மாளவ்ய யோகம் பலன்கள்! (B-009)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

ஒரு முக்கிய கருத்தாக மாளவ்ய யோகத்தைத் தரும் நிலையில் இருக்கும் சுக்கிரனுடன் ராகு-கேதுக்கள் இணைவது யோக பலன்களைக் குறைக்கும். தனது எதிரியான சூரியனுடன் இணைந்து சுக்கிரன் அஸ்தங்கம் அடைவதும் யோகபங்கம். மேலும் சுக்கிரனுக்கு எதிர்த்தன்மையுடைய கிரகமான குரு, மற்றும் செவ்வாய், சந்திரன் ஆகிய மூவரும் சுக்கிரனுடன் இணைவதும் அவரைப் பார்ப்பதும் யோகத்தைப் பலவீனமாக்கும்.


அதேபோல இயற்கைச் சுபர்களான குருவாலும், புதனாலும் ஏற்படும் கேந்திராதிபத்திய தோஷத்தைப் போல சுக்கிரனுக்கு கடுமையான தோஷம் ஏற்படுவது இல்லை.

ஏனெனில், குருவும், புதனும் உபய லக்னங்களுக்கு உரியவர்களாகி இருவரும் தலா இரண்டு கேந்திரங்களுக்கு அதிபதி ஆவார்கள்.  ஆனால் சுக்கிரன் ஒரு ஸ்திர ராசிக்கும், ஒரு சர ராசிக்கும் உரியவராகி எந்த நிலையிலும் ஒரு கேந்திரத்துக்கு மட்டுமே அதிபதியாவார் என்பதால் அவரால் கடுமையான கேந்திராதிபத்திய தோஷம் உண்டாவது இல்லை.

பள்ளிப் பருவத்தில் சுக்கிர தசை வருவதும் நன்மைகளைச் செய்யாது. குறிப்பாக பெண்களுக்கு இந்த அமைப்பு நல்லதல்ல.  இன்றைய நம் இந்திய சமுதாயச் சூழலில் காதலில் சிக்கல்கள் ஏற்பட்டால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்பதால் இதைச் சொல்லுகிறேன். 

கேது தசை அல்லது புக்தி வரை ஒழுங்காக படிப்பில் கவனம் செலுத்தும் ஒரு மாணவியை சுக்கிர தசை அல்லது புக்தி  ஆரம்பித்ததும் காதல் என்ற பெயரில் சுக்கிரன் தடுமாற வைப்பார். 

லக்ன பாபர்களுடனோ, எதிர்த்தன்மையுடைய கிரகங்களுடனோ, அல்லது நீச கிரகங்களுடனோ சுக்கிரன் இணைந்திருந்தால் தனக்கு முற்றிலும் பொருத்தமில்லாத ஆளின் வலையில் விழ வைத்து இளமையிலேயே காமத்தை அறிமுகப்படுத்துவார். முட்டாள்தனத்தை ஏற்படுத்தி வாழ்க்கையைத் தொலைத்து வருந்த வைப்பார்.  சுக்கிரனின் வீடுகளான ரிஷப, துலாத்தில் அமரும் கிரகங்களும் சுபத்துவம் பெறாமல் அவர்களின் தசையோ புக்தியோ இளம்பருவத்தில் வந்தாலும் இது நடக்கும். 

இங்கு மாளவ்ய யோகத்தைப் பற்றி பொதுப்படையாகச் சொல்லும் விளக்கங்களை ஜாதகர் ஆண் என்றால், அதற்குத் தகுந்தபடியும் பெண் என்றால் அதற்கேற்பவும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.


மாளவ்ய யோகம்

மேஷம் :

கால புருஷனின் ஜனன லக்னமான மேஷத்தின் அதிபதி செவ்வாய்க்கு சுக்கிரன் எதிரி ஆவார். இந்த லக்னத்திற்கு கேந்திரமான ஏழாமிடத்தில் அவர் ஆட்சி பெறுவார்.

களத்திர காரகனான சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் அமர்வது “காரகோ பாவ நாஸ்தி” எனும்படி சிறந்த அமைப்பு அல்ல.  ஆனால் சுக்கிரன் இயற்கைச் சுபர் என்பதால் இங்கு அவர் ஆட்சி பெற்று லக்னத்தைப் பார்ப்பது அழகான உடல் அமைப்பையும், நல்ல குணங்களையும் தரும்.

