குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (16-03-2020 முதல் 22-03-2020 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

மேஷம்:

மேஷ ராசிக்கு வாரம் முழுவதும் தொழில், வியாபாரம் போன்றவைகள் வெகு சிறப்பாகவும், லாபகரமாகவும் நடக்கும். அலுவலகங்களில் மன மகிழ்ச்சியான சம்பவங்கள் இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். குறிப்பிட்ட ஒரு பலனாக இந்த வாரம் மறைமுகமான வழிகளில் மேஷ ராசிக்காரர்களுக்கு பணவரவுகள் வரும். சிலருக்கு ஆன்மீக ஈடுபாடு அதிகமாகும். கோவில் திருப்பணி செய்யும் வாய்ப்பு கிடைக்கும். தன்னம்பிக்கை வாரம் இது.


கேது, குரு இணைந்து ஒன்பதாமிடம் வலுப்பெறுவதால் உங்களில் சிலர் இந்த வாரம் ஆன்மிகம் சம்பந்தமான பிரயாணங்கள் செய்வீர்கள். புனிதத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு ஞானிகள் தரிசனம் கிடைக்கலாம். இதுவரை குலதெய்வ வழிபாடு செய்யாதவர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தாதவர்கள் இந்தமாதம்  அவற்றை முடிப்பீர்கள். ராஜ கிரகங்கள் வலுவாக இருப்பதால் வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. நீண்ட நாட்களாக திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.

ரிஷபம்:

பெரும்பாலான ரிஷபத்தினருக்கு நன்மைகள் மட்டுமே நடந்து கொண்டிருக்கின்றன. ஆயினும் அஷ்டம குருவின் ஆதிக்கத்தினால் உங்களில் சிலருக்கு  எண்ணம், செயல்களில் தயக்கம் இருக்கிறது. இந்தவாரம் முழுவதும் தனாதிபதி புதன் பத்தாமிடத்தில் இருப்பதால் அந்த சிலருக்கும் கூட நடக்கும் அனைத்தும் நன்மையாக இருக்கும். பழைய வாகனங்களை வைத்திருந்து ரிப்பேர் செலவு பார்ப்பதை விட அதை மாற்றி வேறு வாகனம் வாங்குவது நல்லது. ரிஷபத்தினர் எதிலும் துணிந்து இறங்கி செயல்படும் வாரம் இது.

மற்றவர்களை இன்பப் படுத்தக் கூடிய வகையில் செயல்படும் சிலருக்கு இப்போது உங்களை புரிந்து கொள்ளாமல் சிக்கல்கள் ஏற்படும். அடுத்தவருக்கு உதவும் போது கவனம் தேவை. ஆன்மிகம் சம்பந்தப்பட்ட துறையினர் சிறப்படைவார்கள். 24,25 ஆகியநாட்களில் பணம் வரும். 16-ம்தேதி  காலை 11.12 மணி முதல் 18-ந்தேதி இரவு 7.25 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய விஷயங்கள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம். யாரிடமும் கோபப்பட்டு பேசுவதும் கூடாது. சுப காரியங்களுக்கான ஆரம்பங்களை இந்த நாட்களில் செய்யக்கூடாது.

மிதுனம்:

மிதுனத்திற்கு பின்னடைவுகள் எதுவும் இல்லாமல் தேவைகள் நிறைவேறும் வாரம் இது. ஒரு சிறப்பு பலனாக அரசு ஊழியர்கள் குறுக்குவழியில் பணம் வரும் சூழ்நிலையில் கவனமாக இருங்கள். இந்த வாரம் எவரிடமும் மனம் விட்டுப் பேச வேண்டாம். யார் எங்கே எப்படி உங்களுக்கு எதிராக திரும்புவார்கள் என்று தெரியாது. ராகுபகவான் ராசியில் இருப்பதால் மனதை ஒருமுகப் படுத்த முடியாமல் எதிர்பாராத தொழிலில் நஷ்டங்கள் ஏற்படலாம். பங்குச்சந்தை போன்ற யூக வணிகத்துறையில் அதிக முதலீடுகள் செய்ய வேண்டாம்.

சிலர் எப்போதும் மனக்குழப்பத்துடன் இருப்பீர்கள். கடன்கள் வாங்க வேண்டிய தேவையின்றி போதுமான வருமானம் வரும். சிலருக்கு சம்பளஉயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம். 24,25 ஆகியநாட்களில் பணம் வரும். 18-ம்தேதி இரவு 7.25 மணி முதல் 21-ந்தேதி காலை 6.20 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய விஷயங்கள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம். யாரிடமும் கோபப்பட்டு பேசுவதும் கூடாது.

