Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 244 (09.07.19)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

கே. ராஜசேகர், ராயபுரம்.

கேள்வி.

ஜோதிடம் என்றாலே பயமுறுத்தி பணம் பறிக்கும் செயல் என்றே இதுவரை நினைத்திருந்தேன். ஆனால் தற்செயலாக ஒருமுறை மாலைமலரில் உங்கள் கேள்வி பதில் படித்தவுடன் அந்த எண்ணம் மாறியது. உண்மையை பக்குவமாக எடுத்து வைத்து நல்வழிப்படுத்தும் உங்கள் சொற்கள் என்னைக் கவர்ந்தன. ஒரு முறை சுக்கிர தசை நடக்கும் ஒரு பெண்ணிற்கு உங்களை அவர் திட்டி அனுப்பிய கடிதத்திற்கு ஒரு தகப்பனைப் போல நீங்கள் கூறிய அறிவுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சிறுவயது முதல் எல்லாவற்றிலும் ஒதுக்கப்பட்டு அமைதியானவனாக வளர்ந்தேன். பொறுப்பில்லாத குடிகாரத் தகப்பன்.


வீட்டு வேலை செய்து காப்பாற்றிய அம்மா. பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு கூலி வேலைக்குச் சென்றேன். தண்டமாக இருந்தேன். தம்பியும் சிறுவயதிலேயே காதல் என்று அலைந்து குடிக்கு அடிமையாகி தற்போது அடங்கி இருக்கிறான். வாழ்வில் நானே ஆச்சரியப்படும்படி ஒரு விஷயம் நடந்தது என்றால் அது என் திருமணம் மட்டும்தான். நான் ஆசைப்பட்ட பெண்ணை அவரது வீட்டாரே வந்து பேசி எனக்கு மணமுடித்து வைத்தனர். ஆனால் திருமணமான சிலநாட்களில் பிரச்சனை தலைதூக்கி தனிக்குடித்தனம் வந்திருக்கிறோம். அம்மாவோடு இருக்கத்தான் ஆசை. ஆனால் எவ்வளவு முயற்சித்தும் முடியவில்லை. தற்போது தொழிலில் கடன் பிரச்சினைகள் இருக்கிறது. ஒரு கடனை அடைத்தால் மற்றொன்று புதியதாக வருகிறது. என்னால் நிலைத்து நிற்க முடியவில்லை. வருமானம் சொற்பமாக உள்ளது. எனக்கும், மனைவிக்கும், மகனுக்கும் கன்னி லக்னமாக வருகிறது. இப்படி வருவது நல்லதா? அதில் இருவருக்கு சனிதசை நடக்கிறது இது நன்மை தருமா? தனியாக தொழில் செய்யலாமா?

பதில்.

(கன்னி லக்னம், மேஷ ராசி, 4ல் புத, 5ல் சூரி, சுக், சனி, ராகு, 8ல் சந், 9ல் செவ், 11ல் குரு, கேது, 23-1-1991 இரவு 11-35 சென்னை)

கணவன், மனைவி, குழந்தை மூவருக்கும் கன்னி லக்னம் என்பதால், மூவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்து, ஒருவர் மனதை ஒருவர் புரிந்து கொண்டு, ஒருவரை ஒருவர் காயப்படுத்தாமல் இருப்பீர்கள். பொதுவாக ஒரு குடும்பத்தில் எல்லோருக்கும் ஒரே லக்னமாக அமைவது மிகவும் சிறப்பான ஒன்று. அதேபோல கன்னி லக்னத்திற்கு சனி ஐந்திற்குடைய யோகாதிபதி என்பதால் அவருடைய தசை நன்மைகளைச் செய்யும். தீமைகளைத் தராது.

உன்னுடைய ஜாதகப்படி தற்போது எட்டில் இருக்கும் சந்திரனின் தசை நடைபெறுகிறது. இதில் தற்போது நடக்கும் ராகு புக்தி 2020-ம் ஆண்டு வரை உனக்கு நன்மைகளைச் செய்யாது. அடுத்து நடக்க இருக்கும் குருபுக்தி முதல் உனக்கு யோகமான காலகட்டம் என்பதால் இன்னும் ஒரு வருடத்திற்கு தொழில் முயற்சிகளில் நிதானம் காட்டவும். 2021 முதல் வாழ்க்கை, தொழிலில் மிகவும் நன்றாக இருப்பாய். வாழ்த்துக்கள்.

