adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
பிரதமருக்கு நீச்சபங்க ராஜயோகம் இருக்கிறதா..? D-064

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888

சென்ற அத்தியாயத்தில் பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களின் இருவேறு பிறந்த நாள் விபரங்களைக் கொண்ட ஜாதகங்களைப் பார்த்தோம். இதில் எது உண்மையான ஜாதகமாக இருக்கக் கூடும் அல்லது இரண்டுமே தவறானதாக இருக்குமா என்பதை ஜோதிட விதிகளை வைத்து தற்போது ஆராயலாம்.

பொதுவாக எவ்விதப் பின்னணியும் இல்லாத, நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய உழைப்பினாலும், பரம்பொருளின் ஆசியினாலும் முன்னேறி உயர்நிலைக்கு வந்திருக்கும் அனைத்து பிரபலங்களின் ஜாதகங்களும் நம்பகத்தன்மை இல்லாதவைதான். சில நிலைகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கே அவர்களது பிறந்த நாள் விபரங்கள் துல்லியமாகத் தெரியாது.


இதுபோன்ற தலைவர்கள் நல்ல நிலைக்கு வந்த பிறகே அவர்களது ஜாதகங்கள் ஆர்வமுள்ளோரால் தேடப்படுகின்றன. குறிப்பாக அவரது ரத்த சம்பந்த உறவினர்களிடம் பிறந்த விபரங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளப்படுகிறது. இவை குத்துமதிப்பானவைதான். முழுமையானவை அல்ல.

நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் எதிர்காலத்தில் உலகம் வியக்கும் நிலையை அடைவார் என்பது அவரது குடும்பத்தாரே எதிர்பார்க்காத ஒன்று. மேலும் அறுபது ஆண்டுகளுக்கு முன் இப்போது போல ஒரு குடும்பத்திற்கு இரண்டு வாரிசு என்ற நிலைமையும் இல்லை. ஒரு பெற்றோர் குறைந்தபட்சம் ஐந்து அல்லது ஆறு குழந்தைகளைப் பெற்ற நிலையில், எந்தக் குழந்தை எந்த வருடம், எந்த நேரத்தில் பிறந்தது என்பதை தாயோ, தந்தையோ நினைவு வைத்துக் கொள்வதும் இயலாதது.

பிறந்த உடனேயே ஜாதகம் எழுதுவது அல்லது குறித்து வைத்துக் கொள்வது  ஜோதிடத்தின் மேல் ஆர்வம் கொண்ட மிகச் சில குடும்பங்களில் மட்டுமே நடந்தது. பெரும்பாலானவர்கள் குழந்தையின் பிறப்பு விபரம் குறித்து அக்கறையற்றுத்தான் இருந்தார்கள். அதிலும் கிராமங்களில் பிறந்தவர்களாய் இருந்தால் சொல்லவே வேண்டாம். பிரதமரின் நிலையும் இதுதான். தனது பிறந்த நாள் இதுதானா என்பது அவருக்கே நிச்சயமாகத் தெரியுமா என்பது சந்தேகம்தான்.

மோடி அவர்களின் பிறந்த நாளாக செப்டம்பர் 17, 1950 சொல்லப்படுகிறது. அதிலும் காலை 9 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை பல வித்தியாசமான பிறந்த நேரங்கள் சொல்லப்படுகின்றன. இதில் பெரும்பாலான ஜோதிடர்கள் அவரது பிறந்த நேரம் காலை பதினோரு மணி எனக் குறிப்பிட்டு விருச்சிக லக்னம், விருச்சிக ராசியில் அவர் பிறந்திருக்கிறார் என்று பலன்கள் சொல்லி வருகிறார்கள்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவெனில், பிரதமர் பிறந்த குஜராத், வதாநகரின் சூரிய உதயப்படி, அன்றைக்கு காலை 10-58 வரை துலாம் லக்னம் நடப்பில் இருக்கிறது. அதன் பிறகு விருச்சிக லக்னம் அமைகிறது. ஆக இணையத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெரும்பாலான ஜாதகங்கள் லக்ன சந்தியான ஒரு தோராயமான நேரத்தை குறிப்பிடுபவை.

ஒரு சிலர் காலை 9 மணி, 10 மணி என துலாம் லக்னம் குறிப்பிடும் ஜாதக பலன்களைச் சொல்லியிருக்கிறார்கள். இதில் கையில் கிடைத்த ஜாதகத்தை வைத்து பலன் சொல்லும் அவசரம்தான் இருக்கிறது. இந்த ஜாதகத்தைக் கொண்டவர் நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்களின் தலைவிதியை நிர்ணயிப்பவராக இருக்க முடியுமா என்கின்ற ஆய்வு எங்கும் தென்படவில்லை.

