2019 Aadi Matha Palankal – 2019 ஆடி மாத பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888

மேஷம்:

உங்களின் தனித்துவம் வெளிப்படும் மாதம் இது. இதுவரை அடுத்தவரின் ஆதிக்கத்திலும், குறிப்பாக சகோதரர், சகோதரிகளின் ஆதரவில் அவர்களின் அடைக்கலமாகவும், சகோதரர்களின் கையை எதிர்பார்த்தும் இருந்து வந்த மேஷத்தினருக்கு இனி அது தேவையில்லாமல் நீங்களே உங்களின் சொந்தக் காலில் நிற்பதற்கு ஏதுவாக வேலை முதலிய விஷயங்களில் சுயத்துவத்தை அடையும் மாதம் இது.  அரசு, தனியார்துறை ஊழியருக்கு மாறுதல்கள் இருக்கும்.  அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்கள் எதிலும் ரகசியம் காப்பது நல்லது.


ராசிநாதன் செவ்வாய் நீச்ச வலுவுடன் இருந்தாலும், யோகாதிபதி குருவின் பார்வையில் இருப்பதால் இது யோக மாதம்தான். தன நாதன் சுக்கிரன் ராகுடன் இணைவதால் பெண்களால் நன்மைகளும், வீட்டில் சுப நிகழ்ச்சிகளும் நடக்கும். சிறுசிறு பிரச்னைகள் வந்தாலும் அனைத்தும் ராசிநாதன் வலுவால் சூரியனைக் கண்ட பனிபோல விலகி ஓடி விடும். வாழ்க்கைத்துணை விஷயத்தில் சில நெருடல்கள் இருக்கலாம். குடும்பத்தில் பிரச்னை வரும் பொழுது இருவரில் ஒருவர் பொறுத்து போவதன் மூலம் பெரிய அளவில் சண்டை வராமல் தடுக்கலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்:

ஆடி மாதம் ரிஷபராசிக்கு குறைகள் எதுவும் இல்லாத மாதமாக இருக்கும். ராசிநாதன் சுக்கிரன் ராகுவுடன் இணைவதால் மாத ஆரம்பத்தில் நீங்கள் செய்யும் முயற்சிகள் ஏமாற்றத்தைத் தந்தாலும் பிற்பகுதியில் வெற்றி பெறும். எட்டில் இருக்கும் சனி லாப நிலைகளையும், வர வேண்டிய வருமானங்களையும் கட்டுப்படுத்துவார் அல்லது தடுப்பார் என்பதால் அனாவசிய செலவுகள் செய்யும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது. இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும்.

இந்த மாதம் எதிர்பாராத வகையில் வருமானங்கள் இருக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் இருக்கும். வெளிநாட்டு விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள். ஒரு சிறப்பு பலனாக பணம் வருவதற்கு நீங்கள் பொய் சொல்ல வேண்டி இருக்கலாம். வக்கீல், மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் இருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு பணவரவு இருக்கும். வெளியூர் மாறுதல், செக்சன் மாறுதல் இருக்கும். பிள்ளைகளால் பெருமைப்படத்தக்க சம்பவங்கள் உண்டு.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களின் எண்ணங்கள் நிறைவேறும் மாதம் இது. இதுவரை உயர் கல்வி கற்பதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கும். உங்களில் சிலர் இந்த மாதம் சுயநலமாக செயல்படுவீர்கள். உங்களுக்கு தேவைப்படும் ஒரு சுகத்திற்காக எதையும் செய்ய நீங்கள் தயாராகும் மாதம் இது. ராசிக்கு சனியின் பார்வையால் மனைவி, நண்பர்கள், பங்குதாரர்கள் போன்றவர்களிடம் கருத்து வேறுபாடுகளும் வீண் மனஸ்தாபமும் இருக்கும். வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுவாக இருப்பதால் மேற்கண்ட அமைப்புகள் அனைத்தும் நன்மைகளைத் தரும்.

வேலை செய்யும் இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிருங்கள். நண்பர்கள் எதிரியாகும் அமைப்பு இருக்கிறது. நன்றாகப் பழகியவர்களே உங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள். இரண்டில் செவ்வாய் நீச்சம் அடைவதால் முக்கியமான நேரத்தில் பேச்சில் தடுமாறுவீர்கள். சுற்றியுள்ளவர்கள் உங்களை வெறுப்பேற்றும்படி நடந்து கொள்வார்கள். எந்த ஒரு விஷயமானாலும் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. செவ்வாய் உங்களை கோபக்காரனாக்கி அதன் மூலம் ஏதாவது சிக்கலை உண்டாக்குவார் என்பதால் அனைத்து விஷயங்களிலும் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது.

