்தினர் எல்லோரும் வீட்டில் இருப்பதால்  பெண்களுக்கு தலைவலி தரும் சம்பவங்கள் இருக்கும்

கடகம்:

குடும்ப விஷயத்தில் பொறுமை தேவைப்படும் வாரம் இது. வீட்டிலேயே இருப்பதால் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளையும், குணங்களையும் புரிந்து கொள்வீர்கள். குறிப்பாக குழந்தைகளின் விசேஷத் திறமைகள் இப்போது உங்களுக்கு தெரிய வரும். வாழ்க்கைத் துணையால் சந்தோஷமும், உற்சாகமும் இருக்கும். எல்லை மீறும் சில விஷயங்களால் கருத்து வேறுபாடுகளும் வரும். இளைஞர்கள் சிலருக்கு வெளியில் செல்வதால் சங்கடங்கள் உண்டு. அவசியத் தேவைகளின்றி வெளியே செல்ல வேண்டாம். 

சனி சுபத்துவமாக ஏழில் இருப்பது உங்கள் ராசிக்கு நல்ல அமைப்பு. வீட்டிலேயே இருப்பதால் ஆண்களை வேலை வாங்க பெண்களுக்கு அருமையான வாய்ப்புகள் வரும். பெண்களின் வீட்டு நிர்வாகம் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள். இரண்டு பாபர்கள் ராசியைப் பார்ப்பதால் மனம் குழப்ப நிலையில் இருக்கும். வெளியே செல்ல முடியாத  தடைகளை சமாளிக்க முடியும். மே மாதம் நான்காம் தேதி செவ்வாய், சனி இணைவு விலகும் வரை இந்த நிலை நீடிக்கும். பணத்தின் அருமை தெரிய வரும் வாரம் இது.

சிம்மம்:

இதுவரை பிரச்னைகளைக் கண்டு ஒதுங்கிப் போய்க் கொண்டிருந்த நீங்கள் இந்த வாரம் ஏதோ ஒரு விஷயத்தில் அடுத்தவருக்கு உதவி செய்ய நினைத்து வலியப் போய் பிரச்னைகளில் மாட்டுவீர்கள். அவசியத் தேவைகளைத் தவிர வேறு எதற்கும் வெளியில் செல்ல வேண்டாம். மற்றபடி பிரச்னைகள் இல்லாத வாரம்தான் இது. உங்களில் சிலருக்கு வீட்டில் உற்சாகம் தரக்கூடிய சம்பவங்கள் நடக்கும். வெகுநாட்களாக தவற விட்ட உறவுகளை இப்போது உணருவீர்கள். சிலர் மறந்து விட்ட தொலைபேசி எண்களை தேடி எடுத்து நட்பு, உறவுகளை புதுப்பித்துக் கொள்வீர்கள்.

குழந்தைகள் விஷயத்தில் சண்டைகள் வரலாம். தலைமுறை இடைவெளி என்பதை இப்போது உணருவீர்கள். உங்களின் குழந்தைகளை நீங்களே வேறு கோணத்தில் பார்க்கும் வாரம் இது. வாரம் முழுவதும் சந்திராஷ்டமம் போலத்தான் என்பதால் தனியான சந்திராஷ்டம நாளுக்கு விசேஷமில்லை. 20-ம்தேதி அதிகாலை 12.33 முதல் 22-ம்தேதி மதியம் 1.18 மணி வரை சந்திராஷ்டம நாட்கள். சிலருக்கு வெளிமாநிலம் வெளிநாடு விஷயத்தில் நல்ல தகவல் உண்டு.

கன்னி:

வாரம் முழுவதும் ராசிநாதன் புதன் நீச்ச நிலையில் இருப்பதாலும், சனி, செவ்வாயுடன் சேர்ந்த நீச்ச குருவின் பார்வை ராசியில் விழுவதாலும் எதிலும் ஒரு தயக்க நிலையில் இருப்பீர்கள். காரணமின்றி கோபமும் எரிச்சலும் வரும். எல்லோரையும் சந்தேகப்படும் சூழ்நிலை வரலாம். பிடிவாதமான போக்கை கடைப்பிடிப்பீர்கள். உங்களில் பெரும்பாலோனோருக்கு வருமானம் இல்லாத நிலையில்  செலவுகளும், விரயங்களும் ஏற்படும். எதிலும் கவனமாக இருங்கள்.