இந்த அமைப்பினால் தாமத திருமணம் நடக்கும்.  ஜாதகர் கவர்ச்சிகரமாக இருப்பதோடு பெண்களைக் கவரும் விதத்தில் பேசவும் செய்வார். பெண்களும் ஜாதகரிடம் பிரியமாக இருப்பார்கள். வாகன யோகமும், சரிவடையாத நல்ல பொருளாதார நிலையும் சுக்கிரனால் உண்டு. நல்ல கலாரசிகராக ஜாதகர் இருப்பதோடு ஏதேனும் ஒரு கலையில் மிகுந்த ஆர்வமும் நிபுணத்துவமும் பெற்றிருப்பார். 

ரிஷபம்:

ரிஷபத்திற்கு சுக்கிரன் லக்னாதிபதியாகி லக்னத்தில் ஆட்சி பெறுவதால் மாளவ்ய யோகம் உண்டாகும். புதனைத் தவிர மற்ற எவருடனும் சேராமல், அல்லது சுக்கிரன் தனித்திருந்தால் மாளவ்ய யோகம் சுக்கிரதசையில் நல்ல பலன்களை அளிக்கும். முப்பது வயதிற்கு மேல் சுக்கிர தசை வருமானால் ஜாதகருக்கு அழகான மனைவி, நல்ல வீடு, வாகனம், அளவற்ற செல்வம், கணிப்புத் திறமை, மற்றும் பெண் நண்பர்கள் ஆகியவற்றை சுக்கிரன் அளிப்பார். 

ரோகிணி நட்சத்திரத்தில் சுக்கிரன் இருந்தால் தாம்பத்ய உறவில் அளவற்ற ஈடுபாட்டையும், செயல்திறனையும் தந்து அதற்கேற்ற துணையையும் அளிப்பார். சுக்கிரனின் காரகத்துவங்கள் ஏதேனுமொன்றில் நிரந்தரமான வருமானமும் மாளவ்ய யோகத்தால் கிடைக்கும். 

மிதுனம் :

மிதுனத்தின் ஒரே சுபரான சுக்கிரன் பெருங்கேந்திரமான பத்தாமிடத்தில் உச்சம் பெறுவார்.  கால புருஷனின் பனிரெண்டாமிடமான (அயன, சயன, போக ஸ்தானம்) மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெறுவதால்தான், ஜாதகத்தில் பனிரெண்டாமிடத்தில் இருந்தால் நன்மை செய்வார் என்று சொல்லப்படுகிறது. 

லக்னாதிபதி புதன் மீனத்தில் நீசம் பெறுவதால், அவர் இங்கு சுக்கிரனுடன் இணைவது நல்லதல்ல. லக்னாதிபதி பலம் இழந்தால் எந்த ஒரு யோகத்தையும் அனுபவிக்க இயலாத நிலை ஏற்படும்.  பத்தாமிடத்தில் சுக்கிரன் திக்பலத்தை இழப்பார் என்றாலும் உச்சம் பெறுவது அதனை ஈடுகட்டும். மேலும் சூரியனுடன் சேர்ந்து அவர் அஸ்தங்கம் பெறக் கூடாது. யோகபலன் குறையும். குறிப்பாக மிதுன லக்ன பாவியான செவ்வாயின் பார்வையையும் அவர் பெறக் கூடாது. 

முழுமையான சுபத்துவம் பெற்ற சுக்கிரன் ஜாதகரை மிகச் சிறந்த கலைஞர் ஆக்குவார். கலைகள் சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் பெரும்புகழ் அடைய வைப்பார். பூமியில் இருக்கும் இன்பங்கள் அனைத்தையும் அடைய வைப்பார். தான் நேசிப்பவரை உயிரை விட மேலாகக் கருதும் எண்ணத்தை இங்கிருக்கும் சுக்கிரன் அளிப்பார். 

சுக்கிரனின் காரகத்துவங்களான சினிமா, இசை, நடனம், உணவுக் கூடம், ஆடம்பர விடுதிகள், பெண்களின் பொருட்கள், பேருந்து நிறுவனங்கள் போன்றவற்றில் மிகப் பெரிய வருமானங்கள் கிடைக்கும். அருமையான வீடு, உயர் ரக வாகனம், தாயின் அளவற்ற அன்பு ஆகியவற்றை சுக்கிரன் இந்த இடத்தில் இருந்தால் தடையின்றித் தருவார்.  இந்த லக்னத்திற்கு சுக்கிரன் விரயாதிபதியும் ஆவதால் ஜாதகரை தன் சுகத்திற்காக பணத்தைச் செலவு செய்யவும் வைப்பார் சுக்கிரன். 

