2020 Maasi Matha Palankal – 2020 மாசி மாத பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

மேஷம்:

மாசிமாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்ற குருவுடன் இணைந்து அதிக சுபத்துவம் பெறுவதால் மேஷராசிக்கு சந்தோஷங்கள் மட்டுமே இருக்கும். ராசிநாதன் வலுவால் எல்லாவற்றிலும் தடைகள் நீங்கி நல்ல செயல்கள் நடைபெறத் துவங்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். சொத்து சம்பந்தமாக இருந்து வந்த பிரச்னைகள், பங்காளித் தகராறு போன்றவைகள் சுமுக முடிவுக்கு வரும். குறிப்பாக போலீஸ், கோர்ட், கேஸ் என்று அலைந்தவர்கள் பிரச்னைகள் சாதகமாய் முடிவதைக் காண்பீர்கள். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். இதுவரை இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது.


இளைய வயதினருக்கு நல்ல வேலை கிடைக்கும். பங்குதாரர்கள் இடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிதாக ஆடம்பர வாகனம் வாங்குவீர்கள். அரசாங்க வழியில் நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை இருக்கும். பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர முடியும். வியாபாரிகளுக்கு மந்த நிலைமை மாறி தொழில் சூடு பிடிக்கும். கலைஞர்கள் வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வராமல் இருந்த சம்பளப்பாக்கி வரும். நிர்வாகத்துடன் இருந்து வந்த கசப்புகள் நீங்கி புது வழி பிறக்கும். வெளிநாட்டில் இருந்து பணம் வரும். 

ரிஷபம்:

மாசிமாத பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் சுக்கிரன் உச்ச வலுவுடன் இருப்பதும், பத்தில் சூரியன் அமர்ந்து தன் நான்காம் வீட்டை பலப்படுத்துவதும் ரிஷப ராசிக்கு நன்மைகளைத் தரும் அமைப்பு. உங்களின் மன உறுதி நன்றாக இருக்கும். இந்த மாதம் உங்களுக்கு ஒரு குறையும் இல்லை. பத்தாமிட சூரியனால் வேலை, தொழில், வியாபார அமைப்புகளில் நன்மைகள் நடக்கும். சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பதால் அனைத்து நல்லவைகளும் அதிக முயற்சி இன்றி நடக்கும். கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு எதிர்கால வேலை தொழில் அமைப்புகள் இப்போது  அமையும்.

எதிர்கால நல்வாழ்விற்கான அறிமுகங்கள் மற்றும் அடிப்படையான நிகழ்ச்சிகள் இப்போது உண்டு.  சிலருக்கு பணியிடங்களில் நெருக்கடி வரும் என்பதால்  அனுசரித்து போவது நல்லது. மாத பிற்பகுதியில் விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வதால் பெண்கள் விஷயத்தில் நன்மை நடக்கும். பெண்கள் உதவுவார்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல லாபம் உண்டு. சுயதொழில் செய்பவருக்கு முன்னேற்றம் உண்டு. இளைஞர்களின் மனம் சந்தோஷப் படும்படியான நிகழ்ச்சிகள் இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் உறுதியாகும். சிரமங்கள் தீரும் மாதம் இது.

மிதுனம்:

மிதுன ராசிக்கு அஷ்டமச் சனி நடந்து கொண்டிருக்கும் நிலையில் சுபக்கிரகமான குரு ஏழில் இருந்து ராசியைப் பார்ப்பதால் எத்தனை பிரச்னை வந்தாலும் அது சூரியனைக் கண்ட பனி போல விலகும் என்பது உறுதி. அஷ்டமச் சனி நடப்பதால் சிலருக்கு கடன் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும். கவனமாக இருங்கள். முறைகேடான வழிகளில் வரும் வருமானத்தின் போது கவனம் தேவை. மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் புதன் அதிநட்பு வீட்டில் இருப்பதால் நல்ல பலன்கள் நடக்கும். மாத பிற்பகுதியில் அதிர்ஷ்ட நிகழ்வுகள் உண்டு. வாழ்க்கைக்கு தேவையான விஷயங்கள் இந்த மாதம் நல்லபடியாக நடக்கும்.

