adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 249 (13.08.19)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888

டி.தங்கத்திருமேனி,  

  விருதுநகர்.

கேள்வி:

குருநாதனின் திருப்பாதங்களுக்கு வணக்கம். தங்களது அரசுப்பணி, இரண்டாம் மனைவி, வெளிநாடு சம்பந்தப்பட்ட விதிகள் அனைத்தும் நான் பார்க்கும் அனைத்து ஜாதகங்களிலும் நூறு சதவிகிதம் பொருந்தி வருகிறது. ஒன்றில் கூட தவறவில்லை. எனக்கு அரசு வேலை கிடைக்குமா? வாழ்க்கையில் எப்போது யோகம் வரும்? காலம் முழுவதும் கஷ்ட தசை தானா? அடுத்து வரும் சுக்கிர தசையில் வீடு கட்டுவேனா? எனக்கு மோட்சம் கிடைக்குமா?

பதில்:

(மீன லக்கினம், துலாம் ராசி, 1ல் சுக், 2-ல் குரு, கேது, 5ல் சனி, 8ல் சந், ராகு, 11ல் சூரி, புத, செவ், 11-2-1977 காலை 8-37 விருதுநகர்)

ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் வருமானம் வரக்கூடிய அரசுப்பணி கிடைக்க வேண்டுமெனில் சிம்மமும், சிம்மாதிபதி சூரியனும் சுபத்துவமாகி, ராசி மற்றும் லக்னத்தின் பத்தாமிடங்கள் வலுத்து இருக்க வேண்டும் என்பது விதி. ஒருவர் வாழ்நாள் முழுவதும் பணத்திற்கு கஷ்டப்படாமல், பென்ஷன் போலவோ அல்லது ஏதேனும் ஒரு வகையில் வருமானத்தைப் பெற வேண்டுமெனில், தொழில் மற்றும் பதவி ஸ்தானம் எனப்படும் அவரது பத்தாம் பாவகம் மிகுந்த வலுப் பெற்று இருக்க வேண்டும்.

உங்கள் ஜாதகப்படி சிம்மாதிபதி சூரியன் பதினொன்றாம் வீட்டில் பகை பெற்று, சனியின் பார்வையில் பாபத்துவமாக இருக்கிறார். அவருக்கு எவ்வித சுபத்துவ தொடர்புகளும்  இல்லை. ராசியில் ராகு-கேதுக்களோடு சேர்ந்து, அம்சத்தில் சனியுடன் இணைந்து, பார்வைபலம் குறைந்த குரு சிம்மத்தை பார்க்கிறார். ஆறுவயது முதல் மீன லக்னத்திற்கு வரக்கூடாது என்று நான் சொல்லும் சனி, புதன், சுக்கிரன், சூரிய தசைகள் உங்களுக்கு வாழ்நாள் முழுதும் நடக்கின்றன. ஆகவே உங்களுக்கு நேரடியான அரசு வேலை அமைப்பு இல்லை.

ஒரு மீன லக்னக்காரருக்கு இதுபோன்ற அவ யோக தசைகள் வாழ்நாள் முழுவதும் வருவது நம்முடைய முந்திய ஜென்ம கர்மாவின் அடிப்படையில்தான். வாழ்நாள் முழுவதும் கஷ்ட தசைதானா என்பதை ஜோதிடரிடம் கேட்காமல், பரம்பொருளிடம் கேட்பது நல்லது. தற்போது நடந்து கொண்டிருக்கும் கேது தசை, குருவுடன் இணைந்த காரணத்தினால் சந்திர புக்தி ஆரம்பத்திலிருந்து கேளயோகத்தைச் செய்யும். இந்த கேது தசையில் உங்களுடைய பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.

லக்னாதிபதி குருவை, தேய்பிறைச் சந்திரனும், சனியும் பார்ப்பது குற்றம். அதோடு அவர் இருள் கிரகங்களான  ராகு-கேதுக்களுடன் இணைந்திருக்கிறார். லக்னாதிபதி பலமாக இருந்தால்தான் எந்த யோகமும் முழுமையாக பலன் தரும். ஆயினும் உங்கள் வாழ்நாளில் கேது தசை நன்மை தரும் தசையாக இருக்கும். அடுத்து வரும் சுக்கிர தசையில் சொந்த வீடு கட்டும் அளவிற்கு வருமானம் உண்டு. ஆதிபத்திய கெடுதல்களைச் செய்யும் சுக்கிரன், அவரது தசையில் காரகத்துவங்களையும் தருவார் எனும் அடிப்படையில் சுக்கிர தசையில் நீங்கள் உங்களுடைய உழைப்பில் வந்த பணத்தில் சொந்த வீடு கட்டுவீர்கள். இதுவே கடைசிப் பிறவி இல்லை என்பதால் மோட்சம் பற்றிய கேள்விக்கு பதில் கிடையாது. வாழ்த்துக்கள்.

ஏ. பாலகிருஷ்ணன், தாராபுரம்.

கேள்வி:

நன்கு படித்திருக்கும் மகன் கடந்த சில வருடங்களாக அளவுக்கதிகமாக குடிக்கிறான். எந்த வேலைக்குப் போனாலும் ஆறு மாதம்தான் இருக்கிறான். அவன் குடியை எப்போது நிறுத்துவான்? நிரந்தர வேலை எப்போது கிடைக்கும்? திருமணமாகி எட்டு மாதம் ஆகிறது. குழந்தை பாக்கியம் எப்போது?