டி.கண்ணபிரான், சாத்தூர்.

கேள்வி.

மளிகைக்கடை வைத்திருக்கிறேன். பதினெட்டு மணிநேர வேலை என்பதால் 50 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் உடல் உழைக்க மிகவும் கஷ்டப்படுகிறது. எதிர்காலம் சூனியமாகத் தெரிகிறது. அடுத்து வர இருக்கும் குருதசையானது, ஏழாம் இடத்தில் குரு அமர்ந்து, 5-க்குடைய  சந்திரனின் சாரம் பெற்று தசை நடத்தவுள்ளது. ஐந்தாமிடம் சம்பந்தப்பட்டிருப்பதால் குரு தசை நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். 5க்குடைய சந்திரனும் யார் சாரம் வாங்கி இருக்கிறார் என்று பார்க்க வேண்டுமா அல்லது தசாநாதன் சாரம் மட்டும் பார்த்தால் போதுமா? சந்திரன் அஷ்டமாதிபதி சாரம் பெற்றுள்ளதால் கெடுப்பாரா? குருவுடன் 4-7-க்குடைய புதனும் இருக்கிறார். இந்த புதன் ஆறுக்குடைய சூரியன் சாரம் பெற்று உள்ளதால், குரு தசையில் உடல் நோய்வாய்ப்படும் என்று ஒரு ஜோதிடர் சொன்னார். 7மிடம் பாதக ஸ்தானம் என்பதால் குருதசையில் மரணம் ஏற்படுமா? பிறந்தது முதல் இதுவரை கடந்து சென்ற திசையெல்லாம் 6,8,12ம் இட ஆதிபத்தியம் கொண்டதாகவே நடந்துள்ளது. வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. சொத்தும் சேர்க்கவில்லை. குருதசை எனக்கு செல்வாக்கையும் பேரையும் புகழையும் கொடுக்குமா? தொழில் மாற்றம் ஏற்படுமா? குரு பாதக ஸ்தானத்தில் இருந்து தசை நடத்தவிருப்பதால் குடும்பத்தில் ஏதாவது பாதகச்செயல் ஏற்படுமா?

பதில்.

(மீன லக்னம், மேஷ ராசி, 2ல் சந், சனி, 5ல் சுக், 6ல் சூரி, கேது, 7ல் புத, குரு, 9ல் செவ், 12ல் ராகு, 1-9- 1969 இரவு 8-45 சாத்தூர்)

வேத ஜோதிடத்தில் தசாநாதன் இருக்கும் வீட்டின் வலிமை மிகவும் முக்கியமானது. தசாநாதனுக்கு வீடு கொடுத்தவன் வலுவாக இருக்கும் பட்சத்தில் அந்த தசை நன்மைகளைச் செய்யும். ஒரு தசை நன்மைகளைச் செய்யுமா, செய்யாதா என்பதற்கு முதலில் தசாநாதன் 1,5,9 சம்பந்தப்பட்டருக்கிறாரா அல்லது 6,8,12 சம்பந்தப்பட்டிருக்கிறாரா என்பதைப் பார்த்துவிட்டு, அடுத்து தசாநாதனுக்கு வீடு கொடுத்தவன் எவ்வாறு இருக்கிறார்? ஸ்தானபலம் பெற்று இருக்கிறாரா அல்லது நல்ல வீட்டில் இருக்கிறாரா என்பதைப் பார்த்த பிறகே மற்ற அமைப்புகளுக்கு செல்ல வேண்டும். இவை நன்றாக இருந்து விட்டால் தசாநாதன் தான் பெற்ற சாரநாதனின் சுப விஷயங்களை செய்வார். உதாரணமாக எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் உங்களுடைய சொந்த வீட்டில் நீங்கள் இருக்கும்போது நல்ல தைரிய  மனநிலையில் இருப்பீர்கள் இல்லையா? வாடகை வீட்டில் இருந்தாலும், வீட்டு ஓனர் அந்த ஊர் பெரிய மனிதராக இருந்தால், வீட்டிற்கு வந்து தகராறு செய்ய எதிரி பயப்படுவான் இல்லையா? அதுபோலத்தான் தசாநாதன் இருக்கும் வீட்டின் அதிபதி எவ்வாறு இருக்கிறார் என்பது முக்கியம். அதன் பிறகே சாரத்தின் வலிமை.