கடகம் :

கடகத்திற்கு சுக்கிரன் பாதகாதிபதி ஆவார்.  ஆனால் அவரின் பாதக ஸ்தானமான பதினோராமிடத்திற்கு ஆறில் மறைந்து, நாலாமிடமான துலாமில் அவர் ஆட்சி பெற்று மாளவ்ய யோகம் தருவது பாதகத்தை செய்யாது.  மேலும் பாதக ஸ்தானமும் வலுவிழக்கும். 


நான்காமிடமான துலாமில் சுக்கிரன் திக்பலமும் பெறுவது இன்னும் வலுவான நிலையே. குருவையும் புதனையும் போல மிகப் பெரிய கேந்திராதிபத்திய தோஷத்தை சுக்கிரன் தருவதில்லை.

இங்கு ஆட்சி பெறும் சுக்கிரன் தனித்திருந்தால் நல்லது. மேலும் செவ்வாயின் நட்சத்திரமான சித்திரை மூன்றாம் பாதத்தில் இருந்தால் வர்க்கோத்தமம் பெற்று இன்னும் வலுவாவார். இந்த அமைப்பால் ஜாதகர் சிறந்த கலாரசிகராக இருப்பார். பெண்கள் இவரை விரும்புவார்கள். காதல் கலையில் வித்தகராக இருப்பார்.

சுக்கிர தசையில் ஏராளமான பெண்கள் பணிபுரியும் கார்மெண்ட்ஸ் போன்ற கம்பெனிகளை நடத்தவோ அல்லது அதன் தலைமைப் பதவியில் இருக்கவோ வாய்ப்பு இருக்கிறது.  பத்தாமிடத்தை சுக்கிரன் தொடர்பு கொள்வதால் ஜாதகர் சினிமா மற்றும் தொலைகாட்சித் துறைகளிலும் வெற்றி பெறுவார். மாடலிங் துறை கை கொடுக்கும். நடிப்பில் சாதிக்கலாம். 

பங்களா போன்ற வீடு, கப்பல் போன்ற கார், உயர்கல்வி, தாய்வழிச் சொத்து, நினைத்தவுடன் அனுபவிக்க முடியும் சுகம் ஆகியவற்றை சுக்கிரன் தருவார். லக்னாதிபதி சந்திரனுக்கு சுக்கிரன் பகைக் கிரகம் என்பதால் எல்லாவற்றிலும் ஒரு குறையை வைப்பார். 

சிம்மம் :

சிம்ம நாதன் சூரியனை பகைவராகக் கருதுபவர் சுக்கிரன். இந்த லக்னத்திற்கு பத்தாமிடமான ஜீவன ஸ்தானத்தில் ஆட்சி பெற்று மாளவ்ய யோகத்தை அவர் தருவார்.

இங்கு ஆட்சி பெறும் சுக்கிரன் சில தொடர்புகள் மற்றும் சில நிலைகளைப் பெற்றிருந்தால் மட்டுமே தனது தசையில் கலைத்துறை, உயர்தர ஹோட்டல்கள், அழகு சாதனங்கள், பெண்கள் சம்பந்தப்பட்ட இனங்களில் ஜாதகரை ஈடுபடுத்தி நல்ல வருமானம் அளிப்பார்.

தனது மூன்றாமிடமான துலாமிற்கு எட்டில் மறைந்து ஆட்சி பெறுவதால் இளைய சகோதர தோஷத்தையும் இங்கிருக்கும் சுக்கிரன் தருவார். பெண்கள் சுகத்திற்கு ஜாதகரை முக்கியத்துவம் கொடுக்க வைப்பார்.

இந்த தொடர் கட்டுரைகளின் ஆரம்பத்தில் நான் எழுதியுள்ளபடி பகை லக்னங்களுக்கு கிரகங்கள் யோகம் தரும் நிலையில் இருந்தாலும் முழுயோகம் இருக்காது. லக்னாதிபதி சூரியனை தன் பகைவராக சுக்கிரன் கருதுவதால் என்னதான் யோகம் செய்தாலும் அதில் ஒரு நெருடல் இருக்கத்தான் செய்யும்.