பதில்:

(மேஷ லக்னம், தனுசு ராசி, 2ல் சூரி, புத, சுக், குரு, 3ல் செவ், 5ல் கேது, 9ல் சந், சனி, 11ல் ராகு, 23-5-1989 அதிகாலை 4-35 தாராபுரம்)

லக்னம் அல்லது ராசி பாபத்துவ சனியோடு சேர்ந்து அல்லது சனியின் ஆளுகைக்குள் இருக்கும் போது ஒருவருக்கு விடமுடியாத குடிப்பழக்கம் இருக்கும். பாபத்துவ தசாபுக்திகள் அல்லது கோட்சாரத்தில் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி போன்ற சரியில்லாத அமைப்புகள் வரும்போது ஒருவர் நிறுத்த முடியாத குடிப்பழக்கத்திற்கு ஆளாகி அசிங்கம், கேவலம் போன்றவைக்கு ஆளாவார். 

சனியை செவ்வாய் பார்த்தால் அல்லது இணைந்தால் சனி அதிகமான பாபத்துவம் அடைவார். மகன் ஜாதகத்தில் செவ்வாயும், சனியும் ஒருவரை ஒருவர் மூன்று டிகிரிக்குள் பார்த்துக் கொள்கிறார்கள். மனதிற்கு காரகனான ராசி எனப்படும் சந்திரனோடு சனி வக்ர நிலையில் இணைந்திருக்கிறார். இவர்களை செவ்வாயும் பார்க்கிறார். தற்போது மகனுக்கு சனிக்கு 6ல் அமர்ந்த சூரியனின் தசை நடந்து கொண்டிருக்கிறது. அடுத்து சனியோடு இணைந்த சந்திரனின் தசை நடக்கும். சனி, செவ்வாயோடு இணைந்ததால் இங்கே பௌர்ணமிக்கு அருகே இருந்தாலும் சந்திரன் குறையோடு இருக்கிறார். சந்திர ஒளி சனி, செவ்வாயால் குறைகிறது. எனவே இன்னும் சில வருடங்களுக்கு மகன் குடியை விடுவதற்கு வாய்ப்பில்லை.

தனுசுராசி இளைஞர்கள் யாரும் நன்றாக இல்லை. ஏதாவது ஒரு வகையில் எல்லோரும் ஜென்மச்சனியால் பாதிக்கப்பட்டே இருக்கிறார்கள். மகனும் அதுபோலத்தான். இந்த வருடம் முழுமைக்கும் அவர் சரியான வேலைக்கும் போக வாய்ப்பில்லை. 2020 ஜூன் மாதத்திற்கு பிறகு அவருக்கு குழந்தை பாக்கியம் உண்டு. ஏழரைச்சனி முடிந்தவுடன் அவரிடம்  மாற்றம் தெரியும். அதுவரை பொறுமையாக இருங்கள். வாழ்த்துக்கள்.

ஆர் விஜய், வேலூர்.

கேள்வி:

கடந்த 15 வருடங்களாக தாய்மாமனின் உரக்கடையில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறேன். எனக்கு சொந்த தொழில் எப்போது அமையும் அல்லது இருக்கும் தொழிலே சொந்தத் தொழிலாக மாறுமா? திருமணம் எப்போது நடக்கும்? சொந்தத்திலா அல்லது அந்நியத்திலா? எனக்கு ஏன் திருமணம் தாமதமாகிறது? என் வாழ்வில் மேன்மை உண்டாகுமா? பரிகாரம் ஏதாவது செய்ய வேண்டுமா?

பதில்:

(விருச்சிக லக்னம், சிம்மராசி, 1ல் குரு, கேது, 7ல் ராகு, 9ல் செவ், 10ல் சூரி, சந், சுக், 11ல் புத, 12ல் சனி, 6-9-1983 மதியம் 12-57 வேலூர்.)

ஜாதகத்தின் தலைவன் எனப்படும் லக்னாதிபதி வலுவிழந்தால் ஒருவருக்கு சகல பாக்கியங்களும் தடைபடும். உங்கள் விஷயத்தில் பாபக் கிரகமான செவ்வாய் லக்னாதிபதியாகி நேர் வலுவிழந்து, நீச்சமாகி, குருவின் பார்வையில் இருப்பது மிகவும் நல்ல அமைப்பு என்றாலும், செவ்வாயை, உச்ச சனி பார்த்ததால் பலவீனம் அடைகிறார்.

தற்போதைய தசாநாதன் சந்திரனும், அமாவாசைக்கு மிக அருகில் நெருங்கி ஒளியற்ற நிலையில் இருக்கிறார். அதேநேரத்தில் அங்கே அவர் சுக்கிரனுடன் இணைந்திருப்பதால் சந்திரனுக்கு ஓரளவு ஒளி இருக்கிறது. எனவே வரும் சந்திர தசை, சுக்கிர புக்தியில் அடுத்த வருடம் செப்டம்பர் மாதத்திற்கு மேல் உங்களுக்கு திருமணம் நடக்கும். செவ்வாய், சனி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதும், ராசி, லக்னத்திற்கு 7 ஆம் இடங்களில் பாபக் கிரகம் இருப்பதும், உங்களுடைய திருமண தாமதத்திற்கான காரணங்கள். செவ்வாய் பூமி காரகன் என்பதால் தற்போது இருக்கும் வேலையே திருமணத்திற்கு பிறகு உங்களுடைய சொந்த தொழிலாக மாறும். மணப்பெண் அந்நியம்தான். பரிகாரங்கள் தேவையில்லை. வாழ்த்துக்கள்.