கடகம்:

கடகத்தினருக்கு சந்தோஷம் தரும் மாதம் இது. இதுவரை எத்தனையோ முயற்சிகளுக்கு பின் அடைய முடியாத, நிறைவேறாத விஷயங்களை இப்போது  நிறைவேற்றிக் காட்டுவீர்கள். உங்களில் சிலருக்கு வேலை விஷயமாக வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகள் தொடர்பான சுப காரியங்களும், அவர்களிடம் இருந்து நல்ல தகவல்கள் வருவதும் இருக்கும். செவ்வாயின் பலத்தால் வருமானம் குறையாது. பணவரவும் நன்றாக இருக்கும் என்பதால் எந்தக் குறையும் இல்லாமல் இந்த மாதத்தை சமாளிக்க உங்களால் முடியும்.

சிலருக்கு அலுவலகத்தில் டிரான்ஸ்பர், பதவிஉயர்வுடன் கூடிய இடமாற்றம் போன்றவைகள் இருக்கும். சிலருக்கு கம்பெனி சார்பில் வெளிநாடு பயணங்கள் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்களுக்கு இதுவரை இருந்து வந்த தடை விலகும். பெண்களுக்கு இது உற்சாகமான மாதம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். இதுவரை உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவார்கள்.

சிம்மம்:

ராசிநாதன் சூரியன் ராகுவிடம் இருந்து விலகுவதால் ஆடி மாதம் சிம்ம ராசிக்கு மேன்மையான மாதம்தான். இதுவரை தடங்கலாகி வந்த விஷயங்கள் எண்ணம் போல் நிறைவேறும். சகோதர சகோதரிகள் உதவுவார்கள். வீட்டில் சுபகாரியம் உண்டு. தாயார் வழியில் நன்மைகளும், சிலருக்கு வாகன மாற்றங்களும் உண்டு. பணவரவிற்குத் தடை இல்லை. வருமானம் குறையாது. சுயதொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும்  வருமானம் இருக்கும். உயர்கல்வி படிக்க இருந்து வந்த தடை நீங்கும். எதையும் சமாளிக்க முடியும். கௌரவக் குறைச்சல் ஒரு போதும் ஏற்படாது.

தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும். எதிலும் லாபம் வரும். அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நினைத்திருந்த ஒரு காரியம் மனம் போல் நடக்கும். பாக்கித் தொகைகள் வசூலாகும். உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். விரும்பிய இடங்களுக்கு போய் வருவீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பீர்கள். பதவி உயர்வு உண்டு. அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள். தொழில் செய்பவர்களுக்கும், அக்கௌன்ட், ஆடிட்டர், சாப்ட்வேர் போன்ற துறையினருக்கும் இது முன்னேற்றமான மாதம்.

கன்னி:

ராசிநாதன் புதன் குருவின் பார்வையில் இருப்பதால் இந்த மாதம் கன்னி ராசிக்கு நல்ல மாதமாகவே இருக்கும் என்பதோடு கன்னியினர் எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாகப் புரிந்து கொண்டு ஜெயிக்கும் மாதமாக இது இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புக்கள் விலகும். குறிப்பாக பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும்.  பெண்கள் உதவுவார்கள். சகோதர உறவு மேம்படும். யோகாதிபதி சுக்கிரன் பத்தாம் வீட்டில் உள்ளதால் பொருளாதார மேன்மைகள், மற்றும் திருப்தியான பணவரவுகள்  இருக்கும். 

இதுவரை முயற்சி செய்தும் நடக்காத சில விஷயங்கள் இனி வெற்றி பெறும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். உங்களைப் பிடிக்காதவர்களும் தேடிவந்து நட்பு பாராட்டுவர். திருமணம் தாமதமானவர்களுக்கு இப்போது திருமணம் உறுதியாகும். சிலருக்கு ஊரை விட்டு டிரான்ஸ்பர் ஆகுதல், வெளிமாநிலம், வெளிநாடு போன்றவைகளில் வேலை கிடைத்தல், வீடு மாற்றுதல் போன்ற பலன்கள் உண்டு. சுக்கிரன் ராகுவுடன் இணைவதால் பெண் குழந்தைகளை சற்று அக்கறையுடன் பார்த்து கொள்வது நல்லது. திரும்பவராது என்று கைவிட்ட பணம் கிடைத்து சந்தோஷப்படுதலும் உண்டு.

