2019 Aippasi Matha Palankal – 2019 ஐப்பசி மாத பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

மேஷம்:

ராசிநாதன் செவ்வாய் ஆறாம் வீட்டில் அமர்ந்து தனது ராசியையே பார்ப்பதால் இது மேஷராசிக்கு சந்தோஷங்களையும், புத்துணர்வையும் கொடுக்கக் கூடிய மாதமாக இருக்கும். உங்கள் செயல்களில் புத்துணர்ச்சியும், புதுமையும், விவேகமும் உண்டு. மாதம் முழுவதும் உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரிகள், சொந்தத்தொழில் செய்வோருக்கு தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். அதே நேரத்தில் ஆறுக்குடைய புதனும், வலுப் பெறுவதால் சிலருக்கு கடன் பிரச்னைகள் கலக்கத்தை தரும். வாழ்க்கைத் துணைக்கு ஒரு நல்ல பொருளை பரிசளிக்க முடியும்.


யோகாதிபதி சூரியன் நீச்ச நிலையில் இருந்தாலும் சுக்கிரனுடன் இணைந்து நீச்ச பங்க அமைப்பில் இருப்பதால் நன்மைகள் நடக்க தடையில்லை. ஐப்பசி மாதம் முழுவதும் சிக்கல்களோ, எதிர்ப்புகளோ இருக்காது. குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். பெண்களுக்கு பணிபுரியும் இடங்களில் நல்லவைகள் நடக்கும். சிலருக்கு பதவி உயர்வுகள் உண்டு. மாமியார் உங்கள் பேச்சை கேட்பார். கணவர் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார். மாணவர்கள், தொழிலாளர்கள், கலைஞர்கள், வியாபாரிகள், போன்ற அனைவருக்கும் நல்ல மாதம் இது.

ரிஷபம்:

ஐப்பசி மாதம் முழுவதும் ரிஷபநாதன் சுக்கிரன் ஆறில் அமர்ந்து ஆட்சிவலு அடைவது நன்மைகளைத் தரும் அமைப்பு என்பதால் இந்த மாதம் முதல் உங்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் முன்னேற்றங்களும், லாபங்களும், இருக்கும். ரிஷபத்திற்கு இன்னும் சில வாரங்களில் அஷ்டமச்சனி விலகப்போவதால் இனிமேல் எவ்வித பிரச்னைகளையும் சுலபமாகவும், புத்திசாலித்தனத்துடனும் எதிர்கொள்வீர்கள். குறிப்பாக  இளைஞர்களுக்கு எதிர்மறை பலன்கள் நீங்கி, நல்ல பலன்கள் நடக்கும்.

மேம்போக்காகப் பார்க்கும்போது அஷ்டமச்சனி கெடுபலன்களைத் தந்ததாகத் தெரிந்தாலும், சனிபகவான் கடந்த இரண்டு வருடங்களில் நல்லது எது, கெட்டது எது என்பதையும் நல்லவர் யார்? நம்மை விரும்பாதவர் யார்? நமக்கு வேண்டியவர் யார் என்பதையும் தெளிவாக்க்கி விட்டார். குறிப்பாக பணம் என்றால் என்ன என்பதையும், பணத்தை எவ்வாறு கையாள்வது என்பதையும் சொல்லிக் கொடுத்து பணத்தின் அருமையையும் புரிய வைத்து விட்டார்.  எனவே இனிமேல் மேற்கண்ட அனுபவங்களைக் கொண்டு எதிர்காலத்தில் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். ரிஷபத்திற்கு இனி எல்லாம் சுகமே.

