adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 261 (05.11.2019)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

விஜயபிரியா, புளியந்தோப்பு.

கேள்வி:

குருஜி அப்பாவிற்கு வணக்கம். திருமணம் நடந்து ஆறு ஆண்டுகள் ஆகிறது. நடந்ததில் இருந்தே பிரச்சினைகள்தான். ஆனாலும் கணவர் என்னை நல்லமுறையில்தான் பார்த்துக் கொண்டார். திடீரென உடல்நலக்குறைவால் கணவர் கடந்த மே மாதம் காலமானார். நான் பிறந்தது முதல் தாய்வழி தாத்தா பாட்டி வீட்டில் வளர்ந்தேன். எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை என்று தெரியவில்லை. எங்கு சென்றாலும், எதைத் தொட்டாலும் தட்டித்தட்டிப் போகிறது. நிறைய கஷ்டங்களையும், வேதனைகளையும் அனுபவித்து வருகிறேன். எனக்கு எப்போது நல்லகாலம் பிறக்கும்? கணவரின் வீட்டில் குழந்தைகளைக் கொடுத்து விடும்படி பிரச்சினை செய்கிறார்கள். குழந்தைகள்தான் எனது எதிர்காலம் எனும் நிலையில் அவர்களை எப்படி கொடுக்க முடியும்? பிளஸ்டூ வரை படித்திருக்கிறேன். ஏதாவது அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்புள்ளதா? என் எதிர்காலம் எப்படி இருக்கும்?

பதில்:

(மகர லக்னம், கும்ப ராசி, 1ல் சுக், செவ், சனி, ராகு, 2ல் சந், 3ல் சூரி, புத, 6ல் குரு, 7ல் கேது, 25-3- 1990 அதிகாலை 3-30 சென்னை)

கணவனைக் குறிக்கும் சுக்கிரன், செவ்வாய்-சனி-ராகு ஆகிய மூன்று பாபக் கிரகங்களுடன் இணைந்து கடுமையான பாபத்துவம் பெற்றிருக்கும் நிலையில், உனக்கு சிறுவயதில் திருமணம் செய்து வைத்தது மிகப்பெரிய தவறு. அதிலும் ராகுவும், சுக்கிரனும் மூன்று டிகிரிக்குள் இணைந்து சுக்கிரன் முழுக்க கிரகணமாகி இருக்கும் நிலையில் உனக்கு முதல் வாழ்க்கை நிலைத்திருக்க வாய்ப்பில்லை.

குழந்தைகளின் ஜாதகப்படி தாய், தந்தை இருவரின் அரவணைப்பிலும் அவர்கள் இருக்க முடியாத நிலை இருக்கிறது. எனவே நீ படிப்பிற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ உன் குழந்தைகளை கணவர் வீட்டாரிடம் கொடுக்க வேண்டியிருக்கும். முதல் வாழ்க்கையைக் குறிக்கும் ஏழாமிடம் வலுவிழந்து, இரண்டாம் திருமணத்தை குறிப்பிடும் பதினொன்றாம் வீடு வலுத்திருப்பதால் உனக்கு அடுத்து இன்னொரு வாழ்க்கை அமையும். அந்த வாழ்க்கை நிலைத்திருக்கும். 33 வயதிற்கு பிறகு நன்றாக இருக்கும் ஜாதகம் உன்னுடையது. இளமையில் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து எதிர்காலத்தில் நன்றாக இருப்பாய். வாழ்த்துக்கள் அம்மா.

ஆர். சண்முக பிரபு, ஸ்ரீவைகுண்டம்.

கேள்வி:

குருவே எனக்கு மூன்று வருடம் கழித்து சாய்பாபா அருளினால் ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. பிறந்தது முதல் குழந்தைக்கு அடிக்கடி சளி, இருமல் வருகிறது. அவ்வப்போது பயத்தினால் நடுங்குகிறாள். யாராவது புது நபரைக் கண்டால் கைகளால் கண்ணை மூடிக்கொண்டு அழுகிறாள். அவள் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு, ஆறில் செவ்வாய்-சனி சேர்க்கை, புதன் நீச்சம், பலமிழந்த ஒன்பதாமிட சுக்கிரன், சிறு வயதில் வரும் பாதகாதிபதி சுக்கிர தசை என எனக்கு பயமாக இருக்கிறது. இவளது ஆரோக்கியம், படிப்பு, எந்தத் துறையில் சாதிப்பார் என்பதைப் பற்றி விளக்க வேண்டுகிறேன்.