அதிகாரம், சொகுசு போன்றவைகளை அனுபவிக்கப் பிறந்தவரின் ஜாதகத்தில் லக்னம் அல்லது ராசியை வலுப்பெற்ற குரு பார்க்க வேண்டும் என்பது வேத ஜோதிடத்தின் மிக முக்கியமான விதி. அல்லது லக்னம், ராசி போன்றவைகள் அதிகபட்ச சுபத்துவமாக இருக்க வேண்டும்.

ஒருவர் மிகவும் பிரபலமாக, அனைவரும் அறியும் நிலையில் இருக்க வேண்டும் எனில், லக்னம், ராசி, லக்னாதிபதி இவற்றில் ஏதாவது ஒன்றை அதிக பலம் பொருந்திய குரு பார்ப்பார். அல்லது மூன்றோடும் தொடர்பு கொள்வார். சாதாரண நிலையில் பிறந்து வாழ்வில் உச்ச நிலைக்கு சென்றவர்கள் அனைவரின் ஜாதகத்திலும் இந்த அமைப்பினை நிச்சயமாகப் பார்க்கலாம்.

இங்கே பிரதமரின் ஜாதகத்தில் லக்னம், ராசி, லக்னாதிபதி எனும் ஜாதக மூல அமைப்புகளுக்கு சுபத்துவத் தொடர்புகள் இல்லை. முக்கியமாக எதையும் வலுப்படுத்தக் கூடிய குருவே இங்கே வலிமையாக இல்லை. அவர் ஆன்மீக எண்ணங்களை மட்டுமே கொடுக்கக் கூடிய கும்ப வீட்டில், தனக்கு எதிர்த் தன்மையுள்ள சுக்கிரன், மற்றும் பாபரான சனி இருவரின் பார்வையில் பலம் குறைந்த நிலையில் இருக்கிறார்.

பிரதமரின் முதல் ஜாதகத்தில் விருச்சிக லக்னம், விருச்சிக ராசியாகி  லக்னத்திலேயே நீச்ச சந்திரன், ஆட்சி பெற்ற செவ்வாயுடன் நீச்ச பங்கமாக அமர்ந்திருக்கிறார். பெரும்பாலான ஜோதிட ஆர்வலர்களாலும், ஜோதிடர்களாலும் இது மிகப்பெரிய நீச்ச பங்க ராஜயோக அமைப்பாக சொல்லப்படுகிறது. இந்த நீச்சபங்க ராஜயோகத்தை கொடுத்த சந்திரனின் தசை தற்போது பிரதமருக்கு உயரிய பதவியை தந்திருக்கிறது என்றும் கணிக்கப்படுகிறது.

மிக நுணுக்கமாக சொல்லப் போனால் நீச்சபங்கம் என்பது வேறு, நீச்சபங்க ராஜயோகம் என்பது வேறு என்பதை நான் எனது எழுத்துக்களிலும், வீடியோக்களிலும் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன். ஒரு கிரகம் நீச்சபங்க ராஜயோகத்தை தர வேண்டுமெனில், அதற்கு ஒளி பொருந்திய ஒரு உச்ச கிரகத்தின் தொடர்பு வேண்டும் அல்லது பௌர்ணமி மற்றும் பௌர்ணமிக்கு அருகிலுள்ள சந்திரனின் பார்வை, இணைவு போன்றவைகள் இருக்க வேண்டும்.

ராகு     
குரு  நரேந்திரமோடி-117-9-1950 பகல் 11.00 குஜராத்  
 சுக்,சனி
 ல செவ்,சந்  சூரி,புத  கேது

நீச்சம் என்பது ஒளியிழந்த நிலை என்பதால், வலுவிழந்த ஒரு கிரகம், இன்னொரு ஒளி பொருந்திய கிரகத்திடமிருந்து ஒளியைக் கடன் வாங்கிக் கொள்கிறது என்பதே நீச்சபங்க தத்துவம். அதிலும் அதிக உயர்நிலையில் உள்ள பங்கமற்ற உச்ச கிரகத்தின் தொடர்பு, பார்வை அல்லது அதிக சுபத்துவமுள்ள குருவின் தொடர்பு போன்றவைகளைப் பெறும் போது மட்டுமே அந்தக் கிரகம், மிக உயரிய நீச்சபங்க ராஜயோகத்தை தரும்.