சிம்மத்தைப் பொருத்தவரை சுக்கிரன் கலைத்துறை உள்ளிட்ட தனது காரகத்துவங்களை வலுவாகச் செய்ய வேண்டுமெனில் தனது கேந்திராதிபத்திய தோஷம் பெறும் கேந்திர வீடான பத்தாம் வீட்டிற்கு எட்டில் மறைந்து ஐந்தில் இருந்தால் மட்டுமே ஜீவன விஷயத்தில் நன்மை இருக்கும்.

இயற்கை சுபர்கள் திரிகோணத்தில் இருந்தால் மட்டுமே வலு என்கிற நிலையும் இதற்குக் காரணம். ஆனால் சிம்மத்திற்கு ஐந்தாம் வீடு குருவின் வீடு என்பதால் இங்கு குருவின்  ஜென்ம விரோதி அமரும் நிலையில் ஆண் வாரிசு பாதிக்கப்படலாம்.

ஜோதிடமே இப்படியிருந்தால் அப்படியிருந்தால் என்றுதான் பார்க்கப்பட வேண்டும் என்பதால் எதுவுமே இங்கே முழுதாகக் கிடைக்காது. ஒன்று இருந்தால் ஒன்று இல்லை என்பதாகத்தான் இருக்கும். சில நிலைகளில் சுக்கிரன் தனது கேந்திர வீட்டிற்கு ஆறில் மறைந்து உபசய ஸ்தனாமான மூன்றாம் வீட்டில் ஆட்சி பெறுவது ஜீவனத்திற்கு நன்மை தரும் ஒரு அமைப்புத்தான்.

ஒரு கிரகம் தன் ஆட்சி வீட்டிற்கு தோஷம் தரும் நிலையில் இருந்தால் அந்த பாவத்திற்கு  ஆறு, எட்டு, பனிரெண்டில் மறைய வேண்டும் என்பதே உண்மை. இந்த நுணுக்கத்தை உணராமல் பொத்தாம் பொதுவாக சிம்மத்திற்கு பத்தில் சுக்கிரன்  ஆட்சி, மாளவ்ய யோகம் பின்னி எடுக்கும் என்று நினைத்தால் ஏமாற்றம்தான்.

கன்னி :

கன்னியின் அதிபதி புதனுக்கு நெருங்கிய நண்பரும், கன்னியின் பூரண யோகாதிபதியுமான சுக்கிரன் இந்த லக்னத்திற்கு ஏழாமிடத்தில் உச்சம் பெற்று மாளவ்ய யோகத்தை அளிப்பார். 

யோகாதிபதி உச்சம் பெற்று லக்னத்தைப் பார்ப்பது மிகவும் அருமையான ஒரு அமைப்பாகும். பெண்களுக்கு இந்த அமைப்பு இருந்து சுக்கிரன் எந்த வகையிலும் கெடாமல் இருந்தால் அவர்கள் பேரழகியாக இருப்பார்கள். 

இங்கு சுக்கிரன் உச்சமடைவது “காரஹோ பாவ நாஸ்தி”ப்படி களத்திர தோஷம் ஆவதால் இங்கிருக்கும் சுக்கிரன் அதீதமான காமத்தைத் தந்து அதன் மூலம் சில நேரங்களில் தன் வாழ்க்கைத் துணையைச் சந்தேகப்பட வைப்பார். சில நிலைகளில் ஜாதகர் காமத்திற்கு அடிமையாகவும் இருப்பார். 

நல்ல காதலருக்கு உதாரணமாக ஜாதகர் திகழுவார். கவிதா ஞானம், இசையறிவு, நுண்கலைத் திறன் ஆகியற்றில் ஏதேனும் ஒன்று ஜாதகரிடம் முழுமையாக நிரம்பியிருக்கும். இயற்கைச் சுபர் லக்னத்தை வலுப் பெற்றுப் பார்ப்பதால் நல்ல குணங்களும் ஜாதகரிடம் இருக்கும். 

தனது தசையில் தன் காரகத்துவங்கள் மூலம் ஜாதகரை வாழ்வின் உச்சத்துக்கு சுக்கிரன் கொண்டு செல்வார். அருமையான வீடு, வாகனம் என மிகச் சிறந்த சொகுசு வாழ்க்கையை ஜாதகர் அனுபவிப்பார். தன் இரண்டாம் வீட்டிற்கு ஆறில் மறைவதாலும் களத்திர தோஷத்தினாலும் குடும்ப வாழ்வில் ஏதேனும் ஒரு குறை இருக்கும். 

(நவ 9-15, 2011 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளி வந்தது.)

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.