adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
உங்கள் ஜாதகம் யோக ஜாதகமா.?- B001

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888

யோகம் என்பதற்கு சேர்க்கை அல்லது ஒருவித அமைப்பு என்று பொருள்.

ஒரு ஜாதகருக்கு நன்மை தரக் கடமைப்பட்ட கிரகங்கள் நல்ல பாவங்களில் இணைந்தோ, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோ, ஒருவரின் நட்சத்திரத்தில் இன்னொருவர் அமர்ந்து தசை நடத்தியோ அல்லது வேறுவிதமான தொடர்புகளை உண்டாக்கியோ யோகங்களை ஏற்படுத்துகின்றன.

ஒருவர் முற்பிறப்பில் செய்த நன்மை, தீமைகளின் அடிப்படையில் இந்தப் பிறவியில் யோகங்கள் அமைவதாக ஜோதிடசாஸ்திரம் சொல்லுகிறது.


தேடிப் பிடித்தால் ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் குறைந்த பட்சம் பத்து யோகங்களாவது இருக்கும். இருந்தும், மிகப் பெரும்பாலானவர்கள் தங்களுடைய ஜாதகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள யோகங்கள் ஏன் இன்னும் செயல்படவில்லை? எப்போது செயல்படும்? செயல்படுமா? செயல்படாதா? நான் அதிர்ஷ்டசாலிதானா? இல்லையா? என்ற குழப்பத்திலேயே இருக்கின்றனர்.

லட்சக்கணக்கானவர்களில் ஒருவர் மட்டுமே ஏன் அதிர்ஷ்டசாலியாக இருக்கிறார்? அந்த ஒருவருக்கு மட்டும் எப்படி யோகங்கள் செயல்படுகின்றன?

என்னிடம் வரும் பெரும்பாலானோர் தங்கள் ஜாதகங்களில் குரு உச்சமாய் இருக்கிறது, புதன் உச்சமாய் இருக்கிறது. ஆனால் எனக்கு அந்த தசைகளில் கெடுதல்கள் நடக்கிறதே ஏன்? எனக் கேட்கின்றனர்.

கிரகங்கள் பலம் பெற்று இருந்தாலும், கெடுதல் செய்யும் என்றால் யோக ஜாதகம் என்பது எப்படி இருக்க வேண்டும்? ஒரு ஜாதகத்தில் யார் வலுப் பெற வேண்டும்? யார் வலுப் பெறக் கூடாது?

இதுபற்றி ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்லுகிறது...?

ஒரு ஜாதகத்தில் அனைத்துக் கிரகங்களும் பலம் பெறக் கூடாது. நவ கிரகங்களில் ஜாதகரின் லக்னாதிபதியையும் சேர்த்து அவரின் நண்பர்கள் மூவர் மட்டுமே பலம் பெற வேண்டும். மற்றவர்கள் வலுக் குறைந்து இருக்க வேண்டும்.

அவதார புருஷரான ஸ்ரீராமரின் ஜாதகத்தில் நான்கு கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தன. அவர் இன்றும் நம்மால் தெய்வமாக ஆராதிக்கப்படுகிறாரே தவிர, மனித வாழ்வின் நன்மைகளை அவர் அடைந்ததே இல்லை.

இளம் பருவத்தில் அரசனுக்குரிய சுகபோக வாழ்வைத் துறந்து பதினான்கு வருடங்கள் காட்டில் இருக்க நேர்ந்தது. பழிச் சொல்லுக்கு அஞ்சி அன்பு மனைவியைப் பிரிய நேர்ந்தது. பிறந்த குழந்தைகளைக் கொஞ்ச முடியவில்லை.

அதைவிட மேலாக பிள்ளைகள் தனக்கு எதிராகப் போருக்கு நிற்கும் போதுதான் அது தன் குழந்தைகள் என்றே அவருக்கு தெரிய வந்தது....!

இதுவே கிரகங்களின் விளையாட்டு....!

ஜோதிட சாஸ்திரம் ஒன்பது கிரகங்களையும் தேவகுருவான குரு மற்றும் அசுர குருவான சுக்ரன் ஆகியோர் தலைமையிலான இரு பிரிவாகப் பிரிக்கிறது.

குரு, சூரியன், சந்திரன், செவ்வாய், கேது ஆகியோர் ஒரு அணியினர். ஏனைய சுக்கிரன், புதன், சனி, ராகு ஆகியோர் ஒரு அணியினர்.