அடுத்து நடக்கப் போகும் குருதசை, ஐந்துக்குடைய சந்திரனின் சாரம் வாங்கியிருப்பதால் ஐந்தாமிடத்தின் சுப பலன்களை தன வீடான 2-ம் வீட்டில் வழியாகச் செய்யும். அவை நல்லவையாக இருக்கும். சாரம் கொடுத்த கிரகம் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறது என்பதைக் கவனிக்கத் தேவையில்லை. அதேபோல மாரக, பாதக ஸ்தான அதிபதிகள்தான் மாரகம், பாதகம் போன்ற விஷயங்களை செய்வார்களே தவிர, அந்த ஸ்தானங்களில் நிற்கும் கிரகங்கள் அல்ல. மாரகத்திற்கும், பாதகத்திற்கும் ஆதிபத்தியம் கொண்டுள்ள கிரகங்கள் என்பதால்தான் அவை மாரக, பாதகாதிபதிகள் என்று அழைக்கப்படுகின்றன. வீட்டில் அமரும் கிரகங்கள் ஆதிபத்தியங்களை செய்யாது. குரு தசை உங்களுக்கு நன்றாகவே இருக்கும்.  குருவே உங்களுக்கு  லக்னாதிபதி என்பதால் நல்ல யோகங்களைச் செய்வார். வாழ்த்துக்கள்.

சி. ராமலிங்கம், திருப்பூர்.

கேள்வி.

குருநாதர் அவர்களே, விதிகளைப் பட்டியலிட்டவர்கள் பலர் இருக்க, தாங்கள் மட்டுமே ஜோதிடத்தை ஒரு நாவலை போல் சுவாரசியமாக எழுதி, சூட்சுமத்தை ஒளியாகப் பாவித்து உணர வைத்தீர்கள். புரியாதவைகளையும் எளிமையான கதையாகச் சொல்லி விளங்க வைப்பதில் தங்களுக்கு நிகர் தாங்களே. நாளிதழ், இணையம், தொலைக்காட்சி என தங்களின் சேவையை பாராட்ட பக்கங்கள் போதாது. இது எனது தம்பியின் ஜாதகம். திருமணம் தாமதமாகிறது. ஒரு இடத்தில் பெண் பார்த்து முகூர்த்தம் குறித்த பின்னும் தடைப்பட்டுவிட்டது. திருமணம் எப்போது? பரிகாரம் தேவையா? வாழ்க்கை எப்படி இருக்கும்? 

பதில்.

(விருச்சிக லக்னம், கடக ராசி, 1ல் சூரி, புத, சனி, 2ல் சுக், 5ல் குரு, ராகு, 9ல் சந், 11ல் கேது, 12ல் செவ், 9-12-1987 காலை 5-30 அம்பை)

லக்னம் உட்பட அனைத்துக் கிரகங்களும் அவயோக சாரம் பெற்ற விசித்திரமான ஜாதகம். சூரியன், சனி, குரு மூவரும் அஷ்டமாதிபதி புதன் சாரத்தில் இருக்க, லக்னம், சந்திரன், புதன், ராகு ஆகியோர் சனியின் சாரத்தில் இருக்கிறார்கள். லக்னாதிபதியும் ராகு சாரத்தில் இருக்கிறார். லக்னாதிபதி பலவீனமாக இருந்தாலே வாழ்க்கைக்கு தேவையானவை உடனே கிடைக்காது. அதேபோல விருச்சிக லக்னத்திற்கு புதன் நல்ல பலன்களை செய்ய மாட்டார்.

தம்பியின் ஜாதகப்படி 18 வயதிலிருந்து 35 வயதுவரை விருச்சிக லக்னத்திற்கு வரக்கூடாத புதன் தசை நடந்து கொண்டிருக்கிறது. புதன், சனி-சூரியனுடன் இணைந்து மிகுந்த பாபத்துவ அமைப்பில் இருக்கிறார். ராசி, லக்னம் இரண்டின் ஏழாம் வீட்டையும்  சனி, செவ்வாய் இருவரும் ஒருசேரப் பார்க்கிறார்கள். அதாவது ராசிக்கு ஏழாமிடத்தை சனி மூன்றாம் பார்வையாகவும், செவ்வாய் நான்காம் பார்வையாகவும், லக்னத்திற்கு ஏழாம் வீட்டை சனி ஏழாம் பார்வையாகவும், செவ்வாய் எட்டாம் பார்வையாகயும்  பார்க்கிறார்கள். இது கடுமையான களத்திர தோஷ அமைப்பு..