சகாய ஸ்தானாதிபதி சூரியன் பலத்துடன் இருக்கிறார் என்பதால் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். குருபகவான் உங்களின் ஜீவனாதிபதியாகவும் இருந்து பதினோறாமிடத்தைப் பார்த்து வலுப் படுத்துவதால் சுயதொழில் புரிவோருக்கும், வியாபாரிகளுக்கும் வருமானம் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் லாபங்களை பெறுவார்கள். இதுவரை காணாமல் போயிருந்த மன தைரியம் மீண்டும் வரும். எதையும் சமாளிப்பீர்கள். ஒரு சிலர் ஏதேனும் ஒரு செயலால் புகழ் அடைவீர்கள். சகோதர உறவு மேம்படும். தம்பி தங்கையர்களுக்கு நல்லது செய்ய முடியும். மூத்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள்.

கடகம்:

சூரியன் எட்டில் இருப்பது. கடக ராசிக்கு பொருளாதார விஷயத்தில் சாதகமற்ற நிலைதான் என்றாலும் ராஜயோகாதிபதி செவ்வாய் சுபத்துவமாக ஆறில் இருப்பதால் சிக்கல் எதுவும் வராது. அதேநேரத்தில் பண விஷயங்கள் முயற்சிகளுக்கு பின்பே வெற்றி அடையும். சுக்கிரனின் உச்சநிலையால் பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். திருமணம் ஆகாதவருக்கு அது உறுதி ஆகும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் சந்தோஷத்தை தருவார்கள். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டு. மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும் மாதம் இது.

வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தினருக்கு லட்சியத்தை அடைவதற்கான முயற்சிகள் இருக்கும். அதிர்ஷ்டத்தினால் சில காரியங்கள் நடந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சிலருக்கு எதிர்கால முன்னேற்றத்திற்கான மாற்றங்கள் நடைபெறும். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். பெண்களின் மதிப்பு உயரும். பெண்களுக்கு அலுவலகத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகும். அனைத்து கடக ராசிக்காரர்களுக்கும் மாசிமாதம் ஏதேனும் ஒரு வகையில் நன்மைகளை தரும் மாதமாக இருக்கும்.

சிம்மம்:

ராசிநாதன் சூரியன் மாசிமாதம் முழுவதும் ராசியைப் பார்க்கும் அமைப்பில் உள்ளதாலும், தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் உச்சநிலை அடைவதாலும்  இது வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகளில் உயர்வுகள் உள்ள மாதமாக இருக்கும். தொட்டது துலங்கும் காலம் என்பதால் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி சிம்மத்தினர் எதிர்கால நல்வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். சிலருக்கு பெண்கள் வழியில் லாபங்கள் உண்டு. வேலைக்கு செல்லும் மனைவியால் தேவைகள் நிறைவேறுதல் இருக்கும். வீடு வாங்குவதற்கு தடைகள் நீங்குகிறது. அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.

ஐந்தில் சனி இருப்பதால் பிள்ளைகளின் மேல் ஒரு கண் இருக்கட்டும். அவர்கள் யாருடன் பழகுகிறார்கள் என்பதை கண்காணியுங்கள். பலருக்கு பிள்ளைகளால் கவலைகள் வரும். குழந்தைகளின் கையில் செல்போன் கொடுக்காதீர்கள். அவர்கள் போன் பார்க்கும் நேரங்களை கட்டுப்படுத்துங்கள். குறிப்பாக பிள்ளைகளை போன் பார்க்க விட்டுவிட்டு சீரியல் பார்க்காதீர்கள். மத்திய மாநில அரசுகளின் முதன்மைத் தேர்வுகளான ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் போன்ற பதவிகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும். தேர்வுகளை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

