Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 277 (25.02.2020)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

சத்தியநாராயணன், விருதுநகர்.

கேள்வி:

வங்கி ஒன்றில் மதிப்பீட்டாளராக பணிபுரிகிறேன். கிடைக்கும் சம்பளம் குடும்பத்திற்கு போதவில்லை. சின்னதாக நகைகடை ஒன்றும் வைத்திருக்கிறேன். அதிலும் வருமானம் சுத்தமாக இல்லை. எனக்கு எப்பொழுது நல்ல வழி பிறக்கும்?

பதில்:

(விருச்சிக லக்னம், மேஷ ராசி, 1ல் சூரி, புத, 2ல் குரு, ராகு, 6ல் சந், 7ல் சனி, 8ல் கேது, 11ல் சுக், 12ல் செவ், 19-11-1972 காலை 6-40 விருதுநகர்)

தங்க நகை தொழிலுக்குரிய குரு உங்களது ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்று, ஓரளவிற்கு வலிமையாக உள்ள காரணத்தினால் தற்போது நீங்கள் செய்துவரும் வேலையும் தொழிலும் சரியானதுதான். தற்போதுதான் குருவோடு இணைந்த ராகுவின் தசை ஆரம்பித்திருக்கிறது. சுயபுக்தி முடிந்ததில் இருந்து வரும் 2022 ஆம் ஆண்டு முதல் உங்களுடைய பொருளாதார நிலைமை நிச்சயமாக உயரும். அதுவரை பொறுத்திருங்கள். இதே தொழில் உங்களுக்கு மேன்மை தரும். வாழ்த்துக்கள்.

வி. எம். பழனிச்சாமி, ஈரோடு-8.

கேள்வி:

மகளுக்கு கடந்த ஏழு வருடங்களாக வலிப்பு நோய் வருகிறது. எப்போது சரியாகும்? மேற்படிப்பு படித்து அரசு உயரதிகாரி ஆவேன் என்கிறார். அது நடக்குமா? திருமணம் எப்போது நடக்கும்?

பதில்:

(சிம்ம லக்னம், துலாம்ராசி, 1ல் சூரி, புத, ராகு, 3-ல் சந், சுக், செவ், 6ல் குரு, 7ல் கேது, 8ல் சனி, 8-9-1997 அதிகாலை 4-50 ஈரோடு)

சிம்ம லக்னத்திற்கு கடன், நோய், எதிரியை கொடுக்கக்கூடிய சனி, எட்டில் மறைந்து தசை நடத்திக் கொண்டிருப்பதால் மகளுக்கு வலிப்புநோய் இருக்கிறது. சனி ஆறில் அமர்ந்திருக்கும் குருவுடன் பரிவர்த்தனை பெற்றது ஓரளவிற்கு நன்மையே. சனி தசை முடிந்த பிறகு வரும் புதன் தசையில்தான் வலிப்பு நோய் முற்றிலும் குணமாகும்.

ஆறாம் அதிபதி நோயை தருகிறார் என்றால் பதினொன்றாம் அதிபதி நோயைத் தீர்ப்பார். 11 ஆம் அதிபதி புதன் திக்பலமாக, லக்னாதிபதியுடன் லக்னத்தில் இருப்பதால் புதன் தசை முதல் மகளுக்கு வலிப்புநோய் இருக்காது. சனி தசையில் எவ்வித பாக்கியங்களும் கிடைக்க வாய்ப்பில்லை. புதன்தசை முதல் நிரந்தர வேலை, நல்ல குடும்பம் என எதிர்காலத்தில் மிகவும் யோகத்துடன் வாழக்கூடிய ஜாதகம் உங்கள் மகளுடையது. அரசு வேலை நிச்சயம் கிடைக்கும். கருத்துடன் படித்து கவனமாக பரீட்சை எழுதச் சொல்லவும். லக்னத்திற்கு எட்டில் சனி, ஏழில் ராகு கேதுக்கள், ராசிக்கு ஏழில் செவ்வாய் பார்வை என ஏழாமிடம் வலுவிழந்து இருப்பதால் தாமதமாகத் திருமணம் நடைபெறும். புதன் தசை முதல் அனைத்தும் சீராகும். வாழ்த்துக்கள்.

கீதா கோபால், சென்னை-92.

கேள்வி:

எனக்கு இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். இரண்டு பேரும் ஆண்கள்தான். ஒருவனுக்கு 2017 ஜூன் மாதம் திருமணம் நடந்துவிட்டது. இரண்டாவது மகனுக்கு அதேநாளில் இருந்து வரன் தேடிக்கொண்டிருக்கிறேன். எதுவும் சரியாக அமையவில்லை. நிறைய தடங்கல்கள் வருகிறது. இவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? வேலையில் புரமோஷன் இப்பொழுது உண்டா?

