2019 Aavani Matha Palankal – 2019 ஆவணி மாத பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

மேஷம்:

மேஷநாதன் செவ்வாய் மாதம் முழுவதும் அதிநட்பு வீட்டில் இருக்கும் நிலையில், அவருக்கு வீடு கொடுத்த சூரியன் அங்கேயே ஆட்சி பெறுவது நல்லவைகளை நடத்தித் தரும் என்பதால் ஆவணி மாதம் மேஷத்திற்கு சந்தோஷம் தரும் நிகழ்வுகள் மட்டுமே நடக்கும். அடுத்த மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியும் உங்களுக்கு சிறப்பான நன்மைகளைத் தரும் என்பதால் இனிமேல் மேஷத்திற்கு ஏறுமுகம்தான். சூரியன் வலுப்பெறுவதால் இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகளில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். சூரிய வலுவால் எதையும் சமாளிப்பீர்கள். மனதில் தைரியம் வரும்.


இன்னும் சில வாரங்களில் எட்டில் இருக்கும் குரு ஒன்பதுக்கு மாறி ராசியைப் பார்க்கப் போவதால் மேஷத்தினருக்கு தொழில் ரீதியிலான நன்மைகளும், பண விஷயத்தில் ஆதரவான விஷயங்களும் நடக்கும்.  இளையோர்களுக்கு சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். மாத பிற்பகுதியில் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. பெண்களால் செலவுகள் இருக்கும். குறிப்பாக மகள் சகோதரி போன்றவர்களின் சுப காரியங்களுக்கு செலவுகள் செய்ய வேண்டி இருக்கலாம். ராசிநாதன் வலுவாக இருப்பதால் கேட்கும் இடங்களில் உதவிகள் கிடைக்கும். எந்த ஒரு சிக்கலையும் சமாளிப்பீர்கள். அனைத்திலும் வெற்றி கிடைக்கும் மாதம் இது.

ரிஷபம்:

மாத ஆரம்பத்தில் ராசிநாதன் சுக்கிரன் பகை வீட்டில் பலவீனமாக இருந்தாலும் நண்பரான புதனின் வலுவால் எதையும் நீங்கள் சமாளிக்கும் மாதம் இது. திருக்கணிதப்படி வரும் ஜனவரி மாதம் நடக்க இருக்கும் சனிப் பெயர்ச்சி வரை ரிஷபத்திற்கு சுமாரான காலகட்டம்தான். பிறந்த ஜாதகப்படி நல்ல தசாபுக்தி அமைப்பைக் கொண்டவர்களுக்கு மட்டும் எந்தப் பிரச்னையும் இருக்காது. மற்றவர்களுக்கு வாழ்க்கையின் மேடுபள்ளங்கள் இப்போது புரிய வைக்கப்படும். பிடிக்காத வேலையில் இஷ்டம் இல்லாமல் இருந்து வந்த இளைஞர்களுக்கு இன்னும் நான்கு வாரங்களில் நல்ல மாற்றங்கள் உண்டு.

இனிமேல் ரிஷப ராசிக்கு கஷ்டங்கள் எதுவும் இல்லை. கௌரவக் குறைச்சல் ஏற்படாது. அடுத்த மாதம் முதல் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும். நீண்டநாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் உங்கள் மனம் போல் நடக்கும். கோர்ட்கேஸ், போலிஸ் என்று அலைந்தவர்களுக்கு வழக்கு சாதகமாக முடிவுக்கு வரும். அல்லது இனிமேல் போலிஸ், கோர்ட் என்று போகாமல் சமரசம் ஆவீர்கள். பிரச்னைகளை சுலபமாக எதிர்கொள்வீர்கள். குறிப்பாக பணப்பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் இளைய பருவத்தினர் அவை நீங்கப் பெற்று நிம்மதி அடைவீர்கள்.

மிதுனம்:

ராசிநாதன் புதன் பெரும்பாலான நாட்கள் ஆறுக்குடைய செவ்வாயுடன் இருப்பதால் மிதுன ராசிக்காரர்களுக்கு இது சுமாரான மாதம்தான். எதையாவது ஒன்றைப்பற்றி மனம் சிந்தித்துக் கொண்டு டென்ஷனாக இருப்பீர்கள். ஜென்ம ராசியில் இருக்கும் ராகுவால் பெரும்பாலான மிதுனத்தினரின் மனம் குழப்பத்தில் இருக்கிறது. வரும் குருப்பெயர்ச்சி முதல் எல்லாம் சரியாகும். கவலை வேண்டாம். மாத பிற்பகுதியில் புதன் உச்ச வலுப் பெறுவதால் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். புதன் அதிநட்பு நிலையில் மூன்றாமிடத்தில் இருப்பதும், உச்சத்தை நோக்கி போய்க்கொண்டிருப்பதும் யோக அமைப்பு என்பதால் அனைத்தும் சீராகும்.