பதில்:

(கடக லக்னம். மீனராசி, 1ல் ராகு, 4ல் குரு, 6ல் செவ், சனி, 7ல் கேது, 9ல் சூரி, சந், புத, சுக், 19-3- 2018 மதியம் 2-43 கோவை)

மாலைமலருக்கு வரும் பெரும்பாலான கடிதங்கள் எப்படி இருக்கின்றன என்பதை அனைவருக்கும் காட்டவே உங்களின் கடிதத்தை தேர்ந்தெடுத்தேன். ஒன்றரை வயது குழந்தைக்கு சளி, இருமல் போன்ற தொல்லைகள் வராமல் என்னய்யா செய்யும்? அதைவிட முக்கியமாக புதியவர்களைக் கண்டாலே குழந்தைகள் ஏதேனும் ஒரு வகையில் பயத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்துவது இயல்புதானே? எப்படியெல்லாம் கேள்வி கேட்கிறீர்கள் என்று நினைக்கும்போது ஒருவகையில் தலை சுற்றத்தான் செய்கிறது.

ஒரு மனிதனின் எதிர்காலம் சொல்லும் மிக உயர்ந்த ஞானக்கலையான இந்த ஜோதிடத்தின் மிகப்பெரிய சாபக்கேடு என்னவென்றால், யானையைக் குருடர்கள் பார்த்த கதையாக 90 சதவிகிதம் பேர் இதனை எதிர்மறையாகப் புரிந்து கொள்வதுதான். இதுவும் ஒருவகையில் பரம்பொருளின் கண்கட்டி வித்தையாகத்தான் இருக்கும்.

மகளுக்கு கடக லக்னமாகி, லக்னாதிபதி சந்திரன் வளர்பிறை நிலையில், வர்கோத்தமமாகி, உச்ச சுக்கிரனுடன் இணைந்து சுபத்துவம் பெற்று, மறைமுகமாக குருவுடனும் இணைந்த யோகஜாதகம். வித்யாக்காரகன் புதன் நீச்சம் என்றாலும் உச்ச சுக்கிரனால் நீச்ச பங்க ராஜயோகம் அடைந்து, வீடு கொடுத்த குருவின் பரிவர்த்தனையால்  மேலும் வலுப்பெற்று இருக்கிறார்.

கடன், நோய், எதிரியைக் குறிக்கும் ஆறாமிடத்தில் பாபக் கிரகங்களான செவ்வாய்- சனி இணைந்திருப்பது எல்லாவற்றையும் விட சிறப்பான ஒன்று. அதேநேரத்தில் இவர்கள் ஐந்து ஏழுக்குடையவர்கள் என்பதால் திருமணம், புத்திரபாக்கியம் இவைகளை தாமதிக்கச் செய்யும். ஆனால் இவர்கள் இருவரும் குருவின் வீட்டில் இணைந்திருப்பதாலும், புத்திர காரகனாகிய குருவே பாக்கிய ஸ்தானத்தோடு பரிவர்த்தனை ஆகி இருப்பதாலும் புத்திர, களத்திர தோஷம் இல்லை.

பாதகாதிபதி சுக்கிரன் பாதக ஸ்தானத்தில் இருக்கும் நிலையில்தான் கடுமையான கெடுபலன்களைச் செய்வார். அவரும் நீச்ச புதனுடன் இணைந்து, வலிமை குறைந்து, குருவுடன் பரிவர்த்தனையாகி, பாதக ஸ்தானத்திற்கு ஆறில் மறையும் மறைமுக நிலை பெறுவதால் அவரது தசையில் பாதகம் துளியும் இருக்காது.

எல்லாவற்றையும் விட மேலாக 30 வயது முதல் மகளுக்கு யோகர்களான சூரிய, சந்திர, செவ்வாய் தசைகள் ஆரம்பிப்பதால் வாழ்க்கையில் மிகவும் நன்றாக இருப்பாள். ஜாதகப்படி புதன் அதிக சுபத்துவமுள்ள கிரகம் என்பதால் மிகுந்த புத்திசாலியாக, கணக்கு, கணினித் துறைகளில் சாதிப்பார், படிப்பு, வேலை  புதனின் துறைகளில் அமையும். வாழ்த்துக்கள்.