துலாம்:

எதிலும் வெற்றி என்ற வார்த்தை இப்பொழுது துலாம் ராசிக்கு பொருந்தும். சோம்பலை ஒதுக்கி வைத்து விட்டு முயற்சிகளை செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். வியாபாரிகளுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் இந்த மாதம் வருமானம் உள்ள மாதம்தான். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பீர்கள். வாழ்க்கைத்துணையால்  லாபம் உண்டு. இளைய பருவத்தினருக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். புதன் வலுப் பெறுவதால் தாராளமான பணவரவு இருக்கும். நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு பெரிய தொகை வருவதற்கும் வாய்ப்பு உள்ளது.

நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் மனம் போல் நடக்கும். ஜூலைக்கு பிறகு வீடு, வாகனம், மாறுதலுக்கு உண்டாகும். பத்தில் செவ்வாய் நீச்சம் என்பதால் நம்பிக்கைத் துரோகம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு. கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் ஆன்மிக விஷயங்களில ஈடுபாடு கொள்வீர்கள். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். ஆடி மாதம் துலாமிற்கு ஆனந்தமான மாதம்தான்.

விருச்சிகம்:

மாத ஆரம்பத்தில் ராசிநாதன் செவ்வாய் நீச்ச வலுவாக இருப்பதாலும் குருவின் பார்வையில் இருப்பதால் எதையும் நீங்கள் சுலபமாக எதிர்கொள்ளும் மாதம் இது. வேலை, தொழில் போன்றவற்றில் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள்  இனி அவை நீங்கப் பெற்று நிம்மதி அடைவீர்கள். மாதம் முழுவதும் உங்களுக்கு மனதைரியத்தைத் தரும் நிகழ்வுகளே நடக்கும். எதிரிகள் வலுவிழப்பதால் ஆடி மாதம் உங்களுக்கு நல்ல மாதம்தான். விருச்சிக ராசிக்காரர்கள் படவேண்டிய கஷ்டங்கள் அனைத்தையும் அனுபவித்து விட்டீர்கள். இனிமேல் கஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்பே இல்லை.

கேட்டை நட்சத்திரக் காரர்களுக்கு பிரச்னைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். கவலை வேண்டாம். எதிரே கரை தெரிகிறது. இளைய பருவத்தினரை பெற்றோர்கள் அக்கறை எடுத்து கண்காணிக்க வேண்டியது அவசியம். சனி இரண்டில் வலுவாக இருப்பதால் அவர்கள் ஏதாவது வீண் வம்பை இழுத்து கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகும். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல்நலத்தில் கவனம் வைக்க வேண்டும்.  பொதுவில் நன்மைகள் அதிகம் உள்ள மாதம் இது.

தனுசு:

தனுசு ராசிக்கு ஆடி மாதத்தின் முக்கிய பலனாக பெண்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடுகளும், சச்சரவுகளும் வீண் விரயங்களும் உண்டு. அவரவரின் ஜாதகப்படி மனைவி, தாய், சகோதரி, மகள், காதலி, தோழி  போன்ற பெண் உறவுகளில் சில மனக்கஷ்டங்கள் இந்த மாதம் இருக்கும். தேவையற்ற விஷயங்களில் இந்த மாதம் மூக்கை நீட்ட வேண்டாம். அதனால் பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கிறது. பாகப்பிரிவினை போன்ற பூர்வீக சொத்து பிரச்சனைகளை  தள்ளி வையுங்கள். வியாபாரிகளுக்கு இது நல்ல மாதம்.

இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும். பழைய கடன்களை அடைப்பீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் உண்டு. அத்தைகள் உதவுவார்கள். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்களுக்கு மாத ஆரம்பத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். எதிலும் ரகசியம் காப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாத நிலை இருக்கும் என்பதால் யாருக்கும் எதுவும் செய்து தருவதாக உறுதி அளிக்க வேண்டாம். குடும்பத்தில் ஒருவர் கோபித்தால் கூட மற்றவர் அடங்கி போவது நல்லது.

மகரம்:

ஆடி மாதம் முழுவதும் ராசிநாதன் சனி, ராகு-கேதுக்களின் தொடர்பைப் பெறுவதால் அந்நிய இன மத மொழிக்காரர்கள் உதவுவார்கள். சொந்தக்காரர்களால் வம்புச் சண்டைகள் உண்டு. குறுக்குவழி சிந்தனைகள் இப்போது வேண்டாம். எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற வீண்பழி, கைப்பொருள் திருட்டுப் போகுதல், நம்மைப் பிடிக்காதவரின் கை ஓங்குதல் போன்ற பலன்கள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். கோபத்தை தவிருங்கள். சிலருக்கு மறைமுகமான வழியில் வெளியில் சொல்ல முடியாத வகையில் வருமானம் இருக்கும்.