பதில்:

(கன்னி லக்னம், தனுசு ராசி, 4ல் சந், சனி, 6ல் ராகு, 7ல் சூரி, புத, சுக், செவ், குரு, 12ல் கேது 29-3-1989 இரவு 7-14 சென்னை)

இரட்டைக் குழந்தைகளாக இருந்தாலும் இருவருக்கும் இடையில் சில நொடிகளாவது பிறப்பு நேரத்தில் வித்தியாசம் இருக்கும் என்பதால் இருவருக்குமே ஒரே மாதிரியான பலன்கள் நடந்துவிடுவதில்லை. வானில் கிரகங்கள் ஒவ்வொரு நொடியும் மாறிக் கொண்டே இருக்கின்றன. சில நிமிடம் கழித்து இரட்டை குழந்தைகளில் ஒருவர் பிறக்கும் போது அவரது கிரக நிலைளில் உப நட்சத்திர அமைப்பில் அவருக்கு மாற்றங்கள் வந்து விடும். இந்த காரணத்தினால்தான் இரட்டை குழந்தைகளின் வாழ்க்கை நிலை ஒன்று போல இருப்பதில்லை.

முந்தைய பிறவி கர்மாவின் அடிப்படையில்தான் இப்பிறவியில் நடக்கும் அனைத்தும் அமைகின்றன. இவருக்கு முன் பிறந்த ஏற்கனவே திருமணமானவருக்கும் தற்போதைய நிலையில் வாழ்க்கை நன்றாக இருப்பதற்கு சாத்தியமில்லை. அவரும் பிரச்சினைகளில் தான் இருப்பார். இளைய மகனுக்கு இந்த வருடம் செப்டம்பர் மாதத்திற்குப் பிறகுதான் தாம்பத்திய சுக அமைப்பு வருகிறது. ஆகவே இந்த வருட இறுதிக்கு பிறகு அவருடைய வாழ்க்கையில் திருமணம், பிரமோஷன் போன்ற நல்ல விஷயங்கள் இருக்கும். வாழ்த்துக்கள்.

ராஜேஷ்குமார், சேலம்.

கேள்வி:

வாழவே தகுதி இல்லாத உங்களின் ரசிகனின் கடிதம் இது. முதல் திருமணம் நடந்து முறிந்து விட்டது. இரண்டாவது வாழ்க்கை கிடைக்குமா? பெரிய அளவில் ஆசை எல்லாம் எனக்கு இல்லை. மூன்று வேளை சாப்பாடு, எனக்கென்று ஒரு குடும்பம், ஒரு வீடு, ஒரு வாழ்க்கை இதை மட்டும்தான் எதிர்பார்க்கிறேன். கிடைப்பதற்கு வழி உண்டா? இங்குள்ள ஒரு ஜோதிடர் பாதகாதிபதி பார்வையைப் பெற்ற சுக்கிர தசையில் உனக்கு நல்லது நடக்க வாய்ப்பில்லை என்கிறார். ஆனால் நீங்கள் இதனை சந்திராதி யோகம் என்று குறிப்பிடுகிறீர்கள். நான் இப்பொழுது சொந்தத் தொழில் செய்து கொண்டிருக்கின்றேன். 1, 5, 9ஆம் பாவாதிபதிகள் அவர்களின் சொந்த வீட்டில் இருக்கிறார்கள். ஆனால் எனக்கென்று சொந்த வீடும் இல்லை, குடும்பமும் இல்லை. தனியாக ஒரு ரூமில் வசித்துக் கொண்டிருக்கிறேன். சுக்கிரதசை யோகம் செய்யுமா? அதில் சொந்த வீடு அமையுமா? அந்த வீட்டில் ஒரு குடும்பம் இருக்குமா? குறைந்தபட்சம் மூன்று வேளையும் நிம்மதியாக சாப்பாடு கிடைக்குமா? பரிகாரம் ஏதாவது இருக்கிறதா?

பதில்:

(விருச்சிக லக்னம், கடக ராசி, 1ல் செவ், 2ல் சூரி, புத, சனி, 3ல் சுக், 5-ல் குரு, ராகு, 9ல் சந், 11-ல் கேது, 6-1-1988 அதிகாலை 3-21 சேலம்)

ஜாதகம் யோகமாக இருந்தாலும் யோக தசைகள் வரவேண்டும் என்று நான் அடிக்கடி எழுதுவதற்கு உங்களுடைய ஜாதகம் மிகச் சிறந்த உதாரணம். லக்னாதிபதி செவ்வாய் குருவின் பார்வையில் ஆட்சி பெற்று அமர்ந்து, 5-க்குடைய குரு 5-ஆம் வீட்டிலேயே அமர்ந்து, 9-க்குடைய சந்திரன் பௌர்ணமிக்கு பக்கத்தில் ஒளி பொருந்திய நிலையில் ஒன்பதாம் வீட்டிலேயே ஆட்சி பெற்றிருக்கின்ற நல்ல யோக ஜாதகம் உங்களுடையது.