பண வரவு இருக்காது. கடன் வாங்கியாவது சமாளிப்பீர்கள். ஆணுக்குப் பெண்ணையும் பெண்ணுக்கு ஆணையும் அடையாளம் காட்டும் கால கட்டம் இது. சிலர் காதலிப்பீர்கள். சிலர் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இப்போது வாட்ஸ் அப்பில் சந்திப்பீர்கள். முகநூலில் சிலருக்கு இனிமையான அனுபவங்கள் இருக்கும். வாரம் முழுவதும் சந்திராஷ்டமம் போலத்தான் என்பதால் தனியான சந்திராஷ்டம நாளுக்கு விசேஷமில்லை. 22-ம்தேதி பகல் 1.18 முதல் 25-ம்தேதி இரவு 1.15 மணி வரை சந்திராஷ்டம நாட்கள்.

துலாம்:

மே மாதம் நான்காம் தேதி வரை சனி, செவ்வாய் சேர்க்கை நீடிக்கும் என்பதால் இந்த மாதம் முழுவதும் இதுபோன்ற முடக்க நிலை நீடிக்கும். உங்களில் இளைஞர்கள் சிலருக்கு வெளியில் சென்றதால் பிரச்னைகள் வரும். சிலருக்கு அவமானங்கள் உண்டு. ஆயினும் பெரிய அளவில் சோதனைகள் இருக்காது. சில நிலைகளில் தப்பித்து விடுவீர்கள். அதற்காக ரிஸ்க் எடுக்க வேண்டாம். அனைத்திலும் கவனமுடன் இருக்க வேண்டிய வாரம் இது. 

ராசிநாதன் சுக்கிரன் எட்டில் மறைந்த நிலையில் இருப்பதால் எதிலும் ஒரு தடுமாற்றம் இருக்கும். கைப் பொருளின் மேல் கவனம் இருக்கட்டும். பொருட்கள் தொலைந்து போவதற்கோ, திருட்டு நடப்பதற்கோ, விரயம் ஆவதற்கோ வாய்ப்பு இருக்கிறது. செல்போனை மறதியாக எங்காவது விட்டுவிட்டு தேடிக்கொண்டிருப்பீர்கள். வாரம் முழுவதும் சந்திராஷ்டமம் போலத்தான் என்பதால் தனியான சந்திராஷ்டம நாளுக்கு விசேஷமில்லை. 25-ம்தேதி அதிகாலை 1.15 முதல் 27-ம்தேதி பகல் 11.46 மணி வரை சந்திராஷ்டம நாட்கள்.

விருச்சிகம்:

உங்களில் ஐம்பது வயது தாண்டிய விருச்சிகத்தினர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம். வீட்டிலேயே இருங்கள். சிறப்பு பலனாக அருகில் இருக்கும் மருத்துவமனையில் ஒரு முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். எதையும் நிதானமாக சிந்திப்பது நல்லது. குறுக்குவழி வேண்டாம்.  எதிலும் அவசரப்பட வேண்டாம். சிக்கல்கள் எதிலாவது சனியுடன் சேர்ந்த செவ்வாய் மாட்டி வைப்பார். அனைத்து விஷயங்களும் இழுத்துக் கொண்டே போய் மே மாத இறுதியில்தான் நன்றாக முடியும். 

பொறுமை தேவைப்படும் வாரம் இது. மே மாதம் மூன்றாம் தேதி வரை குரு, சனி, செவ்வாய் மூவரும் ஒன்று கூடுகிறார்கள். இந்த கிரகநிலையால் எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் கோபத்திற்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற தெய்வ வாக்கை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள், மருத்துவம்  சம்பந்தபட்டவர்களுக்கு நல்ல தகவல் உண்டு.

தனுசு:

எரிச்சல் தரும் வாரம் இது. இளைஞர்கள் எதிலும் அலட்சியமாக இருக்க வேண்டாம். அனைத்து விஷயங்களிலும் கண்டிப்பும் கவனமாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக  மருத்துவ விஷயத்தில் கவனம் வைக்கவும். வீதிக்கு வரும் முன் நூறு தடவை யோசியுங்கள். முகத்தையும் மூட மறக்க வேண்டாம். மே நான்காம் தேதி வரை இந்த நிலைமைதான். அடுத்த மாத இறுதியில் அனைத்து நிலைகளும் மாறும். பொறுமை தேவை.

குழந்தைகளின் மேல் ஒரு கண் வைத்திருங்கள். உறவுகள் மற்றும் நட்புகளைப் பற்றி புரிய வரும் வாரம் இது. வெகுநாட்களாக கிடைக்காத சில அனுபவங்கள் இந்த வாரம் உங்களுக்கு உண்டு. உங்களில் சிலர் பிறரிடம்  உதவியை எதிர்பார்ப்பீர்கள். யாரிடமும் வீண் வாக்குவாதங்களைச் செய்யாதீர்கள். அவசியமின்றி வெளியே நண்பர்களுடன் செல்வதைக் கண்டிப்பாக தவிர்க்கவும். சிலருக்கு அரசுத்துறைகளால் தொல்லைகள் உண்டு. 