முப்பது வயதுகளில் இருக்கும் இளைஞர்கள் சில வாரங்களுக்கு பெரிய முதலீட்டில் தொழில் ஆரம்பிக்காமல் இருப்பது நல்லது. அகலக்கால் வைக்க வேண்டாம். பணம் போடாமல் அறிவை மூலதனமாக கொண்ட தொழில்கள் செய்யலாம். பிறந்த நாட்டை விட்டு வெளியே இருப்பவர்களுக்கு  நன்மைகள் நடைபெறும். உங்களில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு துறைரீதியான நெருக்கடிகள் இருக்கும். நீங்கள் செய்வது தவறாகவே இருந்தாலும் இப்போது ஒத்துக்கொள்ள மாட்டீர்கள். உங்களின் பிடிவாத குணம் அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் உங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பார்கள்.

கடகம்:

பனிரெண்டாமிடம் வலுப்பெறுவதால் ஆவணி மாதத்தில் உங்களுக்கு வீண் விரயங்கள் இருக்கும். பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்குமுன் யோசித்து செலவு செய்யுங்கள். கோர்ட்,கேஸ், நிலம் சம்பந்தமான வழக்குகள். கிரிமினல் வழக்குகள் உள்ளவர்கள் வழக்கை முடிப்பதற்கு அவசரப்பட வேண்டாம். இரண்டாமிடத்தில் சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன் இணைவது உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தக் கூடிய ஒன்று என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. இளைய பருவத்தினர் பணம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளக்கூடிய நிகழ்வுகள் நடக்கும். யாரிடமும் ஏமாற வேண்டாம்.

திருமணமாகாதவருக்கு திருமண வாய்ப்புகள் உருவாகும். இளைஞர்களுக்கு  வேலைமாற்றங்கள், மாணவர்களுக்கு படிப்பில் கவனக்குறைவு, மனத்தடுமாற்றம், எதிலும் விட்டேத்தியான மனப்பான்மை போன்றவைகள் இருக்கும். பண வரவிற்குத் தடையேதும் இல்லை. தொழில் செய்பவர்கள், வியாபாரிகளுக்கு வருமானம் இருக்கும். முதல்வாழ்க்கை கோணலாகி கஷ்டத்திற்கு ஆளானவர்கள் நல்ல இரண்டாவது வாழ்க்கையை அடைவார்கள். பெண்களால் செலவுகள் இருக்கும். குறிப்பாக மகள், சகோதரி போன்றவர்களின் சுப காரியங்களுக்கு செலவுகள் செய்ய வேண்டி இருக்கலாம். உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்:

ஆவணி மாதம் முழுவதும் ராசிநாதன் சூரியன் ராசியிலேயே ஆட்சி பெறுகிறார். அவருடன் புதனும் பெரும்பாலான நாட்கள் இருப்பது நல்ல அமைப்பு. சிம்ம ராசிக்கு எப்போதும் ஆவணி மாதம் சிறப்புத்தான். எதையும் ஜெயித்துக் காட்டுவீர்கள். மனோதைரியம் கூடுதலாகும். எத்தகைய பிரச்னைகளையும் சுலபமாக சமாளிப்பீர்கள். சஸ்பெண்டு ஆனவர்கள் மறுபடியும் வேலையில் சேருவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பாக்கெட்டில் பணம் வைக்க முடியும். அது காலியாகாமல் பாக்கெட்டிலேயே இருக்கும். பொருளாதாரம் மேன்மை பெறும்.

சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். ஏற்றுமதி, இறக்குமதி செய்வோர் நன்மை பெறுவார்கள். வாழ்க்கைத் துணையிடம் சச்சரவுகள் இருந்தவருக்கு நல்ல வழி பிறக்கும். குறிப்பிட்ட சிலர் விடாமுயற்சியுடன் எதையும் சாதிப்பீர்கள். எதிலும் லாபம் வரும். அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். பிறந்த ஜாதக வலுவுள்ள சிலருக்கு தொழில் ரீதியான  நன்மைகளும், பணவரவும் கிடைக்கும். சிறுசிறு பிரச்னைகள் வந்தாலும் அனைத்துக் கஷ்டங்களும் ஆட்சி பெற்ற சூரியனைக் கண்டதும் பனிபோல விலகி ஓடி விடும் என்பது உறுதி.

