adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 254 (17.09.19)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

எஸ். எம். மாரி கண்ணன், மதுரை.

கேள்வி:

கடந்த 2011 முதல் என் குடும்பமும் பிள்ளைகளும் சொல்லமுடியாத வறுமையில் வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையிலும் மகன்கள் இருவரையும் பிஇ சிவில் படிப்பை வங்கிக் கடன் மூலமும், நல்ல மனிதர்கள் தயவிலும் படிக்கவைத்து விட்டேன். கடவுள் அருளால் இருவரும் நல்லபடியாக படிப்பை முடித்து விட்டார்கள். படிப்பு முடிந்து இரண்டு வருடங்கள் ஆகியும் இருவருக்குமே சரியான வேலை எதுவும் கிடைக்கவில்லை. மூத்தமகன் அப்பாவிற்கு உதவ முடியவில்லையே என்ற கவலையில் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார். அவருக்கு அரசு வேலை கிடைக்குமா, எங்கள் கவலை தீருமா என்று குருஜி அவர்கள் கணித்துச் சொல்ல வேண்டும்?

பதில்:

(துலாம் லக்னம், கன்னி ராசி, 1ல் சூரி, சுக், ராகு, 2ல் செவ், குரு, 5ல் சனி, 7ல் கேது, 12ல் சந், புத, 22-10-1995 காலை 6- 5 சிவகங்கை)

துலாம் லக்னக்காரர்களுக்கு குரு தசை அல்லது புக்தி நடக்கும் பொழுது நல்ல பலன்கள் நடப்பதில்லை. கடந்த இரண்டு வருடங்களாக மகனுக்கு குரு புக்தி நடந்ததால் நல்ல வேலை கிடைக்கவில்லை. தற்போது யோகாதிபதி சனியின் புக்தி ஆரம்பித்து விட்டதாலும், ராகு தசை நடப்பதாலும் வரும் நவம்பர் மாதம் 12ஆம் தேதிக்கு பிறகு இருக்கும் இடத்திலிருந்து தூரமாக சென்று பார்க்கும் வேலை அமையும். 2020 ஆம் ஆண்டு பிறக்கும்போதே குடும்பம் வறுமையின்றி நன்றாக இருக்கும். மகனின் ஜாதகப்படி லக்னாதிபதி சுக்கிரன் லக்னத்திலேயே ஆட்சி பெற்று ராகுவிடமிருந்து 18 டிகிரி விலகி இருப்பதால் சிறப்பான எதிர்காலம் அமையும். வாழ்த்துக்கள்.

மோகன், தஞ்சாவூர்.

கேள்வி:

நான் தங்களின் பரம ரசிகன். பேரனின் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். அவனது எதிர்காலம், படிப்பு, வேலை பற்றி அறிந்து கொள்ள விருப்பமாக இருக்கிறேன்?

பதில்:

(துலாம் லக்னம் கன்னி ராசி 2ல் குரு, 3ல் சனி, கேது, 7ல் புத, சுக், 8ல் சூரி, 9ல் செவ், ராகு, 12ல் சந், 15-5-2019 மாலை 4-45 தஞ்சை)

பேரனுக்கு துலாம் லக்னமாகி, லக்னத்தை அதன் அதிபதி பார்த்து, 9-க்குடைய யோகாதிபதி உடன் இணைந்திருக்கும் அதிர்ஷ்ட ஜாதகம். வளர்பிறைச் சந்திரனுக்கு எட்டில் சந்திர அதியோக அமைப்பில் சுக்கிரனும் புதனும் இருப்பதும், சூரியனைக் குரு பார்த்து சிவராஜயோகம் அமைந்திருப்பதும் நல்ல யோகம். பேரனின் ஜாதகப்படி கணிதம், கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட படிப்பு அமையும். லக்னாதிபதி வலுத்து, சூரியன் சுபத்துவமாகி, பத்தாம் இடத்தை குரு பார்ப்பதால் அரசு வேலை பார்ப்பார். எட்டைக் குரு பார்ப்பதால் தீர்க்காயுள் உண்டு. வாழ்த்துக்கள்.

வி. இசக்கி, திருநெல்வேலி.

கேள்வி:

தங்களின் மாலைமலர் எழுத்துக்களால் கடலளவு ஜோதிடக் கலையில் கடுகளவு தெரிந்து கொண்டேன். கடந்த ஆண்டு இதே பகுதியில் அன்றாட செலவுக்கு கூட அடுத்தவர் கையை எதிர்பார்க்கும் நிலையில் உள்ளேன், எனது நிலைமை எப்போது மாறும் என்ற எனது கேள்விக்கு, விருச்சிக ராசி என்பதால் 2019ஆம் ஆண்டு முதல் யாருடைய தயவும் இல்லாமல் உங்களால் வாழ முடியும் என்று பதில் கூறி இருந்தீர்கள். அது அப்படியே நூறு சதவீதம் நடந்தது. ஓடாத கம்பெனியின் நிர்வாக பொறுப்பை என்னிடம் கொடுத்து தற்போது சம்பளம் தருகிறார்கள். வீட்டிலிருந்தபடியே சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கிறேன். செப்டம்பர் மாதம் முதல் கம்பெனி இயங்கும். எனது மகன் 2016 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு வேலையில் சேர்ந்து இன்றுவரை வேலை நிரந்தரமாகாமல் கஷ்டப்படுகிறான். அவனுக்கு வேலை எப்போது நிரந்தரமாகும்? ராகுதசை அவனுக்கு நன்மைகளை செய்யுமா? அவன் பெயர், புகழ் பெறுவதை நான் என் கண்ணால் பார்க்க முடியுமா? எனக்கும் எனது தகப்பனாருக்கும் சொந்த வீடு கிடையாது. இவனாவது சொந்த வீடு கட்டி வாழ்வானா?

பதில்:

(கடக லக்னம், ரிஷப ராசி, 1ல் செவ், 4ல் ராகு, 5ல் குரு, 7ல் புத, சுக், 8ல் சூரி, சனி, 10ல் கேது, 11ல் சந்,  7-3-1995 மாலை 4 மணி, நெல்லை)

மகனுக்கு லக்னாதிபதி வளர்பிறை சனிதிரனாகி உச்சம் பெற்று லக்னம், ராசி, லக்னாதிபதியை வலுத்த குரு பார்த்து, லக்னத்தை மூன்று சுபர்கள் பார்த்த யோக ஜாதகம். சூரியன் சனியுடன் இணைந்திருந்தாலும், சனியை மிக நெருங்கி அஸ்தமனம் செய்து, அம்சத்தில் சுக்கிரனுடன் இணைந்து சுபத்துவமாக இருக்கிறார்.

ராசிக்கு பத்தில் சூரியன் அமர்ந்து, தனது சிம்ம வீட்டைத் தானே பார்ப்பதால் அரசு வேலை அடுத்த ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு நிரந்தரமாகும் நான்காம் அதிபதி சுக்கிரன் நட்பு வீட்டில் அமர்ந்து, சுக்கிரனின் வீட்டில் அமர்ந்த ராகுவின் தசை நடப்பதால், 2025 ஆம் ஆண்டு மகனுக்கு சொந்த வீடு உண்டு. அடுத்தடுத்து யோக தசைகள் நடப்பதால் மகனின் எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும் வாழ்த்துக்கள்.

கே. பானுமதி, புதுச்சேரி.

கேள்வி:

மகனுக்கு பல இடத்தில் பெண் பார்த்தும் கடந்த 3 ஆண்டுகளாக பெண் அமையவில்லை. அவனும் திருமணம் செய்து வைக்கக் கோரி தினமும் எங்களிடம் சண்டையிட்டு வருகிறான். மிகவும் கோபப்படுகிறான். அவனது திருமணம் எப்போது அமையும்? புத்திரப்பேறு எப்போது கிடைக்கும்? படித்த படிப்பிற்கு ஏற்ப வேலை கிடைக்குமா? வெளிநாடு செல்லும் யோகம் உண்டா?

பதில்:

(தனுசு லக்கனம், மேஷ ராசி, 1ல் ராகு, 2ல் சனி, 5ல் சந், 7ல் கேது, 8ல் சூரி, குரு, 9ல் புத, சுக், செவ், 2-8-1991 மாலை 5-20 புதுச்சேரி)

மகனுக்கு லக்னாதிபதி குரு எட்டில் உச்சமாக அமர்ந்து, வெளிநாட்டைக் பன்னிரெண்டாம் இடத்தைப் பார்த்து, பன்னிரெண்டாம் அதிபதி செவ்வாயும் அதிநட்பு வீட்டில் சுபத்துவமாகி, தனது வீட்டைத் தானே பார்த்து உள்ளூரை விட்டு வெளியே சென்ற பிறகு வளர்ச்சி பெறும் யோக ஜாதகம். திருமணம் மற்றும் புத்திர பாக்கியத்திற்கு பிறகு அடுத்து வரும் சந்திரதசை தசையில் வெளிநாட்டில் இருப்பார்.

அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்கு பிறகு நடக்க இருக்கும் சூரிய தசை, புதன் புக்தியில், புதன் ஏழாமிடத்தில் அமர்ந்திருக்கும் கேதுவின் சாரத்தில் அமர்ந்து சுக்கிரனோடு இணைந்திருப்பதால் திருமணம் நடக்கும். ஐந்தில் இருக்கும் சந்திரனின் தசையில் 2022ம் வருடம் கையில் குழந்தை உண்டு. தந்தை ஆனதற்கு பிறகு முன்னேற்றத்தை அடையும் ஜாதகம். ராசிக்கு பத்தில் குரு இருப்பதால் வங்கித் தொழில் அல்லது சொல்லிக் கொடுக்கும் துறை அமையும். வாழ்த்துக்கள். 

(17.09.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.