கடகம்:

கடக  ராசிக்கு பெண்கள் விஷயத்தில் நல்ல காரியங்கள் நடக்கும் வாரம் இது. சிலரின் மகள், சகோதரி போன்றவர்களின் திருமணம் உறுதியாகும் நிகழ்ச்சி இப்போது உண்டு. சிலருக்கு அரபுநாடுகளில் வேலை, தொழில் போன்ற தொடர்புகள் ஏற்படும். இஸ்லாமிய நண்பர்கள் உதவுவார்கள். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு இப்போது சாதகமான நிலை வரும். காதலித்துக் கொண்டிருப்பவர்கள் தைரியம் வரப்பெற்று பெற்றோர்களிடம் விஷயத்தை சொல்லி சம்மதம் வாங்குவீர்கள். பொதுவில் நல்ல வாரம் இது.  

கடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு அவைகள் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத் தரும். இளையவர்களுக்கு மிக முக்கிய காரியம் ஒன்று நடக்கும். 20,22,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 21-ம்தேதி காலை  6.20 மணி முதல் 23-ம்தேதி மாலை 6.37 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களை தள்ளி வையுங்கள். இந்த நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் எதிலும் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம்.

சிம்மம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் சூரியன் எட்டில் மறைந்தாலும் குருவின் வீட்டில்  இருப்பதாலும், ராசிக்கு குருபார்வை இருப்பதாலும் கெடுதல்கள் இல்லாத வாரம் இது. சிம்மத்தினருக்கு இந்த வாரம் பெண் வழிகளில் சுபச்செலவுகளும், நன்மை தரும் விஷயங்களும் இருக்கும். ஏழில் உள்ள புதனும், ஒன்பதாமிட சுக்கிரனும் அதிர்ஷ்டக்குறைவை ஏற்படுத்துவார்கள் என்பதால் எதிலும் அதிக முயற்சிகள் தேவைப்படும். குறிப்பிட்ட பலனாக அரசுத் தேர்வு எழுதி முடிவுகளுக்கு காத்து இருப்பவர்களுக்கு இப்போது நல்ல செய்தி கிடைக்கும்.

சிலருக்கு சிறுசிறு உடல்நலப் பிரச்னைகள் வரும். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும். புத்திரபாக்கியம் இல்லாதவருக்கு இந்த மாதம் கருவுறுதல் இருக்கும். பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. கணவன், மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். தந்தை வழி பெண் உறவினர்கள் வகையில் விரயங்கள் இருக்கும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களின் எதிர்பார்ப்புகளுக்கு தடைகள் இருக்கும் வாரம் இது. அதேநேரத்தில் சுக்கிரனும், சனியும் வலுவாக இருப்பதால் வாரக் கடைசியில் நன்மைகள் நடக்கும். சிலரது வீட்டில் பெண்கள் சம்பந்தப்பட்ட சுப காரியங்கள் நடைபெறும். வாழ்க்கையில் நிலை கொள்ளாத இளைய பருவத்தினருக்கு திருமணம், வேலைவாய்ப்பு, புத்திர பாக்கியம் போன்ற நல்லபலன்கள் நடக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவிகள் தேடி வரும். ஊடகம் பத்திரிக்கை போன்ற துறையினர், கலைஞர்களுக்கு இது நல்ல வாரம்.

ஒரு குறிப்பிட்ட பலனாக கன்னி ராசியினர் இன்னும் சில வாரங்களுக்கு கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்துப் போங்கள். ஏழில் இருப்பது சூரியன் என்கிற பாபகிரகம் என்றாலும் அவர் உங்களின் நண்பர் என்பதால் கெடுதல் இருக்காது. ஆயிரம் இருந்தாலும் பாபர் பாபர்தான் என்பதால் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவது நல்லது. கூடுதல் அமைப்பாக ஏழாம் அதிபதி குருவுடன் கேதுவும் இணைந்திருப்பதால் அதிக கருத்து வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எதிலும் அவசரப்பட வேண்டாம்.