கன்னி:

“எடுத்த காரியம் யாவிலும் வெற்றி” என்ற பாரதியின் வார்த்தைகள் இப்பொழுது உங்களுக்குப் பொருந்தும் என்பதால் சோம்பலை விலக்கி முயற்சிகளைச் செய்யும் கன்னி ராசிக்காரர்களுக்கு இப்போது வெற்றி நிச்சயம். ஆவணிமாதம் உங்களுக்கு ஆனந்த மாதமே. சுக்கிரன் பகை வீட்டில் இருப்பதால் சிலருக்கு மட்டும் பெண்களால் வீண் விரையங்கள் உண்டு. மற்றவர்களுக்கு வாழ்க்கைத்துணை மற்றும் பங்குதாரர்கள் நண்பர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும் தேடிவந்து ஒட்டிக்கொள்ளும் நேரமிது. அதிக முயற்சி இல்லாமலே அதிர்ஷ்டத்தால் எல்லா வேலைகளையும் சுலபமாக முடிப்பீர்கள்.

திரவப்பொருட்கள், வெள்ளைநிறம் சம்பந்தப்பட்ட தொழில், ஆற்றுமணல், கட்டுமானப்பொருள் தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. சுயதொழில், வியாபாரம் போன்றவைகளில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை விலகி அனைத்தும் இனிமேல் சுறுசுறுப்பாக நடக்கும். விவசாயிகளுக்கு இந்த மாதம் மிகுந்த நன்மையை அளிக்கும். குறிப்பாக பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு மேன்மை உண்டு. கடந்த சில வருடங்களாக சிக்கலில் இருந்து வந்த கன்னியினருக்கு நல்ல பாதையைக் காட்டும் மாதமாக ஆவணி இருக்கும். கன்னிக்கு இனிமேல் குறைகள் இல்லை. படிப்படியான முன்னேற்றம் உண்டு.

துலாம்:

ஆவணி மாத ஆரம்பத்தில் ராசிநாதன் சுக்கிரன் பகை வீட்டில் இருந்தாலும் அவருடைய நண்பரான புதனுடன் இருப்பது நன்மை தரும் அமைப்பு. யோகக் கிரகங்கள் நல்லநிலையில் உள்ளதால் இந்த மாதம் உங்களுக்கு யோகபலன்கள் நடக்கும். பனிரெண்டுக்கதிபதி புதன் வலுவாகி, சுக்கிரன் பலமிழப்பதால் உங்களில் சிலருக்கு செலவுகளும், பயணங்களும் இருக்கும். பெண்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடுகளும், சச்சரவுகளும் வீண் விரயங்களும் வரும். அவரவரின் ஜாதகப்படி மனைவி, தாய், சகோதரி, மகள், காதலி, தோழி  போன்ற பெண் உறவுகளில் சில மனக்கஷ்டங்கள் இந்த மாதம் இருக்கும்.

பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் பலமிழந்த நிலையில் இருப்பதால் இந்தமாதம் துலாம் ராசிக்கு அலைச்சல்களும், ஏமாற்றங்களும் இருக்கும். அதேநேரத்தில் தொழில்ரீதியான  நன்மைகளும், பணவரவும் கிடைக்கும். குடும்பப் பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேருவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். இதுவரை இருந்து வந்த கடன் தொல்லை இனிமேல் இருக்காது.  வருமானம் மீதமாகி ஏதேனும் ஒரு தொகையை அது சிறியதாக இருந்தாலும் சேமிக்க முடியும்.

விருச்சிகம்:

ராசிநாதன் செவ்வாய் வலுவாக இருப்பதால் விருச்சிக ராசியினரின் குடும்பத்தில் இப்போது மங்கள காரியங்கள் நடக்கும். வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்ப சுபச் செலவுகளும் இருக்கும். கடனைத் தீர்ப்பீர்கள். சொத்து வாங்குவீர்கள். மனைவிக்கு நகை, பெண் குழந்தைகளின் திருமணத்திற்கென்று நகைசேமிப்பு போன்றவைகளை செய்ய முடியும். விருச்சிக ராசிப் பெண்களுக்கு நன்மைகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும். கணவர் மூலமாக நன்மையை பெறுவீர்கள். அந்தஸ்து கௌரவம் உயரும். மகன் மகள் விஷயத்தில் இருந்து வந்த மனக்கவலைகள் தீரும்.