இன்னொரு நிலையாக லக்னாதிபதி கிரகம் நீச்சனாகி, பின் முறையான நீச்ச பங்கத்தை அடைவதே நீச்சபங்க ராஜயோக அமைப்பு. பாக்யாதிபதி போன்ற ஜாதகத்தின் மற்ற கிரகங்கள் அல்ல. லக்னாதிபதி கிரகம் நீச்சமாகி இந்த அமைப்பு இருந்தால் மட்டுமே நீங்கள் வாழ்வின் பிற்பகுதியில், புகழுடன் உயரிய அந்தஸ்தில் இருப்பீர்கள். அதன் தசையில் உச்ச நற்பலன்களை அடைவீர்கள்.

ஆறுக்குடையவன் நீச்சமாகி பங்கமடைந்து, ராஜயோகத்தை தரும் நிலை அமைந்து அதன் தசை நடந்தால் நீங்கள் உயர்நிலைக்கு வர முடியுமா?

ஒரு கிரகம் நீச்சமடைந்து பின் வலுப் பெற்றால் அதன் ஆதிபத்தியமும், காரகத்துவங்களும்தான் வலுப்பெறும். லக்னமோ, லக்னாதிபதியோ அல்ல.

பிரதமரின் ஜாதகத்தில் முறையான நீச்சபங்க ராஜயோக அமைப்பு இல்லை. வளர்பிறைச் சந்திரனாக இருந்தாலும் அவர் அமாவாசையிலிருந்து ஏறத்தாழ முப்பது சதவிகிதம் தாண்டிய ஒரு நிலையில்தான் இருக்கிறார். அங்கே சந்திரன் ஆட்சி பெற்ற செவ்வாயால் நீச்சபங்கம் மட்டுமே அடைகிறார். இங்கே சந்திரன் ராஜயோகத்தை தருகின்ற நிலையில் இல்லை. பிரதமரின் முதல் ஜாதகத்தில் இருப்பது வெறும் நீச்சபங்கம் மட்டும்தான். அதோடு சந்திரன் பிரதமரின் லக்னாதிபதி அல்ல. பாக்யாதிபதி மட்டும்தான்.

இன்னும் நுணுக்கமாக உள்ளே சென்று உணர்ந்தோமேயானால், நீச்சனோடு இணைந்ததால் லக்னாதிபதி செவ்வாய் தனது வலிமையை இங்கே இழக்கவே செய்கிறார். உண்மையில் செவ்வாயை சுபச் சந்திரன் பார்ப்பதே சிறப்பு. நீச்ச சந்திரன் இணைவது நன்மைகளைத் தராது. ஆகவே நீச்சனுடன் இணைந்ததால் லக்னாதிபதி இங்கே பலமிழக்கிறார்.

ஒரு அனுபவ விதியாக, நீச்ச சந்திர தசையும், ஏழரைச் சனியும் சந்திக்கும்போது ஒருவருக்கு நல்ல பலன்கள் நடைபெறுவதில்லை. இதை நான் நூற்றுக்கணக்கான ஜாதகங்களின் மூலம் உறுதி செய்திருக்கிறேன்.

ஒரு ஜாதகத்தில் லக்னத்தை அடுத்த, அதற்கு மாற்றாக சொல்லப்படும் இணை அமைப்பான, ராசி எனப்படும் சந்திரன் ஒரு மனிதனின் எண்ணம், செயலைக் குறிக்கக் கூடியது. பிறப்பு ஜாதகப்படி சந்திரன் நீச்சமாகும் போது அந்த மனிதனின் மனம் பலவீனமாக இருக்கும். எண்ணங்கள் நிலையாக இருக்காது.

கோட்சாரத்தில் ஏழரைச் சனி நடக்கும்போது, ஒருவரின் ராசியாகிய சந்திரனை இருள் கிரகமான சனி நெருங்கி இருக்கும். இந்த இரு நிலைகளும் ஒருவருக்கு ஒருசேர வரும்போது அவரது மனமும், மனதில் பிறக்கும் எண்ணங்களும் பாதிக்கப்பட்டு, எதிர்மறை எண்ணங்கள் அவருக்கு அதிகமாகி நன்மைகள் நடக்காது.  

சந்திரன் நீச்சமாகும் இந்த நிலையால்தான் பனிரெண்டு ராசிகளிலும் மற்றவர்களை விட எப்போதுமே விருச்சிகம் ஏழரைச்சனி காலங்களில் மிகுந்த வேதனைகளை அனுபவிக்கிறது. உங்களுக்கு தெரிந்த வயதான விருச்சிகத்தினரை முப்பது ஆண்டுகளுக்கு முன் 1987, 1988 ம் வருடங்களில் எப்படியிருந்தீர்கள் என்று கேட்டுப் பாருங்கள். உண்மை புரியும்.