கன்னி:

ராசிநாதன் புதன் மறைவு நிலையில் இருந்தாலும், உச்ச சுக்கிரன் ராசியைப் பார்ப்பது சிறப்பான நிலை என்பதால் கன்னிக்கு வழி காட்டும் மாதமாக மாசி அமையும். புதனும், சுக்கிரனும் நல்ல அமைப்பில் இருப்பதால் வெளியிடங்களில் மதிப்புடன் நடத்தப் படுவீர்கள். சுக்கிரனின் நட்பு வலுவால் பெண்களால் லாபம் இருக்கும். சகோதரிகள் உதவுவார்கள். அம்மாவின் ஆசி கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்ஷம் நிலவும். உங்களில் சிலருக்கு இருந்து வந்த சாதகமற்ற நிலைமை இப்போது மாறுகிறது. சகோதர சகோதரிகளினால் நல்ல சம்பவங்களும், ஆதரவான நிகழ்வுகளும் இருக்கும்.

ராசிக்கு சுக்கிரன் பார்வை உள்ளதால் மனம் உற்சாகமாக இருக்கும். எந்தச் சிக்கலையும் எளிதாக தீர்ப்பீர்கள். எதையும், யாரையும் சமாளிப்பீர்கள். வெளியிடங்களில் கௌரவத்தோடு நடத்தப்படுவீர்கள். அந்தஸ்து உயரும்படியான சம்பவங்கள் நடக்கும். உடல்நலமும் மனநலமும் சீராக இருக்கும். பெண்களுக்கு நன்மைகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும். நீங்கள் சொல்வதையும் கேட்கலாமே என்று கணவர் நினைப்பார். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள்.

துலாம்:

துலாம் நாதன் சுக்கிரன் உச்ச நிலையில் இருப்பதால் தடைப்பட்டுக் கொண்டிருந்த அனைத்தும் மாசி முதல் நல்லபடியாக நிறைவேறும். எதிர்பார்க்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். மனைவிக்கு நகை வாங்கித் தருவீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். சிலருக்கு இருக்கும் வாகனத்தை மாற்றிவிட்டு நல்ல வாகனம் வாங்க முடியும். புதிய வாகன யோகம் இருக்கிறது. எதிர்பாராத தன லாபங்கள் இருக்கும். இழுத்துக் கொண்டிருந்த ரியல் எஸ்டேட் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று முடிவுக்கு வந்து ஒரு தொகை கைக்கு கிடைக்கும். துலாத்திற்கு நல்ல காலம் வந்து விட்டது.

வியாபாரிகளுக்கு இது நல்லகாலகட்டம். ஆனால் சரியான வேலைக்காரர்கள் கிடைப்பது கஷ்டமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் என்பதால் செலவுகள் அதிகமாக இருக்கும். எனவே சேமிப்பு இருக்க வேண்டியது அவசியம். யோகக் கிரகங்களால் தற்போது ஏற்பட்டிருக்கும் சாதக நிலையை உபயோகப்படுத்திக் கொண்டு துலாம் ராசிக்காரர்கள் தங்களது லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். நீண்ட நாட்களாக நிறைவேற்றாமல் இருந்த நேர்த்திக் கடன்களை செலுத்த முடியும். பணவரவு இருக்கும். கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும்.

விருச்சிகம்:

ஏழரைச்சனி காரணமாக முடக்கமான நிலையை சந்தித்த விருச்சிகத்திற்கு மாற்றம் வந்து விட்டது. இனிமேல் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் பொருளாதார மேன்மையுடன், நல்ல பணவரவு மற்றும் அந்தஸ்துடன் இருக்க வேண்டிய சூழல்கள் உருவாகி நல்ல எதிர்காலத்தை அடைவீர்கள். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உள்ள உங்களுக்கு மாசி நல்ல மாதமே. குறிப்பாக ராசிநாதன் செவ்வாய் முழு சுபத்துவம் பெறுவதால் விருச்சிகராசிக்கு மாசி மாதம் நன்மைகளை மட்டுமே தரும். உங்களின் பின்னடைவுகளை தீர்க்கும் மாதம் இது. கடன்தொல்லையில் இருப்பவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.