மிதுனம்:

மிதுனநாதன் புதன் ஐப்பசி மாதம் நீச்ச சூரியனுடன் வக்கிர நிலையில் இருந்தாலும், அங்கே சுக்கிரனும் இருப்பதால் இந்த மாதம் உங்களுக்கு நல்ல மாதமே. அதேநேரத்தில் எதிர்கால நன்மைகளுக்கான சில மாற்றங்களும் இந்த மாதம் உண்டு. ராசிநாதன் பலம் பெறுவதால் எதையும் சமாளிப்பீர்கள். பணவரவிற்கு பஞ்சமில்லை. சிலருக்கு  வாழ்க்கைத்துணையுடன் யாத்திரை மற்றும் பிரயாண அனுபவங்கள் இருக்கும். பதவிஉயர்வு, சம்பள உயர்வில் நல்ல செய்தி உண்டு. ஒரு நல்ல சந்தர்ப்பத்தில சாதுர்யத்தை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள்.

மிதுனராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கவலைகள் எதுவும் இல்லாத பிரச்சினைகள் அற்ற வாழ்க்கை அமையும் என்பது உறுதி. குடும்பத்திலும், தொழில் இடங்களிலும் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை உங்களால் சுலபமாக சமாளிக்க முடியும். நல்லவர் போல் நடித்து குடும்பத்தில் நாரதர் வேலை பார்ப்பவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குவீர்கள். சுக்கிரன் வலுப்பெறுவதால் குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடக்கும். தடைபட்டு வரும் சுபகாரியங்கள் சட்டென்று முடிவாகி ‘ஜாம்ஜாம்’ என்று நடைபெறும். நீண்ட நாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும்.

கடகம்:

மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் இரண்டுக்குடைய தனாதிபதி சூரியனும், சகாய ஸ்தானாதிபதி புதனும் இணைந்திருப்பதால் இந்தமாதம் கடகத்திற்கு பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றின் மூலம் நன்மைகள்  கிடைக்கும் மாதமாக இருக்கும். இன்னும் சில வாரங்களில் சனி ஏழாமிடத்திற்கு மாற இருப்பதால் குடும்ப விஷயங்களில் அவசரப்படாமல் இருப்பது நல்லது. பெண்கள் விஷயத்தில் நன்மைகள் நடக்கும். பெண்கள் உதவுவார்கள். பொதுவில் மேன்மைகளை தரும் மாதம் இது.

வியாபாரிகளுக்கு தொழில் நன்றாக இருக்கும் சிலருக்கு வெளிமாநில, வெளிதேச மாற்றங்கள் இருக்கும். சிலர் நீண்ட தூர பிரயாணங்கள் செய்வீர்கள். வர இருக்கும் குரு, சனிப்பெயர்சிகளின் சிறப்பு பலனாக மூன்றாம் மனிதரின் தலையீட்டினால் குடும்பத்தில் சில கருத்து வேற்றுமைகளும் வீண் பிரச்னைகளும் வரும். யாராவது ஒருவர் கோபப்படாமல் பொறுமையையும் நிதானத்தையும் கையாண்டு சிறிய விஷயம் பெரிதாகாமல் பார்த்துக் கொள்வீர்கள். பணியிடங்களில் நெருக்கடி வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் அனுசரித்து போவது நல்லது. இளையவர்களுக்கு அதிர்ஷ்டம் செய்யும் மாதம் இது.

சிம்மம்:

சிம்மநாதன் சூரியன் மாதம் முழுவதும் நீச்சம் பெறுவது சிறப்பான நிலை அல்ல என்றாலும், அவர் பெரும்பகுதி நாட்கள் நீச்சபங்க அமைப்பில் இருப்பதால் கெடுதல்கள் எவையும் உங்களை அணுகாது என்பது உறுதி. இன்னும் சில வாரங்களில் குருபகவான் ராசியைப் பார்க்கப் போவதால் தற்போதைய  பிரச்சனைகளை சுலபமாக சமாளிக்கும் மனோபலமும், சக்தியும் உங்களுக்கு கிடைக்கும். சிம்மராசிக்கு இனி பின்னடைவுகள் எதையும் சொல்வதற்கு இல்லை. பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு சந்தோஷப்படும் அளவிற்கு இந்த மாதம் வருமானம் உண்டு.