தற்போதைய ஏழரைச் சனியால் மிகவும் கஷ்டப்பட்ட அனுஷம், கேட்டை நட்சத்திரக்காரர்களில் பலர் சந்திர தசையும், ஏழரைச்சனியும் சந்தித்த நிலையில்தான் கடுமையான கெடுபலன்களை அனுபவித்தார்கள். ஆகவே நீச்சபங்க ராஜயோக அமைப்பினால் மோடி அவர்கள் பிரதமர் போன்ற உச்ச பதவியை அடைந்தார் என்பது தவறான ஒன்று. ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஒருவருக்கு மிகப் பெரிய உயர்நிலையை அடைவதற்கு தடைகள் இருக்கும்.

நீச்சபங்க ராஜயோக அமைப்பில் உள்ள இன்னொரு கோணம் என்னவெனில், ஒரு கிரகம் பலவீனமானாலே அதனுடைய காரகத்துவத்தில் முதலில் மோசமான நிலையைக் கொடுத்த பிறகுதான் பின்னர் உயர்வான நிலையைக் கொடுக்கும். அதாவது முதலில் நீச்சமாக்கித்தான் பிறகு பங்கமாக்கி காரக உயர்நிலையைத் தரும்.

அதன்படி பிரதமர் தனது ஆரம்பக் கட்டங்களில் முடிவெடுப்பதில் மனத் தடுமாற்றம் உள்ளவராகவும், அலைபாயும் தன்மை கொண்டவராகவும் இருந்திருக்க வேண்டும். ஆனால் மோடி அவர்களின் கடந்த கால வாழ்க்கையை ஒப்பு நோக்கும்போது அவர் சிறு வயதிலேயே தனது எதிர்கால வாழ்க்கை இப்படிப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்து அதன்படியே நடந்தும் வந்திருக்கிறார்.

சரியோ, தவறோ அவர் ஒரு முடிவெடுத்து விட்டால் அதிலிருந்து பின்வாங்கியது இல்லை. குறிப்பாக அவரிடம் “வழவழா கொழகொழா” தன்மை இல்லை. குஜராத் முதல்வராக அவர் இருந்த போதும் அவர் இப்படித்தான் இருந்திருக்கிறார். எனவே இங்கே மனத்தைக் குறிக்கும் சந்திரனின் நீச்சம், நீச்சபங்கம் போன்ற விஷயங்கள் முதல் ஜாதகப்படி ஒத்து வரவில்லை.

மிக முக்கியமான ஒரு நிலையாக ஜோதிட விதிகளின்படி ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து, அடுத்த ராசிக்கு மாறுகின்ற நிலையில், ராசி சந்தியில் இருக்கும் போது தன்னுடைய இயல்பான பலனை தர முடியாது. அதிலும் ஒரு டிகிரி கூட முழுமையாக அடுத்த ராசிக்குள் நுழையாத நிலையில் அது தன்னுடைய காரகத்துவத்தை முழுமையாக கொடுப்பதற்கு வாய்ப்பில்லை. இந்த நிலை ஒருவரை அரசனாக்கும் ஆளுமைக் கிரகமான சூரியனுக்கு, மோடி அவர்கள் பிறந்ததாகச் சொல்லப்படும் நேரத்தில் அமைந்திருக்கிறது.

மிக உயரிய தலைமைப் பொறுப்பை பெற்றுத் தருபவரான சூரியன், மோடி அவர்களின் முதல் ஜாதகத்தில் அப்போதுதான் கன்னி ராசிக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார். ஒரு டிகிரி கூட முழுமை பெறாமல் ராசி சந்தியில் ம்ருத்யு அவஸ்தை என்று சொல்லப்படும் முழுமையற்ற ஒரு நிலையில் குருவிற்கு எட்டில் இருக்கிறார்.

நூறு கோடி மக்களின் தலைவர் என்று சொல்லப்படும் ஒருவரின் ஜாதகத்தில் தலைமைக் கிரகமான சூரியன் மிகவும் சுபத்துவமாக சந்தேகத்திற்கிடமின்றி இருக்க வேண்டும். ஆனால் இங்கே முதல் ஜாதகத்தில் சூரியன் ராசி சந்தியில் இருப்பதோடு, கேதுவுடனும் 5 டிகிரிக்குள் இணைந்திருக்கிறார்.

மற்ற நிலைகளை அடுத்த அத்தியாயத்தில் தொடருவோம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.