மகரம்:

உங்களின் பொறுமையை அடுத்தவர்களுக்கு காட்டும் வாரம் இது. அஷ்டமாதிபதி சூரியன் நான்கில் இருப்பது சாதகமற்ற நிலை என்று தோன்றினாலும் அவர் உச்ச வலுவாக இருப்பதால் கெடுதல்கள் எதுவும் வராது. அதேநேரம் உங்களில் சிலர் வீட்டிலும் இருக்க முடியாமல், வெளியிலும் போக முடியாமல் அவஸ்தைப்படுவீர்கள். அடிக்கடி எரிச்சல் படுவீர்கள். மே நான்காம் தேதி வரை இந்த நிலை நீடிக்கும். பணம் என்பது கண்ணில் படாத வாரம் இது.

வருமானம் இல்லாமல் நிறைய செலவுகளும் விரயங்களும் இருக்கும். வயதானவர்களை வீட்டில் வைத்திருப்பவர்கள் அவர்களது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. எல்லோரும் வீட்டில் இருப்பதால் பெண்களுக்கு இது நல்ல வாரம். இதுவரை உங்களை, உங்களின் திறமைகளைப் புரிந்து கொள்ளாத வாழ்க்கைத் துணைவர் இனிமேல் புரிந்து கொள்ள ஆரம்பிப்பார். மகரத்தினர்  வீட்டினுள் நிம்மதி காணும் வாரம் இது.

கும்பம்:

சனி, செவ்வாய் சேர்க்கையால் இதுவரை கிடைக்காத சில அனுபவங்களை இப்போது பெறுவீர்கள். வாழ்க்கையைப் புரிய வைக்கும் வாரம் இது. உங்களில் இளைஞர்கள் மிகுந்த அவஸ்தையில் இருப்பீர்கள். சுதந்திரமாய் திரிந்தவர்களுக்கு இப்போது வீட்டிலேயே இருப்பது தாங்க முடியாத கொடுமையாக இருக்கும். இன்னும் சில வாரங்களுக்கு பொறுமை தேவைப்படும் வாரம் இது. செவ்வாய் சனி சேர்க்கை விலகும் மே நான்காம் தேதி வரை நிலைமை இப்படித்தான். 

வீட்டிலேயே இருப்பதால் பிள்ளைகள் விஷயத்தில் உங்களின் பலவீனங்கள் தெரிய வரும். சிலருக்கு மனைவியின் அருமை புரியும். உங்களின் தொந்தரவு தராத தன்மையால் மட்டுமே மனைவியால் மதிக்கப்படுவீரகுள். அக்கம் பக்க வீட்டாருடன் வீண் அரட்டை வேண்டாம். கொரோனா வைரஸ் பீதியை விட காவல்துறையிடம் இருந்து தப்பிப்பது கடினமாக இருக்கும். கண்டிப்பாக நண்பர்களுடன் சேர்ந்து வெளியே போக வேண்டாம். வேதனைகள் விலக ஆரம்பிக்கும் வாரம் இது.

மீனம்:

வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் இப்போதைய நிலைமை வரும் மே மாதம் முதல் நடக்க இருக்கும் கிரகப் பெயர்ச்சிகளால் மாறும். இந்த வாரம் முதல் மீனத்திற்கு நன்மைகள் நடக்கும். ராசிநாதன் குரு நீச்ச பங்கமாக  இருப்பதால் அடுத்து வரப்போகும்  வாரங்கள் யோக வாரங்கள்தான். சுக்கிரனின் ஆட்சி  நிலையால் சிலருக்கு வீண்  செலவுகளும் இருக்கும். வருமானம் இருக்காது. உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் குணமடைவார்கள். கொரோனா வைராசால் உங்களுக்குப் பாதிப்பு இல்லை. 

உங்களில் சிலர் எதிலும் ஒரு தடங்கலை உணருவீர்கள். எரிச்சல் தரும் வாரம் இது. எந்த ஒரு விஷயமும் நீண்ட முயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும். கடின உழைப்பும் விடாமுயற்சியும் தேவைப்படும். அனைத்து விஷயங்களிலும் ஒரு முறைக்கு இரண்டுமுறை யோசித்து செயல்படுவது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து உதவிகள் இருக்கும். மே மாதம் நான்காம் தேதியன்று செவ்வாய், சனி இணைவு விலகும் வரை இந்த நிலை நீடிக்கும்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.