மனைவியால் உதவிகள் இருக்கும். சிலருக்கு பிடிக்காதவர்களிடம் இருந்து பணவரவு கிடைக்கும். பிரச்சினைகள் எதுவும் இருக்காது. வெளிநாட்டில் இருந்து பணம் வரும். சகோதரர்களால் நன்மை உண்டு. உறவினர்கள் உதவுவார்கள். நிலுவையில் இருக்கும் பணவிவகாரங்கள் இந்த மாதம் முடியும். சிம்மத்திற்கு இனி சிறப்புகள் மட்டுமே. பத்தாமிடம் பலம் பெற்று அமைவதால் இனிமேல் தொழில், வேலை, வியாபாரம் போன்ற அனைத்து விஷயங்களும் சிறப்பாக நடைபெறும். வியாபாரிகளுக்கு இது அமோகமான காலம். புதிய முதலீடுகளைச் செய்யலாம். தொழிலை விரிவாக்கம் செய்து புதிய கிளைகள் அமைக்கலாம்.

கன்னி:

மாத ஆரம்பத்தில் ராசிநாதன் புதன், சுக்கிரன் இருவரும் தனஸ்தானத்தில் இணைந்து வலுவான நிலையில் இருப்பதால் ஐப்பசி மாதம் உங்களை பொருத்தவரையில் விசேஷமான மாதம்தான்.  தனாதிபதி சுக்கிரன் வலுவாக இருப்பதால் எதிர்பாராத பணவரவுகளும், வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றில் நல்ல வருமானங்களும் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய அமைப்பும் இந்த மாதம் உண்டு. பெண்களால் லாபம் இருக்கும். அம்மாவின் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்ஷம் நிலவும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். கணவன், மனைவிக்குள் கருத்து வேற்றுமை மறையும்.

மொத்த வியாபாரிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. சிலருக்கு ஆன்மீகச் சுற்றுலா உண்டு. எந்த ஒரு விஷயத்திற்கும் அடுத்தவர்களை நம்பாமல் கூடுமானவரை அனைத்தையும் உங்களின் மேற்பார்வையில் நேரிடையாகச் செய்வது நல்லது. ராசியில் செவ்வாய் அமர்வதால் நடுத்தர வயதுக்காரர்கள் உடல்நலத்தில் கவனம் வைக்க வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் இருக்கலாம். குறிப்பாக கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளை கண்காணிப்பது நல்லது. எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எவரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

துலாம்:

துலாம் ராசிக்கு இது நினைத்தது நிறைவேறும் மாதமாக இருக்கும். இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். ஏற்கனவே உங்கள் மூலமாக உதவிகள் பெற்ற ஒருவர் அந்த நன்றிக்கடனை இப்போது திருப்பிச் செலுத்தும் மாதம் இது. மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் ராசியில் ஆட்சி வலு அடைவதால் துலாமுக்கு துன்பங்கள் இல்லை. இதுவரை உங்களுக்கு என்ன கிடைக்கவில்லையோ அது இப்போது கிடைக்கும். நல்ல வேலை கிடைக்காத இளையபருவத்தினர் மனதிற்கு பிடித்த வேலையில் சேருவீர்கள். சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும்.

கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் துணிவுடன் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும். கணவன், மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். வியாபாரிகளுக்கு லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். ராஜகிரகங்கள் வலுவாக இருப்பதால் வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும். இளைய பருவத்தினருக்கு இது உற்சாகமான மாதம். ஜமாய்ப்பீர்கள். ராசிநாதனின் வலுவால் உங்கள் தைரியம் பளிச்சிடும். ஒரு சிலர் ஏதேனும் ஒரு விஷயத்தில் புகழடைவீர்கள். மனம் உற்சாகமாக இருக்கும். ஆரோக்கியக்குறைவு இருந்தவர்கள் குணம் அடைவீர்கள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியினர் இனிமேல் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். இரண்டிற்கு மாற இருக்கும் குரு பணவரவை இனிமேல் தந்து உங்களை பாதுகாப்பார் என்பதால் எதிலும் முட்டுக்கட்டைகளை சந்தித்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு  நல்வழி திறக்கும். இனிமேல் எந்த பிரச்னைகளும் இல்லாமல் வாழ்க்கை சுமுகமாகச் செல்லும். இதுவரை இருந்த எதிர்மறை பலன்கள் உங்களை விட்டு விலகுவதை விருச்சிகத்தினர் உணரும் மாதம் இது.  ஏழரைச்சனி முழுக்க விலக  இருப்பதால் எல்லா விஷயங்களிலும் இருந்து வந்த தடைகள் விலகும்.