ந. சந்திரசேகரன், கோயம்புத்தூர்- 34

கேள்வி:

என் பேத்தி பிறக்கும்பொழுது மருத்துவரின் கவனக்குறைவால் தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தில் சுற்றிக் கொண்டிருப்பதை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். இதனால் குழந்தையின் மூளைக்குச் செல்ல வேண்டிய ஆக்ஸிஜன் செல்லாமல் சிறு மூளை பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. வலிப்பு நோய் அவ்வபோது வந்து கொண்டுள்ளது. மூளைக் குறைபாட்டினால் சரியான கல்வி இல்லை. அரசுப் பள்ளியில் பெயரளவிற்கு ஒன்பதாம் வகுப்பில் இருக்கிறாள். அரசின் நல வாரியத்தில் இருந்து மாதம்தோறும் சிறிய அளவில் உதவித்தொகை கிடைத்து வருகிறது. தயவுசெய்து அவள் ஜாதகத்தை ஆராய்ந்து அவளது வாழ்க்கை எப்படி அமையும் என்பதைக் கூற வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். ஆயுள், ஆரோக்கியம் குறித்து அருள் செய்யுங்கள்.

பதில்:

(மகர லக்னம், சிம்ம ராசி, 4ல் ராகு, 5ல் சுக், 6ல் சூரி, புத, சனி, 7ல் செவ், 8ல் சந், குரு, 10ல் கேது, 24-6- 2004 இரவு 9-20 அந்தியூர்)

பேத்தியின் ஜாதகப்படி ராசியில் நீச்சமாகி அம்சத்தில் ராகுவுடன் இணைந்த கடும் பாபத்துவமான  செவ்வாய் லக்னத்தைப் பார்க்கிறார். சூரியனோடு இணைந்து பாபத்துவமான சனியும் ராசியைப் பார்க்கிறார். கூடுதலாக லக்னாதிபதி சனி ஆறில் மறைந்து தனக்கு ஆகாத சூரியனுடன் இணைந்திருக்கிறார்.

லக்னத்திற்கு சுபத் தொடர்புகள் எதுவும் இல்லை. இதுபோன்ற நிலையில் இக்குழந்தை மற்றவர்களைப் போல சாதாரணமாக இருக்க வாய்ப்பில்லை. லக்னம், லக்னாதிபதி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்களின் வாழ்க்கை முறையில் அல்லது ஆரோக்கியம், மன நிலையில் தீர்க்க முடியாத குறைகள் இருக்கும்.

அதேநேரத்தில் எட்டில் வளர்பிறை சந்திரனும், குருவும் அமர்ந்து எட்டாமிடம் நன்றாக இருப்பதால் இந்தக் குழந்தை நீண்ட நாள் உயிர் வாழும். பிறந்ததிலிருந்து கல்வி பயிலும் காலமான சுமார் 17 வயது வரை மகர லக்னத்திற்கு நான் வரக்கூடாது என்று சொல்லும் சூரிய, சந்திர தசைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்பிறகு ஏழாமிடத்தில் கடும் பாபத்துவ நிலையில் உள்ள செவ்வாய் தசையும், 42 வயது வரை நீச்சனின் வீட்டில் அமர்ந்த ராகு தசையும் நடைபெற இருக்கிறது.

வாழ்க்கையின் மிக முக்கிய காலகட்டங்கள் வரை, நல்லவிதமாக சொல்ல முடியாத தசா,புக்திகளும், சுபத்துவமற்ற லக்னம், லக்னாதிபதியைக் கொண்ட ஜாதக அமைப்பும் இந்தக் குழந்தைக்கு இருப்பதால் ஒரு எழுபத்தி நான்கு வயதுப் பெரியவரின் மனம் குளிர என்னால் பதில் சொல்ல முடியவில்லை.

ஜாதகம் என்பது எல்லா நிலைகளிலும் சாதகமாகச் சொல்ல முடியாதது. சில நிலைகளில் உண்மையத் தவிர வேறு எதுவும் சொல்ல முடியாத அமைப்பு இருக்கும். பேத்தியின் ஜாதகமும் அப்படிப்பட்டதுதான். காலம் முழுவதும் யாரவது ஒருவர் கவனித்துக் கொள்ள வேண்டியது பேத்தியின் அமைப்பு. அனைத்தும் பரம்பொருளின் செயல்.

(05.11.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.