இளைய வயதினருக்கு நல்ல வேலை கிடைக்கும். தாமதமாகிக் கொண்டே வந்த மகன், மகள் திருமணத்தை  நல்லபடியாக நடத்த முடியும். கடந்த சில வருடங்களாக சிக்கலில் இருந்து வந்த விருச்சிகத்தினருக்கு நல்ல பாதையைக் காட்டும் ஆரம்ப மாதமாக ஆவணி மாதம் இருக்கும். இனிமேல் உங்களுக்கு குறைகள் எதுவும் இல்லை. படிப்படியான முன்னேற்றம் உண்டு. இன்னும் சில வாரங்களில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியும், அதனையடுத்து ஜனவரி மாதம் நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சியும் உங்களை புது மனிதனாக்கி பழைய நல்ல வாழ்க்கைக்கு திரும்ப வைக்கும். இனி எல்லாம் வெற்றிதான்.

தனுசு:

தனுசு ராசி இளையபருவத்தினர் தங்களது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய மாதம் இது. இன்னும் சில வாரங்களில் உங்களுக்கு ஜென்மச் சனி விலகப் போவதால் இனி குறை ஒன்றும் இல்லை. இதுவரை எந்த விஷயங்களில் தாங்க முடியாத அவஸ்தைகளும், சிக்கல்களும் இருந்து வந்ததோ அவைகள் தீரத் தொடங்கி நல்லபடியாக மீண்டு வருவீர்கள். கடன் தொல்லைகள் இருந்தவருக்கு கடனை அடைக்க வழி பிறக்கும். ஆரோக்கியக் குறைவு இருந்தவர்கள் குணம் அடைவீர்கள். திறமை இருந்தும் வாய்ப்புக்கள் கிடைக்காமல் அல்லாடியவர்கள் தகுதிக்கேற்ற வாய்ப்பும் வேலையும் இனிமேல் கிடைக்கப் பெறுவீர்கள்.

வேலை செய்யும் இடத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் நல்ல விதமாக மாறத் துவங்கும். சமாளிக்க முடியாமல் இருந்தவைகளை இனிமேல் உங்களால் சுலபமாக சமாளிக்க முடியும். வீண் விரையங்கள் இனி இருக்காது. பாக்கெட்டில் பணம் தங்கும். எதிர்பாராத வகையில் வருமானங்கள் இருக்கும். ஒரு குறிப்பிட்ட பலனாக மாத பிற்பகுதியில் மனதிற்குப் பிடிக்காத ஒரு செயலை நீங்கள் செய்ய வேண்டியிருக்கும். உங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காத, ஆகவே ஆகாத ஒருவருடன் வேலை செய்யவோ பயணம் செய்யவோ, கூடவே இருந்தே தீர வேண்டிய நிலையோ இப்போது இருக்கும்.

மகரம்:

ஆவணி மாதம் உங்களுக்கு விரயங்கள் இருக்கும் என்பதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்குமுன் யோசித்து செலவு செய்யுங்கள். கோர்ட்,கேஸ், நிலம் சம்பந்தமான வழக்குகள். கிரிமினல் வழக்குகள் உள்ளவர்கள் வழக்கை முடிப்பதற்கு அவசரப்பட வேண்டாம். சுக்கிரன் எட்டில் இருக்கிறார். கூடவே செவ்வாயும் இருக்கிறார். ஒரு சுபக் கிரகம் எட்டாமிடத்தில் இருந்தால்  அந்த பாவகத்தின் பலன்கள் நடக்கும் என்பதால் உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தக் கூடிய சில விஷயங்கள் இப்போது நடக்கும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. நல்லதும், கெட்டதும் கலந்த மாதம் இது.