அதிர்ஷ்டம் இனி கை கொடுக்கும். மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். சமாளிக்கவும் செய்வீர்கள். அதிர்ஷ்டமான வாழ்க்கைக்கு இனித் திரும்புவீர்கள். சுறுசுறுப்புக்கு அடையாளமான தேளை சின்னமாகக் கொண்டு பிறந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு இனிமேல் மன நிம்மதி இருக்கும். அனுஷம் நட்சத்திரத்தினர் இனி ஆனந்தமாய் இருப்பீர்கள். கவலை வேண்டாம். பரம்பொருள் ஒருபோதும் உங்களைக் கைவிட மாட்டார். அனைத்து பாக்கியங்களும் இந்த மாதம் முதல் கிடைக்கும்.

தனுசு:

தனுசு ராசிகாரர்களுக்கு இது பொருளாதார நன்மைகளைத் தரும் மாதமாக இருக்கும். சூரியன் நீச்சத்தில் இருப்பதால் குடும்பத்தில் குழப்பங்கள் வரும். ஆனாலும் சமாளித்து விடுவீர்கள். ஏழரைச்சனி நடந்து வருவதால் அருகில் இருக்கும் பழமையான சிவன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது சிரமங்களை குறைக்கும். மூலம்  நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் இடும் வேலை தொழில் அமைப்புகளும் இப்போது  அமையும். தனுசுக்கு இது நல்ல மாதம்தான்.

சனி சாதகமாக இல்லாததால் கைக்கெட்டும் தூரத்தில் உணவு இருந்தாலும் எடுத்து சாப்பிடுவதற்கு நேரம் இருக்காது. ராசிக்கு குரு மாறுவது நல்லது என்பதால் ஏற்கனவே யோசனையின்றி அவசரப்பட்டு செய்த காரியங்கள் அனைத்தையும் இந்தமாதம் சீர்தூக்கி முறைப்படுத்திக் கொள்ள முடியும். பிள்ளைகள் விஷயத்தில் சுப காரியங்கள் உண்டு சிலருக்கு குலதெய்வ, இஷ்ட தெய்வதரிசனம் கிடைக்கும். வாழ்க்கைத்துணை விஷயங்களில் விட்டுக் கொடுத்து போங்கள். ஈகோவை தவிர்ப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் வராமல் தடுக்கலாம். குடும்ப பிரச்னைகளை மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்வது நல்லது.

மகரம்:

ஐப்பசி மாத ஆரம்பத்தில் மகர ராசியின் யோகாதிபதிகளான புதனும் சுக்கிரனும் இணைந்திருப்பது மேன்மைகளை தரும் ஒரு அமைப்பு என்பதால் இந்த மாதம் குடும்பத்தில் சந்தோஷப்படக்கூடிய நிகழ்ச்சிகளும், தொழிலில் பணவரவு மற்றும் பொருளாதார மேன்மைகளும் உள்ள மாதமாக இருக்கும். எட்டுக்குடைய சூரியன் நீச்சமாவதால் கடந்த காலங்களில் நடந்த பிரச்னைகளில் இருந்து நீங்கள் மீண்டு வரும் மாதமாகவும் இது இருக்கும். சிலருக்கு விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். இளைய பருவத்தினர் தங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த மாதம் சந்திப்பீர்கள்.