லக்னத்திற்கு ஐந்தில் ராகு, ராசிக்கு ஐந்தில் சனி இருப்பது புத்திர தோஷம். விருச்சிகத்திற்கு புதன் கொடுக்கும் அனைத்தும் நல்லவைகளாக இருக்காது. புதன் தசையில் திருமணம் நடப்பது நல்லதல்ல. செவ்வாயை வலுப்படுத்தும் பரிகாரங்களை ஏற்கனவே மாலைமலரில் எழுதியிருக்கிறேன். அவற்றைச் செய்து கொள்ளச் சொல்லுங்கள். ஒருமுறை காளகஸ்தி போய் வாருங்கள். நல்லவை நடக்கும். வாழ்த்துக்கள்.

என். புவனா, சென்னை.

கேள்வி.

தனுசு லக்னத்திற்கு சுக்கிர தசை வரக்கூடாது என்று நீங்கள் சொல்வதற்கு நானும் ஒரு உதாரணம். சுக்கிர தசை ஆரம்பித்த உடனேயே அடுத்தடுத்து தாய், தந்தை இருவரையும் இழந்தேன். 2015ல் திருமணம் நடைபெற்று, 2016ல் பிரச்சினை ஆரம்பித்து, 2017இல் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என சென்று, தற்போது விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. நான் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். அவரோ முடியாது என்று பிடிவாதம் செய்கிறார். தம்பிகளும், உறவினர்களும் எனக்கு இரண்டாம் திருமணம் செய்ய நினைக்கிறார்கள். எனக்கு உடன்பாடு இல்லை. நானும் கணவரும் ஒன்று சேருவோமா அல்லது எனக்கு வேறு திருமணம் நடைபெறுமா? சேருவோம் என்றால் எப்போது சேருவோம்?

பதில்.

(தனுசு லக்னம் கடக ராசி நான்கில் ராகு ஐந்தில் குரு ஆறில் சுக்கிரன் ஏழில் சூரியன் புதன் சந்திரன் செவ்வாய் பத்தில் கேது 29 6 1987 இரவு 7 2 சென்னை)

பாபத்துவம் பெற்ற சுக்கிர தசை, குரு புக்தியில் கணவன்-மனைவிக்குள் பிரிவு இருக்கும் என ஜோதிடம் எனும் தேவரகசியம் கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன். தசாநாதன் சுக்கிரன், நீச செவ்வாய் நட்சத்திரத்தில் அமர்ந்து, அம்சத்தில் நீசமாகி, நீச்சனின் வீட்டில் அமர்ந்த சனியின் பார்வையைப் பெற்றிருக்கிறார். சுக்கிர தசையின் முதல் பத்து வருடங்கள் வம்பு, வழக்கு, அசிங்கம், கேவலம், கடன், நோய், எதிரி போன்ற ஆறாமிடத்து பலன்களை மட்டுமே செய்யும். பிற்பகுதி 10 வருடம் குரு புக்திக்குப் பிறகு லாப வீட்டின் பலன்களை சுக்கிரன் தருவார்.

குரு புக்தி முடியும் அடுத்த பிப்ரவரி மாதம் வரை உனக்கு நல்ல பலன் சொல்வதற்கு இல்லை. கணவரின் ஜாதகப்படியும் அவருக்கும் எட்டில் சனி, செவ்வாய் சேர்ந்திருப்பது கல்யாணம் செய்தும் பிரம்மச்சாரி என்ற நிலைதான். அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை பொறுமையாக இருக்க வேண்டும். ஏழாமிடம் வலுத்துள்ளதால் உனக்கு இரண்டு திருமண அமைப்பு இல்லை. லக்னத்திற்கு 11ம் இடத்தை செவ்வாய் பார்த்து, ராசிக்கு 11-ம் இடத்தை சனி பார்ப்பதால் ஒரே திருமணம் தான். குரு புக்தி முடிந்தவுடன் கணவருக்கு மனம் மாறும். 2020 பிற்பகுதியில் இருவரும் ஒன்று சேருவீர்கள். வாழ்த்துக்கள்.