துலாம்:

மூன்றாறாமிடத்தில் செவ்வாய், கேது இணைந்திருப்பது துலாம் ராசிக்காரர்களுக்கு போட்டிகளையும், எதிர்ப்புகளையும் ஜெயிக்கும் நிலையை குறிப்பதால் துலாத்தினர் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளிலும், சொந்த வாழ்க்கையிலும் சாதனை புரியும் வாரம் இது. இதுவரை இருந்து வந்த  பிரச்சினைகளும், கஷ்டங்களும் நிறைவான விதமாக முடிவுக்கு வரும். கஷ்டப்படுத்திய விஷயங்கள் நல்லபடியாக மாறும். சிலருக்கு வீடு மாற்றம், தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும்.

ஆறில் சூரியன் இருப்பதால் தந்தையாலோ, தந்தைவழி உறவினர்களாலோ செலவுகள் இருக்கும். ஆயினும் குருவின் வீட்டில் சுபத்துவமாக  சூரியன் இருப்பதால் விரையம் தவிர்த்து வேறு கெடுதல்கள் எதுவும் இல்லை. வாழ்க்கைத்துணை வழியில் நல்ல சம்பவங்கள் இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தைப்பேறு தள்ளிப் போன தம்பதிகளுக்கு இந்த வாரம் குழந்தை சம்பந்தப்பட்ட நல்லசெய்தி உண்டு. முப்பது வயதைக் கடந்தும் திருமணம் ஆகாத சிலருக்கு இப்போது திருமணம் உறுதியாகும். அரசாங்கத் தேர்வுகளில் வெற்றி உண்டு.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களின் வீடு, தொழில் இரண்டு இடங்களிலும் நிம்மதியும், சந்தோஷமும் இருக்கும் வாரம் இது. இன்னும் சில வாரங்களுக்கு ராசிநாதன் செவ்வாய் சுபத்துவ நிலையில் இருக்கப் போவதால் உங்களுக்கு இனி நன்மைகள் மட்டுமே நடக்கும். இளைஞர்களின் துன்பங்கள் அனைத்தும் விலகி விட்டன. கஷ்டங்களில் இருந்து நீங்கள் நல்லவைகளுக்கு மாறும் வாரம் இது. சிலருக்கு மட்டும் அலைச்சல்கள் அதிகம் இருக்கும் என்பதால் சரியான நேரத்தில் சாப்பிட முடியாது. எல்லாவகையிலும் நன்மையான வாரம் இது.

பிறந்த ஜாதகத்தின்படி சுக்கிர தசை, சுக்கிர புக்தி நடப்பவர்கள் நல்ல பலன்களை அடைவீர்கள். சிந்தனை, செயல்திறன் அனைத்தும் நல்ல நிலைமையில் இருக்கும். முக்கியமான ஒரு விஷயத்தில் அன்னியமத நண்பர் கை கொடுப்பார். தாயார் வழியில் நன்மைகள் நடக்கும். தாயாரிடம் ஏதேனும் ஒரு விஷயத்திற்கு சம்மதம் கேட்க இப்பொழுது சரியானநேரம் என்பதால் இந்தநேரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். நீண்டகாலமாக முடியாமல் இருக்கும் விஷயங்களை முடித்துக் காட்டுவீர்கள். விருச்சிகம் சாதிக்கும் வாரம் இது.

தனுசு:

இந்த வாரம் தனுசுக்கு எதிர்மறைபலன்கள் எதுவும் நடக்க வாய்ப்பில்லை. அதேநேரத்தில் அனைத்தும் தாமதமாகவே நடைபெறும் என்பதால் உங்களுக்கு டென்ஷன் உள்ள வாரமாகவும் இது இருக்கும். தொழிலில் போட்டிகளையும், சிக்கல்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலைமை மாறி போட்டியாளர்கள் ஒழிவார்கள். வேலை, தொழிலில் எதிர்ப்பில்லாத நிலை உருவாகும்.  தொழிலை அக்கறையுடன் கவனிக்க ஆரம்பிப்பீர்கள். கேட்கும் இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். 

சிலருக்கு மறைமுகமான வழிகளில் வருமானம் கிடைக்கும். தனியார் துறையினர் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படும். திடீரென நிர்வாகம் கண்காணிப்பு வேலைகளில் ஈடுபடவோ, அது சம்பந்தப்பட்ட கருவிகளைப் பொருத்தவோ, ஆட்களை நியமிக்கவோ வாய்ப்பு உள்ளது. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு ஆலயப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். குறைகள் தீரும் வாரம் இது.