இந்த இரண்டு பிரிவினரும் ஒருவருக்கொருவர் எதிர்த்தன்மை கொண்டவர்கள். நம் வேத ஜோதிடத்தின் நாயகன் சூரியன் என்பதால் சில நுட்பமான சூழல்களில் மட்டும் இந்த இரண்டு பிரிவினருக்கும் நடுவராக ஒரு பாலம் போல சூரியன் செயல்படுவார்.

குருவின் பிரிவில் உள்ள லக்னங்களுக்கு, சுக்ரனின் நண்பர்கள் தரும் யோகங்கள் முழுமையாகப் பலன் தராது. அதைப் போலவே சுக்ரனின் பிரிவில் உள்ள லக்னங்களுக்கு குருவின் நண்பர்கள் தரும் யோகங்கள் முழுமையாகக் கிடைக்காது.

அதாவது குறிப்பிட்ட லக்னங்களுக்கு அதன் நட்புக் கிரகங்கள் தரும் யோகங்கள் மட்டுமே செயல்படும். மற்ற கிரக யோகங்கள் அவ யோகமாகி விடும்.

குறிப்பாக ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் லக்னங்களுக்கு சூரிய, சந்திர, செவ்வாய், குரு சம்பந்தப்பட்ட யோகங்கள் பலன் தராது. அவ யோகம் ஆகிவிடும். அதேபோல் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்களுக்கு சுக்கிரன், சனி, புதன், உள்ளிட்ட கிரகங்களின் யோகங்கள் பலன் தருவதில்லை.

இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் மேலே சொன்ன குருவின் பிரிவு லக்னங்களில் பிறந்தோருக்கு சுக்கிரனின் அணியினரான சுக்கிரன், புதன், சனி ஆகியோர் கேந்திர, கோணங்களில் வலுப்பெற்று இருப்பது நன்மைகளைத் தராது. மாறாக உபசய ஸ்தானங்கள் என்று சொல்லப்படும் 3,6,10.11 ல் நட்பு நிலையில் இருப்பது மட்டுமே நல்ல பலன்களைத் தரும்.

அதைப் போலவே சுக்கிர அணியினர் என்று வகைப்படுத்தப்பட்ட ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் லக்னங்களில் பிறந்தவர்களுக்கு குருவின் அணியினரான குரு, செவ்வாய், சூரியன், சந்திரன் ஆகியோர் கேந்திர கோணங்களில் வலுப் பெறுவது நன்மைகளைத் தராது. உபசய ஸ்தானங்களான 3,6,10,11 ல் நட்பு வலுப் பெற்றிருப்பது நல்ல பலன்களைத் தரும்.

ஜோதிடம் என்பது ஒரு மகா சமுத்திரம். மேலே சொன்ன விதிகளுக்கும் விதி விலக்குகள் இருக்கின்றன. இந்த விதி விலக்குககளை தனித் தனி லக்னங்களில் மட்டுமே விளக்க முடியும்.

அதே நேரத்தில் ஆதிபத்திய ரீதியில் ஒரு கிரகம் நன்மைகளைத் தர விதிக்கப் படவில்லை என்றாலும் அந்தக் கிரகம் தன்னுடைய காரகத்துவங்களை அந்த ஜாதகருக்குக் கொடுத்தே தீரும்.

உதாரணமாக சுக்கிரன், குருவின் அணியினருக்கு நற்பலன் செய்ய மாட்டார் என்றாலும் அவருடைய காரகத்துவங்களான வீடு, வாகனம், மனைவி, பெண்சுகம், உல்லாசம் போன்றவற்றை ஜாதகரின் பருவத்திற்கு ஏற்றார் போலத் தந்தே தீருவார்.

ஜோதிடம் என்பது வெகு நுட்பமான, அபாரமான கணிப்புத் திறன் தேவைப்படும் ஒரு காலவியல் விஞ்ஞானக் கலை. ஒரு மேம்போக்கான அறிவுத் திறன் கொண்டவரால் கிரகங்கள் என்ன செய்யும், எப்போது செய்யும் என்பதைக் கணிக்க முடியாது.

அடுத்து நட்புக் கிரகங்களின் யோகங்களே ஒரு மனிதனை முன்னுக்கு கொண்டு வரக் கூடியவை. பகைக் கிரகங்கள் யோகத்தை தரும் சூழ்நிலையில் இருந்தாலும் முழுமையாக யோகத்தைத் தருவதில்லை. பகைக் கிரகங்கள் ஒன்றைக் கெடுத்தே இன்னொன்றைத் தரும். ஆனால் நட்புக் கிரகங்கள் அப்படியல்ல. முழுமையாக நன்மைகளைத் தரும்.