ஆயினும் விருச்சிக லக்னத்திற்கு யோகம் தரும் தசைகளான சூரிய, சந்திர, செவ்வாய். குரு போன்ற தசைகள் வராததால் உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் அமையவில்லை. அதிலும் 25 வயதுவரை பாபத்துவம்  பெற்ற சனி, புதன் தசைகள் நடந்திருப்பதால் இளமைப் பருவம் உங்களுக்கு கசப்பாகவே இருந்திருக்கும்

புதனும் சந்திர அதி யோக அமைப்பில் இருந்திருந்தாலும், அவர் சனியுடன் இணைந்து குருவின் வீட்டில் வலுவற்ற நிலையில், தனது எட்டாம் பாவகத்தை பார்த்து வலிமைப்படுத்தும் நிலையில் இருப்பதால், புதன் தசை முழுக்கவே உங்களுக்கு நல்லவைகள் இருந்திருக்க வாய்ப்பில்லை புதனின் வீட்டில் அமர்ந்த கேது தசையும் உங்களுக்கு கொடுத்துக் கெடுக்கும் பலன்களையே செய்திருக்கும். ஆனால் சுக்கிரனின் நிலை அப்படி அல்ல.

அவ யோக கிரகங்கள் என்று சொல்லப்படும், ஒரு ஜாதகத்தின் லக்ன அசுபர்கள் 3, 6, 10, 11 ம் இடங்களில் நட்பு நிலையில் அமர்ந்திருப்பின் அவர்கள் நல்ல யோகத்தை செய்வார்கள் என்று அடிக்கடி எழுதுகிறேன். அந்த அமைப்பின்படி சுக்கிரன், அவருக்கு மிகவும் பிடித்த அதிநட்பு வீடான மூன்றாம் இடத்தில், பௌர்ணமிக்கு அருகில் இருக்கும் ஒளிபொருந்திய சந்திரனின் பார்வையில் இருப்பதால், சுயபுக்திக்குப் பிறகு உங்களுக்கு நல்ல வாழ்க்கை, நல்ல குடும்பம், சொந்த வீடு, வாகனம் என மிக நல்ல அமைப்பை செய்வார். அம்சத்தில் அவர் லக்னாதிபதியுடன் இணைந்திருப்பதும், லக்னாதிபதியின் சாரம் பெற்று இருப்பதும், மிகவும் யோகமான ஒன்று.

பாதகாதிபதியின் பார்வை என்று சொல்லப்படுவது அனுபவமற்ற ஜோதிடர்களால் சொல்லப்படுவது. என்ன இருந்தாலும் 1, 5, 9 க்குடையவர்கள் வலுத்து ஐந்தாம் இடத்தையும், ஒன்பதாம் இடத்தையும், லக்னத்தையும் குரு பார்த்த யோக ஜாதகம் உங்களுடையது. குறிப்பாகச் சொல்லப் போனால் சுக்கிரதசைக்குப் பிறகு வரும் சூரிய, சந்திர, செவ்வாய் தசைகள் மிகப்பெரிய நன்மைகளை உங்களுக்கு தரும். அதற்கான அடிப்படை அஸ்திவாரங்களை சுக்கிரதசை முழுக்கவே செய்யும்.

சந்திர அதி யோக அமைப்பில் இருக்கும் சுக்கிரன் மனைவி, சொந்த வீடு, போகம், சொகுசான வாழ்க்கை ஆகியவற்றை உங்களுக்கு நிச்சயமாக தருவார். சுக்கிர தசையில் உங்களுக்கு செய்தொழில் நன்மை நிச்சயமாக உண்டு. சூரிய புக்தி முதல் வாழ்க்கை மிகவும் நல்ல விதத்தில் இருக்கும். பரிகாரங்கள் எதுவும் தேவையில்லை. வாழ்த்துக்கள்.

(25.02.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.


குருஜி அவர்கள் முகநூல்-யூடியூபில் பதில் தருவதில்லை.அவரது பதில்களுக்கு ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி பதில்கள் “மாலைமலர் நாளிதழ்” சென்னை – 600008 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பவும்.