மகரம்:

மகர ராசி இளைஞர்களுக்கு மன அழுத்தங்கள் உள்ள வாரம் இது. அதிலும் உத்திராடம் நட்சத்திரத்தினர் இனம் புரியாத மனக்கலக்கத்தில் இருப்பீர்கள். தனுசு  ராசியினர் ஜாதகம் பார்க்க வருவது மெதுமெதுவாக விலகி மகரத்தினர் வரத் துவங்கி இருக்கிறீர்கள். எனது தொலைக்காட்சி நேரலையில் அதிகமான தனுசு ராசியினர் கேள்வி கேட்டது விலகி இப்போது நிகழ்ச்சி ஆரம்பித்ததும் உத்திராடம் நட்சத்திரத்தினர்தான் கேள்விக்கு வருகிறீர்கள். உங்களில் இளைய பருவத்தினர் பண விவகாரத்தில் சில அனுபவங்களைப் பெறும் வாரம் இது.

மகரத்தினருக்கு ஜென்மச் சனியின் தாக்கம் இன்னும் கொஞ்சகாலத்திற்கு நீடிக்கும் என்பதால் உடனே செய்யக்கூடிய எளிய பரிகாரமாக சிறிதளவு எள்ளை சனிக்கிழமை இரவு தலைக்கடியில் வைத்துப் படுத்து மறுநாள் புதிதாக வடித்த சாதத்தில் அதைக் கலந்து காகத்திற்கு உணவிடுங்கள். கறுப்புநிற நன்றியுள்ள பிராணிக்கு அன்புடன் விருப்பமான உணவு அளியுங்கள். இந்தவாரம் அந்தரங்கமான விஷயங்களை அனாவசியமாக யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.  உயரதிகாரி சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது.

கும்பம்:

ராசிநாதன் சனி சொந்த வீட்டில் இருப்பதால் கும்பத்திற்கு  கெடுபலன்கள் இன்றி நன்மைகள் மட்டுமே உள்ள வாரம் இது. அனைத்தையும் சமாளிப்பீர்கள். பனிரெண்டாமிடம் வலிமை அடைவதால் வெளிநாடு வாய்ப்பு தள்ளிப் போய்க் கொண்டிருந்தவர்களுக்கு விசா கிடைக்கும். மாணவர்களுக்கு கல்விக் கூடங்களில் நல்ல சூழ்நிலை இருக்கும். நன்கு பரீட்சை எழுதுவீர்கள். குடும்பத் தலைவிகளுக்கு மாமியார் மாமனாருடன் கருத்து வேறுபாடுகளும் தந்தையுடன் உடன் பிறந்த அத்தைகளுடன் சிறிய பிரச்னைகளும் வரலாம்.

வேலை, வியாபாரம், தொழில் போன்ற அமைப்புகளில் முன்னேற்றங்கள் இருக்கும். சிலருக்கு வார ஆரம்பத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது நல்லது. ஏழரைச்சனி நடப்பதால் வேலையில் மாற்றம் ஏற்படும் காலம்தான் இது என்றாலும் தேவையில்லாமல் வேலையை விட வேண்டாம். அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இளைஞர்களுக்கு மனதைரியம் குறையும் சம்பவங்கள் நடக்கும். நிதானமான பலன் நடக்கும் வாரம் இது.

மீனம்:

வாரம் முழுவதும் அமையும் நல்ல கிரக நிலைகளால் இது மீனத்தினரின் மேன்மையான வாரமாக அமையும். எதிரிகளையும் எதிர்ப்புகளையும் சுலபமாக  ஜெயிப்பீர்கள். வேலை, வியாபாரம் போன்றவற்றில் இருந்த சிக்கல்கள் தீரும். அனைத்தும் நல்லபடியாக அமையும் வாரம் இது. இளைஞர்களுக்கு எதிர்கால வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்தும் இப்போது பரம்பொருளால் அருளப்படும். நினைப்பது சித்திக்கும், கேட்பது கிடைக்கும் என்பதால் கேளுங்கள் தரப்படும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

வார பின்பாதியில் மனம் சந்தோஷப்படும் காரியங்கள் உண்டு. இளைய பருவத்தினருக்கு காதல் வரும். குடும்பப் பிரச்னைகளை நிதானத்துடன் கையாள்வது நல்லது. எங்கும், எதிலும் கோபப்பட்டு பேச வேண்டாம். சிறிய விஷயத்தைப் பெரிதாக்குவீர்கள் என்பதால் யாரிடமும் சண்டை போட வேண்டாம். நிதானம் தேவை. தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும். காவல்துறை, இராணுவம், செக்யூரிட்டி போன்றவர்களுக்கு இந்த மாதம் நல்ல செய்திகள் உண்டு.


அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.