எட்டாமிடம் புதையல் லாட்டரி போன்ற திடீர் பணலாபத்தைக் குறிக்கும் இடம் என்பதால் எட்டில் இருக்கும் சுக்கிரனால் சிலருக்கு நல்ல பணவரவு ஒன்று இந்த மாதம் உண்டு. கணவன் மனைவி உறவில் பிரச்னைகள் தீரும். பிரிந்திருந்தவர்கள் சேருவீர்கள். பூர்வீகச் சொத்துகளையோ வீடு நிலம் போன்றவைகளையோ விற்பதற்கான தேவை உள்ளவர்கள் விற்பனையை தள்ளி வைப்பது நல்லது. இளைய பருவத்தினருக்கு திருமண வாய்ப்புகள் உருவாகும். இளைஞர்களுக்கு  வேலைமாற்றங்கள், மாணவர்களுக்கு படிப்பில் கவனக்குறைவு, மனத்தடுமாற்றம், எதிலும் விட்டேத்தியான மனப்பான்மை போன்றவைகள் இருக்கும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இது சுமாரான மாதம்தான் என்றாலும் மாதத்தின் பிற்பகுதியில் வரபோகும் பணவரவால் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். புதன் அதிநட்பு நிலையில் ஏழாமிடத்தில் இருப்பதும், பிறகு உச்சநிலை பெறப் போவதும்  யோக அமைப்புகள் என்பதால் இந்தமாதம் கும்பத்திற்கு கவலை எதுவும் இல்லை. ஆறாமிடம் வலுப் பெறுவதால் உங்களில் சிலருக்கு மறைமுக எதிர்ப்புகள் மற்றும் நண்பர்களாக இருப்பவர்கள் விரோதிகளாக மாறுவது போன்ற பலன்கள் நடக்கும். எதிரி என்றும் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் அவருடனேயே இருக்க வேண்டிய சூழ்நிலை போன்றவை உருவாகும்.

பெண்களுக்கு இது நல்ல மாதமாக அமையும். தூரஇடங்களில் இருந்து நல்ல செய்திகள் வரும். ரியல் எஸ்டேட், சிகப்புநிற பொருட்கள் சம்மந்தப்பட்டவர்கள் போன்றோருக்கு ஒரு தொகை கிடைக்கும். ஏதாவது ஒரு ரூபத்தில் பணவரவு இருக்கும். எதையும் சமாளிக்க முடியும். சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்குவது அல்லது கட்டுவதற்கான ஆரம்ப நிகழ்ச்சிகள் உண்டு. வெளிநாடு மற்றும் வெளி மாநிலம் சம்மந்தப்பட்ட விஷயங்கள் யோகம் தரும். திருமணம் தடங்கலாகி வந்த சகோதர, சகோதரிகளின் திருமணம் கூடி வரும். வேலை, தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் சிக்கல்கள் எதுவும் இருக்காது.  

மீனம்:

யோகாதிபதி செவ்வாய் நட்பு நிலை பெற்று, சூரியன் ஆறாமிடத்தில் ஆட்சி பெற்றுள்ளதால் மீனத்தினருக்கு எதையும் சமாளிக்கும் தைரியம் இப்போது வரும். ஆவணி மாதம் முழுவதும் உங்களுக்கு சந்தோஷம் தருபவை நடக்கும். ராசியின் எதிரிகள் புதனும் சுக்கிரனும் வலுவிழப்பது சிறப்பான நிலை என்பதால் ஆவணி உங்களுக்கு ஆனந்த மாதம்தான். சூரியன் வலுப்பெறுவதால் வேலை செய்யும் இடத்தில் உங்களை சிக்கலுக்கு உள்ளாக்கி வந்த அனைத்து விஷயங்களும் முடிவுக்கு வந்து நிம்மதி கிடைக்கும். சூரிய வலுவால் எதையும் சமாளிப்பீர்கள். மனதில் தைரியம் வரும். முன்னேற்ற மாதம் இது.

பெண்களுக்கு குறைகள் ஏதும் இல்லை. பொருளாதாரம் நன்றாகவே இருக்கும். திடீர் பணவரவு உண்டு. சிலருக்கு வீடு வாங்குவதற்கான ஆரம்பங்கள் இருக்கும். பழைய வாகனத்தை மாற்றி நல்ல வாகனம் வாங்குவீர்கள். தடங்கலாகி வந்த சில விஷயங்கள் இப்போது நிறைவேறும். உங்களின் உள்ளத்தை புரிந்து கொள்ளாதவர்கள் இனிமேல் புரிந்து கொள்வார்கள். மீனராசிக்கு திருப்பு முனையான மாதமிது. முதல்வாழ்க்கை கோணலாகி கஷ்டத்திற்கு ஆளானவர்கள் இப்பொழுது நல்ல இரண்டாவது வாழ்க்கையை அடைவார்கள். எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.