ஆறாம் வீட்டு அதிபதி வலுவாக இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் மற்றும் நண்பர்களாக இருப்பவர்கள் விரோதிகளாக மாறுவது போன்ற பலன்கள் நடக்கும். மேலும் எதிரி என்றும் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் அவருடனேயே இருக்க வேண்டிய சூழ்நிலை போன்றவை உருவாகும். பெண்களுக்கு மிகவும் நல்ல மாதமாக இது அமையும். தொழில் விரிவாக்கம், புதிய கிளைகள் ஆரம்பித்தல், புதிய டீலர்ஷிப் எடுத்தல், பணம் முதலீடு செய்தல் போன்ற விஷயங்கள் இப்போது செய்யவேண்டாம்.

கும்பம்:

தொழில்ஸ்தானம் வலுப்பெறுவதால் கும்ப ராசிக்கு பணிபுரியும் இடங்களில் நல்ல சம்பவங்களும் பாராட்டுக்களும் சம்பளஉயர்வு போன்ற வருமானம் உள்ள நிகழ்ச்சிகளும் இருக்கும். உங்களை எதிரியாக நினைத்தவர்கள்  நண்பராக மாறுவார்கள். பணவரவு நன்றாகவே இருக்கும். அலுவலகங்களில் உங்களுடைய யோசனைகள் ஏற்கப்படும். மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். சிலருக்கு நீண்ட பயணங்களோ அல்லது அதிகமான பயணங்களோ இருக்கும். பெண்களுக்கு குறைகள் ஏதும் இந்த மாதம் இல்லை. அனைத்து தரப்பினருக்கும் நல்ல மாதம் இது. குறிப்பாக பெண்களுக்கு  நல்ல பலன்கள் இந்த மாதம் நடக்கும்.

எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம். வாக்குவாதங்களைத் தவிருங்கள். வேலை மாற்றும் செய்யப்பட்டவர்கள் பழைய இடத்திற்கு திரும்பி வருவீர்கள். வியாபாரிகளுக்கு எதிர்ப்புகளும், போட்டியாளர்களும் விலகுவார்கள். ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு கொள்வீர்கள். சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு அமையக்கூடிய ஆரம்ப நிகழ்ச்சிகள் இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் அமையும். அம்மாவின் வழியில் ஆதரவும் அனுகூலமும் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர் இணக்கமாக இருப்பார்.

மீனம்:

ஆடி மாத ஆரம்பத்தில் சற்றுச் சறுக்கி நம்பிக்கை இழப்பது போல தெரிந்தாலும் உடனடியாக சுதாரித்து கொண்டு ஜெயித்து காட்டுவீர்கள். மனோதைரியம் கூடுதலாகும். எத்தகைய பிரச்னைகளையும் சுலபமாக சமாளிப்பீர்கள். முதல் வாழ்க்கை கோணலாகி கஷ்டத்திற்கு ஆளானவர்கள் இப்பொழுது நல்ல இரண்டாவது வாழ்க்கையை அடைவார்கள். பெண்களால் செலவுகள் இருக்கும். குறிப்பாக மகள் சகோதரி போன்றவர்களின் சுபகாரியங்களுக்கு செலவுகள் செய்ய வேண்டி இருக்கலாம். கேட்கும் இடங்களில் உதவிகள் கிடைக்கும். அரசாங்க ஆதரவு உண்டு. எந்த ஒரு சிக்கலையும் தைரியமாக சமாளிப்பீர்கள்.

குறிப்பிட்ட பலனாக உங்களில் சிலர் தேவையற்ற விவகாரங்களில் மூக்கை நுழைத்து கையில் இருக்கும் காசை விரயம் செய்வீர்கள். பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள். மாத இறுதியில் வாழ்க்கைத்துணை விஷயங்களில் விட்டுக் கொடுத்து போங்கள். கணவன் மனைவி இருவருமே ஈகோவை தவிர்ப்பதால் பிரச்னைகள் எதுவும் வராமல் தடுக்கலாம். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும். மாத முற்பகுதி சுமாராகவும் பிற்பகுதி நன்றாகவும் இருக்கும் மாதம் இது.