சுய தொழில் வைத்திருப்பவர்கள் இனி மேன்மைகளை அடைவீர்கள். மகன் மகள் விஷயத்தில் கவலைகள் தீரும். முகம் தெரியாத ஒருவரால் தேவையற்ற விரயங்கள் வரும் என்பதால் புதிதாக அறிமுகமாகும் நட்புகளுடன் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். கலைஞர்கள் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு முன்னேற்ற வாய்ப்புக்கள் கிடைக்கும். ஏதேனும் ஒரு செயல் அல்லது நிகழ்ச்சியால் நல்ல பேர் வாங்குவீர்கள். கணக்கு மற்றும் கம்ப்யூட்டர் துறையில் உள்ள சிலருக்கு வேலை மாற்றங்களும், பன்னாட்டு கம்பெனியில் பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கும். டிரெயினிங்கிற்காக வெளிநாடு போவீர்கள்.

தனுசு:

தனுசுக்கு ஏறக்குறைய ஏழரைச் சனி முடிந்து விட்டது என்றே சொல்லலாம். இனிமேல் சனியால் கெடுதல்கள் இருக்காது. பாக்யாதிபதி சூரியன் சொந்த வீட்டைப் பார்ப்பது சிறப்பு. பெரும்பாலான நாட்கள் அவருடன் புதன் வலுவாக இருக்கிறார். மாசிமாதம் தனுசுக்கு நன்மைகளை மட்டுமே தரும். எதிர்மறை பலன்கள் இருக்காது. மதிப்பு, மரியாதை, அந்தஸ்து, கௌரவம், தொழில்மேன்மை, தனலாபங்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போகும். யாருக்கும் ப்ராமிஸ் செய்யும் முன் யோசிப்பது நல்லது.

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல சம்பவங்கள் நடக்க இருக்கிறது. இனி உங்களின் வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் சிக்கலின்றி நல்லபடியாக நடக்கும். இளைஞர்களுக்கு இதுவரை நடந்து வந்த எதிர்மறையான பலன்கள் நீங்கி, நல்ல பலன்கள் நடக்கும். போலீஸ், கோர்ட், கேஸ் உள்ளவருக்கு சாதகமான திருப்பங்கள் உண்டாகும். எதிரிகள் உங்களைக் கண்டாலே ஒளியும்படி இருக்கும். மறைமுக எதிரிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள்.

மகரம்:

ராசியில் சனி இருப்பதால் மகர ராசி இளைய பருவத்தினர் மனம் அலைபாயும் மாதம் இது. குறிப்பாக உத்திராடம், திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு இனிமேல் மன அழுத்தம் தரும் நிகழ்வுகள் நடப்பதற்கான அறிமுக சந்தோஷ நிலைகள் இப்போது இருக்கும். எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எவரையும் நம்ப வேண்டாம். இளைஞர்கள் பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். இளம் பெண்கள் ஆண் நண்பர்களை நம்பவே வேண்டாம். ஜென்மச் சனி நேரத்தில்தான் இழக்கக் கூடாத ஒன்றை காதல் என்ற பெயரில் இழப்பீர்கள். பின்பு இழந்து விட்டோமே என்று அழுவீர்கள். கவனம்.

வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும். குலதெய்வ வழிபாடு செய்ய முடியும். நடுத்தர வயதினருக்கு மாசி மாதம் நல்லவைகளைத் தரும். ஆயினும் ஜென்மச் சனி நடப்பதால் சுயதொழில் செய்வோர்  அகலக்கால் வைக்காதீர்கள். இளைய பருவத்தினர் புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டாம். ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் தொழில் ஆரம்பிக்கலாம். வியாபாரிகளுக்கு வருமானக் குறைவு இருக்காது. பண விஷயத்தில் கவனம் தேவை. உங்களில் சிலர் புலிவாலை பிடிப்பீர்கள். கவனமாக இருங்கள்.  குறிப்பாக பேசும் பொழுது வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.