இன்னுமொரு முக்கிய விதியாக யோகம் தரும் வீடுகளில் அதாவது அந்த பாவங்களில் நட்புக் கிரகங்கள் மட்டுமே இருக்க வேண்டும். பகைக் கிரகங்கள் இருக்கக் கூடாது. அப்படி இருக்குமாயின் யோக பலன் குறையும்.

உதாரணமாக உங்கள் இல்லத்திற்கு நண்பர் வந்திருக்கிறார் என்றால் வீடு கலகலப்பாக இருக்கும். மனைவி நீங்கள் சொல்லாமலேயே “வாங்கண்ணா..” என்று கூறி காப்பி கொண்டு வருவார். குழந்தைகள் “மாமா” என்று அவரைச் சூழ்ந்து கொள்ளும்.

தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலையில் உங்களின் விரோதி வீட்டிற்கு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது உங்கள் வீட்டுச் சூழல் எப்படி இருக்கும்?

உங்கள் மனைவி சமையலறையிலிருந்து வெளியே வர மாட்டார். காதுகளை மட்டும் ஹாலில் வைத்திருப்பார். குழந்தைகள் ‘உம்’ மென்று புத்தகத்தில் ஆழ்ந்திருக்கும். நீங்களும் அப்படியே....! வீட்டில் ஒருவித இறுக்கமும், கஷ்டமும் நிலவும்.

அதுபோலத்தான் கிரகங்களும்...!

நட்பு வீட்டில், நண்பருடன் இருக்கும் கிரகங்கள் யோகம் தர வேண்டிய சூழ்நிலையில் மிகப் பிரமாதமான யோகங்களைத் தருகின்றன.  பகை வீட்டிலோ, பகைவருடனோ இருக்கின்ற கிரகங்கள் யோகத்தைத் தர வேண்டிய நிலையில் இருந்தாலும் இறுக்கமாக ‘கம்’ மென்று இருந்து விடுகின்றன.

அதேநேரத்தில் இன்னொன்றையும் கண்டிப்பாகச் சொல்லியாக வேண்டும்.     

லக்னாதிபதிக்கு (அதாவது உங்களுக்கு) நட்புக் கிரகங்கள் பலவீனமடைந்து கெட்டிருந்தாலும், அவர்களது தசை நடக்கும் போது பகைக் கிரகங்களைப் போல கெடுதல்கள் நடக்காது. அதாவது நண்பர்கள் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்ய மாட்டார்கள்.

நமது ஜோதிட சாஸ்திரத்தில் நூற்றுக்கணக்கான யோகங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.

சூரிய, சந்திரர்களைத் தவிர்த்த பஞ்சபூதக் கிரகங்களான குரு, சுக்ரன், புதன், செவ்வாய், சனி ஆகியோரால் உண்டாகப் பெறும் பஞ்ச மஹா புருஷ யோகங்களைப் பற்றி அனைத்து கிரந்தங்களும் மிகவும் புகழ்ந்து பேசுகின்றன.

அதுபோல ஒரு ஜாதகத்தின் முக்கியமான பெருங்கோணமான ஒன்பதுக்குடையவனும், தொழிலுக்கு அதிபதியான பத்துக்குடையவனும் வலுப் பெற்று உண்டாகும் தர்ம,கர்மாதிபதி யோகமும் யோகங்களுள் முதன்மையானது.

தர்ம,கர்மாதிபதிகளின் தசை நடக்கும் போது, அதாவது வலுப் பெற்ற ஒன்பது. பத்துக்குடையவர்களின் தசை நடக்கும்போது யோகங்களை அனுபவிக்காத மனிதனே இல்லை. இதை என்னால் நூறு சதவிகிதம் உறுதியாகக் கூறமுடியும்.

இப்படிப்பட்ட பஞ்ச மகாபுருஷ யோகங்களும், தர்மகர்மாதிபதி  யோகமும் எப்படி உண்டாகின்றன? எவ்வாறு ஜாதகருக்கு நன்மை செய்கின்றன என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

செப்  14-20, 2011. திரிசக்தி ஜோதிடம் இதழில் வெளிவந்தது.அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.