ராகு ஆறாமிடத்தில் வலுவாக இருப்பதால் சிலருக்கு அரபு நாடுகளில் வேலை, தொழில் போன்ற தொடர்புகள் ஏற்படும். இஸ்லாமிய நண்பர்கள் உதவுவார்கள். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு சாதகமான நிலை வரும். ஜென்மச்சனி ஆரம்பிக்க இருப்பதால்  ஏதேனும் ஒரு விஷயத்தில் பதற்றப்பட்டு முடிவெடுத்து அது தவறாகிப் போகும் என்பதால், எதிலும் நிதானத்துடன் இருங்கள். சில விஷயங்களில் உங்களுக்கு நீங்களேதான் எதிரி என்பதால் இப்போது நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகலாம். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள்.

கும்பம்:

ஐப்பசி மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் யோகாதிபதிகள் புதனும், சுக்கிரனும் வலுவான அமைப்பில் இருப்பதால் உங்களை எதிர்த்து வந்தவர்களும் மனம் மாறி ஆதரிக்கும் மாதம் இது. சிலருக்கு எதிர்பாராத ஆட்கள் மூலமாக உதவிகள் கிடைக்கும். செவ்வாய் எட்டில் இருப்பதால் தேவையற்ற வகையில் யாரையாவது விரோதம் செய்து கொள்வீர்கள். பேச்சில் கவனமாக இருங்கள். சிலருக்கு வேலைமாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம் போன்றவைகள் நடக்கும். இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.

தெய்வ தரிசனம் கிடைக்கும். வீடு வாகனம் போன்றவைகளில் ஏதேனும் ஒன்று வாங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். ஒரு சிலர் இந்த மாதம் வாங்கவும் செய்வீர்கள். வேலை தொழில் வியாபாரம் போன்ற இனங்களில் சில எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடக்கும். வியாபாரிகள் வேலைக்காரர்களை மட்டும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். மாதத்தின் பிற்பகுதியில் பணப்புழக்கம் இருக்கும். கடன் பிரச்னை எல்லை மீறி போகாது. நடுத்தர வயதினருக்கு மருத்துவச் செலவுகள் இருக்கும். எதையும் உங்களால் சமாளிக்க முடியும்.

மீனம்:

ஐப்பசி மாதம் மீனத்திற்கு நல்ல மாதமாக இருக்கும். எட்டில் மறையும் சூரியன் வீண் செலவுகளைத் தருவார் என்பதால் யோசித்து செலவு செய்வது நல்லது. அதேநேரம் ராசிநாதன் குரு வலுவாக இருப்பதால் பெரிய அளவில் செலவுகள் வரப்போவது இல்லை. வருமானமும் உண்டு. குறிப்பிட்ட பலனாக பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும். எச்சரிக்கையாக இருங்கள். சகோதரிகளால் செலவு உண்டு. இளைஞர்களுக்கு நல்ல பலன்கள்  நடக்கும். எட்டில் கிரகங்கள் கூடுவதால் சிலருக்கு அடிப்படை அமைப்புகளில் மாற்றங்கள் இருக்கும்.

செவ்வாய் ஏழில் இருப்பதால் காரணமின்றி வாழ்க்கைத் துணையின் மீது குற்றம் குறை கண்டுபிடித்து கோபப்படுவீர்கள். எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். வாய் தவறி வரும் ஒரு சொல்லால் கசப்புகள் வரும். வார்த்தைகளைக் கொட்டி விடாதீர்கள். ஆனால் இதை மறந்து யாரிடமாவது கோபத்துடன் பேசி இந்த மாதம் அவரை விரோதியாக்குவீர்கள். குடும்ப பிரச்னைகளில் நிதானமாக இருங்கள். கோட்சார நிலை நன்றாக இருந்தும் பிறந்த ஜாதக தசா புக்தி அமைப்பினால் இன்னும் நல்லவை நடக்காத சிலருக்கு இந்த மாதம் சில நல்ல பலன்கள் நடக்கும். சிலருக்கு ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.