கும்பம்:

சுக்கிரனின் உச்ச நிலையால் கும்பராசிக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் மாதம் இது. வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்க முடியும். செலவுகள் அதிகம் இருக்கும். ‘வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்’ என்ற பழமொழியை இந்த மாதம் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். சுக்கிரன் சுபபலத்துடன் இருப்பதால் மனைவி, நண்பர்கள் போன்ற வழியில் சந்தோஷமான நிகழ்சிகளும், சுப காரியங்களும் இருக்கும். உல்லாசமாக இருப்பீர்கள். கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். சுபநிகழ்ச்சிகள் குடும்பத்தில் உண்டு. வீடுமாற்றம் தொழில்மாற்றம் போன்றவைகள்  நடக்கும்.

செவ்வாய் பதினொன்றாமிடத்தில் வலுப் பெற்று யோகத்தை தரக்கூடிய நிலையில் இருப்பதால் உங்களில் ரியல் எஸ்டேட் , வீடு கட்டுவோர், சமையல் போன்ற தொழில்களைச் செய்பவர்களுக்கு இது சிறப்பான மாதம். சிலருக்கு சொந்த வீடு அமையும் யோகம் இருக்கிறது. வாகன மாறுதல் கண்டிப்பாக இருக்கும். இதுவரை வாகனம் இல்லாதவர்களுக்கு நல்ல வாகனம் வாங்கும் யோகம் உண்டு. தேவைக்கு அதிகமாக கடன் வாங்க வேண்டாம். யாரையும் நம்பி எதையும் செய்து தருவதாக வாக்குறுதி கொடுக்க வேண்டாம். கிரெடிட்கார்டு இருக்கிறது என்று தேவையில்லாததை வாங்கிவிட்டு சிக்கலில் மாட்டாதீர்கள்.

மீனம்:

மாசி முழுவதும் ஆறுக்குடைய சூரியன் கெடுதல் தரும் நிலையில் இருந்தாலும், ராசிநாதன் குரு ஆட்சியாக இருப்பதால் மீனத்திற்கு நல்லவை மட்டுமே நடக்கும். ராசி சுபத்துவம் பெறுவதால் நிலுவையில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பணவரவு இருந்தாலும் சிக்கனத்தை கடைபிடியுங்கள். தேவையற்ற பொருட்கள் வாங்குவதால் விரயங்கள் வரும். தொழில் சிக்கல்கள்  விலக துவங்கும். இஸ்லாமிய, கிறித்துவ  நண்பர்கள் மூலமாக சிலர் எதிர்பாராத நல்ல விஷயங்களை சந்திப்பீர்கள். நீண்ட நாட்களாக பார்க்காமல் இருந்த ஒருவரை இந்த மாதம்  பார்ப்பீர்கள். அவர் மூலம் நன்மைகளும் இருக்கும்.

கனவு ஒன்று நனவாகும். உங்கள் மனது போலவே எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கும். லட்சியங்களை இப்போது நிறைவேற்றிக் கொள்ள முடியும். இதுவரை கிணற்றில் போட்ட கல்லாக அல்லது உங்களுக்கு சாதகமில்லாமல் சென்று கொண்டிருந்த விஷயங்கள் தலைகீழாக மாறி சாதகமான சம்பவங்கள் நடக்கும். சிலருக்கு மும்பை, டெல்லி என வடமாநில பயணம் இருக்கும். வீடு வாகன விஷயங்களில் மாற்றங்கள் இருக்கும். மனைவியால் நன்மைகள் இருக்கும். இதுவரை அடுத்தவரை எதிர்பார்த்திருந்தவர்கள் நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.